திவ்ய பிரபந்தம்

Home

NT 2.2 இன்று முற்றும்

நாச்சியார் திருமொழி 2.2

‘நாங்கள் அரும்பாடுபட்டு அழகாக இழைத்திருக்கும் சிற்றிலை அழிக்காதே’ என்கிறார்கள். 

இன்றைய பொழுதெல்லாம், முதுகு நோக இருந்து கஷ்டப்பட்டு முடித்த இந்த சிற்றிலை, நாங்கள் நன்றாக கண்கள் இலக்கில் தைத்து இருக்கும் படி பார்த்து, எங்களாசையை தணியும்படி, இரு என்கிறார்கள். மகா பிரளயம் வந்த காலத்தில் பாலகனாய் அவதரித்து ஒர் ஆலிலம் தளிரிலே, கண் வளர்ந்துஅருளினவாய், எங்களுக்கு காரணபூதனானவனே உனக்கு எங்கள் விஷயத்தில், எக்காலத்திலும் இரக்கம் உண்டாகாததற்கு காரணம் எங்களுடைய பாவமே என்கிறார்கள்.

இன்று முற்றும் முதுகு நோவ இருந்து இழைத்த இச் சிற்றிலை

இவர்கள் சிற்றில் அழைத்தது ஓரு பகலாய் இருந்த போதிலும் ஆயிரம் கல்ப காலம் நீண்டு இருப்பது போல தோன்றும்.

உபநிஷத்துகளில் கூறியது போல, ‘அந்த பிரம்மம், நானே பலவாக கடவேன்’ என்று சங்கல்ப்பித்து, அது தேஜஸை ஸ்ருஷ்டி செய்தது. ’அது போல நாங்களும் சங்கல்ப்பித்து இந்த சிற்றிலை செய்து இருந்தால், இதை செய்ய நாம் என்ன பாடுபட்டு செய்து விட்டோம், போனால் போகிறது’ என்று இருந்து இருப்போம். ஆனால் அப்படி இல்லாமல், மெய்யாகவே (உண்மையாகவே), மெய் (உடல்) நோக, நாங்கள் படைத்தது ஆகையால், அப்படி ஆறியிருக்க இயலாது என்கிறார்கள்.

முதுகு நோக என்று சொன்னால், கண்ணன் சிற்றிலை அழிப்பதை நிறுத்தி விட்டு, தங்கள் முதுகை பிடிப்பான் என்று நினைத்து முதுகு நோக என்று சொல்கிறார்கள். எட்டி நின்று காலால் சிற்றிலை அழிப்பதை விட கையால் முதுகு பிடிப்பது அல்லது என்று நினைக்கிறார்கள். இவர்கள் பிறப்பால் அபலைகள் / பலமற்ற பெண்கள், மேலும் விரகதாபத்தில் இளைத்து இருப்பவர்கள்; நெஞ்சு ஊடுருவ, வேவுண்டு, நிலையும் தளர்ந்து (நாச்சியார் திருமொழி 13.3) என்று நிலை தளர்ந்து இருப்பவர்கள்; மேலும் வெண்ணை விழுங்கி வளர்ந்தவர்கள் ஆகையால் பொறுக்க மாட்டார்கள்; ஆகையால் முதுகு நோவ என்று சொல்கிறார்கள்.

கண்ணனை விட்டு பிரிந்து இருக்கும் இவர்களை இருக்கும் இடத்தில் இருக்க வைப்பது காற்றை பிடித்து ஒரு இடத்தில் இருக்க வைப்பது போல ஆகும் என்கிறார். நெஞ்சு கண்ணன் இடத்தில் இருக்கும் போது, சிற்றில் அமைப்பது ஒரு செயற்கரிய செயல் அன்றோ என்கிறார்கள். இந்த சிற்றிலின் அழகை பார்த்தல், அறிவு உடையவர்கள் அழிக்க மாட்டார்கள், உன்னை பார்த்தாலும் மிகுந்த அறிவு உடையவன் போல உள்ளது என்கிறார்கள்.

நன்றும் கண்ணுற நோக்கி நாங்கொளும் ஆர்வம் தன்னைத் தணி கிடாய்

நாங்கள் இந்த சிற்றிலை முழுவதுமாக நோக்க வேண்டும், நீ அழித்து விட்டால் பார்க்க முடியாது என்றும், தங்கள் ஆர்வம் நிறைவேற வேண்டும் என்று சொல்ல அதற்கு எம்பெருமான், தான் முழுமையாக பார்த்து விட்டதாக கூறுகிறான். 

அன்று பாலகனாகி ஆலிலை மேல் துயின்ற வெம்மாதியாய்

நீ சிறுவயது குழந்தையாய் இருக்கும் போதில் இருந்தே எங்களை அச்சுறுத்தி எங்களை அழிப்பதை செய்து வருகிறாய் என்கிறார்கள். அதாவது, சிறு வயதில் அப்போது முளைத்த ஆலம் தளிரிலே, அதற்குள் அடங்கும் வடிவை கொண்டு, அவ் வடிவிலே இந்த உலகம் முழுவதையும் அடக்கி கொண்டு, கண் வளர்ந்து அருளி, யசோதை பிராட்டியின் தொட்டிலில் செய்யும் செயலை எல்லாம் அதிலும் செய்து, அங்கு பரிவுடன் உன்னை ரக்ஷிப்பதற்கு ஒரு தாயும் இல்லாத நிலையில், துள்ளி விழுந்தால் வெள்ளத்தில் விழும் படி பெரிய ஆபத்தில் இருக்கும் இடத்தில், எங்களுக்கு பெறும் பயத்தை விளைவிக்கும் செயலை செய்து அன்று எங்களை முடித்தாய் என்கிறார்கள். எங்களுக்கு சத்தையான உன்னை அன்றோ அழிக்க பார்க்கிறாய். இப்படி சிறு குழந்தையாய் இருந்த போது அழிக்க பார்த்தவன் இன்று சிறுவனாய் இந்த சிற்றிலை அழிக்க பார்க்கிறாய் என்பது கருத்து.

என்று முன்றனக்கு எங்கள் மேல் இரக்கம் எழாத தெம் பாவமே

எங்கள் விஷயத்தில் என்றும் நீ கருணை அற்றவனாக உள்ளாய். உலகை காப்பதற்கு கங்கணம் கட்டி கொண்டவன் ஆதலால் உன்னை கருணை அற்றவன் என்று சொல்ல முடியாது. எங்கள் விஷயத்தில் கருணை இல்லாமல் நடந்து கொள்வது, நாங்கள் செய்த பாவமே என்கிறார்கள். 

இராமாயணம் சுந்தர காண்டம் (38.48) ல் சீதா பிராட்டி கூறியது போல,

மமைவ துஷ்கரிதஂ கிஞ்சிந்மஹதஸ்தி ந ஸஂஷயஃ. * ஸமர்தாவபி தௌ யந்மாஂ நாவேக்ஷேதே பரந்தபௌ৷৷, சமர்த்தார்களான, எதிரிகளை துன்புறுத்தும் அவர்கள் இருவரும் (இராம லக்ஷ்மணர்கள்) பகைவர்களைச் சுட்டெரிப்பவர்களாக இருந்தாலும், அவர்கள் தன்னை விடுவிப்பதில்லை என்று சீதா பிராட்டி சொல்லி, ஒருவேளை தான் ஒரு கொடூரமான பாவம் செய்திருக்கலாம். எந்த சந்தேகமும் இல்லை என்றும், சொல்லிய சீதா பிராட்டியை போலவும்,

‘ந மந்தராயா; ந ச மாது ரஸ்யா ; தோஷா ந ராஜ்ஞோ ; ந ச ராகவஸ்ய [ * மத்பாபமே வாத்ர நிமித்தமாஸீத் வனபிரவேஸே ரகுநந்தநஸ்ய (ராமாயணம் அயோத்யா ) ஸ்ரீராமன் காட்டிற்கு சென்றதற்கு, மந்தரை காரணம் இல்லை; தாய் கைகேயியின் தவறும் இல்லை; தந்தை தசரதனின் தவறும் காரணம் இல்லை; இராமனின் தவறும் காரணம் இல்லை; என் பாவமே காரணம் ஆயிற்று என்று பரதன் போலவும், (இராமாயணம், அயோத்யா காண்டத்தில்)

இவர்கள் தங்கள் பாவங்களே காரணம் என்று சொல்கிறார்கள்.

Leave a comment