சென்ற பதிகத்தில், காமதேவனை தேடி அவன் உதவியை நாடிய. இந்த பரம அடியவர்களை நினைத்து, கண்ணன் மிகவும் வருத்தம் கொண்டான். இவர்களை பெறுவதற்கு, நாம் வருந்தி முயற்சி செய்து பெற வேண்டிய பெருமை உடைய இவர்கள், முயற்சி செய்து, நம்மை பெறுவதற்கு கஷ்ட பட வேண்டியதாயிற்று. நம்மை பெறுவதற்கு நம் காலில் விழாமல், மற்றொருவர் காலில் விழும்படி செய்து, நாம் பிற்பட்டு விட்டோமே என்று எம்பெருமான் தான் காரியம் செய்யும் விதத்தை எண்ணி நாணம் அடைந்தான். கஜேந்தர ஆழ்வானை பாதுகாக்க, பிற்பட்டது போல, இதுவும் உள்ளதே என்று வருந்தினான்.
திருஆயர்பாடியில் இந்திரனையும் இஷ்ட தெய்வமாக கொண்ட ஆயர்கள், மழைக்காக இந்திரனுக்கு மலையாக குவித்த சோற்றை கண்டு, நாம் பிறந்து வளர்ந்த ஊரில் ஒரு சிலர் இன்னொரு தெய்வத்திற்கு ஆவதா, என்று இந்த சோற்றை,கோவர்த்தன மலைக்கு இடுங்கள் என்று சொல்லி, அந்த மலைக்கு அந்தர்யாமியாய் இருந்து, அந்த சோற்றினை உண்டவன், தனக்கே உரிய இவர்கள், தன்னை பெறுவதற்காக, காமனிடம் வேண்டியதை பொறுக்க மாட்டான்.
தன்னை குறித்து, கர்ம, ஞான, பக்தி மார்க்கங்களுடன் வேறு எந்த சாதனத்தையும் எதிர்பார்க்காத எம்பெருமான், தன்னையோ, தான் அந்தர்யாமியாக இருக்கும் இன்னொரு தேவதையையோ குறித்து உபவாசம் இருப்பதையும் எதிர்பார்க்காத எம்பெருமான், இவர்கள் காமதேவனை குறித்து உபவாசம் இருந்தால் பொறுத்துக்கொள்ள மாட்டான். ஆகையால் விரைந்து வந்து இவர்களுக்கு முகம் காட்டினான். இப்படி கண்ணன் தங்களை பாடுபடுத்தியதை நினத்து இவர்களும் எம்பெருமானுக்கு தங்கள் முகம் காட்டாமல், ரோஷத்தை காட்டி, சிற்றில் இழைப்பது என்னும் காரியத்தை செய்வது போல இருக்கிறார்கள். இவனும் சிற்றில் எனப்படும் கோலத்தை அழிக்க தொடங்க, அதை கண்டு அவர்கள் அழிக்க வேண்டாம் என்று அவனை பலவாறு வேண்டுகிறார்கள். ஒரு மகாபாரத போராட்டம் போல நடந்து, ஊடலில் ஆரம்பித்து கூடலில் முடிகிறது.
நாமம் ஆயிரம் ஏத்த நின்ற நாராயணா நரனே உன்னை * மாமி தன் மகனாகப் பெற்றால் எமக்கு வாதை தவிருமே * காமன் போதரு காலம் என்று பங்குனி நாள் கடை பாரித்தோம் * தீமை செய்யும் சிரீதரா எங்கள் சிற்றில் வந்து சிதையேலே
நாச்சியார் திருமொழி 2.1
பங்குனி மாதம் ஆகையால், காமன் வரும் வழியில் நாங்கள் சிற்றில்களை இழைத்து கொண்டு இருக்க, எம்மை நலிவதற்காகவே யசோதையின் மகனாக பிறந்த நீ, எங்கள் சிற்றில்களை சிதைப்பது தகாது என்று சொல்லும் பாசுரம்.
நித்யசூரிகள் ஆயிரம் ஆயிரம் திருநாமங்களை சொல்லி, ஸ்தோத்திரம் பண்ணும்படியாக நித்யவிபூதியில் ஏழுலகும் தனிக்கோல் செல்ல வீற்று இருக்கும், நாராயணனே, சக்ரவர்த்தி திருமகனாக (ஸ்ரீ ராமன்) திருஅவதாரம் செய்தவனே, எங்கள் மாமியாரான யசோதை பிராட்டி, முன்பே தீம்பனான உன்னை, தன்னுடைய பிள்ளையாகவும் பெற்றால், நாங்கள் நலிவுபடுகையில் இருந்து தப்ப முடியுமோ என்கிறார்கள். மன்மதன் வரும் காலம் என்பதால் பங்குனி மாதத்தில் அவன் வரும் வழியில் கொடித்தோம், தீம்புகளை செய்யுமவனாய் பெரிய பிராட்டியை தன் திருமார்பில் உடையவனே, நாங்கள் விளையாடும் இடங்களுக்கு வந்து, எங்கள் சிறு வீடுகளை சிதையாதே என்று சொல்கிறார்கள்.
நாமம் ஆயிரம் ஏத்த நின்ற நாராயணா நரனே
குழந்தைக்கு உடல் நலம் சரியாக இல்லாத போது, தாயும் மருந்து சாப்பிடுவதுபோல, தானே நாராயணனாகவும், நரனாகவும் பத்ரிகாசிரமத்தில் அவதரித்து, அடியவர்களுக்கு சிஷ்யனும் ஆச்சார்யனும் எப்படி இருக்க வேண்டும் என்பதை உணர்த்த தவம் புரிந்ததை கண்ட தேவர்கள், எதற்காக தேவரீர் தவம் செய்கிறீர்கள் என்று கேட்க, ஸஹஸ்ரநாம ஸ்தோத்திரம் சொல்லி வணங்கும்படி நிற்கிற நர நாராயண திருஅவதாரத்தை பற்றி சொல்கிறார்.
இதில் உள்ள நாராயணா என்பது,
தத்³விஷ்ணோ: பர॒மம் ப॒த³ம் ஸதா³ பஶ்யந்தி ஸூ॒ரய॑: *
தி॒³வீ᳚வ॒ சக்ஷு॒ராத॑தம் ॥ * தத்³விப்ராஸோ விப॒ந்யவோ ஜாக்³ரு॒’வாம்ஸ॒: ஸமி᳚ந்த⁴தே * விஷ்ணோ॒ர்யத் ப॑ர॒மம் ப॒த³ம் ॥ என்று ருக், யஜுர் சாம வேதம் இவற்றில் கூறபட்டு உள்ளது. இதன் அர்த்தம், “விஷ்ணுவுடைய அந்த பரமபதத்தை நித்ய ஸூரிகள் எப்போதும் கண்காணிக்கின்றனர். அப்பரமபதம் எங்கும் (ஒளியால்) வியாபித்து இருக்கும் உலகத்துக்கு எல்லாம் கண்ணாயிருப்பவனும் சூரியன் போல பிரகாசிக்கும், விஷ்ணுவுடைய யாதொரு பரமபதமிருக்கிறதோ, அதில் மேதாவிகளும் துதிப்பதையே தொழிலாக கொண்டவர்களுமான நித்யஸூரிகள் விழிப்புடன் விளங்குகிறார்”, என்றும்,
நரன் என்பது
ஏததிச்சாம்யஹஂ ஷ்ரோதுஂ பரஂ கௌதூஹலஂ ஹி மே * மஹர்ஷே த்வஂ ஸமர்தோஸி ஜ்ஞாதுமேவஂவிதஂ நரம் ৷৷ ராமாயணம் பால காண்டம் 1.5 என்று சொல்வதன் அர்த்தம், ”ஓ மகரிஷி, நீங்கள் வைக்கக்கூடிய அத்தகைய மனிதரைப் பற்றி நான் கேட்க விரும்புகிறேன்? உண்மையில் என் ஆர்வம் பெரியது. இப்படிப் பட்ட மனிதனை அறிய நீர் வல்லவராக இருக்கிறீர்கள்”. இந்த கூற்றின்படி பரம பதத்தில் இருந்த நாராயணன், சக்ரவர்த்தி திருமகனான (ஸ்ரீ ராமனை) சொல்வதாக கொள்ளலாம். எல்லாம் அறிந்த நித்யசூரிகள் எம்பெருமானின் ஸ்வரூப, ரூப, குண வீபூதிகள் பற்றி அறிந்து ஸ்தோத்திரம் பண்ண, அவனது செல்வ செழிப்பை எல்லாம் விளங்கும்படி பரமபதத்தில் இருக்கும் நிலையை. நாமம் ஆயிரம் ஏத்த நின்ற நாராயணா சொல்கிறது.
அங்கிருந்து கிளம்பி அயோத்திக்கு எழுந்தருளிய அவனை, அறிவுடையோர் அறிவு இல்லாதவர் என்ற எந்த பேதமும் இல்லாமல், எல்லோரும் அவனுடைய சீலம் முதலிய குணங்களில் ஈடுபட்டு நெஞ்சை பறிகொடுத்து,
ராமோ ராமோ ராம: இதிப்ரஜா நாம பவந் கதா : * ராம பூதம் ஜகத பூத் ராமே ராஜ்யம் ப்ரஶாஸதி ।। (இராமாயணம், யுத்த காண்டம் 131.103) சொல்லியது, “இராமன் ராஜ்ஜியத்தை ஆண்ட போது எல்லாம் இராமன், இராமன், இராமன். மக்கள் ராமனைப் பற்றிய கதைகளைப் பேசினர், உலகம் இராமனுடன் எதிரொலித்தது ” என்பது போலவும்,
பாலா அபி க்ரீடமாநா கரிஹத்வாரேஷு ஸங்கஷஃ. * ராமாபிஷ வஸஂயுக்தாஷ்சக்ருரேவஂ மிதஃ கதாஃ৷৷ (இராமாயணம் அயோத்யா காண்டம் 6.16) சொல்லியது ‘இதேபோல் வீடுகளுக்கு முன் குழுவாக விளையாடும் குழந்தைகளும் ராமர் பட்டாபிஷேகம் தொடர்பான கதைகளையும் இராமனை புகழ்ந்தும் பரஸ்பரம் கூறினர்.’ என்பது போலவும், தன்னையே துதிக்கும்படி நிற்பதையே நரன் என்று அவதரித்ததை கூறுகிறார்.
இவற்றை சொல்லி, பிறகு, பரமபதத்தில் இருந்தது போலவோ, இராமாவதாரம் போலவோ இல்லாமல், அந்த சீலம் முதலான குணங்களால் உண்டான, தீம்புகளால் பெண்களை படாத பாடு படுத்தி, தான் என்ன செய்தாலும் தப்ப முடியாதபடியும், செய்ததை எல்லாம் பொறுக்கும் படியாகவும் உள்ள உறவை முன்னிட்டு கொண்டு அவதரித்த கிருஷ்ணாவதாரத்தை சொல்ல தொடங்குகிறது.
உன்னை , மாமி தன் மகனாகப் பெற்றால் எமக்கு வாதை தவிருமே
ஏற்கனவே தீம்பு செய்பவனான நீ, அதற்கு மேல் மாமியின் மகன் என்னும் உறவு முறையையும் ஏற்படுத்திக் கொண்டு, எங்களை துன்புறுத்த தொடங்கினால் நாங்கள் துன்பம் அடையாமல் இருக்க முடியுமா, நாங்கள் இப்படித்தான் இறுதிவரை துன்ப பட்டு கொண்டு இருக்க வேண்டும் என்கிறாள்.
இராமாயணம் அயோத்யா காண்டம் (3.29) சொல்லியபடி, ரூபௌதார்ய குணைஃ பும்சாம் திருஷ்டி சித்தாபஹாரிணம். (வடிவழகு, வண்மை, குணங்கள் முதலியவற்றால் ஆண்களையும் கண்ணையும் நெஞ்சையும் அபகரிக்கும் ராமனை), வலிய நெஞ்சை உடைய ஆண்களையும் ஈடுபடுத்த வல்ல உன் குணங்கள், அபலைகளான பெண்களாக பிறந்த எங்களை உருக்காமல் இருக்குமோ என்று கருத்து.
காமன் போதரு காலம் என்று பங்குனி நாள் கடை பாரித்தோம்
கண்ணன் தான் தீம்பு செய்ய வில்லை என்றும், அவர்களை பற்றிய நினைவு கூட இல்லாமல் இருந்ததாகவும், அவர்கள் தான் இவனை எதிர்பார்த்து சிற்றில் இழைத்து வைத்தீர்கள் என்று திருவுள்ளமாக அதற்கு அவர்கள், சிற்றில் அவனுக்காக இல்லை என்றும், பங்குனி மாதம் வரும் காம தேவனுக்காக என்றும், அவன் தான் இவனிடம் இவர்களை சேர்த்து வைக்க வேண்டும் என்பதற்காகவும் என்று சொல்கிறார்கள்.
தீமை செய்யும் சிரீதரா எங்கள் சிற்றில் வந்து சிதையேலே
அப்படி தன்னை எதிர்பார்த்து செய்ய வில்லை என்றால், கண்ணனும் தான் வேறு யாருக்காகவோ சிற்றிலை அழிப்பதாக சொல்லி அழிக்க ஆரம்பித்தான். பெரிய பிராட்டியாரின் தோழிகளான எங்களின் சிற்றிலை அழிக்கலாமோ, பெரிய பிராட்டியாரை புருஷகாரத்துவமாக பற்றியவர் நாங்கள் என்று சொல்லி, தங்களை துன்புறுத்த வேண்டாம் என்று சொல்கிறார்கள். கண்ணன், தன்னை ஸ்ரீதரன், ஸ்ரீதேவிக்கும் நாதன் என்று சொல்லியதால், தன்னை யாரும் எதுவும் கேட்க முடியாது என்று மேலும் சிற்றிலை அழிக்க தொடங்கினான். பெரிய பிராட்டியாரின் தொடர்பு தங்களுக்கு நன்மை தரும் என்று இருந்த இவர்கள், அதனை கண்ணன் அப்படி கொள்ளவில்லை என்று இருந்த போது, தங்கள் சிற்றிலை அழிக்க வேண்டாம் என்றும், பெரிய பிராட்டியார் எங்காவது சிற்றில் இட்டு இருந்தால் அங்கே சென்று அழிக்கவும் என்று கண்ணனுக்கு சொல்வதாக அமைந்துள்ள பாடல்.
Leave a comment