கருப்பு வில் மலர்க் கணைக் காம வேளைக் * கழலிணை பணிந்து அங்கு ஓர் கரி அலற * மருப்பினை யொசித்துப் புள் வாய் பிளந்த * மணிவண்ணற்கு என்னை வகுத்திடு என்று * பொருப்பன்ன மாடம் பொலிந்து தோன்றும் * புதுவையர் கோன் விட்டு சித்தன் கோதை * விருப்புடையின் தமிழ் மாலை வல்லார் * விண்ணவர் கோன் அடி நண்ணுவரே
நாச்சியார் திருமொழி 1.10
கரும்பாகிய வில்லையும் புஷ்ப அம்புகளை உடையவனும் யாவரையும் உலக விஷயத்தில் ஈடுபடுத்துபவனும் ஆன மன்மதனை ஒன்றுக்கு ஒன்று ஒப்பான கழல்கள் அணிந்த அடிகளை வணங்கி, கம்ஸன் சபையின் வாசலில் நிறுத்தபட்ட குவலயாபீடம் என்ற யானையின் கொம்பினை முறித்து, கொக்கின் உரு கொண்டு வந்த பகாசுரனுடைய வாயை கிழித்து போட்ட நீல ரத்னம் போன்ற வடிவழகினை உடையனோடு என்னை சேர்த்து விட வேண்டும் என்று மலைகளை சேர்த்து வைத்தது போல இருக்கிற மாளிகைகள் நிறைந்து இருக்கும் ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ளவர்களுக்கு நிர்வாகனான பெரியாழ்வாரின் திருமகளான ஆண்டாளுடைய விருப்பத்தின் பேரில் பிறந்த இனிய தமிழ் மாலைகளை அர்த்தத்தோடு பாட வல்லவர்கள், சம்சார பந்தம் நீங்க பெற்று, அயர்வறும் அமரர்கள் அதிபதியின் திருவடிகளை அடைவர் என்று இந்த பதிகம் படிப்பவர்களுக்கு பலன் சொல்லி முடிக்கிறார்.
கருப்பு வில் மலர்க் கணை
சார்ங்கம் என்னும் வில்லாண்டான் தன்னை என்றும் சரங்களாண்ட தண் தாமரை கண்ணனுக்கு அன்றி என் மனம் தாழ்ந்து நில்லாதே என்றும் வாழ்த்தி எம்பெருமானின் வில்லையும் அம்பையும் பாடி அவன் காலில் விழ வேண்டியவள், இவன் காலில் விழும்படி ஆனது என்று சொல்வது, இவள் அடையவேண்டியதின் (ப்ராப்யத்தின்) மேல் உள்ள ஆசை படுத்தும் பாடு.
குவலயாபீடம் மற்றும் பகாசுரன் சரித்திரங்களை சொன்னது எம்பெருமானை அநிஷ்டத்தை போக்குபவன் என்பதை சொல்லி அவனே உபாயம் என்று சொல்வதற்கு என்கிறார். மணிவண்ணன் என்று சொன்னது எம்பெருமானை அடைந்து அனுபவிப்பதற்காக என்று சொல்லி, அவனே அடையப் பட வேண்டியவன் என்று சொல்லப் பட்டது.
Leave a comment