தொழுது முப்போது முன்னடி வணங்கித் * தூமலர் தூய்த் தொழுது ஏத்துகின்றேன் * பழுதின்றிப் பாற்கடல் வண்ணனுக்கே * பணிசெய்து வாழப் பெறாவிடில் நான் * அழுது அழுது அலமந்தம்மா வழங்க ஆற்றவும் அது உனக்கு உறைக்கும் கண்டாய் உழுவதோ * ஒரு எருத்தினை * நுகங் கொடு பாய்ந்து * ஊட்டமின்றித் துரந்தால் ஓக்குமே
நாச்சியார் திருவாய்மொழி 1.9
முக்காலங்களிலும் மனத்தாலே உன்னை தொழுது தலையாலே வணங்கி உன்னுடைய அடிகளில் பரிசுத்தமான புஷ்பங்களை பணி மாறி சேவித்து ஸ்தோத்திரம் பண்ணுகிறேன். பூமியை சூழ்ந்து இருக்கும் கடல் போன்ற திருநிறத்தை உடையவனுக்கு பழுதில்லாமல் கைங்கர்யம் பண்ணி நான் வாழ பெறாவிட்டால் பல கால் அழுது தடுமாறி அம்மா என்று கூப்பிட்டு கொண்டு சஞ்சரிக்க உனக்கு அது மிகவும் உறைக்கும் கண்டாய் ; உழுகின்ற ஒரு எருதினை நுகத்தடியாலே தள்ளி தீனி இல்லாமல் நீக்கி விடுவதை போல ஆகும் என்கிறார்.
தனக்கு அருள் செய்யாவிட்டால் அவனுக்கு வரும் அனர்த்ததை கூறுகிறாள்.
தொழுது முப்போது முன்னடி வணங்கித் தூமலர் தூய்த் தொழுது ஏத்துகின்றேன்
சாத்வீகர்கள் எம்பெருமானுக்கு திருவாராதனம் செய்யும் போது, நன்கு ஈடுபட்டு திருவாராதனம் செய்து முடித்து அவன் திருவடிகளில் விழுந்து எம்பெருமான் திருவுள்ளத்திற்கு பாங்கானபடி ஏற்று அருள வேண்டும் என்று சில ஸ்தோத்திரங்களை விண்ணப்பம் செய்வது போல, இவளும் அவன் விஷயத்தில் இவற்றை எல்லாம் செய்கிறாள். மனம், மெய், மொழி என்ற முக்காரணங்களாலும், முக்காலங்களிலும் உன்னிடம் வேண்டுகிறேன் என்கிறாள்.
ஆற்றவும் அது உனக்கு உறைக்கும் கண்டாய்
அதன் பலன் உனக்கு வலிதாக கிடைக்கும் ; விநஷ்ட: பஶ்யதஸ் தஸ்யா ரக்ஷிண ஶ்ஶரணாகத: । * ஆதாய ஸுக்ருதம் தஸ்ய ஸர்வம் கச்சேத ரக்ஷித:।। (இராமாயணம், யுத்த காண்டம் 18.29) (“அவனிடம் இருந்து பாதுகாவல் தேடும் ஒரு அகதியைக் காக்கத் தவறியவன், அகதியின் பார்வையில் நாசமாகி, எல்லாப் புண்ணியங்களையும் பறித்து விடுகிறான்”). இதன் படி, சரணம் அடைந்த ஒருவனை பாதுகாக்காமல் விட்டால் அந்த பாவத்தின் பலனை சரணமடையபட்டவன் அனுபவிக்க வேண்டி வரும் என்றும் சரணமடையபட்டவனின் புண்ணியங்கள் யாவையும் சரணம் அடைபவனிடம் சேர்ந்து விடும் என்றும், சாஸ்திரங்கள் கூறுகின்றன. அதன்படி சரணம் அடைந்த என்னை, நீ காப்பாற்ற விட்டால் பாவம் வருவதும், புண்ணியம் குறைவதும் ஆன பெரிய தீமைகள் உனக்கு ஏற்படும் என்பது கருத்து.
Leave a comment