மாசு உடை உடம்பொடு தலையுலறி * வாய்ப்புரம் வெளுத்தொரு போது முண்டு * தேசுடை திறலுடைக் காமதேவா * நோற்கின்ற நோன்பினைக் குறிக்கொள் கண்டாய் * பேசுவதொன்று உண்டு இங்கு எம்பெருமான் * பெண்மையைத் தலையுடைத் தாக்கும் வண்ணம் * கேசவ நம்பியைக் கால் பிடிப்பாள் * என்னும் இப்பேர் எனக்கு அருள் கண்டாய்
நாச்சியார் திருமொழி 1.8
பிரிந்தாரை சேர்க்கையால் வந்த ஒளியையும், அவர்கள் விரோதியை போக்குவதற்குரிய மிடுக்கை, வலிமையை உடையவனாய், எனக்கு ஸ்வாமியான மன்மதனே, அழுக்கு படிந்த உடம்போடு கூட தலை மயிரை விரித்துக்கொண்டும், எப்போதும் தாம்பூலம் போட்டு சிவந்து இருந்த உதடுகள், இப்போது வெளுத்தும், ஒரு வேளை உண்டும் நோற்கின்ற இந்த நோன்பை நீ நினைவில் வைத்து கொள்ளவேண்டும். இப்போது சொல்ல வேண்டுவது ஒன்று உண்டு. என் சத்தை தலை தூக்கும்படி, கேசி என்று அசுரனை முடித்த கல்யாண குணங்கள் முழுமையாக இருப்பவனுக்கு, கால் பிடிக்குமவள் என்ற புருஷார்த்தத்தை எனக்கு கிடைக்குமாறு அருள் புரிவாய் என்பது இந்த பாசுரத்தின் கருத்து.
ஸ்வரூப ப்ராப்தமான எம்பெருமான் திருவடிகளுக்கு குற்றேவல் செய்வதை எனக்கு அருள்வாய் என்கிறாள்.
மாசு உடை உடம்பொடு என்று சொன்னது, ஸ்நானம் செய்யாமல் இருக்க முடியாத ஆசாரத்தை உடைய என் உடம்பு எம்பெருமான் பிரிவால் ஸ்நானம் இல்லாமல் இருக்கையால் அழுக்கு படிந்தது ஆயிற்று.
ஓரு போது உண்டும் என்று சொன்னது, எம்பெருமானை பிரிந்ததால் உணவு தேவை இல்லாவிட்டாலும், உணவை ஒரே அடியாக தடுக்க முயன்றாலும், இப்போது காமனை வேண்டி நோன்பு இருந்து காமனை காண வேண்டி இருப்பதால் ஒரு வேளை உணவு கொண்டு உயிரை தரித்து இருக்கிறாள்.
நோற்கின்ற நோன்பினைக் குறிக்கொள் கண்டாய் என்று சொல்வது, திரௌபதி ஒரு முறை தூரத்தில் இருந்த தன்னை கோவிந்தா என்று கூப்பிட்டது, வட்டியினால் வளர்ந்த கடனை போல, என்றும் என் நெஞ்சில் நீங்காது இருக்கும் என்று கண்ணன் சொல்வதைபோல, காமதேவா, நீயும் என் நோன்பை மறக்காமல் உன் நெஞ்சில் இருத்திக்கொண்டு என் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் என்று சொல்கிறாள்.
பெண்மையைத் தலையுடைத் தாக்கும் வண்ணம் என்று சொல்வதில், பெண்மை என்று குறிப்பிட்டது பெண்ணின் தனிதன்மையான பாரதந்திரியம் (அவனே தங்களை காக்க வேண்டும் என்றும் தங்களை தங்களால் காத்து கொள்ளமுடியாது என்று இருப்பதும் ஆகும்).
கேசவ நம்பியைக் கால் பிடிப்பாள், என்னும் இப்பேர் என்று சொல்லும்போது, சென்ற பாடலில் சொல்வது போல மூலைகளால் அணைப்பதற்கு மட்டும் என்று கொள்ளாமல், முதலில் இருந்து, எம்பெருமான் திருவடிகளை பிடித்து விடுகையாகிற கைங்கர்யம் செய்து என்னுடைய சேஷத்துவ ஸ்வரூபதிற்கு தகுந்த இப்பயனை பெறும்படி அருள்வாய் என்கிறாள்.
Leave a comment