திவ்ய பிரபந்தம்

Home

NT 1.6 உரு உடையார்

நாச்சியார் திருமொழி 1.6

காமதேவா, அழகிய வடிவு உடையவராய், இளைஞர்களாய், நல்ல நடத்தை உடையவராய், காம சாஸ்திரத்தில், புலமை மிக்கவராய், முன்னிட்டு கொண்டு, நாள் தோறும், அவன் வரும் வழியில், எதிரே சென்று, பங்குனி மாதத்தில் பெரிய திருநாளில், தெளிந்து இருந்து, நோக்கின்றேன். கர்ப்பத்தை உடைய காளமேகம் போன்ற நிறம் உடையவனாய், காயாம் பூ போன்ற திரு நிறத்தை உடையவனாய், காக்கணாம் பூ போன்ற பளபளப்பு உடையவனாய், செந்தாமரை மலரின் நிறம் போன்ற காந்தியை உடைத்தான, திருமுக மண்டலத்தில் உண்டான திருக்கண்களாலே என் விஷயத்தில் அவன் விசேஷ கடாக்ஷம் பண்ணும்படியாக நீ நோக்கி அருள வேண்டும். 

மச்சித்தா மத்³க³தப்ராணா போ³த⁴யந்த: பரஸ்பரம் * கத²யந்தஸ்²ச மாம் நித்யம் துஷ்யந்தி ச ரமந்தி ச (பகவத் கீதை 10- 9) – (அகத்தினை என்பால் வைத்து, உயிரை என்னுள்ளே புகுத்தி, ஒருவரை ஓருவர் உணர்விப்பாராய், எக்காலும் தம்முள் என்னைக் குறித்து இயம்புவார்; அன்னோர் மகிழ்ச்சியும் இன்பமும் அடைவார்) சொல்லியது போல, அடியவர்கள் எம்பெருமானுடைய குணங்களை அனுபவித்து ஒருவருக்கு ஒருவர் சொல்லி தரிப்பதற்காக மற்ற அடியவர்களை அழைத்து கொண்டு பகவத் விஷயத்தில் இழிவது போல, ரஜோ குணம் மிக்க காமனை அடைவதற்கு காம சாஸ்திரம் கற்ற வல்லவர்களை கூட்டிக்கொண்டு நோன்பு நோற்கையில் இழிகிறாள்.

திருந்தவே நோற்கின்றேன் என்று சொன்னது, பகவத் விஷயத்தை நினத்த மாத்திரத்தில் கலங்கும் நான், உனக்கு நோன்பு நோற்கும் போது சிறிதும் கலங்காமல் தெளிந்து இருந்து உனக்கு நோன்பு நோற்கின்றேன். எம்பெருமானை தொழும் போது வேதம் வல்லார்களை கொண்டு தொழுவது போல, உனக்கு நோன்பு நோற்கும் போது காம சாஸ்திர வல்லவர்களை கூட்டி கொண்டு செய்கின்றேன், நீ எனக்கு காரியம் செய்து கொடுக்க வேண்டும் என்பது கருத்து.

கருவுடை முகில் வண்ணன் என்று சொன்னது, என்ன பாடுபட்டாவது நோன்பு நோற்றாவது அடைய வேண்டிய வடிவழகு உடையவன் என்கிறாள். 

காயா வண்ணன் என்று சொன்னது, நெஞ்சத்தில் உள்ள கொந்தளிப்பை போக்கி அஞ்சன மை இடுகின்ற திருமேனியை உடையவன் என்று சொல்கிறாள்.

கருவிளை போல் வண்ணன் என்று சொன்னது, கண்டவர் கண்ணுக்கு குளிர்ச்சியாக இருப்பவன் என்று கருத்து.

திருந்தவே நோக்கு எனக்கு அருள் உகண்டய் என்று சொன்னது, சோலையை பார்ப்பது போல மொத்தமாக பார்ப்பது போறாது. ஒவ்வொரு அவயத்தையும் உற்று நோக்கும் படி செய்ய வேண்டும். அது மட்டும் அல்லாமல், நம் ஆற்றாமை தீருவதற்காக மட்டும் இன்றி, தன் ஆற்றாமை தீரும்படி நோக்குவதே திருந்த நோக்கு ஆகும் என்கிறார்.

Leave a comment