சிற்றம் சிறுகாலே வந்து உன்னை சேவித்து உன் * பொற்றாமரை அடியே போற்றும் பொருள் கேளாய் * பெற்றம் மேய்த்து உண்ணும் குலத்தில் பிறந்து நீ * குற்று ஏவல் எங்களைக் கொள்ளாமல் போகாது * இற்றைப் பறை கொள்வான் அன்று காண் கோவிந்தா * எற்றைக்கும் ஏழ் ஏழ் பிறவிக்கும் உன் தன்னோடு * உற்றோமே ஆவோம் உனக்கே நாம் ஆட்செய்வோம் * மற்றை நம் காமங்கள் மாற்றேலோர் எம்பாவாய்.
திருப்பாவை 29
நமக்கே பறை தருவான் என்று முதல் பாட்டில் சுருக்கமாக சொல்லிய ஆச்சியர்கள் இந்த பாட்டில் பிராப்ய பிராபகங்களை விவரிக்கிறார். பறை என்று அடைய வேண்டியதை முதலில் சொல்லி, தருவான் என்று பிறகு சாதனத்தை சொல்கிறார்கள். இந்த பாடல் வைஷ்ணவ சம்பிராதாயங்களில் மிக முக்கிய மூன்று மந்திரங்களில் ஒன்றான த்வய மகா மந்திரத்தின் முதல் வாக்கியத்தின் பொருள் சொல்லும் பாடல்.
கண்ணனே விடியற்காலையிலேயே இங்கு வந்து, உன்னை வணங்கி, உனது அழகிய திருவடித் தாமரைகளை மங்களாசாசனம் பண்ணுவதற்குப் பலனை கேட்டு அருள வேண்டும். பசுக்களை மேய்த்து உண்ணும் இடைக் குலத்தில் அவதரித்த நீ, எங்களிடத்தில் அந்தரங்க கைங்கர்யங்களை திரு உள்ளம் பற்றாமல் இருக்கக் கூடாது. இன்று (கொடுக்கப்படுகிற இந்த ) பறையைப் பெற்றுக் கொள்வதற்காக நாங்கள் வந்தோம்; கால தத்துவம் என்று ஒன்று உள்ள வரையில் எவ்வளவு பிறவிகள் எடுத்த போதிலும் உன்னோடு உறவு உடையவர்கள் ஆக வேண்டும் ; உனக்கு மாத்திரமே நாங்கள் அடிமை செய்ய வேண்டும் ; எங்களுடைய இதர விஷ்ய விருப்பங்களை தவிர்த்து அருள வேண்டும் என்பது இந்த பாடலின் பொழிப்புரை.
சென்ற பாடல்களில் “பறை, பறை” என்று சொல்லி வந்த ஆய்ச்சியர்கள் அந்த பறையின் பொருளை விவரித்து விண்ணப்பம் செய்யும் பாசுரம், ‘நாட்டார் இசைகைக்காக ‘நோன்பு’ என்று ஒன்றை காரணமாகக் கொண்டு வந்து புகுந்தோம். இதனை தவிர, எங்களுக்கு மிகவும் சிறந்தது என்று நாங்கள் நினைப்பது, உன் திருவடிகளில் நித்திய கைங்கரியம் செய்வதுதான். இனி ஒரு நொடிப் பொழுதும் உன்னை விட்டு நாங்கள் பிரிய முடியாது; வேறு ஒருவகையான விருப்பமும் எங்களுக்கு பிறவாத வண்ணம் நீயே அருள்புரியவேணும்’ என்று அவன் காலைக் கட்டி நிற்கிறார்கள்.
நமக்கே என்று சொல்வதால் பறை என்று கேட்டுக்கொண்ட அதிகாரிகளின் ஸ்வரூபம் சொல்லப் படுகிறது.
- ‘உன்னை அல்லால் எங்களுக்கு வேறு ஒருவரும் இல்லை’,
- ‘உன்னை அல்லால் வேறு ஒரு போக்கியமும் இல்லை’,
- ‘உன்னை அல்லால் வேறு ஒன்றும் உபாயம் ஆகபோவது இல்லை;
என்று இருப்பவர்கள் நாங்கள் என்கிறார்கள்.
செல்வ சிறுமீர்காள், வையத்து வாழ்வீர்காள் நாமும் , நாங்கள் நம் பாவைக்கு, நாங்களும் மார்கழி நீராட, எம்மை நீராட்டு, யாம் வந்தோம், யாம் பெறு சம்மானம், புண்ணியம் யாம் உடையோம் என்ற இடங்களில் சொன்ன நாம், நாங்கள் என்று சொன்னவர்கள் இவர்கள் என்கிறார்.
நாமுடையோம் என்று சொல்லி, புண்ணியத்தின் பலன்களை வெளியிடுகிறார்கள். மாணிக்கத்தை கொடுத்து தவிடு வாங்குவது போல உபாயத்திற்கு வேறு ஒன்றை பலனாக காட்டுகிறார்கள்.
சிற்றஞ்சிறுகாலை என்று சொன்னது, அருணோதய காலத்தைக் கூறும்.
- “காலை வந்து” என்று சொல்லாமல்,
- ‘சிறு காலை வந்து’ என்று சொல்லாமல்,
- “சிற்றஞ் சிறு காலை வந்து” என்று சொல்வதால்,
எங்கள் பருவத்தை ஆராய்ந்தால் பொழுது விடிந்து பதினைந்து நாழிகை ஆனாலும், குளிருக்கு அஞ்சி, வீட்டை விட்டுக் கிளம்ப மாட்டார்கள் என்று தோற்றம் தெரிய, எங்களின் ஆற்றாமை / இயலாமையின் அளவு எவ்வளவு இருந்தால், குளிரை ஒரு பொருளாக நினையாமல் நாங்கள் இத்தனை சிறு காலையில் வந்தது என்பதை ஸர்வஜ்ஞனான நீயே ஆராய்ந்து அறிந்து கொள் என்று சொல்லியது மாதிரி ஆகும். இரண்டாம் திருவந்தாதியில் (81) சொன்ன ‘பகற்கண்டேன் நாரணனைக் கண்டேன்,’ என்று சொல்பவர்கள் இவர்கள். அதாவது நாராணனை கண்டால் மட்டும் பகல் பொழுது என்றும் அவனை காணாத பொழுதை இரவு என்றும் சொல்பவர்கள். திருவிருத்தம் 93 ல் ‘காலை நன் ஞானத் துறை படிந்தாடிக் கண் போது செய்து‘ என்று சொன்னதும் நல்ல ஞானமாகிய துறையிலே இறங்கி மூழ்கி பகவத் பக்தியாகிய வெள்ளத்தில் ஆழ்ந்து ஈடுபட தகுந்த காலம் என்பதை சொல்வதற்கே.
பெரியாழ்வார் திருமொழி (3.1.10) ல், ‘இரா நாழிகை மூவேழு சென்றபின் வந்தாய்’ என்று சொல்லியபடி இரவில் மூன்று ஜாமம் சென்று வந்த கண்ணன், பெரியாழ்வார் திருமொழி (3.3.2)ல் சொல்லியபடி ‘உன்னை இளங்கன்று மேய்க்கச் சிறுகாலே ஊட்டி ஒருப் படுத்தேன்‘ என்று யசோதை சொல் கேட்டு இளங்கன்று மேய்க்க சிறு காலை சென்று விடுவதால் இவர்கள் கண்ணன் தரிசனம் வேண்டி சிற்றம் சிறுகாலே வருகிறார்கள்.
வந்து உன்னை சேவித்து என்பதில் வந்து என்பதை உபாயமாக எடுத்துக் கொள்வது சரியா என்பதையும் பார்க்க வேண்டும் என்கிறார்.
உன்னை சேவித்து என்பதை விளக்க, திருவாய்மொழி 2.8.4 ல் ‘பலமுந்து சீரில் படிமினோவாதே’ சொல்லியது போல எம்பெருமானின் திருகுணங்களைப் பாடுபவர்கள் இவர்கள். திருவாய்மொழியில் (9.3.9)ல் ‘எழுதும் என்னா இது மிகையாதலில்‘ சொல்லியபடி, எழுதும் என்னும் இது மிகையான உன்னை சேவித்து என்கிறார்.
“உன் பொற்றாமரை யடியே போற்றும் பொருள் கேளாய்” என்றது நாங்கள் எதை உத்தேசித்து உன்னைக் காப்பு இடுகின்றோமோ அந்த உத்தேசத்தை வெளியிடுகின்றோம், கேட்டருள் என்று சொல்வதாகும்.
பெற்றம் மேய்த்து என்று தொடங்கி சொல்வது, நித்ய ஸூரிகளின் நடுவே ஏழுலகும் தனிக்கோல் செல்ல வீற்றிருக்கும் இருப்பைத் தவிர்த்து இந்த இடைக்குலத்தில் நீ வந்து பிறந்ததற்கு ஒரு பயன் வேண்டாமோ, எங்களிடத்தில் நீ கைங்கரியம் கொள்ளாது போனால் உன்னுடைய இந்த அவதாரம் / இந்த பிறவி பயனற்றதாகும் என்கிறார்கள்.
கொள்ளாமல் போகாது என்று சொன்னது, மீள முடியாதபடி நிர்பந்தம் செய்வது என்று ஆகும்.
குற்று ஏவல் எங்களைக் கொள்ளாமல் போகாது என்று சொல்வது, திருவாய்மொழி 6.7.1 ல் உண்ணுஞ் சோறு பருகுநீர் தின்னும்வெற் றிலையுமெல்லாம் கண்ணன், எம்பெருமான் என்றபடி இருக்கும் நீ கைங்கர்யம் கொள்ளாமல் போவது உனக்கு தகுமோ என்கிறார்கள். அதே போல திருவாய்மொழி 10.10.6 ல் ‘உண்டிட்டாய் இனி உண்டொழியாய்‘ என்று சொல்பவர்கள்.
இப்படி, ‘எங்களிடத்தில் குற்றேவல் கொள்ளவேணும் என்று வேண்டின ஆய்ச்சியர்களை நோக்கிக் கண்ணன், ‘பெண்களே, அது அப்படியே ஆகட்டும்; அந்தரங்கமாக ஏற்றுக் கொள்ளுகிறேன்; நீங்கள் மார்கழி நீராட்டத்திற்கு உபகரணமாகக் கேட்டவற்றைத் தருகிறேன், கொண்டு போங்கள் என்று சொல்கிறார்கள். அது கேட்ட ஆய்ச்சியர்கள், நாங்கள் ‘பறை’ என்று சொன்னதற்குக் கருத்து உரைக்கின்றோம் என்று சொல்ல தொடங்குகின்றனர்.
எற்றைக்கும் என்றது, “ஏழேழ் பிறவிக்கும்” என்றது, எம்பெருமானுடைய பிறவி தோறும் சேர்ந்து பிறக்கும் பிராட்டியைப் போலே தாங்களும் சேர்ந்து பிறந்து கைங்கர்யம் செய்ய நினைக்கிறார்கள்.
உந்தன்னோடு என்று சொல்வது சங்கு சக்கர தாரியாக ஸ்ரீவைகுந்தத்தில் இருந்த இடத்திலும் எங்களோடு கண்கலந்த உன்னோடும் ஒன்றாக திரிய வேண்டும் என்ற அர்த்தத்தில் வருகிறது. அங்கே சங்கொடு சக்கரமும் திரிகையும், இங்கே தெறிவில்லும் சண்டுகோலும் திரிகையும் வேண்டும் என்கிறார்கள். திருவாய்மொழி (5.1.8)ல் ‘சேலேய் கண்ணியரும் பெருஞ் செல்வமும் நன்மக்களும், மேலாத் தாய் தந்தையும் அவரே‘ சொல்லியபடி, மீன் நோக்குடைய மாதர்களும், மகத்தான ஐஸ்வர்யமும், குணம் மிக்க பிள்ளைகளும், மேம்பட்ட மாதவும் பிதாவும் அந்த பெருமானே ஆவர் என்பது போல சம்பந்தம் வேண்டுபவர்கள்.
உமக்கே நாம் ஆட் செய்வோம் என்று சொல்வது, எங்களை ஆட்கொள்ள தோன்றிய உனக்கு நாங்கள் கைங்கர்யம் செய்ய வேண்டாமா என்கிறார்கள். திருவாய்மொழி (2.9.4)ல் ‘தனக்கேயாக எனைக் கொள்ளும் ஈதே‘ என்று சொல்லியது போல் நீ உகந்த அடிமை ஆகவேண்டும் என்கிறார்கள். அகங்காரம் உடைய அடிமைத்தனம் ஏற்றது ஆகாது. ஆட்செய், உமக்கு ஆட்செய், உமக்கே ஆட்செய், எக்காலத்தும் உமக்கே ஆட்செய் என்று பல பரிமாணங்களில் பார்க்கலாம்.
“மற்றை நங்காமங்கள் மாற்று” என்றதற்கு கைங்கரியத்தில் சுய பலன்கள் கொண்ட புத்தி நடமாடுவதை தவிர்க்க வேண்டும் என்பது ஒரு முக்கியமான பொருள். “மற்றை நங்காமங்கள் மாற்று“ என்று சொன்னது, மற்ற எல்லா ப்ராப்ய விரோதி கழிகை ஆகும்.
கறவைகள் பின் சென்று என்று சொன்னது, வேறு உபாயங்களை பின்பற்றாதையும், கைங்கர்யம் கிடைப்பதற்கு உள்ள தவறுகளுக்கு மன்னிப்பு கூறுவதும் சொல்வது விளங்கும். பசுக்களின் பின் செல்வாருக்கு அதன் ஞானமே இருக்கும், அவர்களுக்கு பெண்கள் சொல்வதின் கருத்து புரியாது என்கிறார்கள்.
கோவிந்தா உனக்கு என்று சொன்னது ‘அகார’ அர்த்தம் சொல்லியது. உனக்கே என்பது ‘உகார’ அர்த்தம் சொல்லியது. நாம் என்பது மகரார்த்தம் சொல்லியது. உந்தன்னோடு ஊற்றோமே ஆவோம் என்று சொன்னது ‘நாராயணா’ அர்த்தம் சொல்கிறது. இவை திருமந்திர அர்த்தம் ஆயிற்று.
கோவிந்தா என்று சொன்னது, எங்களையும், நாங்கள் கேட்டுக் கொண்டதையும் மறந்தது போல, உன்னையும் உன் பிறவியையும் மறந்தாய் என்கிறார்கள்.
சரியான காலத்தில் உணர்வதும், பகவத் சந்நிதி ஏற வருகையும், சேவிக்கையும், விக்ரக அனுபவம் செய்வதும், அவதார பிரயோஜனங்களை விண்ணப்பம் செய்கையும், ஆர்த்தி (விருப்பம்) பிரகாசிப்பிக்கையும், ஸ்வரூப விரோதிகளை போக்கி தர விண்ணப்பம் செய்வதும், கைங்கர்ய ருசி உடையார்க்கு சில ஸ்வரூப லட்சணங்கள் ஆகும் என்கிறார். இவற்றை எல்லாம் கண்ணன் திருமுகத்தை பார்த்து விண்ணப்பம் செய்கிறார்கள்.
Leave a comment