வானிடை வாழும் அவ்வானவர்க்கு * மறையவர் வேள்வியில் வகுத்த அவி * கானிடைத் திரிவதோர் நரி புகுந்து * கடப்பதும் மோப்பதும் செய்வது ஓப்ப * ஊனிடை ஆழி சங்கு உத்தமர்க்கு என்று * உன்னித்து எழுந்த என் தட முலைகள் * மானிடவர்க்கு என்று பேச்சுப்படில் * வாழகில்லேன் கண்டாய் மன்மதனே
நாச்சியார் திருமொழி 1.5
மேல் உலகத்தில் வாழும் தேவர்களுக்காக இங்குள்ள பிராமணர்கள் யாகத்தில் படைக்கும் / கொடுக்கும் கவிஸ் என்ற பிரசாதத்தை காட்டில் திரியும் நரி, புகுந்து அதை தனதாக்கி கொள்வதும், அதன் வாசனையை முகர்வதும், செய்வது போல, தன்னுடைய திருமேனியில் சங்குதனையும் சக்கரத்தினையும் திருக்கரங்களில் கொண்ட எம்பெருமான் புருஷோத்தமனுக்காக கிளர்ந்து எழுந்த மூலைக்களானவை, மனிதர்களுக்கு என்ற சப்தம், நாட்டில் உண்டாகும் ஆணால், உயிர் வாழ மாட்டேன் என்று ஆண்டாள் சொல்லும் பாடல்.
வேறு ஒருவனுக்கு என்று நாட்டில் பேச்சு எழுந்தால் தான் உயிர் வாழ மாட்டேன் என்கிறாள்.
வானிடை வாழும் அவ்வானவர்க்கு : போக பூமியான ஸ்வர்க்கத்தில் வாழ்கின்ற சிறந்த பிறப்பை உடையவர்களாய் தேவர்களை குறிக்கும்.
மறையவர் வேள்வியில் வகுத்த அவி : “ஸஹயஜ்ஞா: ப்ரஜா: ஸ்ருஷ்ட்வா புரோவாச ப்ரஜாபதி: * அநேந ப்ரஸவிஷ்யத்⁴வமேஷ வோऽஸ்த்விஷ்டகாமது⁴க் ” (பகவத் கீதை 3-10) மற்றும், “தே³வாந் பா⁴வயதாநேந தே தே³வா பா⁴வயந்து வ: * பரஸ்பரம் பா⁴வயந்த: ஸ்²ரேய: பரமவாப்ஸ்யத² (பகவத் கீதை 3-11) (சர்வேஸ்வரன் வேதங்களோடு உயிர் இனங்களையும் படைத்த பின், “இந்த யாகத்தினால் நீங்கள் விருத்தி அடையுங்கள், இது உங்கள் இஷ்ட ஆசைகளை நிறைவேற்றட்டும். நீங்கள் விரும்பும் விருப்பங்களை எல்லாம் உங்களுக்கு கிடைக்கும். இதனால் நீங்கள் தேவர்களை ஆராதியுங்கள் ; அந்த தேவர் உங்களை வளர செய்வார்கள். இப்படி பரஸ்பரமான ஒருவருக்கு ஒருவர் திருப்தி செய்து கொண்டு உயர்ந்த நலத்தை எய்துவீர்கள்” ). இதன்படி கர்ம பூமியான இந்த உலகதில் உள்ள அந்தணர்கள் யாகங்கள் செய்து தேவர்களை ஆராதிக்க வேண்டும் என்றும், அந்த தேவர்கள் இந்த உலகதிற்கு மழை முதலான அளித்து ஆசைகளை நிறைவேற்ற வேண்டும் என்று சர்வேஸ்வரன் ஸ்ருஷ்டி காலத்தில் சங்கல்ப்பித்து வைத்தது போல, அந்தணர்கள் தேவர்களுக்காக தயாரித்து இருந்த கவிஸ் என்ற பிரசாதத்தை என்று சொல்கிறாள்.
கானிடைத் திரிவதோர் நரி புகுந்து, கடப்பதும் மோப்பதும் செய்வது ஓப்ப என்றது, மனிதர்கள் நடமாடாத காதில் நரிகள் அந்த யாக சாலையில் புகுந்து, அந்த கவிசை தனதாக்கி கொள்வதும், முகர்ந்து பார்ப்பதும் செய்து அது தேவர்களுக்கு தகாதபடி செய்வது என்கிறாள்;
ஊனிடை ஆழி சங்கு உத்தமர்க்கு என்று சொன்னது, வெறும் கைகளோடு இருந்தாலே திருஷ்டி கழிக்க வேண்டி இருக்கும், அழகிய திருமேனியில், திருவாழியையும், பாஞ்சசந்நியத்தையும் ஏந்தி இருக்கும், அதனால் உண்டான பேரழகை அடியார்களுக்காகவே ஆக்கி வைத்து இருப்பதனாலேயே உத்தமனாக இருக்கின்ற என்பதை குறிக்கும்.
உன்னித்து எழுந்த என் தட முலைகள் என்று சொன்னது, அவனுக்கு என்றே அனுசந்தித்து, இந்த அனுசந்தானமான நீரில் பெருத்து வளர்ந்த என் முலைகள் என்பதாகும்.
மானிடவர்க்கு என்று பேச்சுப்படில் என்று சொன்னது, நானும் அறியாது இருக்க, அவனும் அறியாது இருக்க, ஓரு சாமானிய மனிதனுக்கு இவற்றை உரிமை ஆக்குவது, என்று இந்த நாட்டில் ஒரு பேச்சு ஏற்பட்டு என் காதில் விழாவிட்டாலும், நான் வாழா மாட்டேன் என்கிறாள். உனக்கே நாம் ஆட் செய்வோம், என்று திருப்பாவையில் காட்டிய உறுதியை உடைய இவளுக்கு, மற்றவர்களுக்காக இருக்கும் இருப்பு, இவள் காதில் விழாவிட்டாலும் இவள் உயிர் பிரிவாள் என்பதை காட்டும்.
ராவணன் சீதா பிராட்டியிடம் ராமனை போன்ற மாய சிரசை காண்பித்த போது, சீதா சாதாரண பெண் போல கதறினாளே தவிர, உயிரை விடவில்லையே, இது பிராட்டியின் அன்பிற்கு பொருந்துமோ என்று நம்பிள்ளை நம்ஜீயரிடம் கேட்டபோது, அதற்கு நம்ஜீயர், “பிராட்டி உயிர் பிரியாமல் இருந்ததற்கு, பெருமாளூடைய சத்தையே இவளுடைய சத்தைக்கு காரணம் என்று அருளி செய்தார். தாயார் உயிர்விடாமல் இருந்ததானால் அவள் அன்புக்கு குறை சொல்ல முடியாது. பெருமாள் உயிருடன் இருக்கிறார் என்ற நினைவோ அவள் தரியாமைக்கு அந்த நினைவு இல்லாமையும் காரணம் அல்ல. பெருமாள் உண்மையில் உயிருடன் இருந்ததால் பிராட்டி உயிருடன் இருந்தாள், அதே போல பிராட்டி உண்மையில் உயிருடன் இருந்ததால் எம்பெருமான் உயிருடன் இருந்தால் என்பதே இதன் கருத்து. அதே போல ஆண்டாள் பிறர்க்கு ஆக்குவது என்று சொல் நாட்டில் எழுந்தால், ஆண்டாள் சத்தையை குலைப்பதாக இருந்தது.
மன்மதனே என்றது உன் காலில் விழும்படி ஆயிற்றே என்று தன்னுடைய ஆற்றாமையை கூறுவது ஆகும்.
Leave a comment