சுவரில் புராண நின் பேரேழுதிச்* சுறவ நற் கொடிகளும் துரங்கங்களும்* கவரிப் பிணாக்களும் கருப்பு வில்லும்* காட்டித் தந்தேன் கண்டாய் காமதேவா* அவரைப் பிராயந் தொடங்கி என்றும்* ஆதரித்து எழுந்த என் தட முலைகள்* துவரைப் பிரானுக்கே சங்கற்பித்திவித்து * எழுது வைத்தேன் ஓல்லை விதிக்கிற்றியே
நாச்சியார் திருமொழி 1.4
பழையவனே, சுவர்களிலே உன்னுடைய பெயரை எழுதி சுறா என்ற வகை மீன் படம் வரைந்த கொடிகளும், குதிரைகளும், சாமரங்களை உடைய பெண்களும், கரும்பாகிற வில்லையும் உனக்கு உடையாதாக செய்தேன். பால்யம் தொடங்கி என்றும் ஒருபடிப்பட விரும்பி கிளர்ந்த என்னுடைய பருத்த முலைகளை துவாரக நாயகனான கண்ணனுக்கே என்று சங்கலபித்து கொண்டு தொழுதேன். சீக்கிரமாக விதிக்க வேண்டும் என்பது இந்த பாடலின் பொழிப்புரை. இந்த பாடலில் ஆண்டாள் தன் ஆற்றாமையை தெரிவிக்கின்றாள்.
சுவரில் புராண நின் பேரேழுதி
கண்ணனைக் காண வேண்டும் என்ற ஆவலுடைய ஆண்டாள், அவனைக் கண்டால், பின்பு, காமதேவனை மறக்க கூடுமாதலால், அப்படி மறதி ஏற்படாமல் இருக்க, அந்த மன்மதன் பெயரையும் மற்றும் அவனது அம்சங்களையும் சுவரில் எழுதியதை கூறுகிறார்.
பிரிந்தவர்களைக் கூட்ட வல்லவனாகப் புராணங்களில் கூறப்பட்டு உள்ளவனே என்றும் கூறுவர். சுறவ நற் கொடிகளும் என்று சொன்னது காமன் மீனைக் கொடியாக உடையவன் என்பதை தெரிவிக்கவே. துரங்கங்களும் என்று குதிரைகளை பற்றி சொன்னது, கண்ணனுடைய தேரில் கட்டப்பட்ட குதிரைகளை பேச வேண்டியவள், காமனுடைய குதிரைகளை நினைக்க வேண்டியதாயிற்று.
கண்ணனை அன்றி மற்ற எவரையும் அனுபவிக்கத் தனக்கு ருசி இல்லாததையும், பிரிந்தாரை சேர்த்து வைப்பவன் என்று பழைய காலத்தில் இருந்து பெயர் பெற்று இருக்கும் மன்மதன், கண்ணனிடம் தன்னை சேர்த்து வைக்க வேண்டும் என்பதையும் கூறுகிறார்.
ஆண்டாளுடைய கொங்கைகளோடே ஆடல் கொடுக்கைக்குப் பதினாறாயிரம் பெண்களுக்கும் முன்னோட்டுக் கொடுத்த கண்ணன் வேண்டும் என்று ரஸோக்தியாக உரைப்பர்.
குதிரைகளை காமனுக்கு சமர்பித்தாள்; சாமரம் வீசும் பெண்களை சமர்ப்பித்தாள்; உனக்கு வில்லாக இருக்கும் கரும்பினையும் சமர்ப்பித்தேன் என்கிறாள்;
காட்டித் தந்தேன் கண்டாய் காமதேவா என்று சொன்னது, இவள் தன் நெஞ்சிலே தனக்கு சமர்ப்பிக்க வேண்டியவைகளை சமர்ப்பித்தாள் என்று நீ நினைத்து இருப்பாயாக என்கிறாள். எம்பெருமானுக்கு திருவாராதனம் செய்யும் போது, வாகனம், கொடி, சாமரம் முதலியவற்றை சமர்ப்பிப்பது போல இவனுக்கும் சமர்ப்பிக்கிறாள். காமதேவ என்று சொன்னது, தான் விரும்பும் கண்ணனை பெறுவதற்கு, காமர் தாதையான அவனுடைய பிள்ளையாகையாலே, எனக்கும் பிள்ளையான உன் காலில் விழும்படி ஆகி விட்டது என்கிறாள்;
தொழுகையைக் காமனிடத்து வைக்காமல் முலைகளிடத்தே வைக்கிறாள் என்று பொருள் கொள்ளல் மிகச் சிறக்கும். தனது பருத்த முலைகளை துவாரகைக்குத் தலைவனான அக்கண்ணனே அனுபவிக்க தகுந்தவன் என்று அவனை சங்கல்பித்து, அவற்றை தொழுகின்றேன் என்கிறார். பக்திசெல்வம் மிகுந்தவனான இளைய பெருமாள் (லக்ஷ்மணன்) எல்லா உலகங்களையும் ஆனந்திக்க செய்பவனும், தன் அண்ணனுமான ஸ்ரீ ராமபிரானிடம், சிறு வயது முதல் எப்பொழுதும் அன்பு கொண்டவனாக இருந்தான். அது போல், ஆண்டாள் நாச்சியாரின் திருமுலைகளும் பருவம் நிரம்புவதற்கு முன்பே கண்ணனை அணைக்க ஆசைப்பட்டதால் அவனே அனுபவிக்க தக்கவன் என்கிறார். இப்போது அவனாலும் அனுபவித்து முடிக்க முடியாதபடி பெருத்து உள்ளதாகவும் கூறுகிறார். அவனுக்கு என்று சங்கல்பித்த பின்பு அவைகளும் தொழ தக்கவைகளே என்கிறார். இவை வாடுவதற்கு முன்பு அவனோடே சேர்ப்பிக்க வேண்டுமாக கேட்கிறார்.
பதினாராயிரம் தேவிமார்களையும் அனுபவிப்பதில் முன் நிற்கும் எம்பெருமானே வேணும் ஆயிற்று இந்த தட முலைகளை அனுபவிப்பதற்கு என்கிறாள்.
Leave a comment