மத்த நன்னறு மலர் முருக்க மலர்* கொண்டு முப்போது முன்னடி வணங்கி* தத்துவம் இலியென்று நெஞ்சு எரிந்து* வாசகத்து அழித்து உன்னை வைதிடாமே* கொத்தலர் பூங்கணை தொடுத்துக் கொண்டு* கோவிந்தன் என்பதோர் பேரேழுதி* வித்தகன் வேங்கட வாணன் என்னும் விளக்கினில் புகவென்னை விதிக்கிற்றியே*
நாச்சியார் திருமொழி 1.3
ஆண்டாள், தான் நெஞ்சு அறிந்து, காமனை திட்டாமல் இருக்க வேண்டுமானால், தன்னை அவன். வேங்கடமுடையானோடு, சேர்த்து விட வேண்டும் என்று வேண்டுகிறாள்.
ஊமைத்தையுடைய நல்ல மலர்கள், பலாசம் புஷ்பங்கள் கொண்டு, காலை, மாலை, மதியம் போன்ற மூன்று வேளைகளிலும் உன்னுடைய அடிகளிலே வணங்கி இவன் சத்தியம் தப்பினவன் என்று நெஞ்சு கொதித்து வாயாலும் உன்னை வையாதபடி கொத்து கொத்தாக மலர்கின்ற புஷ்ப பாணங்களை தொடுத்து கொண்டு கோவிந்தன் என்று பெயர் கொண்டு நெஞ்சில் எழுதி கொண்டு வியக்கதக்க திருமலைக்கு நிர்வாகவனான திருவேங்கடவன் என்று அவன் விளக்கினில் புகும்படி என்னை நியமிக்க வேண்டும் என்று ஆண்டாள் வேண்டும் பாடல்.
மத்த நன்னறு மலர் முருக்க மலர்
காமன் ரஜோ குணம் மிகுந்தவன் என்பதால், அதற்கு தக்க காமத்தை தூண்டும் மணம் மிக்க ஊமத்தம் பூ, முருக்கம் பூ போன்ற பூக்களை கொண்டு, பரம சாத்வீகமான துளசி பறிக்கும் குலத்தில் பிறந்த ஆண்டாள் இந்த பூக்களை தேடி இடுகிறாள்.
முப்போது முன்னடி வணங்கி
ஓரு பொழுது தொழுவது கூட பேறு பெற தேவை இல்லை என்று நினைக்கும் எம்பெருமான் பற்றிய இவள் அன்றோ, காலை, மதியம், மாலை என்று மூன்று வேளைகளிலும் இவனை சாதனமாக விரதம் எடுக்கிறாள்.
தத்துவம் இலியென்று என்று சொல்வது, இது நாள் வரை நல்லவன் என்று எடுத்த பெயர் கெடாதபடி, உன் பெயரை கெடுத்து கொள்ளாதே என்கிறாள்.
நெஞ்சு எரிந்து, வாசகத்து அழித்து உன்னை வைதிடாமே என்று சொல்வது, இவனை வேண்டுவதால் எந்த பயனும் இல்லை என்று நெஞ்சம் கொதிப்படைந்து அது வாய்வழியே வெளி வந்து எல்லோருக்கும் தெரியும்படி திட்ட வேண்டாதபடி காரியம் செய்வாய் என்கிறாள். ‘தருமம் அறிய குரும்பனை – பொருத்தமிலியை ‘ (14. 6) என்றும், ‘புறம் போல உள்ள கரியானை ‘ (14.7) என்றும், ‘ஏலா பொய்கள் உரைப்பானை ‘ (13.1) என்று இவளே, இதே பிரபந்தத்தில் எம்பெருமானை திட்டுவது போல இவனை திட்ட நேரிடும் என்று பயமுறுத்துகிறாள்.
கொத்தலர் பூங்கணை தொடுத்துக் கொண்டு என்று சொல்வது, இராமாயணத்தில் (யுத்த காண்டம் 94.18) சொல்லியது போல, ததோ ராமோ மஹா தேஜா தநுராதாய வீர்யவாந் । * ப்ரவிஶ்ய ராக்ஷஸம் ஸைந்யம் ஶரவர்ஷம் வவர்ஷ ஹ । , (பிறகு, மகா தேஜஸ்ஸூடன் மிகுந்த ஆற்றலும், வீரமும் கொண்ட இராமன், வில்லை எடுத்து ராட்சச படையின் மீது அம்பு மழை பொழிந்தான்), பத்தும், நூறுமாக அம்புகளை கொத்து கொத்தாக தொடுத்து விடுவது போல, நீயும் கொத்து கொத்தாக புஷ்ப பாணங்களை தொடுத்து கொண்டு என்கிறாள்;
கோவிந்தன் என்பதோர் பேரேழுதி என்று சொல்வது, எங்களை காப்பதற்காக கோவிந்த பட்டாபிஷேகம் செய்து கொண்டு இருப்பவனுடைய கோவிந்த நாமத்தையும் உன் நெஞ்சிலே அல்லது அம்பிலே எழுதிகொண்டு என்று சொல்கிறாள்.
வித்தகன் வேங்கட வாணன் என்று சொல்வது பரமபதத்தில் நித்யசூரிகளுக்கு காட்சி கொடுத்து கொண்டு இருக்கின்ற கூடிய வல்லமை உடையவன் அந்த விருப்பத்தை விட்டு, வன விலங்குகளுக்கும் குரங்குகளுக்கும் வேடர்களுக்கும் காட்சி கொடுத்து கொண்டு இருக்கும் திருமலையில் வந்து நிற்கும் வியக்கத்தக்கவன் என்கிறாள். வன விலங்குகளும் திருவேங்கடவனுக்கு விளக்கு ஏற்றியும் திருவாராதனம் செய்தும் பணி புரிகின்றன. பரமபதத்தில் மங்கி இருந்த அவனுடைய ஸ்வரூப ரூப குணங்கள் திருமலையில் பிரகாசித்து இருப்பதை சொல்கிறாள்.
விளக்கினில் புகவென்னை விதிக்கிற்றியே என்று சொல்வது அப்படிபட்ட விளக்கினில் என்னை புக வைக்க வேண்டும் என்கிறாள்.
Leave a comment