வெள்ளை நுண் மணற் கொண்டு தெரு வணிந்து * வெள் வரைப்பதன் முன்னம் துறை படிந்து * முள்ளும் இல்லாச் சுள்ளி யெரி மடுத்து * முயன்று உன்னை நோற்கின்றேன் காமதேவா * கள் அவிழ் பூங்கணை தொடுத்துக் கொண்டு * கடல் வண்ணன் என்பதோர் பேரெழுதி * புள்ளினை வாய் பிளந்தான் என்பதோர் இலக்கினில் * புகவென்னை யெய்கிற்றியே *
நாச்சியார் திருமொழி 1.2
தான் நோன்பு நோற்பதை சொல்லி, தன்னை எம்பெருமானிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என்று சொல்கிறாள்.
காமதேவா, வெளுத்து நுண்ணியதாய் இருந்துள்ள மணலை கொண்டு அவன் வருகிற வழியை, அலங்கரித்து, கிழக்கு வெளுப்பதற்கு முன், நீர் துறைகளில் சென்று, முழுகி, முள்ளும் எறும்பும் இல்லாத விறகுகளை அக்னியில் போட்டு, முயற்சி செய்து விரதம் அனுஷ்டிக்கின்றேன். மது ஒழுகின்ற பூக்களால் அம்புகளை தொடுத்துக்கொண்டு, கடல் போன்ற கரு/திரு நிறத்தை உடையவன் என்பதை இலக்காக கொண்டு என்னை அங்கே கொண்டு புக வைக்க வேண்டும்.
வெள்ளை நுண் மணற் கொண்டு தெரு வணிந்து என்று சொன்னது சத்வ குணம் கொண்ட எம்பெருமானிடம் சம்பந்தம் கொண்ட வெள்ளை நிறத்தை கொண்டு ரஜோ குணம் கொண்ட காமன் வரும் பாதையில் அலங்கரிக்கிறாள்.
வெள் வரைப்பதன் முன்னம் துறை படிந்து என்று சொன்னது திருப்பாவையில் ‘நாட்காலே நீராடி’ (2) என்றும் ‘கீழ் வானம் வெள்ளென்று’ (8) என்ற பழக்கதாலும், எம்பெருமானை குறித்து நோன்பு நோற்ற போது செய்ததை இப்போதும் செய்கிறாள்.
“அத்யந்தஸுகஸஂவரித்தஸ்ஸுகுமாரஸ்ஸுகோசிதஃ. * கதஂ ந்வபரராத்ரேஷு ஸரயூமவகாஹதே ராமாயணம் ஆரண்ய 16.30 சொல்வது, பரதன் மிகவும் சுகத்தில் வளர்ந்தவனும், சுகுமாரனும், சுகத்திற்கு தகுந்தவனும், எப்படி இந்த குளிரில், விடிவதற்கு முன்பு, பின் இரவில் சரயு நதியில் குளித்து விட்டு யார் கண்ணிலும் படாமல் வருகிறானோ, என்பது போல, ஆண்டாளும் கண்ணனை பிரிந்த விரகதாபத்தில் குளிக்க வேண்டியவள் மேற்கொண்ட விரததிற்காக ப்ராப்ய துக்கத்தில் கலங்கி குளிக்கிறாள் என்கிறார்.
முள்ளும் இல்லாச் சுள்ளி யெரி மடுத்து என்று சொல்வது, மென்மை மிக்க காமனை நோக்கி விரதம் இருப்பதால் முள் எறும்பு இல்லாத விறகுகள் கொண்டு ஹோமம் செய்கிறாள். பெரியாழ்வார் ஹோமங்களுக்கு நல்ல விறகு எடுத்து கொடுத்து பழக்கம். சுள்ளியை நன்றாக எரிப்பதால், கண்ணனை நன்றாக அணைக்கலாம் என்று நினைக்கிறாள் போலும். இராமாயணத்தில், “தம் தரிஷ்ட்வா ஸத்ரு ஹந்தாரஂ மஹர்ஷீணாஂ ஸுகாவஹம். * பபூவ ஹரிஷ்டா வைதேஹீ பர்தாரஂ பரிஷஸ் வஜே৷৷ (ஆரண்ய காண்டம், 30.39).
‘எதிரிகளை அழித்தவரும், மஹர்ஷிகளுக்கு சுகத்தை அளிப்பவனும் இராமனை பார்த்து, விதேக ராஜ புத்ரியான சீதை ஆனந்தம் கொண்டவளாய், தன் கணவரான அவரை நன்கு தழுவி கொண்டாள்’ என்பதை போல தானும் கண்ணனை தழுவி கொள்ள விழைக்கிறாள்.
முயன்று என்பது, ஷரைஸ்து ஸங்குலாஂ கரித்வா லங்காஂ பரபலார்தநஃ. * மாஂ நயேத்யதி காகுத்ஸ்தஃ தத்தஸ்ய ஸதரிஷஂ பவேத்৷৷ (இராமாயணம் சுந்தர காண்டம் 39.30) (சத்ருக்களின் பலத்தை ஓழிப்பவரான ஸ்ரீராமன், லங்கையை அம்புகளால் கலங்க செய்து என்னை அழைத்து கொண்டு போவாரானால் அதுவே அவர்க்கு தகுந்தது ஆகும்) என்பது போல, ஆண்டாளும் அவனை அடைவதற்கும் அவனே உபாயம் என்பதில் உறுதியாக இருக்க வேண்டியவளான தான், இப்போது அவனை பெறுவதற்கு காமன் காலில் விழுந்து முயற்சிப்பதாக சொல்கிறாள்.
உன்னை நோற்கின்றேன் காமதேவா என்று சொன்னது, தான் பற்றி இருப்பது எல்லா படியிலும் சிறந்த பரம புருஷன் என்பதை காமன் அறிய வேண்டும் என்று சொல்கிறாள்.
பேரெழுதி என்றது, தன் பெயரை உன் நெஞ்சில் எழுதி சங்கல்பித்து கொள் என்றும் அப்படி செய்தால் காமன் இவள் காரியத்தை செய்து முடிப்பான் என்றும் நம்புகிறாள்.
புள்ளினை வாய் பிளந்தான் என்பதோர் இலக்கினில் என்று சொல்வதில், கொக்கின் உருவில் வந்த பகாசூரனுடைய வாயை கிழிப்பதன் மூலம் தன் விரோதிகளை அழிப்பதை இயல்பாக கொண்டவன் என்பதை காட்டிக்கொண்ட எம்பெருமானிடத்தில் தன்னை கொண்டு சேர்ப்பிக்க வேண்டும் என்கிறாள்.
Leave a comment