திவ்ய பிரபந்தம்

Home

NT 1.1 தையொரு திங்களும்

நாச்சியார் திருமொழித் தனியன்கள்

திருக்கண்ணமங்கையாண்டான் அருளிச் செய்தது

அப்போது அலர்ந்த தாமரை பூவின் இதழ்கள் பொருந்தி நின்ற தெய்வ பெண்ணான பெரியபிராட்டிக்கு மிகவும் பிடித்த ஸ்நேகிதியாகிய, மல்லி நாட்டை, குணத்தாலே ஈடுபடுத்தி ஆள்கின்ற, அழகிய மயில் போன்றவளாயும் மென்மை தன்மை உடையவளும் ஆன ஆண்டாள், இடை குலத்திற்கு தலைவரான கண்ணனுடைய திருமேனிக்கு பொருத்தம் ஆனவள், அழகிய ஸ்ரீவில்லிபுத்தூரில் வேயர் குலத்தில் உதித்த பெரியாழ்வார் பெற்ற விளக்காக நின்றாள். 

முதலாவது வானமாமலை ஸ்வாமி அருளிச் செய்தது

அழகையும் சுரியையும் உடைய, பாஞ்ச சந்நியத்தை கொண்ட கண்ணனுடைய சிவந்த அதரத்தின் அதிசயத்தை கேட்கும் தன்மை உடையவளும் தென் திசையில் உள்ள, திருமல்லி காட்டுக்கு தலைவியும், செழுமை தாங்கிய, தனது குழல் கற்றறையில் சூடப்பட்ட கலம்பக மாலையை, அழகியமணவாளனுக்கு, சமர்பிக்கும்படியான மேன்மை உடையவளான, சோலையில் வளரும் கிளி போல இனிய மொழி உடையவளான, ஆண்டாளான, பாவனமும் போக்கியமும் கொண்ட திருவடிகள் நமக்கு தஞ்சம். 

=========================================================

நாச்சியார் திருமொழி 1.1

கண்ணனோடு சேர திருப்பாவையில் மார்கழி மாதம் நோன்பு நோற்ற ஆண்டாள், அவன் வந்து சேராததால் ஆற்றாமை மிகப் பெற்று, ‘இனி நாம் ஒன்றும் செய்யாமல் இருந்தால் ஆகாது, ‘பிரிந்தாரைச் சேர்ப்பிக்க வல்லவன் மன்மதன் என்று கேள்வி பட்டுள்ளோம் ; அவனது காலில் விழுந்தாவது கண்ணனோடு கூடப் பெறுவோம்’ எனக்கருதி, அப்படியே அந்த மன்மதனைத் தன் காரியம் செய்யும்படிக்கு ஈடாக ஆராதிக்க நினைத்து, அவன் வரவேண்டிய இடங்களையும் தெருக்களையும் சுத்தம் செய்து, அழகிய சிறு மணல்களால் அலங்கரித்து, தை மாதம் முழுவதும் மண்டல பூஜைக்காக மேடையிட்டு அவனையும் அவன் தம்பியையும் வணங்குவதாகக் கூறும் பாசுரம். ஓரு மண்டலம் பூஜை செய்வதையும் கூறவதாக கொள்ளலாம். ஓரு பலன் சித்திக்க வேண்டும் என்று விரதம் இருந்தால் ஓரு மண்டலம் விரதம் இருக்க வேண்டும் என்ற நியதி இங்கே நோக்க தக்கது.

உய்யவுமாங்கொலோ!” என்று ஐயப்படுவதற்குக் காரணம் யாதெனில், ஸ்வரூப நாசத்தை விளைவிக்கவல்ல தேவதையைப் பற்றினதால் இந்த பற்று உஜ்ஜீவனத்திற்கு உதவுமோ அல்லது, வீழ்வதற்கு காரணம் ஆகுமோ என்று நெஞ்சு தளும்பும்படி என்கிறார். இவள் பற்றும் தேவதை, சர்வ சக்தி படைத்தது இல்லை என்பதால், சந்தேகம் வருகிறது.

செங்கண்மால் எங்கள்மால் என்ற நாள் எந்நாளும் நாளாகும் ‘ (மூன்றாம் திருவந்தாதி 17) என்று சொன்னது போல, எம்பெருமான், ‘நம்மிடம் இந்த அடியேன் அன்பு செலுத்தினான்’ என்று ஓரு நாள் உண்டானால், சென்ற காலம், நிகழ்காலம், எதிர்காலம் என்று மூன்று காலங்களிலும் நல்ல நாளாய் சிறப்பு அடையும் என்பதாகும்.  இப்படி ஒரு நாள் அன்பு செலுத்துவதும் அதிகம் என்று நினைக்க வைக்கும் எம்பெருமானைப் பற்ற வேண்டும் என்ற ஒரே காரணத்தால் ஆண்டாள், காமனின் காலில் ஓரு மாதம் துவள பார்க்கிறாள்.

திங்கள் என்றால் சந்திரன்.   அமாவசைக்கு அமாவசை ஒருமாதம் என்று கொண்டு, ‘திங்கள்’ என்று மாதத்திற்குப் பெயர் வழங்கலாயிற்று: மண்டலபூஜை என்கிற ஒரு காரணத்தை கொண்டு, காலைக் கொண்டு நடக்கும் இடத்தில் பெரிய மணல்களிருந்தால் காலில் உறுத்தும் என்று நொய் மணல்களாக ஆராய்ந்து, ஆண்டாள் காமன் வரும் இடத்தை ஒரு மாதம் அலங்கரித்ததை சொல்கிறாள். வடபெரும் கோவிலில், பெரியாழ்வார் ஸ்தல சுத்தி செய்வது, அங்கே பகவத் கைங்கர்யம் செய்வதற்காக என்பது போல, ஆண்டாள் காமனுக்கு செய்யும் இந்த ஸ்தல சுத்தி (தரைவிளக்கி) , பகவத் கைங்கர்யம் செய்வதற்கு ஓரு சாதனமாக செய்கிறாள்.

தண் மண்டலமிட்டு என்று சொல்வது, குளிர்ந்த அழகான கோலம் இட்டத்தை சொல்கிறார். இங்கு, ‘தொழுது மாமலர் நீர் சுடர் தூபம் கொண்டு * எழுதும் எண்ணும் இது மிகையாதலில்’ என்ற திருவாய்மொழி (9.3.9 ) பாடலில் கூறியது போல, தொழுது எழுவோம் என்று எம்பெருமானை அதிகமாக நினைக்கும் இவள் எம்பெருமான் கிடைக்காததால் ஓரு மண்டலம் வைஷ்ணவர்களுக்கு தகாததை அனுஷ்டிக்கும் போதும், ஞானத்துடன் கலந்த நல்ல பக்தியுடன் இவள் செய்வதால், வைஷ்ணவர்களுக்கு தகுந்த சத் செய்கை ஆயிற்று என்கிறார்.

அனங்கன் என்பது உடம்பில்லாதவன் என்று பொருள்;  அதன் வரலாறு முன்னொரு காலத்தில் கைலாஸ மலையில் பரமசிவன், தவம் செய்து கொண்டு இருக்கையில், பார்வதியும் சிவனும் இணைவதற்காக மன்மதன், உடல் எரிந்து சாம்பலாய் போயிற்று. மன்மதனுக்குப் பல பெயர்கள் இருக்க, அவற்றை விட்டு ‘அனங்க தேவா!’ என்று அழைத்தமையால், ‘நீ உன் உடம்பை இழந்தும், பிரிந்தாரை சேர்த்து வைப்பவன் அல்லவா,’ என்ற கருத்துக்கு வலு சேர்க்கிறது.  

என்று சொல்லி” என்றது, ‘என்று நினைத்து’ என்ற பொருளில் வருகிறது. ‘நீ இங்கிருப்பாயென்று நினைத்து நான் வந்தேன்’ என்ற பொருள்.  

உன்னையும் உன் உம்பியையும் என்றது, ஆண்டாள் திருப்பாவையில் கண்ணனைப் பற்றும் போது நம்பிமூத்தபிரானையும் பற்றினாள் ஆதலால், அதே போல இங்கும் மன்மதனை, உடன்பிறந்தவனோடு தொழுகிறாள். திருப்பாவை முழுவதும் எம்பெருமானை பற்றும் போது அடியவர்களுடன் சேர்ந்த சென்றதால் அதே வாசனை இங்கும் தொடர்கிறது.

இராமாயணத்தில் (அயோத்யா காண்டம் 31.2)

ஸ ப்ராதுஷ்சரணௌ காடஂ நிபீட்ய ரகுநந்தநஃ. *  ஸீதாமுவாசாதியஷாஂ ராகவஂ ச மஹாவ்ரதம்৷৷

என்று சொல்லியபடி, ரகுகுலத்தை உகப்பிப்பவனானவும், மிகுந்த கீர்த்தியை உடையவனுமான லக்ஷ்மணன், பிராட்டியை முன்னிட்டு, சரணம் அடைந்தவர்களை காப்பேன் என்று விரதம் எடுத்த, ஸ்ரீராமனின் திருவடிகளை பற்றி பேச ஆரம்பித்தான் என்று சொல்வதை போல ஆண்டாள் சாமனை முன்னிட்டு காமனை பற்றுகிறாள்.

அதேபோல, இராமாயணம் சுந்தர காண்டம் (13.59) சொன்னபடி,

நமோஸ்து ராமாய ஸலக்ஷ்மணாய தேவ்யை ச தஸ்யை ஜநகாத்மஜாயை. நமோஸ்து ருத்ரேஂத்ரயமாநிலேப்யோ நமோஸ்து சந்த்ரார்கமருத்கணேப்யஃ৷৷

என்று ஹனுமான் வாக்கியமாக சொன்ன லக்ஷமணனுடன் கூடிய இராமனுக்கு நமஸ்காரம். ஜனாகராஜன் மகளுக்கு நமஸ்காரம் என்று லக்ஷ்மணனை பற்றி கொண்டு இராமனை பற்றிய ஹனுமானை போல உன்னையும் உன் தம்பியான சோமனையும் வணங்குகிறேன் என்கிறார்.

இராமாயணத்தில் கிஷ்கிந்தா காண்டத்தில் (32,17), சொன்னபடி,

‘உன்தம்பி’ என்பதற்கு “காமன் தம்பி சாமன்” என்று பெரியவாச்சான் பிள்ளை உரைத்தருளினார்’, 

கரிதாபராதஸ்ய ஹி தே நாந்யத்பஷ்யாம்யஹஂ க்ஷமம். * அந்தரேணாஞ்ஜலிஂ பத்த்வா லக்ஷ்மணஸ்ய ப்ரஸாதநாத் அபராதம் செய்த உனக்கு கைகூப்பி, லக்ஷ்மணனை உகப்பிப்பதை தவிர வேறு பிரயாசித்தம் இல்லை என்று பரிபூரணமாக குற்றம் இழைத்தவர்கள் அதற்கு பரிகாரமாக ஓரு அஞ்சலி செய்தே ஆகியவேண்டும் என்று ஹனுமான் சொன்னான். குற்றம் இழைத்தவர்களுக்கு அக்குற்றத்தை போக்கி இஷ்டத்தை நிறைவேற்றி தருவது அஞ்சலி. இதனை கருத்தில் கொண்டு, காமன், ஆண்டாள் தொழுவதின் நோக்கத்தை கேட்க, அதற்கு ஆண்டாள் கூறும் பதில் வெய்யதோர் தழல உமிழ் சக்கரக்கை * வேங்கடவற் கென்னை விதிக்கிற்றியே என்பது ஆகும்.

ஸ்ரீ வைகுண்டத்தில் அயர்வறும் அமரர்கட்குக் காட்சிக் கொடுத்துத் தன் செருக்குத் தோற்ற வீற்றிருக்கும் எம்பெருமான், ‘ஸம்ஸாரிகளும் இந்த பேற்றைப்பெற்று வாழவேணும்’ என்று அங்கு இருந்து பயணம் எடுத்து விட்டு, அடியாருடைய விரோதிகளை ஒழிக்கும் இயல்வினனான திருவாழி ஆழ்வானைக் கையில் உடையனாய்க் கொண்டு திருமலையில் வந்து நிற்கிறவனோடே என்னைக் கூட்ட வேண்டும் என்கிறாள்.

விதிக்கிற்றியே ’ என்று சொன்னது எம்பெருமானோடு என்னை நீ கூட்டவல்லையோ என வினவியதாக கொள்ளலாம்.

Leave a comment