திவ்ய பிரபந்தம்

Home

T30 வங்கக் கடல்

திருப்பாவை 30

  • முதல் பாட்டு, காலத்தையும், அதிகாரிகளையும், காரியத்தை முடிக்கும் கிருஷ்ணனையும் கொண்டாடிக் கொண்டு நோன்பு தொடங்க முயல்வது
  • இரண்டாம் பாட்டு, நோன்புக்கு அங்கமாகச் செய்ய வேண்டிய செயல்களையும் தவிர்க்க வேண்டியவற்றையும் சொல்வது
  • மூன்றாம் பாட்டு, நாம் நமக்கு இனிதாக நோன்பு நோற்க அனுமதி கொடுத்த நாட்டு மக்களுக்கு, எல்லா பலன்களும் கிடைக்கும் என்றது
  • நான்காம் பாட்டு, மழைக்கு தேவதையான பர்ஜந்யனை அழைத்து நாடெங்கும் மழை பெய்ய சொன்னது
  • ஐந்தாம் பாட்டு, தாங்கள் தொடங்கும் நோன்புக்கு, தடை செய்யும் பாவங்கள், எம்பெருமானை வாயினால் பாடி, மனத்தினால் சிந்திக்க தானாகவே நீங்கும் என்று உறுதியாக சொல்வது
  • தங்கள் நோன்புக்கு, அனைவரையும் சேர்க்க விரும்பி, ஆறாவது பாட்டு முதல் பதினைந்தாம் பாட்டு வரை பத்துப் பாசுரங்களாலே தங்களை போன்ற பெண்கள் அனைவரையும் எழுப்புவது
  • பதினாறாம் பாட்டு, எல்லாருமாக சேர்ந்து, நந்தகோபர் திருமாளிகை நுழைய, திருவாசல் காப்பவனை எழுப்பி அவனிடம் அனுமதி பெறுவது
  • பதினேழாம் பாட்டு, ஸ்ரீ நந்தகோபர், யசோதை, கண்ணன், பலராமன் இவர்களைச் சொல்லும் முறைகள் வழுவாமற் சொல்லி எழுப்பியது
  • பதினெட்டாம் பாட்டு, நப்பின்னைப் பிராட்டியைப் பலவாறாகப் புகழ்ந்து எழுப்பியது
  • பத்தொன்பது மற்றும் இருபதாம் பாட்டுக்களில், கண்ணபிரானையும் நப்பின்னைப் பிராட்டியையும் சேர்த்து உணர்த்தியது
  • இருபத்தி ஒன்று மற்றும் இருபத்தி இரண்டாம் பாடல்கள், தங்கள் அபிமானம் குலைந்து வந்தது, அவர்கள் குணங்களுக்குத் தோற்று வந்தது, அவன் கடாக்ஷமே நோக்கமாக வந்தது, அவன் ஸந்நிதியில் விண்ணப்பம் செய்ய வந்தது இவற்றை சொல்கிறன.
  • இருபத்து மூன்றாம் பாட்டு, எங்களுக்காகப் புறப்பட்டுச் சீரிய சிங்காசனத்தில் அமர்ந்து அருளபிரார்த்தித்தது.
  • இருபத்து நான்காம் பாட்டு, அந்த ஆஸ்தானத்தில் அமர்ந்த அவனுக்கு மங்களாசாஸநம் செய்தது
  • இருபத்தைந்தாம் பாட்டு, தாங்கள் யாசகம் வேண்டி வந்தமையை விண்ணப்பம் செய்வது
  • இருபத்தாறாம் பாட்டு, நோன்புக்கு உரிய உபகரணங்கள் இன்னவை இன்னவை என்று சொல்லி விண்ணப்பித்தது
  • இருபத்தேழாம் பாட்டு, நோன்பு நோற்று முடித்த பின் பெற வேண்டிய சம்மானங்களை வேண்டியது
  • இருபத்தெட்டாம் பாட்டு, தங்கள் சிறுமை,அவன் பெருமைகள் மற்றும் அவனோடுள்ள உறவு இவற்றைச் சொல்லி, தங்கள் பிழைகளைப் பொறுத்து தாங்கள் நினைத்தவைகளை அருள வேண்டியது
  • இருபத்தொன்பதாம் பாட்டு, தங்களுடைய நோக்கமான பகவத் கைங்கரியத்தை வெளிப்படையாகக் கூறி, அதனை நிறைவேற்றித் தர நிர்ப்பந்தித்துப் பிரார்த்திக்க, அவனும் ‘அப்படியே அருளியது
  • தங்களின் நோக்கம் நிறைவேற்ற பட்ட ஆண்டாள் முப்பதாம் பாட்டில் அருளிச்செய்த இந்த பிரபந்தத்தை ஓதுபவர்கள் எம்பெருமானுடைய திருவருளுக்கு இலக்காகி மகிழப் பெறுவர் என்று சொல்வது.  

ஆண்டாள், தான் கிருஷ்ணன் இருந்த காலத்தில் இருந்தது போல இந்த மார்கழி மாத நோன்பு நோற்றதாக, இந்த பாடல்களை பாடினாலும், அவளுக்கு பலன் கிடைத்தது. “ஸம காலத்திலே அநுஷ்டித்தது ஒரு பாதியும், அநந்தர காலத்தில் அனுகாரத்தாலே ஒரு பாதியும், பிற்பட்ட காலத்தில் கற்றார்க்குப் பலிக்கும்” என்று ஆறாயிரம் சொல்வது. (சம காலத்தில் பின்பற்றியது ஒரு பாதி, எல்லா காலங்களிலும் கூடவே இருப்பது போல பாவித்தது ஒரு பாதி என்று இருந்தது, பிற்காலத்தில் படிப்பவர்களுக்கு பலிக்கும் என்று ஆறாயிரம் சொல்கிறது)

கப்பல்களை உடைய திருப்பாற்கடலை (தேவர்களுக்காக) கடைந்த ஸ்ரீபதியான கண்ணனை சந்திரன் போன்ற அழகிய முகத்தையும் செவ்விய ஆபரணங்களையும் உடைய ஆய்ச்சிகள் அடைந்து, வணங்கி அத்திருவாய்பாடியில் பிரசித்தமான (தங்கள்) புருஷார்தத்தை பெற்ற சரித்திரத்தை அழகிய ஸ்ரீவில்லிபுத்தூரில் உதித்த பசுமை பொருந்திய தாமரை மலர்களிலான குளிர்ந்த மாலையையுடைய பெரியாழ்வாருடைய (திருமகளான) ஆண்டாள் அருளிச் செய்த திரள் திரளாக அனுபவிக்க வேண்டிய தமிழ் மாலை முப்பது பாசுரங்களையும் தப்பாமல் இந்த நிலத்தில் இவ்விதமாக ஒதுபவர்கள் பெரிய மலை போன்ற நான்கு திருத்தோள்கள் உடையவனும் சிவந்த கண்களை உடைய திருமுகத்தை உடையவனும் ஐஸ்வரியத்தை உடையவனும் ஸ்ரீமானான எம்பெருமானாலே எல்லா இடத்திலும் திரு அருள் பெற்று அவனுடைய கருபியைப் பெற்று ஆனந்தம் அடைவர் என்பது இந்த பாடலின் பொழிப்புரை.

இப்போது இவ்வாய்ச்சியர்கள் (வங்கக் கடல் கடைந்த) கடல் கடைந்த சரித்திரத்தை கூறியதற்கு காரணம், தாங்கள் கைங்கர்யம் வேண்டுவது கிருஷ்ணனிடம் என்றும், தாங்கள் வேண்டுவது பலனாக சித்திப்பது பிராட்டி ஸம்பந்தத்தால் (மாதவனை) ஆகும் என்றும், அந்த பிராட்டியைப் பெறுகைக்கு அவன் பண்ணின வியாபாரம் அம்ருதத்தை கடைந்த சரித்திரம் என்றும் சொல்கிறார்கள். பெரிய திருமொழி (5.7.4)ல் ‘படுதிரை விசும்பிடைப் படர, சேயிரு விசும்பும் திங்களும் சுடரும் தேவரும் தாமுடன் திசைப்ப, ஆயிரந் தோளால் அலைகடல் கடைந்தான்‘ என்று சொல்லி, அலைகள் ஆகாயம் வரை எறியவும் கடலை பற்பல தோள்களும் கடைந்து அருளிய நேர்த்தியை சொல்கிறது.

மேலும், சுய பலன்களை எதிர்பார்க்கும் (ப்ரயோஜநாந்தரபரரான) தேவர்களுக்காக, தன் உடம்பு நோக காரியம் செய்தவன், எதையும் எதிர்பார்க்காத (அநந்ய ப்ரயோஜநைகளான), நம்முடைய மனோரதத்தை முடித்துக் கொடுக்காமல் இருக்க மாட்டான் என்பதை தெரிவிக்கிறார்கள். இங்கு திருவாய்மொழி (1.7.9)ல் ‘அமரர்க்கு அமுது ஈந்த ஆயர் கொழுந்தை‘ என்று சொன்னது, சுய பலன்களை எதிர்பார்க்கும் தேவர்களுக்காக காரியம் செய்ததை சொல்கிறது.

பெரிய திருமொழி 6.1.2 ல் சொல்லிய, ‘விண்ணவர் அமுதுண அமுதில் வரும் பெண்ணமுது உண்ட எம் பெருமானே தேவ காரியம்‘ என்று ஒரு காரணத்தை முன்னிட்டு பெரிய பிராட்டியாகிய பெண் அமுதத்தை பெற்று அதனால் மகிழ்ச்சியையும் அடைந்த எம்பெருமானை பார்த்து, ஊர்க்காரியம் என்ற ஒரு காரணத்தை முன்னிட்டு இவர்கள் நோன்பு நோற்றால் இவர்களையும் எம்பெருமான் கிருஷ்ணன் இன்று ஏற்றுக்கொள்வார் என்று சொல்கிறார்கள்.

அங்கே பாற்கடல் கடைந்து பெரிய பிராட்டியை பெற்றது போல, இங்கே தயிர் கடைய என்ற ஒரு காரணத்தை கொண்டு, மார்கழி நீராடி, ஆடை உடுத்தி, பல்கலனும் அணிந்து இருக்கும் ஆச்சியர்கள் மத்தியில் பிரகாசமாக இருப்பதை சொல்கிறது.

மாதவனை என்றது பெரியபிராட்டி சம்பந்தத்தை சொல்கிறது.

கேசவனை என்றது, பார்க்கடலை எம்பெருமான் உடல் நோக கடைந்த போது, அவன் திருமுடி அங்கும் இங்கும் அலைந்ததை மனதில் கொண்டு, சொல்லப் பட்டது. பெண்களின் கலவிக்கு தடையாக வந்த கேசியை முடித்ததால், ஆச்சியர்கள் இங்கு கேசவன் என்று சொல்கிறார்கள். பெரிய திருமொழி (6.1.2)ல் சொல்லிய ‘அலை கடல் கடைந்தது அதனுள் கண்ணுதல் நஞ்சுணக் கண்டவனே’ என்பதை நினைவில் கொள்ளலாம். திருவாய்மொழி 10.10.2 ல் ‘வாசம் செய் பூங்குழலாள் திருவாணை நின்னாணை கண்டாய்‘ என்று சொல்லும் போது பெரிய பிராட்டியார் தான் ஆசைப்படும்படியான தலை முடி அங்கும் இங்கும் அலை பாய்ந்து கடல் கடைந்ததை இங்கு குறிப்பிடுகிறார்.

கைங்கர்யம் வேண்டிய அதிகாரிகளின் லக்ஷணம் என்று “திங்கள் திருமுகத்து” என்று சொல்லி, அவர்களுடைய ஸகல கால பூர்த்தியையும், “சேயிழையார்” என்று ஞான விரக்தி முழுமை அடைந்ததையும் கூறுகிறார்கள். கிருஷ்ணனுடன் சேர்ந்ததால் முகம் குளிர்ந்து, மலர்ந்து சிவந்ததை திருவாய்மொழியில் (10.9.10)ல் மதிமுக மடந்தயர் என்று சொன்னது போல சொல்கிறார்.

இறைஞ்சி என்று சொன்னது, வாயினால் பாடி, மனத்தினால் சிந்தித்து என்றும், அடி போற்றி என்றும் புகழ்ந்து சென்று சேவித்து கும்பிடுவதை சொல்கிறது.

அங்கு என்று சொன்னது

  • திருவாய்பாடியிலே,
  • நந்தகோபனுடைய திருக்கோவிலிலே,
  • நப்பின்னை பிராட்டியின் கட்டிலிலே,
  • திவ்ய ஸ்தானத்திலே,
  • திவ்ய சிம்மாசனத்திலே

இருந்த இருப்பை சொல்கிறது.

அப்பறைகொண்டவாற்றை” என்று சொல்வது, பறை கொண்ட அவ்வாற்றை என்று கொள்ள வேண்டும். அது மட்டும் இல்லாமல், நாட்டார்க்காகச் சொன்ன பறையைக் கழித்து, “எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும் உன்றன்னோடுற்றோமே யாவோம்” என்று சொன்ன பறையை என்றும் உரைக்கலாம்.

பொன்னும் முத்தும் மாணிக்கமும் இட்டுச் செய்த ஆபரணம் போலே நாய்ச்சியாரும் பெரியாழ்வாரும் வட பெரும் கோயில் உடையானுமான தேசமாதலால் “அணி புதுவை” எனப்பட்டது. 

கண்ணனுக்கு, நந்தகோபன் சம்பந்தம் பிடித்திருப்பதைப் போல, அவர் இருக்கின்ற திருவாய்பாடி, சீர் மல்கும் ஆய்பாடி என்றதை போல, ஆண்டாள் தனக்கு பெரியாழ்வார் சம்பந்தம் பிரியமாக இருப்பதை தெரிவிக்க ஸ்ரீவில்லிபுத்தூரை புகழ்கிறார்.

சம்சாரத்திற்கு ஆபரணமான ஸ்ரீவில்லிபுத்தூர், பிராட்டிக்கு மிதிலையும், திருஅயோத்தியையும் போல அல்லாமல், நப்பின்னை பிராட்டிக்கு கும்ப குலமும் திருஆய்பாடியும் போல அல்லாமல், ஆண்டாளுக்கு பிறந்த வீடும் புகுந்த வீடும் இந்த ஸ்ரீவில்லிபுத்தூருக்கு ஒன்று மட்டுமே உள்ளது என்கிறார்.

பைங்கமலத்தண்தெரியல் என்று சொன்னது, அந்தணர்களுக்கு தாமரை மாலை அணியுமாறு கூறப்பட்டுள்ளது.

பட்டர்பிரான் என்று சொன்னது, ப்ராஹ்மணர்க்கு உபகாரகர், பெரியாழ்வார். வேதார்த்தங்களை ராஜகோஷ்டியில்  சொல்லி, பரதத்வ நிர்ணயம் செய்து அருளினவர் ஆதலால், வேதத்தையே செல்வமாகவுடைய அந்தணர்கட்கு உபகாரர் ஆனார்.

அது மட்டும் அன்றி, “மறை நான்கு முன்னோதிய பட்டனை” என்று திருமங்கையாழ்வார் எம்பெருமானைப் பட்டனாக அருளிச் செய்துள்ளமையாலும், பெரியாழ்வார் தம்முடைய பெண்ணான கோதையை எம்பெருமானுக்கு மணம் புணர்வித்து உபகரித்தமையாலும், பட்டர்பிரான் எனப்பட்டார் என்றும் கொள்ளலாம்.

ஆற்றபடைத்தான் என்பது அவனுக்கு ஏற்றம், பெரியாழ்வார் மகள் என்பது ஆண்டாளுக்கு ஏற்றம்.

கோதை என்பதற்கு ஸ்ரீ ஸூக்திகளைத் தந்தவள் என்று பொருள்.  கோபிமாருடைய அவஸ்தையை கண்ணனிடம் அடைந்து சொன்ன என்றதை ‘சொன்ன‘ என்பதால் தெரிவிக்கிறார். சொன்ன என்பது, ஆண்டாள் அனுகாரத்தாலே (செய்ததால்) அனுபவித்து வெளியே சொன்னது. இவள் வாயினால் சொன்னதால் அவனுக்கு அவா உண்டானது.

சங்கத் தமிழ்மாலை என்றதில், சங்கம் என்றால் கூட்டமென்று பொருள்.  “சங்கமிருப்பார் போல் வந்து தலைப் பெய்தோம்” என்றது போல பஞ்ச லக்ஷம் குடி பெண்கள் திரள் திரளாக அநுபவிக்க வேண்டும் ப்ரபந்தம் என்று பொருள் படும். திருவாய்மொழியில் (2.3.11)ல் ‘குழாங்களாய் அடியீருடன்’ என்று சுவாமி நம்மாழ்வார் சொல்லியபடி, திரள் திரளாக அனுபவிக்க வேண்டும்.

தான்தோன்றியான வேதம் போல இல்லாமல், பிறப்பால் உண்டான ஏற்றம்; ஷீராப்திநாதனை பிடிக்க ஒருத்தி மகனாய் பிறந்தவனுக்கு மட்டுமே வரும் ஏற்றம் போல என்கிறார்.

முப்பது பாட்டில் ஒரு பாட்டும் நழுவாமல் என்பதை ‘தப்பாமல் ‘ என்று சொல்கிறார்.   விலையில்லா மணிகளினால் செய்த ஏகாவலியில் ஒரு மணி நழுவினாலும் நெடும் பாழாகும் அன்றோ?

இப்பரிசுரைப்பார் என்று சொன்னது, திருவாய்ப்பாடியில் பெண்களுக்குக் கிருஷ்ண ஸம காலம் ஆகையாலே, க்ருஷ்ணனுடைய ஸாக்ஷாத் அனுக்கிரகம் கிடைத்தது; அந்த ஸாக்ஷாத்காரத்தைப் பிற்காலத்தில் ஆண்டாள் அநுகரித்துப் பெற்றாள்; அவளிலும் பிற்பட்டவர்கள் அப்பேறு பெறவேண்டில் இப்பாசுரங்களின் சொன்னால் மாத்திரம் போதும் என்கிறார்.

ஈரிரண்டு மால் வரை தோள் என்று சொல்வதில் ஈரிரண்டு என்று சொன்னது, உகவாதவர்களுக்கு இரண்டு தோள்களுடனும், பெண்களுக்கு நான்கு தோள்களுடனும் தோன்றும் எம்பெருமான் என்று கூறுகிறார். பெண்களை அணைப்பதற்கு தோள்கள் பணைக்கும் கண்ணன் என்கிறார்.

எங்கும் என்று சொல்வது, இங்கும் எங்கும் என்று சொல்வது; இப்போது திருவாய்பாடியிலும், பின்பு பரமபதம் சென்றால் அங்கும் என்று சொல்வது ஆகும்.

“விடிந்த போதே எழுந்திருந்து முப்பது பாட்டையும் அநுஸந்தித்தல், சிறந்தது, முடியாதவர்கள் ‘சிற்றஞ்சிறுகாலை’ என்கிற பாட்டை அநுஸந்தித்தல் வேண்டும். அதுவும் முடியாதவர்கள் நாம் இருந்த இருப்பை நினைப்பது” என்று பட்டர் அருளிச்செய்வர்.  “நாம் இருந்த விருப்பை” என்றது அவர் இப்பிரபந்தத்தை அநுஸந்தித்து ஈடுபட்டிருந்த இருப்பை சொல்கிறது.

ஆக, இப்பாட்டில் இப்பிரபந்தம் கற்றார்க்குப் பலன் சொல்லி முடிக்கிறார். இந்த பிரபந்தத்தின் பயனைச் சொன்ன இந்தப் பாசுரம் திருநாமப் பாட்டென்றும், பல சுருதி என்றும் சொல்லப்பெறும். 

Leave a comment