திவ்ய பிரபந்தம்

Home

T28 கறவைகள் பின் சென்று

திருப்பாவை 28

ஒரு குறையும் இல்லாதவனான கோவிந்தனே, நாங்கள் பசுக்களின் பின்னே போய் காடு சேர்ந்து உண்டு திரிவோம்; சிறிதும் அறிவற்ற இடைக்குலத்தில் உன்னை, பிறக்கப் பெறுவதற்குத் தக்க புண்ணியம் உடையவர்களாய் நின்றோம்; எம்பெருமானே, உன்னோடு (எங்களுக்கு) உறவானது, இங்கு உன்னாலும் எங்களாலும் ஒழிக்க முடியாது. (உலக வழக்கொன்றும்) அறியாத சிறு பெண்களான நாங்கள் உன்னை, அன்பினால் சிறிய பெயரினாலே (அடியவர்களின் அன்பை பொழிபவரான) நீ கோபித்து அருளாமல் (தாங்கள் விரும்பும்) பிரயோஜனத்தைத் தர வேண்டும் என்பது இந்த பாடலின் பொழிப்புரை.

மார்கழி நீராடுவான் என்று நோன்பை அறிவித்து, அந்த நோன்புக்கு உபகரணங்களான சங்கு முதலியவற்றையும், நோன்புதனை முடித்த பின்னர் அலங்கரித்துக் கொள்ளுதற்கு உபகரணமான ஆடை ஆபரணங்களையும் அன்புடன் சுற்றங்களுடன் கூடிக் குளிர்ந்து பால் சோறு உண்பதும் சென்ற இரண்டு பாடல்களால் பாடிய ஆய்ச்சியர்களை நோக்கிக் கண்ணன், பெண்களே, உங்களுடைய கருத்து இவ்வளவு என்று எனக்கு தோன்றவில்லை; நீங்கள் இப்போது சொன்னவற்றையும் இன்னும் சில கேட்டுக்கொண்டாலும், அவற்றையும் நான் தர வேண்டில், உங்களுடைய நிலைமையை அறிந்து தர வேண்டி உள்ளது.

பேறு உங்களது தான் என்று ஆன பின்பு நீங்களும் சிறிது முயற்சி உடையீர்களாக இருக்க வேண்டும். அதற்காக நீங்கள் அநுஷ்டித்த உபாயம் ஏதாவது உண்டோ என்று கண்ணன் கேட்கிறார். அது கேட்ட ஆய்ச்சியர்கள்,  ‘எங்கள் நிலைமையை நீ தான் நேரே கண்ணால் காண்கிறாயே என்றும், அறிவு இல்லாத நாங்கள் எடுத்துக் கூற வேண்டும்படி நீ உணராதது ஒன்று உண்டோ என்கிறார்கள்; இது நாச்சியார் திருமொழி (4.10)ல் ‘அழகனார் அணி ஆய்ச்சியர் சிந்தையுள் குழகனார்‘ என்று இவர்கள் நெஞ்சிலே கலக்குபவன் என்று சொன்னதை இங்கே உரையாசிரியர் குறிப்பிட்டு உள்ளார். பெரியாழ்வார் திருமொழியில் குறிப்பிட்ட (5.4.1)ல் கூறியபடி ‘நின்னருளே புரிந்திருந்தேன்‘ என்று இருக்கும் எங்கள் நிலைமையை நன்கு உணர்ந்த நீ எங்களிடம் வினவியது மிக அற்புதமாய் இருக்கிறது”  என்று தங்கள் ஸ்வரூபம் இருக்கும்படியை அறிவித்து, இந்த இடைப்பெண்கள் கேவலம் தயா விஷயம் என்று திருவுள்ளம் பற்றி நீ எங்கள் காரியம் செய்தருள வேணும் என்று விண்ணப்பம் செய்யும் பாசுரம் இது.

  • எங்களை பார்த்தாலும் நீ காரியம் செய்ய வேண்டும்;
  • எங்களையும் உன்னையும் பார்த்தாலும் நீ காரியம் செய்ய வேண்டும்;
  • உன்னை பார்க்காமல் எங்களை மட்டும் பார்த்தால் நாங்கள் இழக்கிறோம்.
  • எங்களை பார்க்காமல் உன்னை மட்டும் பார்த்தாலும் நாங்கள் பெறுகிறோம். 

இப்படி ஆன பின் எங்கள் ரக்ஷணத்திற்கு உன்னை நாங்கள் விடலாமோ என்கிறார்கள்.

  • எங்களுக்கு அறிவில்லை என்பதால் நன்மை இல்லை என்றோம்;
  • நீ நன்மைக்கு துணை என்றோம்;
  • நீ பூர்ணன் என்றோம்;
  • சுலபன் என்றோம்;
  • உன்னோடு எங்களுக்கு என்றும் மாறாத சம்பந்தம் உண்டு என்றோம்; எங்கள் தப்புக்கு மன்னிப்பு கேட்டோம்;
  • உன் ஞான சக்திகளுக்கு குறைவில்லாமல் இருந்தது;
  • எங்களுக்கும் அறிவில்லாமை முழுமையாக இருந்தது.
  • குற்றங்களை பார்த்து சீற முடியாதவனாக எல்லா விரோதிகளையும் போக்குகிறேன் என்றவனாக நீ இருந்தாய்;
  • இனி நாங்கள் செய்ய வேண்டியது எதுவும் இல்லை.
  • எங்களிடம் ஒன்றும் இல்லை; உன்னிடம் எல்லாம் உள்ளது என்று கருத்து.

பிராப்தி விஷயமாக எங்களை சோதிக்காமல் ஏற்று கொள் என்ற எங்கள் வேண்டுகோளையும் ஏற்று கொள்ள கூடாதோ என்றும் உபாய பூர்த்தியையும் சொல்லி, புகுந்த எல்லா குறைகளையும் மன்னித்து எங்கள் பிராப்த சித்திக்கு நீயே உபாயம் ஆக வேண்டும் என்று வேண்டிக் கொள்ளும் பாடல்.

போற்றியாம் வந்தோம், செங்கண் சிறுச் சிறிதே எம்மேல் விழியாவோ, உன்னை அருத்தித்து வந்தோம் என்று இவை முதலான பாசுரங்களினால் ஆய்ச்சியர்கள் தங்களுக்குள்ள ப்ராப்ய (அவனுக்கு கைங்கர்யம்) ருசியை வெளியிட்டனர். அந்த ப்ராப்யத்தைப் பெறுகைக்கு உடலாகத் தங்களுடைய ஆகிஞ்சந்யத்தையும் (மோட்சத்தை அடைய தனக்கு வேறு உபாயம் எதுவும் தெரியவில்லையே என்று கலங்குவது) அவனே உபாயமாக வேண்டும் என்றும் இந்த பாட்டில் வெளியிடுகின்றனர்.

“யாம் வந்த காரியம் ஆராய்ந்தருள்” என்ற சொல்லியபடி, அவன் அதனை ஆராயாமல் ‘இவர்கள் நெஞ்சில் சாதனமாக ஏதேனும் சில உண்டோ’, என்று ஆராயத் தொடங்க.  அதை யறிந்த ஆய்ச்சியர்கள் ‘நின்னருளே புரிந்திருக்கிற எங்கள் பக்கம், எடுத்துக் கழிக்கலாம்படி சில உபாயங்கள் உள்ளன என்று இருந்தாயோ, இரங்கு’ என்றும், ‘அருள்’ என்றும் நாங்கள் வேண்டிய அருளுக்கு எங்கள் பக்கம் சாதனமாக எம்பெருமானை தவிர ஒன்றும் இல்லை என்று அறிவிக்கிறார்கள்.

  • எம்பெருமானே சாதனம் என்று இருப்பவர்களுக்கு, பேற்றுக்கு தங்களிடம் சாதனமாக ஒரு நல்ல கருமமும் இல்லை என்பதும்,
  • தங்களுடைய இயலாமையை அனுஸந்திக்கையும்,
  • ஈச்வரனுடைய குணபூர்த்தியை அனுஸந்திக்கையும்,
  • ஸம்பந்தத்தை உணருகையும்,
  • பூர்வ அபராதங்களுக்கு மன்னிப்பு கோருவதும்
  • ஈச்வரன் பக்கம் அவனை அடைய வழியையும் வேண்டிக் கொள்வதும்

ஆகிய இந்த ஆறு அங்கங்களும் கைங்கர்யம் வேண்டும் அடியவர்களின் அதிகாரங்களாக இந்த பாட்டில் வெளியிடப்படுகின்றன.

கரவைகள் பின் சென்று என்று சொல்லி, பசுக்களின் பின்னே போய்த் திரிந்து வருபவர்கள் என்று சொல்வதால், தங்களிடத்தில் நல்ல கருமம் ஒன்றும் இல்லாமை என்று சொல்கிறார்கள். நம்மாழ்வார் திருவாய்மொழி (5.7.1)ல் ‘நோற்ற நோன்பிலேன் நுண்ணறிவு இலேன் ஆகிலும் இனி உன்னை விட்டு, ஒன்றும் ஆற்ற கின்றிலேன் ‘ சொல்லியதும், தொண்டரடிபொடி ஆழ்வார் திருமாலையில் (25) ‘குளித்து மூன்று அனலை ஓம்பும் குறிகொள் அந்தணமை தன்னை ஒளித்திட்டே என்கணில்லை நின்கணும் பத்தன் அல்லேன்’ சொல்லியதும் தங்களுக்கு கர்ம ஞான பக்தி இல்லை என்று சொல்வதற்கு ஆகும். திருசந்தவிருத்தம் (90) ல் ‘குலங்கள் ஆய ஈர் இரண்டில் ஒன்றிலும் பிறந்திலேன், நலங்களாய நற்கலைகள் நாவிலும் நவின்றிலேன், புலன்கள் ஐந்தும் வென்றிலேன்,’ சொன்னது, நான்கு வர்ணங்களுக்குள் ஒன்றிலும் பிறக்கவில்லை என்றும், அடியவர்களுக்கு நன்மை செய்யும் நான்கு வேதங்களிலும் தான் பயிற்சி பெற்றிலேன் என்றும், ஐந்து புலன்களையும் வெற்றி பெறவில்லை என்றும் சொல்வதும் இதே கருத்தை சொல்வதற்கே. பெரியாழ்வார் திருமொழியில் (1.9.4) திருமங்கைஆழ்வார், ‘நலந்தான் ஓன்றுமிலேன் நல்லதோர் அறம் செய்துமிலேன்‘ சொல்வது, பற்பல குலங்களில் பிறப்பதும் இறப்பதுமாக இளைத்துப் போய் இருந்தேன் என்றும், நல்ல தர்மம் ஒன்றும் செய்வது அறியாதவன் என்று சொல்வதும் இதே காரணத்திற்காக என்று உரையாசிரியர் சொல்கிறார்.

அறிவொன்றுமில்லாத ஆய்க்குலத்து” என்பதால், மேலும் யோக்யதையில்லை என்பதற்காக தங்களுக்கு அறிவில்லை என்று அனுசந்தானம் செய்கிறார்கள்.

குறையொன்றுமில்லாத கோவிந்தா!” என்று சொல்வதால்

  • ஈச்வரனுடைய குணபூர்த்தியின் அநுஸந்தானம் செய்கிறார்கள்.
  • உனக்கொரு குறை உண்டாகில் அன்றோ எங்களுக்கு ஓரு குறை உண்டாவது என்ற கருத்தைக் காட்டும். 
  • கோவிந்தா என்று சொன்னது, நித்யஸுரிகளுடைய வேண்டுகோள்களுக்கு, எல்லா ஆசைகளும் நிறைவேற்றிய நிலையில் இருக்கும் எம்பெருமான், பரமபதத்தை தவிர்த்து, இடைச்சேரியில் பசு மேய்க்கப் பிறந்தது, குறைகள் உடைய எங்களை நிறைவாளர்கள் ஆக்கவோ என்று சொல்வது விளங்கும்.

உறவேல் நமக்கிங்கொழிக்க வொழியாது” என்பதால் எம்பெருமானிடம் உள்ள பலவித (நவ வித சம்பந்தம்) ஸம்பந்த உணர்ச்சியை தெரிவிக்கிறார்கள். நான்முகன் திருவந்தாதியில்,(7) ‘நான் உன்னை அன்றி இலேன் கண்டாய், நாரணனே, நீ என்னை அன்றி இலை‘ சொல்லியது இதனை குறித்தே என்பது உரையாசிரியர் கருத்து. ‘அன்று நான் பிறந்திலேன் பிறந்த பின் மறந்திலேன்‘ (திருசந்தவிருத்தம் 64) என்று சொல்பவர்கள் ஆனதாலும் இது ஒழிக்க முடியாதது.

சீறியருளாதே” என்பதால் பூர்வ அபராதங்களுக்கு மன்னிப்பு கேட்கிறார்கள். இங்கு “சிறுபேர்” என்றது நாராயண நாமத்தை என்பர்; இந்திரன் வந்து கண்ணனுக்குக் கோவிந்தாபிஷேகம் பண்ணின பின்பு, அவனை நாராயணன் என்று கூறுவது குற்றம் என்கிறார்கள். ஒருவன் முடிசூடப் பெற்றபின்னர், அவனை பழைய பெயரில் அழைக்கைக்கு மேற்பட்ட குற்றமும் உண்டோ என்கிறார்கள்.

அழைத்தன என்று பன்மையில் சொல்வது, ‘நாராயணன்’ என்று ஒரு முறை சொல்லி நில்லாமல், ‘நாராயணனே நமக்கே பறைகருவான்” என்றும், “நாற்றத்துழாய் முடி நாராயணன்” என்றும், “நாராயணன் மூர்த்தி” என்றும் பலமுறை சொல்வதால் ‘அழைத்தன’ என்று கூறப்பட்டது.

ஆச்சியர்கள், ‘நாங்கள் எங்களுக்குள்ளே ஸ்னேகத்தாலே “பேய்ப் பெண்ணே!, ஊமையோ, செவிடோ, நாணாதாய், பண்டே உன் வாய் அறிதும்” என்று பலவாறாகச் சொல்லிக் கொண்டவைகளையும் பொறுத்தருள வேண்டும் என்பதாகும்.

இறைவா நீ தாராய் பறை” என்பதால் இவர்கள் வேண்டுவது தெரியும். இங்கு இவர்கள் இறைவா என்றது, ‘வளவேழ் உலகின் முதலாய் வானோர் இறையை ‘ (திருவாய்மொழி 1.5.1) அன்று என்றும், ‘ஆய்க்குலமாய் வந்து தோன்றிற்று நம் இறையே‘(திருவிருத்தம் 61) என்றும் சொல்கிறார்.

விளக்க உரை

(2539)

  • அடியவர்களை காப்பாற்றுவதற்காக தானே நீ இங்கு வந்து பிறந்தாய் என்று சொல்வது விளங்கும்.
  • சுலபனான நீ தாராய்;
  • ஸ்வாமியான நீ தாராய்;
  • எங்களை பார்க்காமல் உன்னை பார்த்து, பறை தாராய் என்கிறார்கள்.
  • நீ தாராய் பறை என்பதை பார்த்தால் இந்த கோபி ஜனங்களின் குறை நிறைகளை ஆராய்ந்து பார்த்து சொல்பவள் நீ அல்லவா, இவர்கள் சொல்வதை ஆராய்ந்து சொல் என்று அருகில் இருப்பவளை (நப்பின்னை) பார்த்து சொல்கிறான் என்ற அர்த்தம் வரும்.

இப்படி ‘பொருத்தருள வேண்டும்’ என்று ப்ரார்த்தித்த பெண்களை நோக்கி கண்ணன், ‘நம்மாலே பேறு கிடைக்கும் படியான உறவு நம்மோடு உண்டாகிலும், குற்றத்தைப் பொறுக்க வேண்டும் என்றாலும், நீங்கள் பலனை அனுபவிக்குமவர்களான பின்பு, நீங்களும் ஏதாவது ஓன்று செய்ததாக வேண்டாமோ என்றும், முயற்சியாவது வேண்டுமே என்றும், ஆச்சியர் இன்னது செய்தார்கள், இவன் இன்னது செய்தான், என்று நாட்டார்க்குச் சொல்லுகைக்கு ஒரு காரணம் வேண்டுமே’ என்று சொல்ல, ஆய்ச்சியர்கள், ‘ஒன்றையும் எதிர்பாராமல் நீ காரியம் செய்தால் உன்னை விலக்குகைக்கு உரியார் உண்டோ?’ என்னும் கருத்துப்பட ‘இறைவா’ என்று அழைக்கிறார்கள்.

Leave a comment