கூடாரை வெல்லும் சீர் கோவிந்தா உந்தன்னைப்* பாடிப் பறை கொண்டு யாம் பெறும் சம்மானம்* நாடு புகழும் பரிசினால் நன்றாகச்* சூடகமே தோள் வளையே தோடே செவிப்பூவே* பாடகமே என்றனைய பலகலனும் யாம் அணிவோம்* ஆடை உடுப்போம் அதன் பின்னே பாற்சோறு* மூட நெய் பெய்து முழங்கை வழிவாரக்* கூடி இருந்து குளிர்ந்தேலோர் எம்பாவாய்.
திருப்பாவை 27
சென்ற பாட்டில், சங்குகளையும், பறைகளையும், பல்லாண்டு இசைப்பாரையும், கோல விளக்கையும், கொடியையும், விதானத்தையும், அருள வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர். அதற்கு கண்ணன் ஆயர் மாதரை நோக்கி,
“பெண்களே, நம்மோடு ஒத்த ஈச்வரன் இன்னொருவன் உண்டு என்றால் அன்றோ, நம் பாஞ்ச சன்னியத்தோடு ஒத்த இன்னொரு சங்கு இருக்கும் ; அன்றியும் ‘சங்கங்கள்’ என்று பல சங்குகள் வேண்டும் என்று கேட்டீர்கள். ஒன்றினை தேடினாலும், பாஞ்ச சன்னியத்தோடு ஒத்த பல சங்குகள் கிடையவே கிடையாது.
- நம் பாஞ்சசன்னியத்தையும்,
- புள்ளரையன் கோயில் வெள்ளை விளி சங்கையும்,
- ஆநிரை இனம் மீளக் குறித்த சங்கத்தையும் தருகிறேன், எடுத்துக் கொள்ளுங்கள்;
இனி, ‘பறை’ என்றீர்களாகில்,
- நாம் உலகளந்த போது ஜாம்பவான் நம் ஜயம் சாற்றின பறையைத் தருகிறேன்;
- ‘பெரும்பறை’ என்றீர்களாகில், நாம் இலங்கை பாழாளாகப் படை பொருதபோது நம் ஜயம் சாற்றினதொரு பறையுண்டு; அதனைத் தருகிறேன்;
- அதற்கு மேல் ‘சாலப்பெரும் பறை’ என்கிறீர்களாகில், மிகவும் பெரிதான பறையாவது, நாம் *பாரோர்கள் எல்லாம், மகிழப் பறை கறங்கக் குடமாடுகிற போது, நம் அரையிலே கட்டி ஆடின ஓரு பறை உண்டு; அதனைத் தருகிறேன்; எடுத்துக் கொள்ளுங்கள்;
பல்லாண்டு பாடுகைக்கு
- உங்களுக்குப் பெரியாழ்வாருண்டு; அவரைப் போலே ‘அடியோமோடும் நின்னோடும் பிரிவின்றி ஆயிரம் பல்லாண்டு’ என்று உங்களையும் நம்மையும் சேர்த்துக் காப்பிடுகை,
- அன்றியே “பொலிக பொலிக பொலிக!” என்று உங்களுக்கே காப்பிடும் நம்மாழ்வாரையும் கொண்டு போங்கள்;
இனி, கோல விளக்குக்காக உபயப் பிரகாசிகையான நப்பின்னையைக் கொள்ளுங்கள்;
அதற்கு மேல் கொடிவேணுமாகில் “கருடக்கொடி ஓன்றுடையீர்” என்று நீங்கள் சொல்லும் பெரிய திருவடியைக் கொண்டுபோங்கள்;
அதற்குமேல் விதானம் வேணுமாகில், நாம் மதுரையில் நின்றும் இந்த திருவாய்பாடிக்கு வரும் போது நம் மேல் மழைத்துளி விழாதபடி தொடுத்து மேல் விதானமாய் வந்த நம் அனந்தனைக் கொண்டு போங்கள்.
இவ்வளவு தானே நான் உங்களுக்குச் செய்யவேண்டுவது” என்று சொன்னார்.
இது கேட்ட பெண்கள், “பிரானே! மார்கழி நீராடப் போவதற்கு வேண்டியவை இவை; நோன்பு நோற்று முடிந்த பின்னர் நாங்கள் உன்னிடத்துப் பெறவேண்டிய பல விசேஷங்களுள் அவற்றையும் நாங்கள் பெற்று மகிழும்படி அருள்புரிய வேண்டும் என்று ப்ரார்த்திக்கும் பாசுரம்.
தன் அடிபணியாதவரை ஜெயிக்கின்ற குணங்களை உடைய கோவிந்தனே, உன்னை வாயாரப் பாடி பறையைப் பெற்று, (மேலும்) நாங்கள் அடையவிருக்கும் பரிசானது ஊரார் புகழும்படியாக (கைக்கு ஆபரணமான) சூடங்களும் தோள் வளைகளும், (காதுக்கு ஆபரணங்கள்) தோடுகளும் கர்ண புஷ்பமும், (காலுக்கு ஆபரணமான) பாத கடகமும் என்று சொல்லப்படுகின்ற இந்த ஆபரணங்கள் பலவற்றையும் (உன்னாலும் நப்பின்னையாலும் அணிவிக்கப்பட்ட) நாங்கள் நன்றாக அணிந்து கொள்வோம்; (உங்களால் அணிவிக்கப்பட்ட) நாங்கள் நன்றாக அணிந்து கொள்வோம்; அதற்கு பிறகு பாலாலே சமைக்கப்பட்ட சோறு மறையும்படி நெய்யை இட்டு முழங்கையில் வழியாக வழியும் படியாக நாங்கள் ஒன்றாக கூடி இருந்து உண்டு குளிர வேண்டும் என்பது இந்த பாடலின் பொழிப்புரை.
“கூடாரை வெல்லுஞ் சீர் கோவிந்தா!” என்று அழைப்பது, கூடாதவர்களை வெல்லும் கோவிந்தா என்றும், கூடுமவர்களிடம் தோற்று நிற்பவனே என்ற கருத்தை சொல்லும். கூடுபவர்களை உன்னால் வெல்லாகுமோ என்ற கருத்தும் சொல்லும். உன் அடியவர்கள் திறத்திலே எல்லா விதத்திலும் உதவுவனே என்பதாகும்.
இராமாவதாரத்திலே தன்னோடு கூடின ஸுக்ரிவ மஹாராஜர்க்குப் பரவசப்பட்டு வழியல்லா வழியில் சென்று வாலியை வதை செய்தமையும், கிருஷ்ணாவதாரத்தில் பாண்டவர்க்குப் பரவசப்பட்டுப் பொய் சொல்லியும் கபடங்கள் செய்தும் நூற்று கௌரவர்களை முடித்தமையும் முதலானவை இங்கு அநுஸந்திக்க தக்கதாகும். இவை எல்லாம் அடியவர்களுக்கு தோற்றுச் செய்யும் செயல்களாகும். நீ எங்களுடைய மழலைச் சொற்களுக்குத் தோற்று, நாங்கள் வேண்டிய பறை முதலியவற்றை எல்லாம் தந்து அருளினவன் அல்லவோ என்கிறார்கள்.
21 க்ஷத்ரிய தலைமுறைகளை கொன்று குவித்த பரசுராமன், எனக்கு எதிரே ஒரு க்ஷத்ரிய குமாரனா என்று இராமனை எதிர்த்து வந்தான் என்றும் அவனுடைய வில்லினை இராமனிடம் கொடுத்து சென்றதாகவும், தான் பிராமணன் என்று அவனை வணங்கியும் சென்றான். வில்லோடு வணங்கியும் சென்றதால் இவர் தானே தோற்றது என்கிறார்.
இதே போல இராவணனை, இன்று போய் நாளை வா என்று சொன்னதும், இராவணன் அடுத்த நாள் வில்லை எடுக்காமல் இருந்திருந்தால் இராமன் தோற்று இருப்பார் என்றும், அதற்கு இராவணன் சந்தர்ப்பம் கொடுக்கவில்லை என்றும் சொல்கிறார்.
எல்லோரையும் வெல்வது அவனுடைய சீரிய குணங்களினால் என்பதை சீர் கோவிந்ததா என்கிறார். சௌரியம் என்ற குணம் அம்புக்கு இலக்காகும், சீலம் அழகுக்கு இலக்காகும். அம்பிற்கு இலக்கானவர்களை மருந்திட்டு குணப்படுத்தலாம். அழகுக்கு இலக்கானவர்களை குணப் படுத்த முடியாது என்கிறார்; அழகும் சீரும் அகலாமல் நிலையாக இருக்கும். ஈர்க்கின்ற குணங்கள் தாமரை செங்கண்கள்; அம்பு தோலில் காயம் உண்டாக்கும், அழகு உயிரை கொல்லும்.
கோவிந்தா என்று சொல்வதால்,
- கூடுவோம் என்றால், என்ன என்று அறியாதவரையும் பாதுகாக்கும் என்பதை சொல்லும்.
- சேரோம் என்று தேவை இல்லாத மிருகங்களுக்கும், துர் அபிமானம் இல்லாவிட்டாலும், செய்த காரியங்களுக்கு நன்றி சொல்லாத மிருகங்களுக்கும் பொருந்தும் படியான எளிமையானவனே என்று சொல்லும்.
உன்றன்னை பாடி பறை கொண்டு என்று சொல்வது இப்படிப்பட்ட உன்னை நாங்கள் நெடு நாள் பட்ட துயரம் எல்லாம் தீரப் பாடி, அந்த பாட்டினால் தோற்ற உன்னிடத்துப் பறையைப் பெற்று, மேலும் பெற வேண்டிய பரிசுகள் பல உள்ளன அவற்றையும் நீ குறையற தந்தருள வேண்டும் என்கிறார்கள்.
ஊன்றன்னை பாடி என்றது, முன்பு இவன் பெயரை சொல்ல முடியாத ஊரில், இப்போது வாயார பாட முடிகிறது, நாக்கு பெற்ற பலன் கிடைத்தது என்பது போல ஆகும். அவன் பெயர் சொல்வதே ஒரு பயன் என்பது போல உள்ளது.
உன்னை பாடி என்று சொல்லாமல், உந்தன்னை பாடி என்று சொன்னது, உன் பணியினை நாங்கள் செய்கிறோம் என்பது போல ஆகும்.
கோவிந்தா உந்தன்னை பாடி என்று சேர்த்து சொல்லி, நீ குழல் ஊதிய போது, உன் குழல் ஓசையில் மயங்கி எங்கள் வீட்டில் உன் புகழை பாடிக்கொண்டு இருந்த எங்களை, உன் வீட்டின் வாசலுக்கு வந்து பாடும் படி செய்தாயே என்று சொல்வதை போல ஆகும்.
யாம் பெரும் சம்மானம் என்றதில் யாம் என்றது, தேவகி புத்திரன் என்பதை அறிந்த எங்களுக்கு நிச்சயம் பேறு கிடைக்கும் என்று சொல்கிறது. பெரும் சம்மானம் என்பது வெறும் ஊரார் காரியம் என்று எண்ணாதே, எங்களுக்கும் உந்தன் சம்மானம் வேண்டும் என்பதே. பட்டர் வீட்டு முற்றத்தில் பெரியபெருமாள் கோவில் பிரசாதம் வந்த போது, ‘யாம் பெறு சம்மானம்’ என்று சொன்னது பிரசித்தம்.
நாடு புகழும் பரிசினால் என்று சொன்னது நெடுநாளாக நாங்கள் எல்லாராலும் பட்ட அவமானம் மறக்கும் படியாக, ‘இந்த பெண்கள் கண்ணனைக் குறித்து நோன்பு நோற்றுப் பேறு பெற்றது எவ்வளவு பெருமை’ என்று அனைவரும் கொண்டாடும்படி நீ எங்களுக்கு வெகுமதி அளிக்க வேண்டும் என்று சொல்கிறார்கள். வாழ்வார் வாழ்வு எய்தி ஞாலம் புகழ்வே என்பதன்படி ஆகும்.
நன்றாக என்று சொல்வது அவனும் சத்தை பெற வேண்டும், தாமும் சத்தை பெற வேண்டும் என்ற கருத்தை சொல்வதாகும். இராவண வதத்திற்கு பிறகு இராமர் பட்டாபிஷேகத்தின் போது, எல்லோருக்கும் பரிசு கொடுக்கும் போது, சீதா பிராட்டி, இந்திரன் கொடுத்த உயர்ந்த மாலையை, இராமன் தனக்கு அளித்த மாலையை, அனுமனுக்கு வெகுமதியாக அளிக்கலாமா என்ற நினைவில் ஒரு கண்ணால் இராமனையும், ஒரு கண்ணால் ஹனுமனையும் பார்த்த சீதாவை பார்த்து அடியார் தரம் அறிந்து கொண்டாடும் நீ கொடு என்றதை போல எல்லோருக்கும் சிறப்பு தரும் விதம் கொடுப்பது.
என்றனைய பலகலனும் என்று சொன்னது, இவைகளை தவிர நீ அறிந்த மற்று எல்லாம் என்ற பொருளில் வரும்.
வெகுமதி என்பது சூடகமே என்று தொடங்கி சொல்வது. பாடகம் என்று சொல்வது இன்னவை என்று எடுத்துக் கூறப்பட்ட இந்த ஆபரணங்களையும் இவை போல்வன உள்ள மற்றும் பல ஆபரணங்களையும் நீ உன் கையால் எங்களுக்குப் பூட்ட, நாங்கள் அணிந்தாக வேண்டும்; அப்படியே ஆடைகளையும் நீ உன் கையால் எங்களுக்கு உடுத்த வேண்டும் என்கிறார்கள். பிடித்த கைகளுக்கும், அணைத்த தோளுக்கும் அணைத்த இடத்தில் உறுத்தும், தொடும் இதத்திற்கும் தோற்று விழும் என்ற பொருளில் வரும்.
கோவிந்தா உந்தன்னை பாடி .. ஆடையுடுப்போம் என்று சொன்னது, அவன் வெகு உயரத்தில், தூரத்தில், மரத்தில் இருக்கும்போதே ஆடை கேட்டவர்கள், அவன் அருகே அவன் சந்நிதியில் இருக்கும் போது ஆடை கேட்காமல் விடுவார்களா என்கிறார்.
பாற் சோறு என்று தொடங்கி சொல்வது, “வையத்து வாழ்வீர்காள்” என்ற பாட்டில் “நெய்யுண்ணோம் பாலுண்ணோம்” என்று சத்தியம் பண்ணின இவர்கள் இன்று நோன்பு நோற்று முடிப்பதாலே உணவை வேண்டுகிறார்கள். இன்றளவும் ஆய்ச்சியர்கள் உணவைத் தவிர்த்து இருக்கின்றனரே என்று கண்ணனும் உண்ணாது இருந்தமையால் ஊரில் நெய் பால் அளவற்றுக் கிடக்கும் ஆதலால் “பாற் சோறு மூட நெய் பெய்து முழங்கை வழிவார” என்கிறார்கள்.
“கூடியிருந்து குளிர்ந்து” என்று சொல்வது, பசி தீருகைக்காக உண்ண வேண்டுவது அன்று, பிரிந்து பட்ட துயரம் எல்லாம் தீருமாறு எல்லாரும் கூடிக் களித்திருக்கை சிறந்தது என்று சொல்வதாகும்.
Leave a comment