மாலே மணிவண்ணா மார்கழி நீராடுவான்* மேலையார் செய்வனகள் வேண்டுவன கேட்டியேல்* ஞாலத்தை எல்லாம் நடுங்க முரல்வன* பால் அன்ன வண்ணத்து உன் பாஞ்ச சன்னியமே* போல் வன சங்கங்கள் போய்ப் பாடுடையனவே* சாலப் பெரும் பறையே பல்லாண்டு இசைப்பாரே* கோல விளக்கே கொடியே விதானமே* ஆலின் இலையாய் அருளேலோர் எம்பாவாய்.
திருப்பாவை 26
‘பெண்களே “உன்னை அருத்தித்து வந்தோம் பறை தருதியாகில்” என்கிறீர்கள், எம்மிடம் ஆசை / பிரியம் உடையவர்கள், ‘எளிவரும் இயல்வினன்‘ (திருவாய்மொழி 1.3.2) என்று என்னை உள்ளபடி அறிந்தவர்கள், என்னை தவிர வேறு ஒன்றுக்கும் ஆதரவாக இருக்க மாட்டார்கள், ஆகவே நீங்கள் வேண்டுவன எவை, இவற்றை விரியச் சொல்லுங்கள்’ என்று கண்ணன் நியமித்து அருள, அது கேட்ட ஆய்ச்சியர்கள், ‘உன் முகவொளியை வெளியிலே கண்டு உன் திருநாமங்களை வாயாரச் சொல்லுகைக்கு உதவியாக இருப்பதோரு நோன்பை இடையர் நடத்தும் போது அது உன்னோடு சேர்க்கைக்கு இடையூறாக இருந்ததை கருதிய போதும், இடையர்கள் பக்கம் உள்ள நன்றி ‘நினைவாலே’ அந்த நோன்பை மேற்கொண்டோம் ; முன்னோர்கள் செய்வது உண்டு, அதற்கு வேண்டிய உபகரணங்களான அங்கங்களும் தந்தருள வேணுமென்று வேண்டிக்கொள்ளும் பாசுரம், இது.
(அடியாரிடத்தில்) அன்பு உடையவனே, நீல ரத்னம் போன்ற வடிவை உடையவனே, (பிரளய காலத்தில்) ஆலந்தளிரில் கண் வளர்ந்தவனே, மார்கழி நீராட்டத்திற்காக முன்னோர்கள், செய்யும் கிரியைகளுக்கு வேண்டும் உபகரணங்களை கேட்டாயாகில் (அவற்றை சொல்லுகிறோம்). பூமி முழுவதும் நடுங்கும்படி, ஒலிக்கக்கூடிய பால் போன்ற நிறம் உடைய உன்னுடைய ஸ்ரீ பாஞ்ச ஜன்யம் போன்ற, சங்கங்களையும் மிகவும் இடமுடையனவாய் மிகவும் பெரியவனவான பறைகளையும் திருப்பல்லாண்டு பாடுபவர்களையும் மங்கள தீபங்களையும் த்வஜங்களையும் மேற்கட்டிகளையும் அளித்து அருள வேண்டும் என்பது இந்த பாடலின் பொழிப்புரை.
மாலே என்று சொன்னது, நாங்கள் தெளிந்து நோன்பு நோற்க வல்லோம் ஆனோம் ; நோற்றதையும் மன்னிக்காமல் நாங்கள் வரும் வரை எழுந்தருளாமல் இருந்தது ஏன் என்று தொனிக்க கேட்பது போல தெரியும். இதற்கு முன், உன்னுடைய பரத்வ குணங்களை பெருமையுடன் பேசினோம். இப்போது உன்னை தரிசித்தவுடன் உன் எளிமையே சிறப்பு என்று நாங்கள் கண்டு கொண்டோம். நாச்சியார் திருமொழியில் (14.3) ஆண்டாள் சொல்வது ‘மாலாய்ப் பிறந்த நம்பியை மாலே செய்யும் மணாளனை‘, அதாவது பெண்களிடத்தில் மோஹமே ஒரு வடிவாய்க் கொண்டு பிறந்தவன் என்றும், மோஹத்தையே செய்கிற மணவாளப் பிள்ளையாய் உள்ள பெருமான் என்று இவனைச் சொல்கிறார்.
சீதா பிராட்டி பெருமாளை (ராமனை) சரணாகதன் என்றாள் ; இந்த ஆச்சியர் அடியவர்களிடம் மயங்கும் கண்ணனின் குணத்தை, மாலே பாராட்டுகிறார்கள்.
- ராவணனுக்கு தம்பியான தன்னை, ரகு குலத்தில் பிறந்த இராமன் ஏற்பானோ என்று இருக்கும் விபிஷணனுக்கும், ராவணனுக்கு தம்பியான அவன் நம்முடன் சேர்வானோ என்று இராமனும் இருந்தார்கள்; இது திருவாய்மொழி (9.6.10)ல் சுவாமி நம்மாழ்வார் சொல்லிய, ‘வாரிக்கொண்டு விழுங்குவன் காணில்‘ என்று இருக்கும் நிலை இவர்களுக்கு, என்றும் ‘என்னில் முன்னம் பாரித்து பருகுகினாரே‘ என்ற நிலை அவனுக்கு ஒப்பாகும்.
- இதே போல திருவாய்மொழி (8.7.1) இருந்தும், ‘எனைத்தோர் பல நாள் அழைத்தேற்கு‘, என்ற நிலை இவர்களுக்கு என்றும், ‘தன் கருத்தை உற, வீற்றிருந்தாள்‘ என்ற நிலை இவனுக்கு.
- திருவாய்மொழி (10.10.10) சொல்லிய ‘அதனில் பெரிய என்னாவாவிறே ‘ என்பது இவர்களது நிலை; ‘அவாவர சூழ்ந்தாயே ‘ என்பது அவன் நிலை.
- ‘நாராயணன் நமக்கு கிடப்பானோ ‘ என்பது இவர்கள் நிலை என்றும், என்கிறார்கள் ‘யது குலத்தில் பிறந்தவற்கு கிடைக்குமோ’ என்று இருப்பது அவன் நிலை.
- நாச்சியார் திருமொழி (3.9)ல் நெஞ்சு துக்கம் செய்யப் போந்தாய் என்று சொல்வது எங்கள் நெஞ்சை தூக்கம் செய்வதற்காக பிறந்தாய் என்பதும், பெரிய திருமொழி (5.5.5)ல் வாய்ப்பாடி வளர்ந்த நம்பி, என்று சொல்வது நமக்கெல்லாம் தெரியும்படியாகத் திருவாய்ப்பாடியில் வளர்ந்த பெருமான் என்பதும ‘மாலே’ என்பதற்கு மேற்கோள்கள் ஆகும்.
- பெரிய திருமொழி (11.2.2) ல் ‘மால் என்னை மால் செய்தான்,” என்று சொல்லி என்னை மதிமயங்கப் பண்ணிவிட்டான் சொல்கிறார்.
- மாலே என்றால் பித்து என்ற அர்த்தத்தில் சொல்கிறார். பித்தாய் பிறந்து, பெண்களை பித்தாக தன்னோடு ஒரு கோவையாக்கும் என்பது அவன்.
- ஒருத்தி மகனானதை விட்டு, ஒருத்தி மகனானது இவர்களுக்காக; ஒளித்து வளர்வது கம்சனுக்காக அல்ல, பெண்களை பிரியாமைக்காக என்கிறார்.
திருவிருத்தம் 21 ல் ‘சூட்டுநன் மாலைகள்‘ கொண்டு நித்யசூரிகள் சேவிக்க இருக்கும் பரத்துவத்தை சொல்கிறது. அதே பாடலில், ‘ஈட்டிய வெண்ணை தொடுவுண்ணப் போந்தி’ என்று சொல்வது முந்தானையில் முடிந்து பெண்கள் அடக்கி ஆளலாம்படி இருக்கும் சௌலபயத்தை (எளிமையை) சொல்கிறது. இது, மாலே என்றும் மணிவண்ணா என்றும் சொல்வதை ஒத்தது.
அவனுடைய வியாமோஹம் வடிவழகிலே தெரிவதால், ‘மணிவண்ணா‘ என்கிறார்கள். இவர்கள் “மார்கழி நீராடுவான்” என்று சொல்லி, மகிழ்ந்து மார்கழி நீராட என்று சொல்கிறார்கள்.
பாஞ்ச ஜன்யமே என்று சொல்வதற்கு மேற்கோள்கள்:
- நாச்சியார் திருமொழி 9.9 ல் சொல்வது பூங்கொள் திருமுகத்து மடுத்தூதிய சங்கொலியும் – இந்த ஒலி சிலரை வாழ்விக்கும்; சிலரை வீழ்த்தும்; அப்படியே இந்த ஒலி நாடு எங்கும் ஒலிக்க வேண்டும்
- நாச்சியார் திருமொழி 7.4 ல் ‘தாமோதரன் கையில்‘ என்று சொன்னது, பெரிய இடம், சப்தம், புகழ் உடைமை என்று பல விசேஷங்களைக் கூறுகிறது.
- பெரியாழ்வார் திருமொழியில் (திருப்பல்லாண்டு 2) ‘படைபோர் புக்கு முழங்கும்அப் பாஞ்சசன்னியமும் பல்லாண்டே;
- நாச்சியார் திருமொழி (7.7)ல் சொன்னதுபோல ‘சங்கரையா உன் செல்வம் சால அழகியதே‘ என்று சொன்னதும்
- நாச்சியார் திருமொழி (7.9)ல் சொன்ன ‘மாதவன்றன் வாயமுதம் பொதுவாக உண்பதனைப் புக்கு நீ உண்டக்கால் சிதையாரோ உன்னோடு செல்வப் பெருஞ்சங்கே’ என்று நாச்சியாரும் கூட ஊடும்படியாக வேண்டியது ஆகையால் வந்த புகழ் என்று பாஞ்ச ஜன்யத்தின் சிறப்புகள் சொல்லப்பட்டது.
நாராயணனே நமக்கே பறை தருவான் என்பது வேதங்களில் சொல்லபட்ட சரணாகதி விதிகள் போல அல்ல என்றும், பிரபல பிரமாணம் போல ஆகும் என்றும் சொல்வதை, மேலையார் செய்வனகள் என்று குறிப்பிடுகிறார். ‘திருமால் திருநாமம் நானும் சொன்னேன் நமர் உரைமின்‘ (பெரிய திருமொழி 6.10.6) என்பது போல ஆகும்.
இப்போது அதிகரித்துள்ள காரியங்களுக்கு துணை நிற்குமாறும், ஸ்வரூப விரோதம் இல்லாமலும் செய்ய வேண்டும் என்பதை, “வேண்டுவன‘ என்று சொல்கிறார். இவர்கள் மணிவண்ணா என்று சொல்லி அவர்கள் இவன் வடிவழகுக்கு மயங்கி இருந்த போது, அவர்களை வைத்த கண் வாங்காமல் பார்த்து கொண்டு இருந்த அவனை, தட்டி உணர்த்தி என்பதை (கேட்டிலையோ) என்கிறார்கள்.
ஞாலத்தை எல்லாம் நடுங்க முரல்வன என்று சொல்வது பெரியாழ்வார் திருமொழியில் (3.3.5) ‘பற்றார் நடுங்கமுன் பாஞ்சசன் னியத்தை‘ துரியோதனாதிகள் நடுங்கும் படி உள்ளதை சொல்கிறது. உலகம் முழுவதும் நடுங்கும்படி சப்தததை உடையதும், பாலை திரட்டினால் போல வெண்மை, பெரியதாய் என்று பலவற்றை சொல்லாமல், பாஞ்ச ஜன்யம் போல என்று சுருங்க சொல்கிறார்.
சால பெரும் பறையோ என்று சொன்னது, எல்லா திக்குகளிலும் கேட்கும்படி இருக்கும் மிகுந்த பெரிய பறை வேண்டும் என்பதாகும்.
- திருப்பள்ளி யெழுச்சிக்குச் சங்குகள் வேண்டும்; அதுவும் பல வேண்டும். நாச்சியார் திருமொழி (11.1)ல் சொல்லிய ‘தாமுகக்கும் தம்கையில் சங்கமே போலாவோ‘
- புறப்பாட்டுக்குப் பறைவேண்டும்; சிறிய திருமடல் 12ல் சொல்லியது போல ‘பாரோர்கள் எல்லாம் மகிழ பறை கறங்க‘ கூடிய பறை.
- பறை கொட்டிக்கொண்டு புறப்படும்போது எதிரே நின்று திருப்பல்லாண்டு பாட அரையர் வேண்டும்;
- பாடுவார் எங்கள் முகத்திலே விழித்து நாங்கள் அவர்கள் முகத்திலே விழித்துக் கொண்டு போகும்படி மங்கள தீபம் வேண்டும்;
- நெடும் தூரத்திலேயே எங்கள் கூட்டங்களைக் கண்டு சிலர் வாழும்படி முன்னே பிடித்துக் கொண்டு போவதற்குக் கொடி வேண்டும்;
- புறப்பட்டுப் போகும் போது பனி தலை மேல் விழாதபடி காக்க ஒரு மேற்கட்டு வேண்டும்?
இந்த உபகரணங்களை எல்லாம் நீ தந்து அருள வேண்டும் என்கிறார்கள்.
இது கேட்ட கண்ணன், ‘பெண்களே, இவ்வளவு பொருள்களை நான் எப்படி சேமித்துத் தர வல்லவன், இது எனக்கு மிகவும் அரிய காரியம் ஆயிற்றே என்று சொல்ல, உன்னுடைய சிறிய வயிற்றிலே எல்லா லோகங்களையும் அடக்கி வைத்து ஒரு ஆலந்தளிரிலே கிடந்து செய்ய முடியாதவற்றையும் செய்யவல்ல உனக்கும் கூட அரியது என்ற ஒன்று உண்டோ என்னும் கருத்துப்பட “ஆலினிலையாய்!” என அழைக்கின்றனர்.
- முதல் திருவந்ததாதி (69) ல் கூறியது ‘பாலன் தனது உருவாய் ஏழு உலகு உண்டு, ஆலிலையின் மேலன்று நீ வளர்ந்த மெய் யென்பர்‘
- பெரியாழ்வார் திருமொழி (1.5.7) ல் கூறியது, ‘பாலகன் என்று பரிபவம் செய்யேல் பண்டொரு நாள் ஆலினிலை வளர்ந்த சிறுக்கன் அவன் இவன்’
- பெரியாழ்வார் திருமொழி (2.3.8) ல் ‘அன்புற்று நோக்கி அடித்தும் பிடித்தும் அனைவர்க்கும் காட்டிற் றிலையே‘ என்று சொன்னது பிரளய காலத்தில் உலகை உண்டு ஆலினிலையில் இருந்தத்தை என்கிறார்.
- பெரியாழ்வார் திருமொழியில் (1.2.6) சொன்னது ‘வையம் ஏழும் கண்டாள் பிள்ளை வாயுளே‘ என்பதும் இதையே.
மாலே மணிவண்ணா என்று சொன்னது போது எம்பெருமானின் சௌலப்பயம் தெரிகிறது. ஆலினிலை என்று சொன்ன போது எம்பெருமானின் சர்வசக்தித்வம் தெரிகிறது. அருள் என்பதால் தேவை இல்லாமல் செய்வதில்லை; தருவது அரியதில்லை; வேண்டாமல் தருவதில்லை; ஆலினிலையாய் அருளாய் என்று சொல்வதால், முன்பு எங்கள் மேல் இரக்கம் இல்லை, வடபத்ரசாயி அருள்வது பிரசித்தம், ஆதலால், இப்போது கிருபை செய்ய வேண்டும் அல்லது அருள் புரிவாய் என்கிறார். பெரிய திருமொழி (5.7.9)ல் ‘விழுங்கியது உமிழ்ந்த வாயனாய் மாலாய் ஆலிலை வளர்ந்து‘ என்று சொல்வதும், நாச்சியார் திருமொழியில் (2.2) ‘அன்று பாலகனாகிய ஆலிலை மேல் துயின்ற எம் ஆதியாய், என்றும் உன் தனக்கு எங்கள் மேல் இரக்கம் எழாதது எம் பாவமே’ என்று சொல்வதும், மூன்றாம் திருவந்தாதி 19ல் சொல்லும் ‘அருளா தொழியுமே ஆலிலை மேல், அன்று தெருளாத பிள்ளையாய்ச் சேர்ந்தான்‘ என்பதும் வடபத்ரசாயி அருள்வது பிரசித்தம் என்பதை சொல்லும்.
Leave a comment