ஒருத்தி மகனாய்ப் பிறந்து ஓர் இரவில்* ஒருத்தி மகனாய் ஒளித்து வளரத்* தரிக்கிலான் ஆகித்தான் தீங்கு நினைந்த* கருத்தைப் பிழைப்பித்துக் கஞ்சன் வயிற்றில்* நெருப்பென்ன நின்ற நெடுமாலே உன்னை* அருத்தித்து வந்தோம் பறை தருதி யாகில்* திருத்தக்க செல்வமும் சேவகமும் யாம்பாடி* வருத்தமும் தீர்ந்து மகிழ்ந்தேலோர் எம்பாவாய்*
திருப்பாவை 25
சென்ற பாட்டில் மங்களாசாஸனம் பண்ணின பெண்களை நோக்கிக் கண்ணன், ‘பெண்களே, நம்முடைய வெற்றிக்குப் பல்லாண்டு பாடுகை உங்களுக்கு ஸித்தம்; நீங்கள் இந்த குளிரிலே உங்கள் உடலைப் பேணாமல் வருந்தி வந்தீர்களே. உங்களுடைய நெஞ்சில் ஓடுகிறது, வெறும் பறையேயோ, மற்றும் ஏதேனும் உண்டோ’ என வினவினான். அதற்கு பெண்கள், பிரானே, உன்னுடைய குணங்களை நாங்கள் பாடிக் கொண்டு வருகையாலே ஒரு வருத்தமும் படாமல் சுகமாக வந்தோம்; பறை என்று ஒரு காரணத்தை முன்னிட்டு நாங்கள் உன்னை காண்பதையே பேறாக நினைக்கின்றோம் என்று கூறினார்கள். எம்பெருமான் நீங்கள் சொன்னபோது நாம் செய்தால், அதுவே சாதனமாக குற்றம் ஆகாதோ என்று கேட்க, அரிய தொழில்களையும் எளிதாகச் செய்து முடித்த உனக்கு எங்கள் வேண்டுகோளை முடித்து தருவது மிகவும் எளியதே என்றும் எங்களை போன்ற சிலர் நோன்பு நோற்று பெற்றது எங்கள் நோன்பு வெற்றிக்கு என்னும் கருத்து தோன்ற என்று விடை கூறுவதாய்ச் சொல்லும் பாசுரம்.
தேவகி பிராட்டியாகிற ஒருத்திக்கு பிள்ளையாய் அவதரித்த அந்த ஒப்பற்ற இரவிலேயே, யசோதை பிராட்டியாகிற ஒருத்தியுடைய பிள்ளையாக ஆகி, ஒளிந்து இருந்து வளரும் காலத்தில், கம்ஸனாகிற தானே, ஒளித்து வளருவதையும் பொறுக்க மாட்டாதவனாய் (இவனை கொல்ல வேண்டும் என்ற) தீயச் செயலை நினத்த கம்ஸனுடைய எண்ணத்தை வீணாக்கி அந்த கம்ஸனுடைய வயிற்றில் நெருப்பு என்னும்படி நின்ற சர்வாதிகனே உன்னிடத்தில் எங்களுக்கு வேண்டியவற்றை யாசித்துக் கொண்டு வந்தோம். எங்களுடைய விருப்பத்தை நிறைவேற்றுவாயாகில் பிராட்டியும் ஆசைப்படத்தக்க உன் செல்வத்தையும் வீரிய குணத்தையும் நாங்கள் பாடி உன்னை பிரிந்து படும் துக்கமும் நீங்கி மகிழ்ந்துவிடுவோம் என்பது இந்த பாடலின் பொழிப்புரை.
“தேவகி மகனாய்ப் பிறந்து யசோதை மகனாய் ஒளித்து வளர” என்று சொல்லாமல், ஒருத்தி மகனாய்ப் பிறந்து என்றும், ஒருத்தி மகனாய் ஒளித்து வளர” என்று சொன்னது அந்த தேவகி யசோதைகளின் உயர்வான ஒப்புதனை விளக்குகிறது. ‘தேவகி கண்ணனைப் பெற்ற பாக்கியவதி. யசோதை கண்ணனை வளர்த்தெடுத்த பாக்கியவதி’ என்று உலகம் முழுவதும் புகழும்படியான அவர்கள் இருவரின் பெருமையை ‘ஒருத்தி’ என்ற ஒரே சொல் நயத்தால் விளக்குகிறார்கள். திருவாய்மொழி (3.5.5)ல் சொல்லியபடி ‘ஆதியஞ் சோதி யுருவை அங்குவைத் திங்குப் பிறந்த‘ எம்பெருமான் என்பதை சொல்லலாம்.
பெரியாழ்வார் திருமொழி 1.2.6 ல் ‘தேவகி தன் வயிற்றில் அத்தத்தின் பத்தாநாள் தோன்றிய அச்சுதன்‘ என்று கூறியது ஒருத்தி மகனாய்ப் பிறந்து என்பதற்கு மேற்கோள். கம்ஸன் முடிந்து பல காலம் கடந்து இருந்தாலும், ஒருத்தி மகனாய் என்று மறைத்து சொன்னது, ஹஸ்தத்தின் பத்தாம் நாள் என்று பெரியாழ்வார் சொன்னது போல, ஆகும்.
பெரியாழ்வார் (3.2.8) ல், ‘பன்னிரு திங்கள் வயிற்றில் கொண்ட அப் பாங்கினால்‘ சொன்னபடி, சக்ரவர்த்தி திருமகனைப் (ஸ்ரீ ராமன்) போலவே கண்ணபிரானும் பன்னிரண்டு மாஸம் கர்ப்பவாஸம் பண்ணிப் பிறந்தான் என்று யசோதையை பற்றி சொல்கிறார். இது ஒருத்தி மகனாய் வளர்ந்ததை சொல்வது.
ஒருவன் பல தவங்களை செய்து நான்கு பிள்ளைகளை பெற்றாலும், பெற்ற தந்தை, உற்ற சகோதரன், கணவன், கணவனின் தந்தை, என்ற நான்கு பேர் தவம் செய்து ஒரு குழந்தை பிறந்தாலும், பெற்றவள் என்ற பேறு அவள் ஒருத்திக்கே, அந்த ஒருத்தியை சொல்கிறது. காரண வாக்கியங்கள், ஊழி முதல்வன் ஒருவனே, (திருவாய்மொழி 10.7.9)என்று வஸ்துவை வயிற்றிலே அடக்க பெற்றாள் ஒருத்தி.
- திருவாய்மொழி 5.7.7 ல் ‘உலகுக்கோர் முந்தைத் தாய் தந்தையே!” என்று சொல்லியபடி எல்லா லோகங்களுக்கும் எல்லா பூதங்களுக்கும் முந்தையதாக இருக்கும் ஒருவனை தனக்கு பிள்ளையாக பிறக்க நோன்பு நோற்க,
- இந்த உலகம் முழுமையையும் அடிமை கொள்பவனாய் (சேஷி),
- இந்த உலகம் முழுவதும் நிறைந்து இருப்பவனுமாய்,
- எப்போதும் இருப்பவனாய் (நித்யன்),
- மகன் ஒருவர்க்கல்லாத மாமேனி மாயன்(மூன்றாம் திருவந்தாதி 92), சிலர் வேண்டியதற்காக மகன் ஆனான் என்ற அளவில் மட்டும் இல்லாமல்,
- தேவகி மைந்தன் என்றே நினைக்கும்படி, (திருவாய்மொழி 5.10.1 ல் சொல்லிய பிறந்தாவாறும் என்பதை நினைவில் கொள்ளலாம்)
- அப்படி வருவதும் தனக்கு ஒரு ஏற்றம் என்று அறியாத வண்ணம் பிறந்தான்.
சிலர் மகனாக வேண்டும் என்று ஆசை பட்டால், தூணில் இருந்தோ, ஆனைக்கு உதவியது போல வந்து இருக்கலாமே என்றால், ஈஸ்வரனே வந்து பிறக்க வேண்டும் என்று நோன்பு நோற்றதாலே, கர்ப்பவாசம் செய்து, உன்னுடைய வயிற்றில் நாம் பிறந்தோமே என்று சொல்லி கொண்டு பிறந்தான். ஆவிற்பவித்து என்று சொல்வதால், ரிஷிகள் முனிவர்கள் போல, இவனுக்கும் கர்ப்ப ஸ்பரிசம் என்ற தோஷம் இல்லை என்கிறார்கள்.
மகனாய் பிறந்து என்று சொன்னது, தாய் தந்தை சொல்லை கேட்கும் (பரதந்திரன்) குழந்தையாக பிறந்தது. பிறந்தவுடன் தாய் தந்தை சொன்னது போல சங்கு, சக்காரத்தாழ்வார்களையும் திருத்தோள்களையும் மறைத்தது சொல்லபட்டது. பெரியாழ்வார் திருமொழியில் (3.2.2) ‘ஞாலத்துப் புத்திரனைப் பெற்றார் நங்கைமீர் நானோ மற் றாரு மில்லை.’ என்று யசோதை பெருமையுடன் சொன்ன வார்த்தைகள்.
பெருமாள் திருமொழி (7.3 )ல் நந்தகோபன் பெற்றதும் வாசுதேவன் பெறமுடியாததையும் ‘நந்தன் பெற்றனன் நல்வினை யில்லா நங்கள் கோன் வசுதேவன் பெற்றிலனே’ என்று குலசேகர ஆழ்வார் குறிப்பிடுகிறார்.
ஓரிரவில் என்று சொன்னது, பிறந்த இடத்தில் ஒரு இரவு கூட தங்க வில்லை என்பதாகும். அந்த இரவுக்கு ஒத்த இரவு இன்னொன்று இல்லை. இங்கே திருவாய்மொழி (6.4.5)ல் சொல்லிய ‘வேண்டி தேவர் இரக்க, வந்து பிறந்ததும் வீங்கிருள்வாய் * பூண்டு என்று என்னை புலம்பப் போயங்கோர் ஆய்க்குலம் புக்கதும்’ என்பதை இங்கே நினைவில் கொள்ளலாம்.
கண்ணன் யசோதையினிடத்து வளர்ந்ததை மட்டும் கொண்டு, அவனை அவளது மகனாகக் கூறுதல் பொருந்துமோ என்றால்,
- அழுது முலைப்பால் குடித்த இடமே பிறந்த இடம் ஆதலாலும்,
- கண்ணபிரான் அழுது முலைப்பால் குடித்தது எல்லாம் யசோதையிடத்தே ஆதலாலும்,
- திருப்ரதிஷ்டை பண்ணினவர்களை காட்டிலும் ஜீர்ணோத்தாரணம் பண்ணினவர்களே முக்கியவர் ஆதலாலும் கண்ணன் யசோதைக்கே மகன் ஆவான், என்கிறார்.
ஒருத்தி மகனாய் என்று இங்கே சொன்னது, அங்கே பிறந்து இங்கே வளர்ந்தான் என்று சொல்ல முடியாதபடி, இங்கே பிறந்து இங்கே வளர்ந்தான் என்று சொல்லும் வண்ணம் உள்ளது என்கிறார். ஒருத்திக்கு அவதார ரசத்தை கொடுத்து, ஒருத்திக்கு லீலா ரசத்தை கொடுக்கிறார். அங்கே முலைபால் குடிக்க வில்லை. இவள் கட்டவும், அடிக்கவும்படி தன்னை நியமித்து கொண்டதை சொல்கிறது. இரண்டாம் திருவந்தாதியில் (29)ல் ‘மகனாகக் கொண்டெடுத்தாள் மாண்பாய கொங்கை,‘ என்று சொன்னதை இவளையே ஆகும்.
ஒளித்து வளர என்று சொன்னது, பிறந்தவிடத்தில் ப்ரகாசமாக இருக்க முடியாதது போலவே, வந்து சேர்ந்த இடத்திலும் விஷ த்ருஷ்டிகளான பூதங்களுக்கு அஞ்சி ஒளித்து வளர்ந்ததையும், பெரிய திருமொழி (10.4.8)ல் திருமங்கைஆழ்வார், ‘வானிடைத் தெய்வங்கள் காண‘ முடியாதபடி என்று சொல்பவர்கள், அநுகூலர் கண்ணிலும் காண முடியாதபடி அடக்குமவர்கள், பிரதிகூலர் கண்ணில் பட விடுவார்களா என்கிறார். “கண்ணா நீ நாளைத்தொட்டுக் கன்றின் பின் போகேல் கோலம் செய்து இங்கேயே இரு” (பெரியாழ்வார் திருமொழி 3.3.9) என்று இவன் வளர்ந்த இடத்தில் சொல்பவர்களையும் சேர்த்து சொல்கிறது.
உகப்பார் (நித்யசூரிகள்) எப்போதும் தர்சனம் செய்து அனுபவிக்க வல்லவனை, உள்ளே இருந்த போதும், கண்ணுக்கு தெரியாதபடி மறைத்து, ‘இவன் இல்லை ‘ என்று எழுதி மறைத்துவிட வேண்டும்படி, கள்ளர் படும் பாட்டை போல ஒளித்து வளர்ப்பது சொல்லப் படுகிறது. அந்தர்யாமியை போல முகம் காட்டாமல் இல்லாது, இரு பக்கமும் புரிகிற மாதிரி, ‘அம்மே’ என்றால் ‘ஏன்’ என்று பதுங்கி கிடக்கிற மாதிரி என்று சொல்கிறார்.
தரிக்கிலானாகி என்று சொன்னது, கம்ஸனிடத்துச் சென்று, ‘உன்னுடைய விரோதி திருவாய்ப்பாடியிலே வளருகின்றான்’ என்று சொல்ல, அவன் அது கேட்ட மாத்திரத்திலே, ‘நம் கண் வட்டத்தில் இல்லையாகில் என்ன செய்தால் என்ன?’ என்று இல்லாமல், ‘சதுரங்க பலத்தோடே கூடி ஐச்வர்யத்திற்கு ஒரு குறையும் இன்றியே இருந்தோம் என்றும், வந்த அன்று பார்ப்போம் என்று ஆறி இல்லாமல், அப்பொழுதே தொடங்கித் தீங்கு செய்கைக்கு காரணமான பொறாமையைச் சொல்லுகிறது.
தீங்கு நினைத்த என்று சொன்னது, சகடம், கொக்கு, கன்று, கழுதை, குதிரை, விளாமரம், குருந்த மரம் முதலிய பல வஸ்துக்களில் அசுரர்களை ஆவேசிக்கச்செய்தும், பூதனையை அனுப்பியும், வில் விழவுக்கு என்று வரவழைத்து மல்லர்களையும், குவலயாபீடத்தை ஏவியும், இப்படியாகக் கண்ணன் நலிவதற்குக் கஞ்சன் செய்த தீங்குகளுக்கு ஓர் வரையறை இல்லாமை என்பதை நாம் அறிய வேண்டும். ஆச்சியர்கள் இன்னதென்று சொல்ல மாட்டார் ஆகையால் ‘தீங்கு’ என்று பொதுவாக சொல்கிறார்கள். ‘
நினைத்த’ என்பதற்கு ‘உன்னைச்சிந்தையினாலிகழ்ந்த இரணியன் ‘ (திருவாய்மொழி 2.6.6) என்றதன் மூலம், யுக்தி மட்டும் இன்றி, நெஞ்சில் பொல்லாங்கு கொண்டு, மீண்டும் மீண்டும் சோதிப்பதை மேற்கோள் காட்டுகிறார். தீய புத்தி கஞ்சன் என்று பெரியாழ்வார் திருமொழி (2.2.5) சொல்வதும் இதையே.
கருத்தைப் பிழைப்பித்து என்று சொல்வது, எவ்வகையிலாவது கண்ணனை முடித்து விட்டு இறுதியில் மாதுல (தாயார் வகை உறவு) ஸம்பந்தத்தைப் பாராட்டி ‘ஐயோ! என் மருமகன் இறந்தொழிந்தானே!’ என்று கண்ணீர் விட்டு அழுது துக்கம் பாவிக்கக் கடவோம் என்று நினைத்திருந்த கம்ஸனுடைய நினைவை, அவனோடே முடியும்படி செய்து அருளினான் என்பதாகும். பிழைப்பித்தல் என்று சொன்னது, பிழையை உடையதாகச் செய்தல் என்ற பொருளில் வரும். அல்லது, பாழாக்கி என்று எளிமையாக கொள்ளலாம்.
கஞ்சன் வயிற்றில் நெருப்பென்ன நின்ற நெடுமாலே என்று சொன்னது, கண்ணனுடைய சேஷ்டைகளை நினைத்து கவலையுற்று கூறும் பெண்களுடைய வயிற்றிலிருந்த நெருப்பை எல்லாம் வாரிக் கண்ணன், கஞ்சன் (கம்ஸன்) வயிற்றில் எறிந்தனன் என்பது போல என்கிறார். பெரியாழ்வார் திருமொழியில், (3.3.6) ‘என் செய்ய என்னை வயிறு மறுக்கினாய் ‘ என்று யசோதை சொல்லி, தன் வயிறு குழம்பியதையும் குறிப்பிடலாம். திருவாய்மொழி (10.3.10)ல் ‘ஊடுறவ என்னுடை ஆவிவே மால்‘ சொல்லியதுபோல அடியவர்களின் பயங்களை எல்லாம் கம்ஸனின் வயிற்றில் கொழுத்தினான் என்பதையும் இங்கே சொல்லலாம். பெருமாள் திருமொழியில் (7.10) ‘கஞ்சன் நாள் கவர் கரு முகில் எந்தாய் ‘ என்று சொல்லி, ஸ்ரீகிருஷ்ணன், தேவகியின் வயிற்றிற்குப் பிள்ளையாகவும், கஞ்சன் வயிற்றிற்கு நெருப்பாகவும் இருப்பதை சொல்கிறார். கஞ்சனை காய்ந்த காளமேக திருஉருவன் (பெரிய திருமொழி 4.10.4) என்பதும் அதேயே சொல்கிறது.
நெடுமாலே என்று அழைப்பதினால், இப்படி நாட்டில் பிறந்து, படாதனபட்டு, கஞ்சனைக் கொன்றது, அடியாரிடத்துள்ள மிக்க வியாமோஹத்தினால் என்பது தெரியும். ஸ்ரீ வாசுதேவர் மற்றும் ஸ்ரீ தேவகி பக்கத்தில் திருவுள்ளம் பற்றி, ‘ஒன்றும் கண்டிட பெற்றிலேன், காணுமாறு இனி உண்டேல் இனி அருளே‘ (பெருமாள் திருமொழி 7.9) என்று அவள் பட்ட இழவெல்லாம் தீர, முலைபால் திருமேனியில் சுரக்க அவளுக்கு நின்று பால சேஷ்டிதங்களை காட்டின வியாமோகத்தினை சொல்கிறது.
இப்படி ஆய்ச்சியர்கள் பேசிக்கொண்டு இருக்க, அதுகேட்ட கண்ணன், “பெண்களே, நீங்கள் சொல்லியபடி நான் கஞ்சன் வயிற்றில் நெருப்பென்று நின்றது உண்டு, அது இருக்க, இப்போது நான் உங்களுக்குச் செய்ய வேண்டுவது என்ன” என்று கேட்க, மறுமொழி கூறுகின்றனர். ‘எங்களுக்கு நீ பிறந்துகாட்டவும் வேண்டாம் ; வளர்ந்து காட்டவும் வேண்டாம் ; கொன்று காட்டவும் வேண்டாம், உன்னைக் காட்டினால் போதும்’ என்ற கூறுகிறார்கள்.
திருத்தக்க செல்வமும் சேவகமும் யாம்பாடி என்று சொல்வதில், திருத்தக்க என்றது, பெரிய பிராட்டியாரை கொண்ட சம்பத்தை சொல்கிறது. திருதக்க செல்வம் என்றது செல்வ சிறுமியரான இவர்கள் செல்வுக்கு தக்கதான என்று சொல்கிறது. செல்வமும் சேவகமும் என்றது ஆற்ற படைத்தான் மகனே என்றும், கப்பம் தவிர்க்கும் கலியே என்றும் சொல்கிறது. யாம் பாடி என்று சொன்னது உன் பேர் சொல்ல பெறாத நாங்கள், உன் பேர் சொல்ல வொட்டாதார் முன்னே உகப்போடு பாடி என்றது. பெரிய திருமொழி (7.7.1)ல் திருவுக்கும் திருவாகிய செல்வா என்று சொல்வதும் திருவுக்கு தகுதி என்பதற்கே. போதமர் செல்வக் கொழுந்து (பெரியாழ்வார் திருமொழி 2.8.10) என்று சொல்வதும் பெரிய பிராட்டியாருக்கு தகுதியாய் இருக்கும் என்பதை சொல்லவே.
உன்னை அருத்தித்து வந்தோம் என்று சொல்வது, “என்னை ஆக்கிக் கொண்டு, எனக்கே தன்னைத் தந்த கற்பகம்” (திருவாய்மொழி 2.7.11) என்றபடி அடியார்க்கு நீ உன்னையே கொடுப்பவன் ஆகையால், நாங்கள் உன்னையே வேண்டி வந்தோம். இவர்கள் இப்படி சொல்லக் கேட்ட கண்ணன், ‘பெண்களே, “பறைகொள்வான் இன்று யாம் வந்தோம்” என்று சொல்லாமல் “பறைதருதியாகில்” என்கிறீர்களே என்று கேட்க பின்னால் சொல்கிறோம் என்று பறை என்னும் பதத்தின் பொருளைச் “சிற்றஞ் சிறுகாலை” என்ற பாட்டில் வெளியிடுகின்றனர்.
“தருதியாகில்” என்ற சொல்லால், எம்பெருமானுடைய நினைவே பலனுக்கு சாதனமாகும் என்பதை சொல்கிறார்.
வருத்தமும் தீர்ந்து மகிழ்ந்து என்பது ‘பெண்களே, உங்களுடைய கருத்தை அறிந்துகொண்டேன்; நீங்கள் வந்தது ஏன், வருகிற போது மிகவும் வருத்தமுற்றீர்களோ?’ என்று உபசரித்து கேட்க, ‘உன்னுடைய ஐச்வரியத்தையும் ஆண்பிள்ளைத் தனத்தையும் அடியோம் வாயாரப் பாடிக்கொண்டு வந்தோம் ஆகையால் எமக்கு ஒரு வருத்தமும் இல்லை’ என்கிறார்கள்.
‘நினைந்து இருந்தே சிரமம் தீர்ந்தேன்‘ என்று பெரியாழ்வார் திருமொழி (5.4.8) யில் சொன்னதும், ‘உகந்தே உன்னை உள்ளும் என்னுள்ளத்து‘ என்று திருவாய்மொழி (9.4.7)யில் சொன்னதும், ‘தூய அமுதைப் பருகிப்பருகி‘ திருவாய்மொழி (1.7.3) யில் சொன்ன அமுதை பருகி பருகி வருத்தம் தீர்வதற்கு சேவகம் செய்தார்கள்.
Leave a comment