அன்று இவ் உலகம் அளந்தாய் அடி போற்றி * சென்று அங்குத் தென் இலங்கை செற்றாய் திறல் போற்றி * பொன்றச் சகடம் உதைத்தாய் புகழ் போற்றி * கன்று குணில் ஆ வெறிந்தாய் கழல் போற்றி * குன்று குடையாய் எடுத்தாய் குணம் போற்றி * வென்று பகை கெடுக்கும் நின் கையில் வேல் போற்றி * என்று என்றும் உன் சேவகமே ஏத்திப் பறை கொள்வான் * இன்று யாம் வந்தோம் இரங்கேலோர் எம்பாவாய்.
திருப்பாவை 24
(இந்திரன் முதலானவர்கள் மஹாபலியினால் வருந்திய) காலத்தில் இந்த உலகங்களை (இரண்டு அடிகளால்) அளந்து அருளியவனே. (உன்னுடைய) அந்தத் திருவடிகள் பல்லாண்டு வாழ்க. இராவணன் இருக்கும் இடத்தில் எழுந்து அருளி அவன் நகராகிய அழகிய இலங்கையை அழித்தவனே. உன்னுடைய பலம் பல்லாண்டு வாழ்க. சகாடாசுரன் அழிந்து போகும்படி (அச்சகடத்தை ) உதைத்தவனே! உன்னுடைய கீர்த்தியானது நீடூழி வாழ்க ; கன்றாய் நின்ற வத்ஸ்ஸாசுரனை எறிதடியாகக் கொண்டு (விளங்கனியாய் நின்ற ) அசுரன் மீது எறிந்து அருளியவனே, (அப்போது மடக்கி நின்ற) உன் திருவடிகள் போற்றி; கோவர்த்தன மலையை குடையாக தூக்கியவனே. (சௌசீல்யம் முதலான உன் ) குணங்கள் பல்லாண்டு விளங்க வேணும். எதிரிகளை ஜயித்து பகைவர்களை அழியச் செய்யும் உன் கையில் உள்ளஅ வெள் நீண்ட நாள் வாழ வேண்டும். என்று இப்படி பல தடவை மங்களாசாசனம் பண்ணிக் கொண்டு உன்னுடைய வீரியங்களையே புகழ்ந்து பறை கொள்வதற்காக தாங்கள் இங்கு வந்து சேர்ந்தோம். கிருபை செய்ய வேண்டும் என்பது இந்த பாடலின் பொழிப்புரை.
பாரதப் போரில் அர்ஜுனன் ‘இரண்டு சேனைகளின் நடுவே தேரைக் கொண்டு போய் நிறுத்து’ என்று சொல்ல, அப்படியே செய்தவன் கண்ணன். அவன் பெண்களின் வேண்டுகோளை மறுக்க மாட்டாதவன் என்பதால் அவர்களின் பிரார்த்தனைக்கு இசைந்து, ‘பெண்களே, இதோ புறப்பட்டு வருகிறேன்’ என்று சொல்லித் திருப்பள்ளியறையில் இருந்தும், திவ்ய சிம்மாசனம் வரை வரத் தொடங்கினான். பல ஆண்டு காலமாக தண்டகாரணிய வாசிகளான முனிவர் ‘இராம பிரானைக் கண்டவுடனே ராக்ஷகசர்களால் நமக்கு நேரும் துன்பங்களைச் சொல்லி முறையிட வேணும்’ என்று காத்து கொண்டு இருந்தவர்கள், இராமபிரானைக் கண்டவுடன் ராக்ஷஸ துன்பங்களை மறந்து, மங்களா சாஸநம் பண்ணத் தொடங்கினாற் போல, ஆய்ச்சியர்களும் தங்கள் மனோரதங்களை எல்லாம் மறந்து
- ‘இந்த திருவடிகளைக் கொண்டோ இவனை நாம் நடக்கச் சொல்லுவது!’ என வருந்தி
- அந்த திருவடிகளை எடுத்து முடி மேல் புனைந்து கண்களில் ஒற்றிக் கொண்டு,
- முன்பு உலகளந்து அருளினவற்றையும்,
- சகடம் உதைத்தவாற்றையும் நினைந்து,
- இந்த திருவடிகளுக்கு ஒரு தீங்கும் நேராது இருக்க வேணும் என்று மங்களாசாஸனம் செய்யும் பாசுரம்.
உலகளந்து அருளின போது, அமரர்கள் தங்கள் பிரயோஜனத்தைப் பெற்று அந்த அளவோடு மீண்டனரே தவிர, ‘இந்த மென்மையான திருவடிகளை கொண்டு காடுகளும் மேடுகளும் அளக்க செய்தோமே, நடந்த கால்கள் நொந்தவோ” என்று அந்த திருவடிகளுக்கு காப்பிட்டார் யாரும் இல்லை என்கிற குறை தீர, இப்போது இந்த ஆச்சியர்கள், மாதர் மங்களாசாஸனம் பண்ணுகின்றனர்.
அந்த ஆச்சியர்களுக்கு, அன்று, இன்று என்ற இரண்டும் இப்போதே நடப்பது போல தோன்றுகிறது. அன்று யார் நோன்பு நோற்றார்கள், என்று கூடுவார்கள், விலக்குவார்கள் என்று ஒரு வித்தியாசமும் பாராமல் எல்லோருடைய தலைகளிலும் உன் திருவடிகளால் தீண்டியது என்கிறார்கள். எங்களையும் உன்னுடைய சீலத்தையும் வடிவழகையும் காட்டி உன் திருவடிக்கீழ் தூளிதானம் செய்த அன்று என்று சொல்வது போல ஆகும்.
இவ்வுலகம் என்ற சொல்லால் மென்மை பொருந்திய திருக்கைகளை உடைய வடிவழகான பெரிய பிராட்டியாரும், எடுத்து கழிகைக்கு ஒப்பில்லாத பூமாதேவி தாயாரும், பூ தொடுப்பத்தை போல, பிடிக்கக் கூசும் படியான ஸுகுமாரமான திருவடிகளை இந்த கடினமான உலகத்தை அளந்தாயே என்கிறார்கள். பிரமாணித்தார் பெற்ற பேறு என்றபடி, உபகாரம் செய்த அளவே அன்றி, உகக்கும் அளவு அறியாத பூமியை, திருவடிக்கீழ் இட்டு கொள்வதே அளந்தாய் என்கிறார்.
அளந்தாய், அளந்தான், போற்றி, வாழி, பல்லாண்டு இவை எல்லாம் ஒரு பொருட்சொற்கள். அடிபோற்றி என்று சொன்னது, தாளாலுலகம் அளந்த அசவு தீரவேணும் என்பதாகும்.
அன்று சிலர் அழிந்து போனார்கள்; சிலர் ‘அப்பன் அறிந்தில்லன்‘ என்று ஆணை இட்டார்கள்; சிலர் பயன்களை எடுத்துக்கொண்டு சென்றார்கள்; ஆனால் யாரும் மங்களாசாசனம் செய்யவில்லை; அந்த இழவு தீர இப்போது அடிபோற்றி என்று பல்லாண்டு பாடுகிறார்கள். திசை வாழி எழ என்று அப்போதைக்கு பல்லாண்டு பாடினார்கள். போற்றி என்று இப்போது பாடி முடிக்கிறார்கள். இந்த அவதாரத்தின் பெருமை பிரம்மா எம்பெருமானின் திருவடிகளை கழுவினார்.
சென்று அங்கு என்று சொன்னது, அழகுக்கு இலக்கு ஆகாத தீய மனத்து அரக்கரை, அம்புக்கு இலக்காக்க, கொடிய காட்டில், குருதி சேர நடப்பதே, ‘எவ்வாறு நடந்தனை எம்மிராமாவோ ‘ என்று தசரத சக்கரவர்த்தி உட்பட எல்லோரும் கேட்டார்கள். இலங்கைக்கு அரணாக இருந்த கர தூஷனாதி கபந்த விரோதிகளை அழித்து, ஜல துர்க்கமாக வைத்த கடல் காடு மலைகளை தொடங்கி கால் கீழே அழித்து கொண்டு நடந்துபடியை சொல்கிறது. தென்இலங்கை செற்றாய் என்று சொன்னது எல்லாவற்றிலும் எஞ்சியது இலங்கை என்று சொல்வதாகும்.
திறல் என்று சொன்னது, ‘தீ மனத்து அரக்கர் திரல் அழித்தவனே’ என்று பாடியது போல என்றும், தங்கள் துக்கம் களைவதற்கு உடல் அன்றிக்கே, அரணக்கு அரண் இடுவார் போல திறலுக்கு பாடுகிறார்கள். உலகளந்த பொன்னடிக்கு காப்பிட்டவோ பாதி காடுரைந்த பொன்னடிக்கு காப்பிட தேடுபவர்களுக்கு அஞ்சாமைக்கு திரலை காட்டினான். கல்லாதவர் இலங்கை கட்டழித்த என்றும், தேவனே தேவன் ஆவான் என்றும், தென்இலங்கை ஈடழித்த தேவர்க்கு என்னையும் உளள் என்மின்கள் என்றும், பாடுகிறார்கள். தசரதனையும் விஞ்சும்படி பால்ய காலத்திலேயே விஸ்வாமித்திரரிடம் இருந்து அஸ்திரங்களை பெற்று நன்றாக வளர்ந்த பின் இலங்கையை அழித்த செயல் என்று பாடுகிறார்கள்.
பொன்ற என்று சொன்னது பொடி பொடியாகும்படி என்ற அர்த்தத்தில் வரும். புகழ் என்று சொன்னது, பெற்ற தாயும் கூட உதவப் பெறாத ஸமயத்தில் தன் வலிமையைக் கொண்டு தன்னைக் காத்தமையால் வந்த கீர்த்தி என்று பொருள்.
பிறந்த ஏழு மாதங்களில் அல்லது பிறந்து மறுபத்து கழிவதற்குள் எதிரிகள் உண்டு என்று அறிகைக்கு உண்டான ஞானமும் இன்றிக்கே, ஆயுதம் பிடிக்கவும் அறியாத தொட்டில் பருவத்தில் செய்த செயல் சகடாசுர வதம். ராவணன் நேரே தோன்றினார் போல அன்றி கள்ள சகடம் என்று அறிந்து அழித்ததற்கு பல்லாண்டு பாடுகிறார்கள். சூர்ப்பனையையும் மாரிசனையும் குற்றுஉயிருடன் விட்டு பின்பு அனர்த்தம் விளையும்படி இல்லாமல் தோன்றியவுடன் சகடாசுரனை முடித்ததை பாடுகிறார்கள். பெருமாள் (இராமன்) வில் பிடித்த கைக்கு தழும்பு உள்ளது போல கண்ணனின் சாடுடைத்த திருவடிகளுக்கு தழும்பு என்கிறார்.
முள்ளைக் கொண்டே முள்ளைக் களைவது போல், ஒரு கன்றாக இருந்த துஷ்டரைக் கொண்டே, விளா மரமாக துஷ்டரைக் களையும் வல்லமை, கன்று குணிலாவெறிந்த வரலாற்றின் மூலம் விளங்கும். குணில் என்றால்,எறியும் கருவி. கன்றைக் குணிலாகக் கொண்டு எறிந்த திருக்கைகள் இருக்க, அதற்குப் போற்றி என்று பாடாமல் “கழல் போற்றி” என்றது சொன்னதற்கு, “விளாமரத்தை இலக்காகக் கொண்டு, கன்றை எறிகருவியாகக் கொண்டு எறிவதாக நடந்த போது நடந்த திருவடிகளில் வீரக் கழலையும், அந்த திருவடிக்களின் உள் பக்க சிவப்பையும் கண்டு காப்பிடுகிறார்கள்.” அடிபோற்றி! கழல்போற்றி என்று சொன்னது நீட்டின திருவடிகளுக்கும் குஞ்சித்த திருவடிகளுக்கும் சூழ்ந்திருந்து, பரிவாரைப் போலே பரிகிறார்கள். கன்றாக நின்ற அசுரனை கொன்ற தீம்பு உலகமெல்லாம் பிரகாசிக்கும்படி செய்தாய் என்கிறார். என்றும் என் பிள்ளைக்கு தீமைகள் செய்வார்கள் அப்படியே ஆவார்கள் என்று தாயார் உட்பட சொல்லும்படி இருக்கும் கண்ணனை போற்றுகிறார்கள்.
குன்று குடையாய் எடுத்தாய் குணம் போற்றி என்று சொல்லும் போது, இந்திரனுடைய கர்வம் அடக்கப் பட்டது சொல்லி பல்லாண்டு பாடுகிறார்கள். இதற்கு முன்பு இந்திரனுடைய எதிரிகளை முடித்த வரலாறு சொல்லப் பட்டது. குணம் போற்றி என்று சொன்னது, இந்திரனின் தலையை எடுக்காமல், மலையை எடுத்து காப்பாற்றிய குணத்தை போற்றி என்கிறார்கள். பாயும் பனி மறுத்த பண்பாளன், சீர் கற்பன் வைகல் என்று அறியுடையார் நாள்தோறும் கற்பது ஒரு குணமே என்கிறார்.
இந்திரன் மேகங்களை ஏவி மழை பெய்வித்துத் திருவாய்ப்பாடியிலுள்ள உயிருள்ள உயிர்இல்லாத அனைத்துக்கும் பெருத்த தீங்கை உண்டு பண்ணப் புகுந்ததற்குக் ‘கண்ணன் சீற்றமுற்று அந்த இந்திரன் தலையை அறுத்து எறிய வல்லமை பெற்றிருந்த போதிலும் கண்ணன், அவன் திறந்து இறையும் சீற்றங்கொள்ளாமல், ‘நம்மிடத்தில் ஆநுகூல்ய முடைய இந்திரனுக்கு இந்த குற்றம் பெரும் பசியால் பிறந்த கோபத்தினால், இப்போது தீங்கிழைத்ததால், சிறிது போது சென்றவாறே தானே ஓய்வான்’ இவனுடைய உணவைக் கொள்ளை கொண்ட நாம் உயிரையும் கொள்ளை கொள்ளக் கடவோம் அல்லோம்’ என பாராட்டி, அடியாரை மலை எடுத்துக் காத்த குணத்திற்குப் பல்லாண்டு பாடுகின்றனர்.
வேல்போற்றி என்று சொன்னது, வெறுங்கையைக் கண்டாலும் போற்றி என்பவர்கள், வேல் பிடித்த அழகைக் கண்டால் போற்றி என்று சொல்லாமல் இருப்பார்களோ என்று சொல்வார். மழை நின்ற உடன், மலையை விட்டு, வேலை பிடித்த அழகு அல்லது மிடுக்கிற்கு பல்லாண்டு பாடுகிறார்கள். இராமன் வில் பிடித்தது போல, அவனது படைகளும் வில் பிடிப்பது போலே, கண்ணன் வேல் பிடித்தால் அவனுடன் வருகின்ற ஆயர் சிறுவர்களும் வேல் பிடித்து வருகிறார்கள் என்கிறார்.
“அடி போற்றி, திறல் போற்றி, புகழ் போற்றி, கழல் போற்றி, குணம் போற்றி, வேல் போற்றி!” என்று இவர்கள் நாக்குக்கு இடும் ஆறு வார்த்தைகள் / கட்டளைகள்.
என்று என்றும் உன் சேவகமே ஏத்திப் பறை கொள்வான் என்று சொன்னது உன்னுடைய வீர சரித்திரங்களை ஏற்றி பேசியே உன்னை அனுபவிப்போம் என்கிறார்கள். உன்னுடைய விக்ரமம் ஒன்று ஒழியாமல் எல்லாம் என்று பெரியாழ்வார் பாடிய மாதிரி, இவர்களும் பாடுகிறார்கள்.
“பறைகொள்வான் இன்று யாம் வந்தோம்” என்றது, என்றைக்கும் ஏழ் ஏழ் பிறவிக்கும் உன்தன்னோடு உற்றோமே ஆவோம் உனக்கே நாம் ஆட் செய்ய வந்தோம் என்று சொன்னது போல ஆகும்.
யாம் வந்தோம் இரங்கு என்ற சொற்தொடரால், அடியோங்கள் உன் வரவை எதிர்பார்த்து இருக்க வேண்டியவர்கள் ஆயினும், ஆற்றாமையின் மிகுதியால் அப்படி இருக்க வல்லமை அற்று வந்து விட்டோம், இந்த குற்றத்தைப் பொருத்தருள வேண்டும் என்ற வேண்டுதல் தோன்றும்.
“அன்று இவ் உலகம் அளந்தாய் அடிபோற்றி, சென்று அங்குத் தென் இலங்கை செற்றாய் திறல் போற்றி, பொன்றச் சகடம் உதைத்தாய் புகழ் போற்றி, கன்று குணிலாய் வெறிந்தாய் கழல் போற்றி, குன்று குடையாய் எடுத்தாய் குணம் போற்றி, வென்று பகை கெடுக்கும் நின் கையில் வேல் போற்றி, என்றென்றும் உன் சேவகமே ஏத்திப் பறை கொள்வான், இன்று யாம் வந்தோம் இரங்கேலோர் எம்பாவாய்.” என்று சொல்வதை இங்கே நினைவில் கொள்ளலாம். அன்று என்று அங்கு சொன்னது, முன்னொரு யுகத்தில், காலத்தில், என்று ஒவ்வொரு நிகழ்ச்சியையும் நினைவு கூர்ந்து, இன்று வந்ததை குறிப்பிடுகிறார்.
Leave a comment