திவ்ய பிரபந்தம்

Home

T23 மாரி மலை முழைஞ்சில்

திருப்பாவை 23

கண் வளர்ந்து அருளின அழகு காணப்பெற்றோம், இனி நடை அழகும் வீற்று இருந்த அழகும் காண வேண்டி பாடுகிறார்கள். திருவாய்மொழி (9.2.3)ல் திருப்புளிங்குடியில் கிடந்த பெருமானை வீற்று இருந்து சேவை சாதிக்க சொன்னபடி, ‘தடங்கொள் தாமரைக் கண் விழித்து நீயே எழுந்து உன் தாமரை மங்கையும் நீயும், இடங் கொள் மூவுலகும் தொழ விருந் தருளாய் திருப்புளிங்குடிக் கிடந்தானே‘ என்பதை நினைவில் கொள்ளலாம்.

மழைக்காலத்தில் மலை குகை ஒன்றில் (பேடையோடு ஒன்றாக) பொருந்திக் கிடந்து தூங்குகின்ற வீரியமாகிற சீர்மையை உடைய சிங்கம், உணர்ந்து எழுந்து, நெருப்புப் பொறி பரக்கும்படி கண்களை விழித்து பரிமளம் நிரம்பிய பிடரி மயிர்கள் எழும்படி எல்லாப் பக்கங்களிலும் அசைந்து தேகத்தை உதறி உடல் ஒன்றாகும்படி நிமிர்ந்து கர்ஜனை செய்து வெளியே புறப்பட்டு, வருகிறது போல, காயாம்பூ போல நிறத்தை உடைய நீ உன்னுடைய திருக்கோயிலில் இருந்து இவ்விடத்திலே எழுந்தருளி அழகிய அமைப்புடைய மேன்மை பெற்ற சிம்மாசனத்தின் மீது எழுந்தருளி இருந்து தாங்கள் மனதில் கொண்டு வந்த காரியத்தை விசாரித்து அருள வேண்டும் என்பது இந்த பாடலின் பொழிப்புரை.

“இந்த ஆய்ச்சியர்கள் ‘நப்பின்னை பிராட்டி சம்பந்தமே நமக்கு ஏற்றமாகும்’ என்று நல்லவர்கள் சொன்னதை மனதில் வைத்து இருந்தவர்கள். நம்மாழ்வாரும் (திருவாய்மொழி 1.7.6) ல் ‘பின்னை நெடும்பணைத் தோள்மகிழ் பீடுடை‘, என்று சொல்லி, அவளுடைய சம்பந்தமே ஒரு ஆனந்தமும் பெருமையும் உடையவன் என்கிறார். “சங்கம் இருப்பார்போல் வந்து தலைப்பெய்தோம்” என்று வேறு புகலற்று வந்து விழுந்தோம் என்று நம்மை முன்னே நிறுத்தி இப்படி சொல்கிறார்கள்” என்றதைக் கேட்டு, கண்ணன் தனக்கு தானே வருந்தி, உடனே உணர்ந்தருளி,

  • பெண்களே மிகவும் வருந்தி இவ்வளவு வரை வந்தீர்களே,
  • உங்கள் இருப்பிடம் தேடி வந்து உங்களை நோக்குகை அன்றோ எனக்குக் கடமை,
  • என் ஸ்வரூபத்தை நீங்கள் நன்கு உணர்வீர்கள் அன்றோ?
  • யாரேனும் பகைவர் கையில் அகப்பட்டு, வருத்தமுற்று, நம்மிடம் வந்து முறையிட்டால்,
  • நான் அவர்களின் வருத்த மிகுதியைக் கண்ணுற்று,
  • அவர்களுக்கு ஒரு வருத்தம் வருதற்கு முன்னமே வந்து அவர்களை காப்பாற்ற வேண்டிய கடமையை உடையவன். 
  • உங்களுக்கு வருத்தம் நேர்ந்ததும், முன்பே வரா விட்டாலும், வருத்தம் நேர்ந்தவுடனே ஆகிலும், வந்து உதவி இருக்கலாமே,
  • அப்படியும் வந்து உதவி செய்ய வில்லையே,
  • வருத்தமுற்ற நீங்களே உற்ற வருத்தத்தை என்னிடம் வந்து, முறையிட்டுக் கொள்ளும்வரை இருந்தேனே, என்று வருந்துகிறார்.

‘விபீஷணன், தான் ராவணன் தம்பி என்றும் ஆராயாமல் ஏற்றுக் கொள்வாயே என்று போற்றி பாடிய போது, இலங்கையில் ஏற்பட்ட துன்பங்களுக்கும் நாம் தானே காரணம், நீர் இருந்த இடத்திற்கு வந்து உனக்கு அருள் பாலிக்காமல் இருந்தது தன் குறை அன்றோ’ என்று இராமபிரான் சொன்னதை போலவே இதுவும் உள்ளது என்கிறார். திருவாய்மொழி (2.7.6) “எதிர்சூழல் புக்கெனைத்தோர்” என்று திரியும் அவனுக்கு இவை எல்லாம் தன் குறை என்று தோன்றுகிறது.

மேலும் ‘ஆண்கள் விஷயத்திலேயே இப்படி என்றால் பெண்கள் விஷயத்தில் உங்களை எப்படி இந்த இடம் வரை வைத்தேனே’ என்று வருந்துவதையும் சொல்கிறார். ‘என்னுடைய இக்குற்றத்தை நீங்கள் பொறுத்தருள வேணும், என்று அஞ்சி நடுங்கிக் கூறும் முறையை உடைய என் ஸ்வரூப ஸ்வபாவங்கள் உங்களுக்குத் தெரிந்தவையே அன்றோ’, என்று கூறுகிறார்.

‘இனி உங்கள் காரியத்தைக் குறைவின்றி தலைகட்டித் தருகின்றேன்: உங்களுக்கு நான் செய்ய வேண்டியது என்ன ?” என்று சொல்ல, அதனைக் கேட்ட ஆய்ச்சியர்கள், “பிரானே! எங்களுடைய மனோரதம் இப்படி ரஹஸ்யமாக விண்ணப்பம் செய்யக் கூடியது அன்று, பெரிய கோஷ்டியாக எழுந்து அருளி இருந்து கேட்டருளவேணும்” என்று புறப்பாடு ஆக வேண்டிய கிரமத்தை விண்ணப்பம் செய்யும் பாசுரம் இது.

ஆச்சான், அழகரிடம் ‘அகதிம் சரணாகதம்‘ என்று சொன்னபோது, ‘நம்மிராமனுஜரை உடைமையாய் வைத்து இருந்து நம் முன்னே இப்படி ‘அகதி’ என்று சொல்லக்கூடாது’ என்று அழகர் சொன்னதையும் இங்கே நினைவு கொள்ளலாம்.

மழை காலத்தில் எல்லா இடங்களும் ஒரு நீர்க்கோப்பாகும்படி மழை பெய்து, வழி எல்லாம் தூறாகி, போக்குவரத்துக்கு கடினமாக இருப்பதால் அரசர்களும் தத்தம் பகைவரிடத்துள்ள பகையையும் மறந்து, சேனைகளைத் திரட்டிக் கொண்டு போர் புரியப் புறப்படுவதைத் தவிர்த்து வெகுநாள் வரை அந்தபுரத்தில் கிடப்பர்.

சக்ரவர்த்தித் திருமகனும் (இராமனும்), பிராட்டியைப் பிரிந்த பின்னர் விரைவில் முயன்று அவளை வரவழைத்து கொள்ள வேண்டியிருந்தும், மழை காலத்தில் மஹாராஜர் (ஸுக்ரீவன்) வெளிப்புறப்பட முடியாது என்பதாலும், ஸுக்ரிவ மஹாராஜரைத் தாரையோடு கூடிக்கிடந்து உறங்க விட்டுத் தானும், இளைய பெருமாளுமாக (லக்ஷ்மணன்) மால்ய மலையில் பர்வதத்தில், மிக்க வருத்தத்துடனே அக்காலத்தைக் கழித்து வந்தார்கள். 

மாரி காலமானது பிரிந்தார் கூடும் காலமாகவும், கூடினார் தொடர்ந்து அனுபவிக்கும் காலமாகவும் இருக்கும். திருவிருத்தம் (7) ல் ‘பிரிந்தார் கொடுமை குழறு தண் பூங்காலம்‘ என்று பிரிந்துபோன நாயகனது கொடுந்தன்மையைக் கூறுகிற குளிர்ந்த அழகிய கார்காலத்தானோ என்றும், திருவிருத்தம் (19)ல் ‘அறையிடும் காலத்தும்‘ என்று எம்முன், அடக்கத்தை அழியாமற் பாதுகாத்துக்கொள்ள வல்லவர் யாவருள்ளார் என்று செருக்குடன் மேகங்கள் அறைகூவுகின்ற காலம் என்றும், திருவிருத்தம் 68)ல் கலந்தார் வரவெதிர் கொண்டு என்று கலந்து பிரிந்து சென்றவருடைய வருகையை முந்தி எதிர்பார்த்து கொண்டு இருக்கும் காலம் என்று சொல்கிறார்.

சிங்கங்களும் அந்த காலத்தில் மலைகளிலும் குகைகளில் கிடந்து உறங்கும் அந்த குகை வாசலில் களிறுகள் வந்தடைந்து பிளிறினாலும் அந்த ஓலி செவியில் விழாதபடி அவை கிடந்து உறங்கும் மாரிகாலம் முடிந்ததும், அவை உறக்கத்தை விட்டு எழுந்து, ‘நம் எல்லைக்குள் புகுந்தது யார், எனச் சீறி நோக்குவது போல், கண்களில் நெருப்புப் பொறி பறக்கும்படி விழித்து, நான்கு புறமும் நோக்கி, மயிர்கள் சுற்றும் அசைந்து, உறங்கும் போது அவயவங்களை முடக்கிக் கொண்டு கிடந்தமையால் உண்டான திமிர் தீரும்படி அவயங்களைத் தனித்தனியே உதறி, உலாவுகைக்கு உடல் உதவும்படி, உடலை ஒன்றாக நிமிர்த்து, சோம்பல் முறித்து, மற்ற துஷ்ட மிருகங்கள் கிடந்த இடத்தில் கிடந்தபடியே உயிர் மாய்ந்து முடியும்படி வீர கர்ஜனை பண்ணிப் பின்பு தன் இருப்பிடத்தை விட்டு சாதாரணமாக நடந்து வெளிப்புறப்படுவது இயல்பு.

அப்படியே கண்ணன் புறப்பட்டு சிங்காசனத்து ஏற எழுந்து அருளுமாறு வேண்டுகின்றனர். சிங்கம் மலை முழஞ்சிற் கிடந்து உறங்குவது போல், நீளா துங்க ஸ்தந கிரி தடீ ஸுப்தமாக என்பது போல, இந்த யசோதை இளம் சிங்கம் “நப்பின்னை கொங்கை மேல் வைத்துக் கிடந்த மலர் மார்பா!” என்று சொல்வதை கொள்ளலாம். சிங்கம் பிறக்கும்போதே, “மிருகராஜன்” என்றும் சிறப்புப் பெயரைப் பெற்றதால் சீரியசிங்கம் எனப்பட்டது. பெரியாழ்வார் திருமொழியில் (3.3.5) சிற்றாயர் சிங்கமே  என்று அழைக்கிறார். கண்ணனும் நரஸிம்ஹ அவதாரத்தில் சில பாகம் சிங்கமாகவும் சில பாகம் மானிடராகவும் மட்டும் இன்றி “யசோதை இளம் சிங்கம்” என்றபடி பூர்ண ஸிம்ஹமாக இருப்பதால், சீரிய என்னும் அடைமொழி கொடுக்கப் பட்டது.

அறிவுற்று என்ற சொல்லால், அடியோடு அறிவில்லாத ஒரு வஸ்துவுக்கு அறிவு குடி புகுந்தமை தோன்றும் சிங்கம், பேடையைக் கட்டிக் கொண்டு கிடந்து உறங்கும்போது, அறிவு இழந்திருக்கும். கண்ணனும் அடியார் காரியத்தைச் செய்ய நினைத்து உணர்வதற்கு முன்னர் அறிவற்றதொரு பொருளாகவே அன்றோ இருந்ததது என்று கூறுகிறார்.

தீவிழித்து என்பது கண்ணன் ஆய்ச்சியர்களின் கூக்குரலைக் கேட்டு உணர்ந்தவன் ஆதலால், “இவர்கள் இப்படி கூக்குரலிடும்படி இவர்களுக்கு யாரால் என்ன துன்பம் நேர்ந்ததோ” என்று உடனே திருக்கண்கள் சீற்றம் தோன்ற சிவக்கும் என்று கொள்ளலாம். நம்முடைய எல்லைக்குள் புகுந்தாரா என்று அனல் தெறிக்கும் கண்களோடு பார்த்ததை சொல்லலாம்; இது அடியாருடைய பகைவரைப் பற்றின சீற்றம் என்று கொள்ளலாம். கண்கள் சிவக்க பார்த்தால், பிரம்மா முதலானவர்கள் கூட நேருக்கு நேர் பார்க்க முடியாதது போல என்கிறார். முதல் திருவந்தாதியில் (23) ‘பூங்கோதையாள் வெருவ‘ என்று சொல்லி, பிராட்டி, என்ன நேரிடுமோ என்று அஞ்சும்படியாக மிக்க சீற்றத்துடனே இருக்கும் எம்பெருமான் என்றும், பெரிய திருமொழியில் (1.7.6) ‘வானோர் கலங்கியோட ‘ என்று இந்த நரசிங்கத் திருக்கோலமானது என்ன பயங்கரமான ரூபம் என்று தேவர்கள் அஞ்சி ஓடியதையும், பெரிய திருமொழியில் (5.8.3 ) ‘கொண்ட சீற்றம் ஓன்று உண்டு‘ என்று வருவித்துக் கொண்ட கோபம் என்று ஒன்று உண்டாய் உள்ளது என்றும், நான்முகன் திருவந்தாதியில் (21) எரிவட்டக் கண்கள் இவையா என்று கொள்ளிவட்டம் போலே உருண்டு சிவந்து ஜ்வலிக்கிற திருக்கண்கள் என்றும் மேற்கோள் காட்டி இதனை உரையாசிரியர் விளக்குகிறார்.

இவர்கள் எம்பெருமானை வேறு ஒரு பயனுக்கும் இன்றி இவன் இருந்தபடியே அப்படியே ஏற்று கொண்டவர்கள் ஆதலால், தீவிழித்து, சீற்றம், சீரிய சிங்கம், அறிவுற்று என்று இந்த எல்லாவற்றையும் போக்கியமாக கொண்டவர்கள் இவர்கள். திருவாய்மொழியில் (5.10.5) ‘செய்கை நைவிக்கும்’ என்று சொல்வது போல இவனின் எல்லா செய்கைகளும் இவர்கள் சிதில் அடைய செய்வதையும் சொல்கிறார்.

வேர்மயிர் பொங்க என்றது சிங்கத்தின் சடைகளில் ஜாதிக்கு ஏற்றதொரு பரிமளம் உண்டாவது இயல்பு. கிடந்துறங்கும்போது மயிர்கள் நெருக்குண்டு அமுங்கிக் கிடக்கும், உணர்ந்தவுடனே அவற்றை மலரச் செய்வதும் இயல்பு. அப்படி அவற்றை மலரச்செய்வதற்காக, எப்பாடும் போந்து உதறும் என்று சொல்கிறார். இது எல்லாப் பக்கங்களிலும் பெயர்ந்து அல்லது அசைந்து, சோம்பல் தீரும்படி நிமிர்ந்து என்ற பொருளில் வரும்.

முழங்கி என்று சொன்னது கிருஷ்ணன் எதிரிகளை தோற்கடித்து, அவர்களை மண் உண்ணும் படி செய்து, பெண்கள் எதிர் வந்து அழைப்பதை போல உள்ளது என்கிறார்.

புறப்பட்டு என்று சொன்னதற்கு பெண்களே நீங்கள் சிங்கம் போல புறப்பட்டு வரவேண்டும் என்று சொல்கிறீர்கள், நான் ராகவசிங்கம் போலவா, நரசிம்மாய் புறப்பட வேண்டுமோ என்று கேட்பது போல உள்ளது. அவர்களும் உன்னுடைய மேன்மைக்கும், சௌரியத்திற்கும், காம்பீரியத்திற்கும் உதாரணமாக சிம்மத்தை சொன்னோம் அன்றி, இரண்ய, இராவணர்கள் முன்னே இருந்தபடி நின்றதை சொல்லவில்லை என்கிறார்.

பூவை பூவண்ணா என்று சொன்னது, எதிரிகள் முன்னே நீ நிற்கும் போது, இந்த அழகு குலையாமல் நிற்பவன் அல்லவோ நீ என்கிறார்கள். சிம்மத்தால் உன்னுடைய வடிவழகையும் குளிர்த்தியையும் சௌகுமார்யத்தையும் ஏறிட்டு கொள்ள வேண்டுமோ என்றும் பிரிந்தார்க்கு பிழைக்க முடியாத வடிவழகு என்றும் சொல்வது புரியும்.

உன் கோவில் என்று முன்பு சொன்னது நந்தகோபன் கோவில், இப்போது சொல்வது இவன் கோவில். வாச பூமி ஒன்றாய் பொதுவாய் இருவருக்கும் இருப்பது சிறப்பு. ஒம் என்ற பிரணவம் போலவும் இதய கமலம் போலவும், திருவரங்கம் நம்மூர் (திருநெடும்தாண்டகம் 23) என்றும், எம்பெருமான் கோவில் என்றேர்க்கு இதுவன்றோ எழிலாலி (திருநெடுந்தாண்டகம் 24) என்றும் சொல்வது போல ஆகும்.

இங்ஙனேபோந்தருளி என்று பெருமாள் (இராமர்) சுமந்திரனை பற்றி கொண்டு, சீதை பின் தொடர புறப்பட்டதை போல நடக்காமல் எங்கள் முன்னே நடக்க வேண்டும் என்று சொல்கிறார்கள். இனி நடை அழகு கண்டு வாழ வேண்டும். பெரியாழ்வார் திருமொழியில் (3.6.4) கண்ணன் நடந்ததை கண்டு ஆடல் பாடல் மறந்ததும், தேவ கன்னிகைகள் அது கண்டு ஆடுவதும் உண்டு என்பதை ‘கானகம்படி உலாவி யுலாவிக்‘ சொல்லி உள்ளார்.  பெரிய திருமொழியில்(3.3.7) இவன் காலும் நடையும் கண்டு மாந்தர்கள் மடல் எடுப்பார்கள் என்பதை ‘ கைதொழப்போய் வயலாலி புகுவர்க்கொலோ’ என்று கூறுகிறார்.

சீரிய சிங்காதனத்திருந்த என்று சொன்னது, நாங்கள் சுற்றும் இருந்து, நீ சிங்காதனத்தில் இருந்தால் அன்றோ “பல்லாயிரம் தேவிமாருடனே எல்லோரும் சூழ்ந்த சிங்காதனத்து இருந்தானை கண்டார் உண்டு ” என்று பெரியாழ்வார் (பெரியாழ்வார் திருமொழி 4.1.6) சொன்ன பிரசித்தி உனக்கு உடையதாகும். இருந்த என்று சொன்னது காவல் கட்டு இன்றி, நில் என்று சொல்வார் இல்லாமல், இருந்து நினத்தபடி அனுபவிக்கலாம் என்று சொல்வதாகும். திருவாய்மொழி (9.2.9)ல் ‘கண்ணிணை குளிரப் புதுமலராகத்தைப் பருக‘ சொன்னபடி கண்கள் குளிரும்படி புதிய மலர்போலே ஸுகுமாரராய் இருக்கிற உன் திருமேனியை அனுபவிப்பத்தை சொல்கிறார். படுக்கையில் இருந்து வந்த வார்த்தை வேண்டாம், சிங்காதனத்தில் இருந்து வந்த வார்த்தை வேண்டும் என்கிறார். கடற்கரையில் பெருமாள் (விபிஷணனுக்கு) சொன்ன வார்த்தை, தேர்தட்டில் கண்ணன் (அர்ச்சுனனுக்கு) சொன்ன வார்த்தை போல அமோகமாக இருக்கும் வார்த்தைகள் வேண்டும் என்கிறார். பொய்யை சொல்லும் கண்ணனை பெண்களுக்கு பிடிக்கும் என்றாலும் இந்த ஆசனத்தில் இருந்து பொய் சொல்ல முடியாதே என்கிறார்கள். திருவாய்மொழியில் (6.5.5) ‘பிரான் இருந்தமை காட்டினீர்‘ என்று சொன்னதை இங்கு சொல்கிறார்கள்.

யாம் வந்த காரியம்” என்று சொன்னது, இப்போதே இவர்கள் வந்த காரியம் இன்னது என்று சொல்லாமல் செல்வது ஏன் எனில், பரதன் தன்னை ஒத்த அடியவர்களை கூட்டி வந்து அவன் திருவடிகளில் விழுந்து அவசரத்தில் கேட்டுக்கொண்டால் திரும்பி வந்து விடுவான் என்று நினைத்து காரியம் செய்கையில் அவசரமே இல்லாமல் அணுக முடியாதபடி, ஸ்வதந்திரனாகிய இராமன், திருவடி நிலைகளை கொடுத்து திருப்பி அனுப்பியது போல, இவன் மறுத்தாலும் மறுக்கக் கூடும் என்று அஞ்சி, சற்று நேரம் சென்று விண்ணப்பம் செய்வோம் என்று இருக்கிறார்கள். அதாவது “சிற்றஞ்சிறுகாலே” என்ற பாட்டில் விண்ணப்பம் செய்கிறார்கள். “உன் தன்னோடு உற்றோமே யாவோம் உனக்கே நாம் ஆட் செய்வோம், மற்றை நம் காமங்கள் மாற்று” என்றது பின்பு வருகிறது.

ஆராய்ந்து அருள என்று சொன்னது, நாம் போகும் இடம் தேடி, காலம் பார்த்து எல்லோரையும் எழுப்பி ஏன் செய்தார்கள், நம் குறையோ என்று ஆராய்ந்து திருவுள்ளம் கிருபை செய்ய வேண்டும் என்பது.

Leave a comment