திவ்ய பிரபந்தம்

Home

T22 அம்கண் மா ஞாலத்து

திருப்பாவை 22

சென்ற பாட்டில், “மாற்றாருனருக்கு வலிதொலைந்து” என்று சொன்னதால் தாங்கள் போக்கற்று வந்ததை கூறினார்கள். “இன்னமும் இவர்களுடைய உள் மனத்தில் உள்ளதை அறிய வேண்டும்” என்று கண்ணன் பேசாதே இருக்க, அது கண்ட ஆய்ச்சியர்கள், “பிரானே! இப்படியோ இன்னும் உன் திருவுள்ளத்தில் ஓடுவது? எங்களுக்கு நீ தான் புகல் ஆகாமல் போனாலும் வேறொரு புகலைத் தேடி ஓடாதபடி நின்ற எங்களை நீ கடாக்ஷித்து அருள வேண்டும் ” என்று பிரார்த்திக்கும் பாசுரம். தங்கள் அங்கீகாரம் பெற்றால் திரும்ப செல்ல வேண்டாம் என்று விபீஷணன் சொல்லியது போல, இந்த ஆச்சியர்களும் இவன் அங்கீகாரம் பெற்றால், பிறந்த வீட்டுக்கு செல்ல வேண்டாம் என்கிறார்கள்.

அழகியதாய், பெரியதாக உள்ள, பூமியில் (ஆண்டு வரும்) அரசர்கள், (தங்களுடைய) அகங்காரம் குலைந்து வந்து, உன் சிங்காசனத்தின் கீழே, திரளாகக் கூடி இருப்பதைப் போல் (நாங்களும் நீ இருக்கும் இடம்) வந்து அணுகினோம். கிண்கிணியின் வாய்பவளே பாதி மலர்ந்த தாமரைப் பூ போல, சிவந்து இருக்கும் திருக்கங்கள் சிறிது சிறிதாக (அடியவர்களான) எங்கள் மேல் விழிக்க மாட்டாயோ ? சந்திரனும் சூரியனும் உதித்ததைப் போல் அழகிய கண்கள் இரண்டாலும் எங்களை கடாக்ஷித்து அருள்வாய் ஆகில் எங்களிடம் உள்ள தூக்கம் அழிந்து விடும் என்பது இந்த பாடலின் பொழிப்புரை.

அம்கண் மா ஞாலத்து அரசர் என்று சொல்வது, இங்கு வந்தவரில் உன்னில் குறைந்தவர் யாராவது உண்டோ. நீ ஈஸ்வரன் என்று இருப்பது போல நாங்களும் தனித் தனியே ஈஸ்வரனே கதி என்று கிடப்பவர்கள் அன்றோ. நாங்களும் எங்களுடைய ஸ்வரூப அபிமானங்களை விட்டு தானே இங்கே வந்தோம் என்கிறார்கள். ‘அமைவுடை அமரரும் யாவையும் யாவரும் தானாம், அமைவுடை நாரணன் ‘ (திருவாய்மொழி 1.3.3) சொன்னது போல, ‘மகா பிரீதிவியில் பரப்பெல்லாம் தன்னது ‘ என்ற பதத்தை அனுக்கிரகித்த பௌண்டரீக வாசுதேவன் போல தங்கள் நிலங்களில் அபிமானம் கொண்டதை சொல்கிறார்.

அம் என்றால் அழகு, கண் என்றால் இடம், அழகான இடங்கள் நிறைந்த தங்கள் இடம். இந்த உலகம் முழுவதுமே, தங்களது என்று அகங்காரத்துடன் இருக்கும் அரசர்கள், தங்கள் அபிமானித்து இருந்த அஹங்காரத்தை முழுவதும் அழித்து விட்டு, தங்கள் பக்கம் ஒன்றும் இல்லாமையை அறிவித்து, நீயே தனக்கு வேண்டும் என்று அவன் காலில் விழுவதற்கு, எங்கு திருட்டு நடந்தாலும், அரசன் வீட்டு வாசலில் வந்து விழுவது போல, ஸர்வ ஸ்வாமியான அவனுடைய பள்ளிக் கட்டிலின் கீழ் வந்து புகுந்து கூட்டம் கூட்டமாக நாங்களும் இங்கு வந்து புகுந்தோம் என்கிறார்கள்.

அபிமான பங்கமாய் என்று சொல்வது, “ஒரு நாயகமாய் ஓட உலகுடன் ஆண்டவர், கருநாய் கவர்ந்த காலர் சிதைகிய பானையர், பெருநாடு காண இம்மையிலே பிச்சை தாங் கொள்வர்” (திருவாய்மொழி 4.1.1) என்று நம்மாழ்வார் அருளிச் செய்தபடி ராஜ்யம் முதலியவற்றை இழந்து, அஹங்காரம் அடங்கப் பெற்றனர். கானகம்போய் (திருவாய்மொழி 4.1.2)ல் சொன்னது போல காடு சென்று திரியாதே, உஜ்ஜீவன ஹேதுவான இடமான ‘நின் பள்ளிக்கட்டின் கீழே‘ வந்தார்கள் என்கிறார்.

சங்கம் இருப்பார் போல என்று சொன்னது, அந்த ராஜ்ஜியங்களை கொடுத்து விட்டு செல்லுங்கள் என்று சொன்னாலும், பழைய வாழ்க்கையை நினைத்து, அவை வேண்டாம் என்று உங்கள் சிங்காதனாத்தின் கீழ் இருப்பார்கள்.

ஆய்ச்சியர்கள் “வந்து தலைப் பெய்தோம்” என்றதைக் கேட்ட கண்ணன் “பெண்களே, எல்லாம் சுமுகமாக முடிந்ததா, இனி ஒரு குறையும் இல்லையே?” என்று சொல்ல “உன்னுடைய கடாக்ஷம்பெற நினைத்தன்றோ நாங்கள் வந்தது’ அதனை பெறவேண்டாவோ?” என்கிறார்கள். ‘நணுகினம் நாமே‘ (திருவாய்மொழி 1.1.3) என்பது போலச் சொல்கிறார்கள். ‘உன்னை எங்கு தலைப்பெய்வன்‘ (திருவாய்மொழி 7.6.3) என்பதையும் உரையாசிரியர் குறிப்பிட்டு உள்ளார்.

ஒரே காலத்தில் ஞாயிறும் திங்களும் உதித்தால் தாமரை மலர் பாதி மூடியும், பாதி திறந்தும் என்று கொண்டு, கண்ணனுடைய திருக்கண்களுக்கு அந்த நிலைமையை வேண்டுகின்றனர். கண்ணனுடைய திருக்கண்கள். சேதனருடைய குற்றம் குறைகளை நினைத்துப் பாதி மூடியும், அவர்களுடைய கூக்குரலைக் கேட்டுப் பாதி திறந்தும் இருக்கும் ஆதலால், அதற்கு இந்த உவமை கூறியது மிகப் பொருந்தும்.

முதலிலேயே பூர்ண கடாக்ஷம் செய்து அருளினால் தாங்கப் முடியாதென்று, சிறிது சிறிதாக கடாக்ஷிக்க வேணும் என்கிறார்கள்.

கிங்கிணிவாய்ச் செய்த” என்று சொல்வதால், கிண் கிணி வாய் போன்ற என்றும், பாதி பாகம் மூடினவாறாகவும், பாதி பாகம் திறந்தவாறாகவும் செய்யப் படுகின்ற ஒரு ஆபரண விசேஷம் என்றும் பொருளில் வரும்.

தாமரை பூ போல் என்று சொன்னதற்கு திருவாய்மொழி (3.1.2) ல் சொன்ன பட்டுரையாய்ப் புற்கென்றே காட்டுமால் பரஞ்சோதீ என்பதை மேற்கோள் காட்டி, தாமரை முதலியவற்றை உவமையாகக் கூறுதல் தகாதென்ற தெரிந்தும் அவற்றை சொல்வதை தவிர தனக்கு வேறு வழி இல்லை என்றும், எம்பெருமானை வருணித்தே பொழுது போக்க வேண்டியிருக்கிறது என்றும், வருணிப்பதென்று வாயெடுத்தால் தாமரை முதலியவற்றைப் பேசியேயாக வேண்டிய வருகிறது என்றும் சொல்வதை இங்கே உரையாயசிரியர் குறிப்பிட்டு உள்ளார்.

இனி எம்மைக் கடாக்ஷித்து அருளி விட்டால், இன்றளவும் உன்னைப் பிரிந்திருந்ததற்கு அடியான பாவங்கள் முழுவதும் ஒழிந்து விடும் என்கிறார்கள். ‘இள ஆய்ச்சியர்க் கண்ணினுள், விடவே செய்து விழிக்கும் பிரானையே‘ என்று திருவாய்மொழி (1.7.5)ல் சொல்லியபடி இவன் விழிப்பது அங்கேயே அன்றோ.

இரண்டும் கொண்டு என்று சொல்வதற்கு இரண்டு கண்களிலும் வேறு வேறு விதமான அர்த்தங்களைக் கொண்டு என்கிறார். ‘சீற்றத் தோடருள் பெற்றவன்‘ (திருவாய்மொழி 3.6.6) என்று சொல்லியபோது இரணியனிடம் சீற்றமும் பிரகலாதனிடம் அருளும் செய்யும் கண்கள் என்பது ஒரு உதாரணம்.

Leave a comment