ஏற்ற கலங்கள் எதிர் பொங்கி மீது அளிப்ப* மாற்றாதே பால் சொரியும் வள்ளல் பெரும் பசுக்கள்* ஆற்றப் படைத்தான் மகனே அறிவுறாய்* ஊற்றம் உடையாய் பெரியாய் உலகினில்* தோற்றமாய் நின்ற சுடரே துயில் எழாய்* மாற்றார் உனக்கு வலி தொலைந்து உன் வாசற் கண்* ஆற்றாது வந்து உன் அடி பணியுமா போலே* போற்றியாம் வந்தோம் புகழ்ந்தேலோர் எம்பாவாய்.
திருப்பாவை 21
சென்ற பாட்டில் நப்பின்னைப் பிராட்டியை எழுப்பின பின்னர், அவள் உணர்ந்து எழுந்து வந்து “தோழிகளே, நான் உங்களில் ஒருத்தியன்றோ? உங்கள் காரியத்தைக் குறையற முடிக்கிறேன்’ நீங்கள் இறையும் வருந்த வேண்டாம்’ நாமெல்லாரும் கூடிக் கண்ணனின் குண நலன்களில் தோற்றார் தோற்றபடியே சொல்லி, இளையபெருமாளை போல, குணங்களுக்கு தோற்று வந்தோம் என்று சொல்லி, வேண்டி நப்பின்னைப் பிராட்டியுமும் உட்பட அனைவருமாகக் கூடிக் கண்ணன் வீரத்தைச் சொல்லி ஏத்தி, அவனை உணர்த்தும் பாசுரம் இது.
(தானாகச் சுரக்கும்) பாலை ஏற்றுக் கொள்ள இடம் பட்ட பாத்திரங்கள் எல்லாம் எதிரே பொங்கி மேலே வழியும்படியாக இடைவிடாமல் பாலைப் பொழியும்படியான வன்மைஉடைய பெரிய பசுக்களை விசேஷமாக உடையவரான நந்தகோபருக்குப் பிள்ளையானவனே, திருப்பள்ளி உணரவேணும் ; (மேலான பிரமாணமாகிற வேதத்தில் சொல்லப் படுகையாகிற) திண்மையை உடையவனே, (அந்த வேதத்தாலும் அறியப்படாத) பெருமை உடையவனே, இவ்வுலகத்தில் (சகல சேதனருடைய கண்ணுக்கும்) தோன்றி நின்ற தேஜஸ்வரூபியானவனே, துயில் உணர்வாயாக ; உன்னுடைய எதிர்கள் உன்னிடத்தில் தங்கள் வலி மாண்டு போய் உன் திருமாளிகை வாசலிலே கதி அற்று வந்து, உன் திருவடிகளை வணங்கிக் கிடப்பது போல நாங்கள் உன்னை துதித்து உனக்கு மங்களாசாசனம் பண்ணிக்கொண்டு உன் திருமாளிகை வாசலில் வந்து அடைந்தோம் என்பது இந்த பாடலின் பொழிப்புரை.
முதலில் நந்தகோபருடைய செல்வத்தைப் புகழ்கின்றனர். பதினேழாம் பாட்டிலும் பதினெட்டாம் பாட்டிலும் நந்தகோபருடைய அறநெறித் தலைமையும், தோள்வலி வீரமும் புகழப்பட்டன. இந்த பாட்டில், அவருடைய கறவைச் செல்வத்தின் சீர்மை கூறப்படுகின்றது.
இந்த ஆச்சியர்கள் பலகாலும் கண்ணனை அழைக்கும் போது “நந்த கோபன் மகனே” என்று அழைத்ததற்கு காரணம், அவன் இன்னும் பரமபதத்தில் இருப்பதாகவும், திருபாற்கடலில் இருப்பதாகவும், சக்கரவர்த்தி திருமகனாகவும் இருப்பதாகவும், நினைத்தாரே தவிர, நந்தகோபர் மகனாக இருப்பதை உணரவில்லை என்கிறார்கள். நீ இந்த திருவாய்ப்பாடியில் நந்தகோபர்க்குப் பிள்ளையாய் பிறந்தது, இப்படி கிடந்து உறங்கவோ, எங்கள் குறையைத் தீர்க்கவன்றோ, நீ அறிவு ஓன்றும் இல்லாத ஆய்க்குலத்தில் பிறந்தது ஆன பின்பு, பிறந்த காரியத்தை நோக்க வேண்டாவோ என்று சொல்வதை கூறும்.
“ஏற்ற கலங்கள்” என்ற சொற்தொடரால், கலம் இடுவாருடைய குறையே அன்றி, இட்ட கலங்களைப் பசுக்கள் நிறைக்கத் தட்டில்லை என்பதும், சிறிய கலம் பெரிய கலம் என்னும் வாசியின்றிக் கடலை மடுத்தாலும் நிறைக்க பெற்றுவிடும் என்பது விளங்கும்.
எதிர்பொங்கி மீது அளிப்ப என்று சொல்வது, ஒரு கால் முலையைத் தொட்டு விட்டாலும் முலைக் கண்ணின் பெருமையாலே ஒரு பீறிலே கலங்கள் நிறைந்து பால் வழிந்தோடாது நின்றாலும், முலைக்கடுப்பாலே மேன்மேலும் சொரியுமாதலால் எதிர்பொங்கி வரும்.
“மாற்றாதே பால்சொரியும்” என்ற சொற்தொடரால், இட்ட கலங்கள் நிரம்பியதை தொடர்ந்து, இனிக் கலம் இடுவாரில்லை என்று பால் சொரிவதைப் பசுக்கள் நிறுத்தாது என்று சொல்கிறார். ஸ்ரீ விஷ்ணு புராணத்தில் ஸ்ரீ பாராசர மஹர்ஷியை மைத்ரேய பகவான் தண்டனிட்டு தத்துவங்களை அருளிச்செய்யவேணும்’ எனப் பிரார்த்திக்க, அப்படியே நல்ல அர்த்தங்களை, மைத்ரேயருடைய பிரார்த்தனை இன்றியே அர்த்தங்களை உபதேசித்ததை போல இந்த பசுக்களும் தமது முலைக் கடுப்பினாலும் மேலும் மேலும் பாலைச் சொரியும் என்கிறார்.
திருவாய்மொழியில் (3.9 2)ல் ‘வேண்டிற்று எல்லாம் தரும் கோதில், என்வள்ளல் மணிவண்ணன்‘ என்று கண்ணனை சொன்னது போல இங்கே வள்ளல் பெரும் பசுக்கள் என்கிறார். கண்ணன் தொட்டு வளர்த்த பசுக்கள் ஆனதால் அவை அவனைப் போலவே பெருத்து இருந்தன என்கிறார்.
பெரிய திருமொழியில் (6.9.2) ‘கழியாரும் கனசங்கம் கலந்தெங்கும் நிறைந்தேறி, வழியார முத்தீன்று வளங்கொடுக்கும் திருநறையூர்’ என்று சொன்னது போல, இங்கு பசுக்களின் எண்ணிக்கையும் அவற்றின் வளர்த்திக்கும் சொன்ன வார்த்தைகள், ‘ ஆற்றப் படைத்தான்‘. ஈறில வண்புகழ் நாரணன்‘ என்று திருவாய்மொழியில் (1.2.10) சொன்னது போல, முடிவில்லாத திருக்கல்யாண குணங்களையும் உடையனான நாராயணன் என்பதை இங்கு நினைவு படுத்துகிறார்.
“மகனே! அறிவுறாய்” என்ற சொல் தொடரால், நீ உன் தந்தையாருடைய செல்வத்தை நினைத்தால், அந்த செல்வச் செருக்காலே உணர்ந்து எழுந்திருக்க, ப்ராப்தி இல்லையாம், அவனுக்கு மகனாகப் பிறந்தபடியை நினைத்தால் விரைவில் அறிவுற ப்ராப்தம் என்று சொல்கிறார். அறிவுறாய் என்று இவர்கள் எழுப்ப வேண்டும்படி, அவன் உள்ளே தனக்கு இத்தனை பெண்கள் கைப்பட்டார்கள் என்றும், இனி இத்தனை பெண்களைக் கைப்படுத்த வேண்டும் என்றும் ஆராய்ந்து கொண்டு கிடக்கிறானாம்.
இவர்கள் இப்படி புகழ்ந்து உணர்த்துவதைக் கேட்ட கண்ணன், “இந்த புகழ்ச்சி எதற்காக, இப்படிப்பட்ட கறவைச் செல்வம் இந்த திருவாய்ப்பாடியில் யாருக்கு இல்லை, இது நமக்கு ஓரு ஏற்றமோ,” என நினைத்து வாய் திறக்காமல் இருந்தான். இவர்கள் மீண்டும் ஊற்றமுடையாய் என்று கூறி உணர்த்துகின்றனர்.
ஊற்றமுடையாய் என்பதற்கு இருவகையாகப் பொருள் கூறலாம். ஊற்றம் என்பது திண்மையாய், என்ற பொருளில், வேதத்திற்குப் பொருளாக இருக்கிற திண்மையை உடையவனே என்றும், அடியாரை நோக்குவதில் ஊக்கமுடையவனே என்றும் இரண்டு அர்த்தங்களில் வரும். பெரியாழ்வார் திருமொழியில் (4.9.2)ல் சொன்னது போல தாமரையாள் சிதகு உரைத்தாலும் எமது அடியார் அது செய்யார் என்று அடியவர்கள் விஷயத்தில் உறுதியாய் இருப்பதை நினைவில் கொள்ளலாம்.
அடுத்து பெரியாய் என்று அழைத்து, அளவற்ற வேதங்கள் எல்லாம் கூடிக் கூறியபோதும் எல்லை இல்லாத பெருமையை உடையவனே என்று கூறினார்கள். அப்படிப்பட்ட பெருமைகள் ஓலையில் / புத்தகங்களில் மட்டும் பார்க்கும்படி இல்லாமல், அவற்றை அனைவர்க்கும் நன்கு வெளிப்படுத்தியவாறு கூறும் “உலகினில் தோற்றமாய் நின்ற சுடரே” என்று அடுத்து அழைத்தார்கள். மேன்மைக்கு எல்லை காண முடியாதபடி இருக்கும் என்று ஓலைப் புறத்தில் கேட்டு போகலாம்படி இல்லாமல் எல்லோரும் காணும்படி இருப்பவன் என்கிறார். திருவாய்மொழியில் (1.3.2) ‘எளிவரும் இயல்வினன் நிலைவரம் பலபல பிறப்பாய், ஒளி வரு முழு நலம்‘ சொன்னது போல ஒரு நிலையும் ஒரு நியதியும் இல்லாது பலவகைப் பிறப்பையுடையனாய், கல்யாண குணங்களெல்லாம் ஒளி மல்கும் படியான ஸௌலப்யத்தையே இயல்வாக உடையவன் என்கிறார். மேலும் ‘ஐவர்க்கு அருள் செய்து நின்று, பார் மல்கு சேனை அவித்த பரஞ் சுடரை‘ (திருவாய்மொழி 3.5.7) என்று இருப்பவன் ஆயிற்றே.
துயிலெழாய் என்று சொல்வது, நீ இப்போது துயில் எழாவிட்டால், நீ பிறந்து படைத்த செல்வமும், குணங்களும் எல்லாம் மழுங்கிப் போய் விடும்’ என்றும், மிகவும் அருமைப்பட்டு அவற்றை ஸம்பாதித்த நீ, ஒரு நொடிப்பொழுதில் எளிதாக அவற்றை இழக்காமல், நின்று, நிலைத்து இருக்கும்படி திருப்பள்ளி உணர்ந்து அருளாய் என்று கூறுகிறார்கள்.
இவர்கள் இப்படி வேண்டக் கேட்ட கண்ணன், “ஆய்ச்சியர்களே, நாம் எழுந்திருக்கிறோம்’ நீங்கள் வந்ததை ஒரு பாசுரமிட்டுச் சொல்லுங்கள்” என்று நியமிக்க, இவர்கள் தாங்கள் வந்ததை ஒரு உட்காரணத்துடன் கூறுகிறார்கள்.
வலிதொலைந்து என்று சொன்னது, வணங்கா முடிகளாக இருப்பதற்கு காரணமான முரட்டுத்தனத்தை முடித்துக் கொள்ளுவது. ஆற்றாது வந்து என்று சொன்னது இராமபிரான் ப்ரஹமாஸ்த்ரம் தொடுத்து விடும்படி பிராட்டி விஷயத்தில் மஹா அபசாரப்பட்டு, எத்திசையும் உழன்றோடி, எங்கும் புகலற்று, இளைத்து விழுந்த காகம் போல் என்று கொள்ளலாம்.
‘ஆற்றது வந்தோம்‘ என்று சொன்னது, அம்பு நற் கொலையாக கொல்லும்; அவனுடைய குணம் உயிர் கொலையாக கொல்லும் என்பது போல வந்தோம். திருவாய்மொழி (8.1.8)ல் ‘வல்வினையேனை ஈர்கின்ற, குணங்களை யுடையாய்‘ என்று சொன்னது போல பாவியேனை இருபிளவாக்குகின்ற திருக்குணங்களை யுடையவனே என்கிறார். திருவாய்மொழி (6.2.9) (உன் திருஅடி யால்அழித்தாய்) மற்றும் ‘நின் தன்னால் நலிவே படுவோமென்றும்’ (திருவாய்மொழி 6.2.10) என்று சொன்னபடி உள்ளது இவர்கள் வந்தது என்கிறார்.
யாம் வந்தோம் என்று சொல்வது, சத்துருக்கள் உன்னுடைய அம்புக்குத் தோற்று. அவை பிடரியைப் பிடித்துத் தள்ளத் தள்ள வந்தாற் போலே, நாங்கள் உன்னுடைய ஸௌந்தரிய ஸௌசீல்யாதி குணங்களை பிடித்திழுக்க வந்தோம் என்று சொல்கிறார்கள்.
Leave a comment