முப்பத்து மூவர் அமரர்க்கு முன் சென்று* கப்பம் தவிர்க்கும் கலியே துயில் எழாய்* செப்பம் உடையாய் திறல் உடையாய் செற்றார்க்கு* வெப்பம் கொடுக்கும் விமலா துயில் எழாய்* செப்பென்ன மென்முலைச் செவ்வாய்ச் சிறு மருங்குல்* நப்பின்னை நங்காய் திருவே துயில் எழாய்* உக்கமும் தட்டொளியும் தந்து உன் மணாளனை* இப்போதே எம்மை நீராட்டேலோர் எம்பாவாய்
திருப்பாவை 20
சென்ற பாட்டில் “தத்துவமன்று தகவு” என்று ஆய்ச்சியர்கள், தங்கள் ஆற்றாமையினால் வருத்தம் தோன்ற சில குற்றம் கூறினாலும் எம்பெருமானுடைய திருவுள்ளம் அறிந்து, ஏற்ற அவகாசத்தில் விண்ணப்பம் செய்வோம் என்று எண்ணி இருந்தார்கள். நப்பின்னை பேசாதே பள்ளி கொண்டு இருந்தாள். அவளை பற்றினாலும் காரியம் செய்யும் அவன், இவள் தன்னையும் பேச விடாமல் இருந்ததை கண்டு, பேசாது கிடந்தான். அவளோடு பரவசப்பட்டுள்ள கண்ணனையும் “நப்பின்னைப் பிராட்டியை குறை கூறுகின்ற பெண்களுக்கு நாம் முகம் காட்ட வேண்டாம்” என்று சீற்றமுற்றிருக்கக் கூடும் என்று சந்தேகித்த ஆய்ச்சியர்கள், மீண்டும் கண்ணனை நோக்கி, அவனுடைய பெருமைகள் பலவற்றையும் பேசித் துயிலெழ வேண்டினார்கள். அவன் வாய் திறவாது இருக்க, இந்த ஆய்ச்சியர்கள், நப்பின்னையின் பெருமைகளைப் பேசினோமாகில் இவனுடைய சீற்றம் ஒருவாறு தணியும் என நினைத்து அவளுடைய ஆத்ம குணங்களையும் தேஹ குணங்களையும் கூறி ஏத்தி, “நங்காய்! எங்கள் மனோரதத்தை முடித்து அருள வேண்டும் என்று வேண்டியதை இந்த பாடல் சொல்கிறது.
முப்பத்து முக்கோடி தேவர்களுக்கு முன்னமே எழுந்தருளி அவர்களுடைய நடுக்கத்தை போக்கி அருள வல்ல பலத்தையுடைய கண்ணனே, படுக்கையில் இருந்தும் எழுந்திராய், (அடியவர்களை காக்கும் விஷயத்தில்) நேர்மை உடையவனே, (அடியவர்களின் விரோதிகளை) அழிக்கும் விஷயத்தில் பலத்தை உடையவனே, எதிரிகளுக்கு துக்கத்தை தரும்படியான பரிசுத்தமானவனே, துயில் எழுவாய்; பொற்கலசம் போன்ற மிருதுவான முலைகளையும் சிவந்த வாயையும் உடைய நுண்ணிய இடையையும் உடைய நப்பின்னை பிராட்டியே, பெரிய பிராட்டியை உத்தவளே, துயில் எழாய்; (நோன்புக்கு உபகரணங்களான) விசிறியையும், கண்ணாடியையும் கொடுத்து உன நாதனான அவனையும் எங்களையும் இப்போதே நீராட்டகடவாய் என்பது இந்த பாடலின் பொழிப்புரை.
முப்பத்து மூவர் அமரர் என்று சொன்னது, அஷ்ட வஸுக்கள் (8), ஏகாதச ருத்ரர்(11), த்வாதச ஆதித்யர்(12), அச்விநி தேவதைகள் இருவர்(2) , ஆக அமரர் முப்பத்து மூவராய், முக்கியமானவர்களைக் கூறியது. இது இவர்கள் தொடங்கி, பிரம்மா வரையில் நடுவில் உள்ள அனைவரையும் கூறியது போல ஆகும்.
இவர்கள் கண்ணன் அவதரித்த காலம் தொட்டு, வருவதும் மறைவதும், ஆயர்பாடி முழுவதும் திரிந்து, ஆச்சியர்கள் பின்னால் ஓதுங்குவதாலும், இவர்கள் காரியங்களை கண்ணனே செய்து முடிப்பதாலும், அதனை இந்த ஆச்சியர்கள் அறிந்து இருப்பதாலும் இதனை சொல்கிறார்கள். இப்படி தேவ காரியம் செய்யும் போது அவனக்கு ஒரு தீங்கு வருமோ என்றால், ‘செப்பமுடையாய்‘ என்று சொல்லி, தன்னையும் காப்பாற்றிக் கொள்ளும் திறமை உடையவன் என்கிறார்கள்.
- நீ காத்தருள ஏதாவது நியதி வேண்டுமோ,
- ஐந்து லக்ஷம்குடி பெண்களுக்கு நோவுபட்டால் உதவக்கூடாதோ,
- ஆண்களும் பிரபலர்களுக்கு மட்டும் தான் உதவுவாயா,
- பெண்களுக்கும் அபலைகளுக்கும் உதவ மாட்டாயா,
- அகதிகளாய், அனன்ய பிரயோஜனர்களாய் இருப்பவர்களுக்கு உதவக் கூடாதா,
- உன்னை எழுப்பி அம்புக்கு இலக்கு ஆக்குபவர்களை தான் காப்பாற்றுவாயா, (இது ‘நீள் நகர் நீள் எரி வைத்தருளாய்‘ (திருவிருத்தம் 92) ல் சொல்லியதற்கு ஒப்பாகும்)
- உன் அழகுக்கு ஆசை படுபவர்களுக்கு உதவ மாட்டாயா,
- சக்தி உடையவர்களுக்கு தான் உதவுவாயா,
- சக்தி இல்லாத எங்களை போன்றவர்களுக்கு உதவ மாட்டாயா,
- நோவு வருவதற்கு முன்பு காரியம் செய்ய வல்ல நீ, நோவு கண்ட எங்களுக்கு உதவக் கூடாதா,
- உன் நோக்கும் உன் முகமும் ஜீவனமாக கொண்ட எங்களுக்கு உதவக் கூடாதா,
- உன் வாசலில் நாங்கள் வருகை குற்றம் அல்லது மிகை என்று இருக்கிறாயோ என்கிறார்கள்.
‘எழுதுமென்னாமிது மிகையாதலில்‘ (திருவாய்மொழி 9.3.9) என்று நம்மாழ்வார் சொன்னது, ‘இவளை,உன் மனத்தால் என் நினைந்து இருந்தாய் இடவெந்தை யெந்தை பிரானே‘ (பெரிய திருமொழி 2.7.1) என்று சொன்னது, தாடாளன் வார்த்தையென்னே (நாச்சியார் திருமொழி 8.2)ல் சொன்னது, ‘திருமாலும் போந்தானே‘ (நாச்சியார் திருமொழி 8.1)ல் சொன்னது இவற்றை உரையாசிரியர் குறிப்பிட்டு உள்ளார்.
இப்போது இந்த ஆய்ச்சியர்கள் கண்ணனை நோக்கி, “முப்பத்து மூவரான தேவர்களைக் காத்தருளினவனே!” என அழைத்ததற்கு இருவகைக் கருத்தாகும்.
ஆண் புலிகளாயும், மிக்க மிடுக்கராயும், சாவாதவர்களாயும், உன் வடிவழகின் அநுபவத்தையே போக்யமாகக் கொள்ளாமல், அம்ருதத்தைப் போக்யமாக உகக்குமவர்களாயும், நோவுபட்டால் ஆற்ற வல்லவர்களாய் உள்ள தேவர்களுக்கோ நீ உதவி புரிய வேண்டுவது, வலியற்ற பெண் பிள்ளைகளாயும், “உனக்கே நாமாட் செய்வோம்” என்று உன் திறத்திற்கு கைங்கரியத்தையே புருஷார்த்தமாக உடையோமாயும், “ஏற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும் உன்றன்னோடு உற்றோமே யாவோம்” என்று கால தத்துவம் உள்ளதனையும் உனக்கு அணுக்கராயும், “அடிபோற்றி! திறல் போற்றி!, புகழ் போற்றி! கழல் போற்றி! குணம் போற்றி!, கையில் வேல் போற்றி!” என்று இப்படி மங்களாசாஸநம் பண்ணுகையையே ஸ்வரூபமாக உடையோமாயும், “உண்ணுஞ் சோறு பருகுநீர் தின்னும் வெற்றிலையும் எல்லாம் கண்ணன்” என்றிருப்பவர்களுமான எங்களைக் காத்தருள்வதன்றோ உனக்குப் பெருமையாம் என வினயம் தோன்ற கூறுதல், ஓர் கருத்தாம்.
இப்படி அளவற்ற ஆண் புலிகளைக் காத்து நீ படைத்த புகழ் அடங்கலும், இன்று நீ எம்மை நோக்காத மாத்திரத்தினால் இழக்கபட்டதே என மிடுக்காகக் கூறுதலும் ஓர் கருத்தாம்.
அமரர் என்பதற்கு என்றைக்கும் சாவாதவர் அல்லது கொன்றாலும் சாகாதவர்கள் எனப் பொருள் படும். முன்சென்று என்பதற்கு, முன் கோஷ்டியில் சென்று என்று பொருள் உரைப்பதை விட, அவர்களுக்கு ஒரு தீங்கு வருவதற்கு முன்னமே சென்று என்று உரைத்தல் சிறக்கும். ஆகவே, இந்த முன். காலத்தை குறிக்கும் முன் ஆகும்.
நடுக்கமென்னும் பொருளையுடைய கம்ப என்ற வடசொல், இங்கு கப்பம் என சொல்லபடுகிறது. தேவர்கள், அஸுர அரக்கர்களால் குடியிருப்பையும் இழந்து புகலிடம் அற்று பட்ட நடுக்கத்தைத் தவிர்த்தமை இங்கு கூறப்பட்டது. இனி கப்பம் என்று இறையாய், தேவர்கள் ராவணாதி அசுரர்களுக்கு பணிப் பூ விட்டுத் திரியாமல் காக்கப் பெற்றமை கூறியதும் அடங்கும்.
செப்பென்ன என்று சொன்னது எம்பெருமான் கிடக்கும் இடம் என்பதாகும். மூன்றாம் திருவந்தாதியில் (3) மலராள் தனத்துள்ளான் தண்டுழாய் மார்பன் என்பதை நினைவில் கொள்ளலாம்.
திருவே துயிலெழாய் என்று சொன்னது, பிராட்டியின் திருநாமத்தை நீ வஹிப்பதற்கு இணங்க அவளுடைய குணங்களும் உனக்கு வர வேண்டாமா, பெண்களின் வருத்தம் அறியாதவனை போல உறங்கலாமோ, அவன் அடியார்க்காகப் பத்து மாதம் பிரிந்து ஊண் உறக்கமற்றுச் சிறையில் அகப்பட்டுப் பட்ட பாடுகளை நீ ராமாயணத்தில் கேட்டு அறிவாயோ, அவ்வளவு வருத்தமும் நீ படவேண்டா’ எங்களுக்காக இப்போது துயிலெழுந்தால் போதும் என்கிறார்கள்.
“துயிலெழாய்” என்றதைக் கேட்ட நப்பின்னை, ஆய்ச்சியர்காள், நான் உறங்கவில்லை’, கண்ணனால் உங்களுக்கு பெறுவிக்க வேண்டியவற்றை மனோரதித்துக் கொண்டு இருந்தேன்’ நான் எழுந்து செய்ய வேண்டுவது என்ன என்று சொல்லுங்கள்” என்று கேட்க ’நோன்புக்கு வேண்டிய உபகரணங்களை எல்லாம் தந்தருளிட உன் மணாளனையும் எங்களையும் நீராட்டுவிக்க வேணுமென வேண்டுகின்றனர். நீராட்டு என்பது சேர்ந்து இருக்க செய் என்பதாகும்.
திறலுடையாய் என்றது, அடியவர்களோடு செவ்வியனாக செயலில் இருப்பது, பாண்டவர்களுக்கு செவ்வியனாக துரியோதனாதிகளை அழிக்க ஆயுதம் எடுக்க மாட்டேன் என்று சொன்னாலும் ஆயுதம் எடுப்பது, பகலை இரவாக்குவது என்பவை. அனுகூலர்களான எங்கள் பக்கம் திறல் காட்டுவது, நாங்கள் அணுகமுடியாமல் இருப்பதோ என்கிறார்கள்.
செற்றார்க்கு வெப்பம் கொடுக்கும் விமலா என்றது, அவன் பகைவர்களுக்கு துக்கத்தை கொடுப்பது. அவனுக்கு என்று தனியாக விரோதிகள் இல்லாதபடியால், அவனது அடியார்களின் விரோதிகள் அவனுக்கும் விரோதிகள் ஆவார்கள். விமலா என்றது காரியத்தின் தூய்மையை கூறுகிறது. அடியவர்களின் காரியம் செய்வது தனக்கு கிடைத்த பேறாக எண்ணும் தூய்மை. அடியவர்களாக இல்லாதவர்களுக்கு அவர்கள் வேண்டியதை கொடுத்து விட்டு, அடியவர்களுக்கு தன்னை கொடுக்கும் தூய்மை. ‘செய்குந்தா வருந் தீமை உன்னடியார்க்குத் தீர்த்து அசுரர்க்குத் தீமைகள்’ (திருவாய்மொழி 2.6.1) சொல்லியது இங்கே குறிப்பிடப் பட்டுள்ளது.
விசிறியும் கண்ணாடியும் தரும்படி வேண்டினது மற்ற வேண்டியவை எல்லாவற்றையும் கேட்டதற்கு சமமாகும். இப்போதே என்றது இந்த நொடி தப்பினால் பின்பு ஊராரும் இசைய மாட்டார்கள், நாங்களும் உயிர் வாழ்ந்திருக்க மாட்டோம் என்று கூறுகிறார்கள். எம்மை என்று விரஹம் தின்ற உடம்பைக் காட்டுகிறார்கள்.
Leave a comment