திவ்ய பிரபந்தம்

Home

T16 நாயகனாய் நின்ற

திருப்பாவை 16

சென்ற பத்து பாட்டுக்கள் பத்து பெண்களை உணர்த்தினதை கூறியது. பத்து பெண்களை சொன்னது, திருவாய்ப்பாடியிலுள்ள பஞ்சலட்சங் குடியில் உள்ள அத்தனை பெண்களையும் உணர்த்தியதை சொன்னதற்கு சமம். எல்லா பெண்களையும் உணர்த்தித் தம்முடன் கூட்டிக் கொண்டு எல்லோரும் பெரும் கூட்டமாக திரண்டு ஸ்ரீ நந்தகோபர் திருமாளிகை வாசலிற்கு சென்று, திருக் கோயில் காப்பானையும் திரு வாசல் காப்பானையும் நோக்கித் ‘திருவாசல் திருக்காப்பு நீக்கவேணும்’ என்று வேண்டுவதை கூறும் பாசுரம் இது.

இந்த பாட்டில் முதலடி, கோயில் காப்பானையும், இரண்டாவது அடி, வாசல் காப்பானையும் உணர்த்துகின்றது. கோபுர வாசல் போன்ற வெளிப்புறத்து வாசலைக் காப்பவனை கோயில் காப்பான் என்றும், த்வஜஸ் தம்பத்தின் அருகிலுள்ள வாசல் போன்ற உட்புறத்து வாசலைக் காப்பவன், வாசல் காப்பான் என்றும் இங்குக் கூறப்படுகின்றன.

செய்யாதன செய்யோம் என்ற செய்த சத்தியத்தை காப்பாற்றுவதன் பொருட்டு, உகந்து அருளின நிலங்களில் உள்ளே புகும் போது, க்ஷேத்திராதிபதிகளையும், துவார யக்ஷயர்களையும், அனுமதி பெற்று கொண்டு புக வேண்டும் என்று பகவத் சாஸ்திரங்களில் கூறியதுபோல, இவர்கள் சிறுமியர்களாக இருந்தபோதிலும், இவர்களுக்கு தெரிந்திராத போதிலும், உள்ளே புகுந்து விட வேண்டும் என்ற ஆசையோடு இருப்பதினால் ஞானாதிகரர்களுடைய அனுஷ்டானமும் பலிக்கிறது. நம்ஜீயர், நம்பிள்ளைக்கு சொல்லும்போது, ரசவாதம் கைபட்டவன் இருந்த இடமெல்லாம் பொன்னாவது போல், பிரமேயம் கைபட்டவனுக்கு சொல்லிற்று எல்லாம் நல் வார்த்தைகளாம் என்பது போல, இவர்கள் வாயில் காப்பானிடம் பேசியதெல்லாம் உதவிற்று.

நாயகனாய் நின்ற” என்ற அடைமொழி, நந்தகோபனுக்கு இட்டதாகவும்’, கோயில் காப்பானுக்கு இட்டதாகவுமாம். இந்த ஆயர் மாதர் சேஷியாகக் கருதும் அதிகாரிகளாகையால் அவர்களை நாயகர் என்கிறார்கள். ஒருவன் ஒரு ரத்னத்தைத் தந்தால் அதன் மேன்மையை அறிய அறிய, அதனைக் கொடுத்தவன் பக்கம் அளவற்ற ஆதரம் பிறக்குமாறு போல, இவர்கள் மூலம் எம்பெருமான் பக்கம் பெரு நன்றி பாராட்டுவர். இது போலவே ஆளவந்தார் எம்பெருமானை ஸ்தோத்ர ரத்னத்தினால் துதிக்க நினத்து, முதலில், முன்னம் இருந்த ஆசார்யார்களான நாதமுனிகள் முதலியவரை துதித்தருளினர்.

“கண்ணன் கோயில் காப்பானே!” என்று சொல்லாமல், “நந்தகோபனுடைய கோயில் காப்பானே” என்றது, பரமபதத்தில் எம்பெருமான் ஸ்வதந்த்ரனாக இருந்து பட்டபாடு தீர, நந்தகோபற்குப் பிள்ளையாய் பிறந்து, பார தந்திரியத்தைப் பேணியதால் அவன் திருவுள்ளம் உகந்து போவதற்காக என்று கொள்ளலாம். “ கண்ணனுடைய கோயில்” என்றால், இவன் நந்தகோபருடைய அபிமானத்தில் ஒதுங்கி இருக்கிற பாரதந்திரியம் பரிமளிக்க வழியில்லை.

திருக்கோயில் காப்பவர்கள், இவர்களுக்கு மிகவும் கௌரவிக்க தக்கவனாயிருக்க, இங்கு இவர்கள் அவர்களை அழைத்தது, ‘நந்த கோபனுடைய கோயிலைக் காப்பவனாக அமையப் பெற்ற உங்கள் பாக்கியமே பாக்கியம்’ என்று சொன்னதில் இவர்களுக்கு உகப்பு. இவர்கள் இப்படி அழைத்ததையே தங்களுக்குப் பரம புருஷார்த்தமாக நினைத்தது, அது மட்டுமின்றி, இப்படி செய்யும் கைங்கர்யத்தால் வரும் பெயரே ஆத்மாவுக்கு ஸ்வரூப ரூபம் என்னும் சாஸ்த்ரார்த்தமும் இங்கே வெளியிடப் பட்டது.

அவர்கள் மிகவும் குளிர்ந்து, கண்ணாலே, ‘புகுங்கள்’ என்று நியமனம் கொடுக்க, வாசலில் புகுந்து உள்ளே சென்று, தோரண வாசல் காப்பவனை உணர்த்துகின்றனர்,

தோரணவாசலுக்குக் “கொடித்தோன்றும்” என்று சொன்னது, திருவாய்ப்பாடியிலுள்ள மாளிகைகளெல்லாம் ஒரே மாதிரி தோன்றுவதால், நடுநிசியில் அலமந்துவரும் ஆயர்மாதர் நின்று தடுமாறாதே ‘இது நந்தகோபர் திருமாளிகை’ என்று சடக்கென உணர்ந்து தெளிந்து வருதற்காகக் கொடி கட்டி வைக்கப்பட்டிருக்கும் என்பதாகும்.

பெரும் தாகம் உள்ளவர்கள் வரும் போது, தண்ணீர்ப் பந்தல்கள் நெடும் தூரத்தில் இருந்தே தெரிய வேண்டும் என்று தார்மிகர்கள் கொடி கட்டி தோரணம் நட்டு வைப்பார்கள். “பெருமாளைக் (இராமனை) காணாதே ஸ்ரீ பரதாழ்வான், ராமன் ஆஸ்ரமத்திற்கு செல்லும் பாதையை அரசல் புரசலாக தெரிவிக்கின்ற கொடியையும் தோரணத்தையும் கண்டு தரிப்பதை போன்று, இவர்கள் தரிக்கை என்று ஆராயிரப்படி சொல்கிறது.

வாசல் காப்பனே என்று சொன்னது, கொடியும் தோரணமும் அசேதனம் ஆகையால், அவை எம்மை அழைக்கவும் மாட்டா, உள்ளே புகவும் விட மாட்டா’, நீ சைதந்யம் பெற்றதற்கு ப்ரயோஜநம் பெறுதி என்கிறார்கள். மிக நெடுந் காலமாக, கண்ணன் “அர்ஜுனன் ஸுபத்ரையைக் கொண்டு போக நீங்கள் அனுமதி கொடுங்கள்” என்று வாசல் காப்பருக்கு அருளிச் செய்தது போல, “பெண்களை உள்ளே புகவிடு” என்று இந்த வாசல் காப்பானுக்கும் நியமித்திருக்கக் கூடும் என்பது இவர்கள் நினைப்பு.

மணிக் கதவந் தாள் திறவாய் என்று சொன்னது, கதவின் இனிமையிலே எங்கள் கண்ணும் நெஞ்சும் பிணிப் புகவொண்ணாமல் கதவைத் திறந்து எம்மை உள்ளே புக விடு என்கிறார்கள்.

இவர்கள் வேண்டியதை கேட்ட அவன், “பயம் மிக்க தேசத்தில் நடுநிசியில் வந்து கதவைத் திறக்க அழைக்கிறவர் யார்?” என்று கேட்க, அதற்கு இவர்கள் “அச்சம் தவிர்ப்பான் இருக்கும் இடத்தில் ஏன் அஞ்ச வேண்டும் ?” என்று இவர்கள் கேட்க, அவன், “காலம் நல்லதாக இருந்து, தகப்பனார் சொல்வதை பிள்ளைகள் தாங்களும் ஆண் புலிகளாய், அவர்கள் தாம் வழியே போய் வழியே வருமவர்களுமாய், ஊரும் திரு அயோத்யையுமாய் இருந்த ராமாவதார காலத்தில் அச்சம் இன்றி இருந்தது, இப்போது அப்படி இல்லை, காலம் கலிக்குத் தோள்தீண்டியான த்வாபர யுகமாய், தகப்பனார் பசும்புல் மிதியாத பரம ஸாதுவான நந்தகோபர், எறும்புக்காக கூர் வேல் பிடித்தவராய், கம்ஸனுடைய ராஜ்யத்திற்கு அருகில், அவன் தான் பரம சத்துருவாய், இடமெல்லாம் அஸுரமயமாய் இருக்க அச்சம் கூடி இருக்கும் இடமாக இருக்கிறது’ என்று அவன் சொல்கிறான்.

அது கேட்ட இவர்கள் “எங்களுக்கு அஞ்ச வேணுமோ? நாங்கள் பெண்பிள்ளைகள் அல்லவோ?, பூதனை ராக்ஷஸி, நாங்கள் இடைப் பெண்கள்’ அவளோடு எங்களைக் கருதலாமோ’ என்று சொல்ல, அதற்கு அவன், “இடைச்சிகளுக்கே மிகவும் அஞ்ச வேண்டும்” என்று சொல்ல, அதற்கு இளமை தங்கிய இடைப் பெண்களாகிய எமக்கு என்ற அர்த்தத்தில் “ஆயர் சிறுமியரோம்” என்கிறார்கள்.

இவர்கள் இப்படி கூறியதைக் கேட்ட வாசற்காவலோன், “சிறுமி என்றால் என்ன, வத்ஸாஸுரன் என்ற கன்று வந்து தாக்கியதை பார்த்தீர்களோ’ என்று சொல்லி பருவம் கொண்டு நம்ப மாட்டோம் என்று சொன்னார்கள். அதற்கு இவர்கள் நோன்புக்குப் பறை வேண்டி வந்தோம் என்பதை “அறை பறை” என்கிறார்கள், அவன், “அதுவாகில் பெருமான் திருப்பள்ளி உணர்ந்தெழுந்த பின்னர் விண்ணப்பம் செய்து தருகிறோம். நில்லுங்கள்’ என்றான். அதற்கு இவர்கள் “நென்னலேவாய் நேர்ந்தான்” என்கிறார்கள்’ நீ இன்றைக்கு விண்ணப்பம் செய்ய வேண்டாதபடி நேற்றே எம்பெருமான் எமக்குப் பறை தருவதாக அருளிச்செய்தான் என்கிறார்கள்.

எம்பெருமான் உங்கள் காரியத்தைச் செய்து தருவதாக அருளிச் செய்தான் என்றால் எங்களை அவன் இங்கு வைத்தற்கு ஒரு பயன் வேண்டாமா? வந்தவர்களின் ஸ்வரூப ஸ்வபாவங்களை ஆராய்வதற்கு என்றே நியமிக்கப் பெற்றுள்ள நாங்கள் உங்களின் உள் எண்ணங்களை ஆராய்ந்து உணராமல் விடமுடியாது’ என்றான்.

இவர்கள் “தூயோமாய் வந்தோம்” என்கிறார்கள். அதாவது, ‘நீங்கள் வருந்தி ஆராய வேண்டும்படி நாங்கள் வரவில்லை, நீங்கள் இப்படி அஞ்சும்படி கருத்துக் குற்றமும் உடையவர்கள் இல்லை, ஏதாவது உபாயத்தை தேடியோ, வழியை தேடியோ வரவில்லை, எம்பெருமானுக்கு பல்லாண்டு பாடுவதே பரம புருஷார்த்தமாக நினைத்து வந்தோம்”, என்கிறார்கள். தூய்மையானது என்பது தங்கள் தலையிலும் சில அதிக விஷயங்களை ஏற்றி கொள்ளாமல், ‘நம்முடைய ரக்ஷணத்திற்கு அவனே கடவன்’ என்றிருக்கும் முக்கியமான விசேஷம்.

திருவடி (ஹனுமான்) திருவாழி மோதிரமும் தன் வடிவும் காட்டாதே மிடற்று ஓசையை விஸ்பரித்ததை போல இவர்களும் தங்களுடைய ஆர்த்த துவனியை காட்டுகிறார்கள்.

அவன், “உங்கள் தூய்மையை நாடறியுமாறு நீங்கள் வேறு எந்த பயன் கருதியும் வரவில்லை என்பதற்கு ஏற்ற அடையாளம் சொல்லுங்கள்’ என்றான், அதற்கு “துயிலெழப்பாடுவான் வந்தோம் என்கிறார்கள். அவன் உணர்ந்தெழும் அழகுக்கு மங்களாசாஸநம் பாட வந்தோம் என்றார்கள்.

வாசல்காப்பான், இவர்கள் பேச்சின் இனிமையை இன்னும் செவியாற் பருக விரும்பி, “ஆகிலும் நீங்கள் இந்த அகாலத்தில் உள்ளே புகுர ஓண்ணாது”. என மறுத்துக் கூறுவான் போல் தோன்றினான். பிறர் கருத்தறிவதில் வல்லவர்களான இந்த ஆச்சியர்கள் அதனை அறிந்து, ‘ நீ நெஞ்சாலே சிலவற்றை நினைத்தாலும், வாயால் நெருப்பைச் சொரிந்தாற் போல் மறுத்துக் கூறாது இருக்க வேண்டும்” என்பதை வாயால் முன்னம் முன்னம் மாற்றாதே என்கிறார்கள்.

இப்படி சொல்கின்ற ஆச்சியர்களின் ஆர்த்தியின் கனத்தையும் மன சுத்தியையும் ஆராய்ந்து அறிந்த வாசல் காப்பான், “நான் உங்களை மறுக்கவில்லை’ கதவைத் தள்ளிக்கொண்டு புகுருங்கள்” என்று சொல்ல, அது கேட்ட ஆய்ச்சியர்கள்,’ “நாயகனே! எம்பெருமான் திறத்து உனக்குள்ள பரிவினை காட்டிலும் மிக விஞ்சின பரிவு இந்த கதவிற்கு உள்ளது போலும்’ எங்களால் தள்ள முடியவில்லை, நீயே திறக்கவேணும்” என்பதை நேய நிலைக் கதவம் நீக்கேலோர் எம்பாவாய் என்கிறார்கள்.

வாயில் காப்பவன் விலக்குவது கண்ணன்மேல் உள்ள ஸ்னேகத்தாலே என்றால், இந்த நிலைகதவுகள் திறக்கமுடியாமல் இருப்பதும் ஸ்னேகத்தாலே தான் என்கிறார். திறந்து கொள்வார் முகத்தில் அறைவது போல் கம்ஸனுடைய ஆட்களுக்கு உயிருள்ளவை, உயிரற்றவை என்று ஒரு வித்யாசமும் இன்றி எல்லாம் திருவாய்பாடியில் கண்ணனுக்கு துணை போகின்றன என்கிறார். சகடத்தில் அசுரன் இருந்தது போல, படியாய் நின்று உன் பவள வாய் காண்பேனே என்று கிடப்பது போல, நிலையும், படியும் கண்ணனுக்கு ஸ்னேகமாக நிற்கின்றன என்கிறார்.

Leave a comment