திவ்ய பிரபந்தம்

Home

T15 எல்லே இளம் கிளியே

திருப்பாவை 15

எல்லாப் பெண்களுடைய கூட்டத்தை காண கருதிக் கிடப்பாள் ஓருத்தியை, உணர்த்தும் பாசுரம், இது.

இளமை தங்கிய கிளி போன்று உள்ளவளே, என்னே. இத்தனை பெண்கள் திரண்டு வந்த பின்பும், தூங்குகிறாயோ (என்று உணர்த்த வந்தவர்கள் கேட்க) பெண்களே, இதோ புறப்பட்டு வருகின்றேன்; சில்லென்று (பிறர வருந்தும்படி) அழைக்காதீர்கள் என்று உள்ளே உள்ளவள் சொல்கிறாள்; இளங்கிளியே (நீ வார்த்தை சொல்வதில்) வல்லவள், உனது கடுமையான சொற்களையும் வாயையும் நீண்ட நாட்களாகவே நாங்கள் அறிவோம் (என்று இவர்கள் சொல்கிறார்கள்.) (இப்படி சொல்கிற நீங்கள் தான்) பேச்சில் வல்லவர்கள்; (அப்படி இல்லை என்றால், நீங்கள் சொல்கிறபடி) நானே வல்லவள் ஆக கடவேன் (என்றும் உங்களுக்கு நான் என்ன செய்ய வேண்டும் என்றும் இவள் கேட்கிறாள்); நீ சீக்கிரமாக எழுந்து வா ; உனக்கு மட்டும் தனியே வேறு என்ன (அதிசயம் உள்ளது என்று வந்தவர்கள் கேட்கிறார்கள்); வரவேண்டியவர்கள் எல்லோரும் வந்து விட்டார்களோ (என்று அவள் கேட்கிறாள்); (எல்லோரும்) வந்தனர், நீ வந்து எண்ணி பார்த்துக் கொள் *என்று இவர்கள் சொல்கிறார்கள்). (என்னை எதற்கு வரச் சொல்கிறீர்கள் என்று உள்ளே உள்ளவள் கேட்க) (குவாலாய பீடம்) என்ற வலிமை மிக்க யானையை கொன்று ஓழித்தவனும், பகைவர்களான (கம்ஸன் முதலியோரை) மிடுக்கு அழிந்தவர்களாக செய்து அருள வல்லவன் ஆனவனும் மாயன் ஆனவனும் ஆன கண்ணனை பாடுகைக்கு வா என்று அழைக்கிறார்கள் என்பது இந்த பாடலின் பொழிப்புரை.

சென்ற பத்துப் பாட்டுகளிலும் நிகழ்ந்த வினா விடைகள் இந்த பாட்டில் வெளிப்படையாகக் காணப்படும்.  இந்த பாடலே திருப்பாவை ஆகிறது என்று ஆராயிரப்படி விளக்கம் சொல்கிறது. பகவத் விஷயத்தில், சிற்றம் சிறு காலையில் இருக்கும்படி சொல்கிறது; பாகவத விஷயத்தில் இருக்கும்படி இந்த பாடல் சொல்கிறது; பங்கய கண்ணனாய் பாடு என்று அகத்தில் உறங்கும் பெண்ணை எழுப்பும் பாடல்;

  • எல்லே இளம் கிளியே இன்னம் உறங்குதியோ என்பது உணர்த்த வருபர்கள் பாடுவது;
  • சில் என்று அழையேன் மின் நங்கையீர் போதருகின்றேன் என்பது உறங்குமவள் சொல்வது;
  • வல்லை உன் கட்டுரைகள் பண்டே உன் வாய் அறிதும் என்பது உணர்த்துபவர்கள் பதில் சொல்வது;
  • வல்லீர்கள் நீங்களே நானே தான் ஆயிடுக உறங்குமவள் சொல்வது;
  • ஒல்லை நீ போதாய் உனக்கென்ன வேறுடையை என்பது மீண்டும் உணர்த்துபவர்கள் பேசுவது;
  • எல்லாரும் போந்தாரோ போந்தார் போந்து எண்ணிக்கொள் என்பது உறங்குமவள் பேசுவது;
  • மீதி உள்ளவை உணர்த்துபவர் சொல்லும் விஷயம்.

யாழிலே இட்டு பாடி, அது பண் பட்டு இனிதானது போல, தம் மிடற்றிலே பாடுவாரை போல, அவள் பேச்சுக்கு இவள் பேச்சு.

“சில பாகவதர் தன்னை வெறுக்கில் ஏதேனும் ஓரு காரணம் கொண்டு அவர்களை கவர, ‘ஈச்வரனை கவர வேண்டும்’ என்று சொல்வது பாகவத விஷயமாக சொல்வது. பாகவதர்களால் ஏதேனுமொரு விதத்தில் குற்றம் சாட்டப்பொற்றவர்கள், அந்த பாகவதர் திருவடிகளில் தலை சாய்த்து, ‘இந்த குற்றம் அடியேனுடையது தான், பொறுத்து அருள வேண்டும்’ எனப் பிரார்த்தித்தல் ஸ்ரீவைஷ்ணவ வழக்கம் ஆதலால், அவ்வாறே இப்பாட்டில் “நானே தானாயிடுக” என்று, பிறர் கூறிய குற்றம் தன்னிடத்தே உள்ளதாகத் தான் இசைந்தமை கூறப்படுதலால், பாகவத விஷயத்தில் எப்படி இருக்க வேண்டும் என்பது சொல்லப்பட்டது.

உங்கள் புழைக்கடை” என்ற பாட்டால் உறங்கி இருந்த பெண்ணை உணர்த்துங்கால் “பங்கயக் கண்ணனைப் பாட” என்றதைக் கேட்ட இவள், அப்பேச்சின் இனிமையை நினைந்து, நெஞ்சு குளிர்ந்து, அந்த பாசுரத்தைத் தன் மிடற்றில் இட்டு மிக மெல்லிய குரலின் மென்மையைச் செவியுற்ற இவர்கள் அவளை “இளங்கிளியே!” என அழைக்கின்றனர்.

உணர்த்த வந்தவர்கள் உறங்குமவளை, ‘இளங்கிளியே!’ என விளித்தும் பேசாதே கிடந்தாள்; இவர்கள் “இன்னம் உறங்குதியோ” என்கிறார்கள். நாங்கள் வருவதற்கு முன் உறங்கினாலும், எங்களது கூக்குரல் கேள்விப் பட்ட பின்னரும் உறங்குவது தருமமோ என்கிறார்கள்.

அவள் உள்ளே உறங்காமல் பங்கயக்கண்ணனை அநுஸந்தித்து கொண்டு இருக்கிறாள். அந்த அநுஸந்தாநத்திற்கு இவர்களின் வன்சொற்கள் இடையூறாக இருந்ததால், “சில்லென்றழையேன்மின்” என்று சொல்லி மனத்திற்கு வெறுப்பு உணர்வு உண்டாக்காமல் அழையுங்கள் என்று சொல்கிறாள்.

இவர்கள், ‘எங்களைப் பிரிந்து ஒரு கணப்பொழுதும் தரிக்க மாட்டாமல் இருந்த உனக்கு இன்று எங்கள் காட்சியும் பேச்சும் வெறுப்புக்கு காரணம் ஆகும்படி உனக்கு வந்தது என்ன’ என்கிறார்கள். அதற்கு இவள், ‘என் தன்மையை அறியாமல் என்னிடத்து விபரிதமான ஓரு கருத்துக் கொண்டு, இளங்கிளியே என்று அழிக்கின்ற நீங்களன்றோ பூர்த்தியுள்ளவர்கள்; வாய் திறவாதிருக்க வல்லீராகில், நான் புறப்படுகிறேன் என்பதை “நங்கைமீர் போதர்கின்றேன்” என்று சொல்கிறாள்.

இவர்கள், ‘நங்கைமீர்’ என்ற உறவற்ற சொல்லாலே எம்மை நீ சொல்லவல்லவள் என்பதும், சில்லென்றழையேன்மின் என்று கடுமையாக கூற வல்லவள் என்பதும் நெடுநாளாகவே அறிகின்றோம்’ என்கிறார்கள்.

இதற்கு இவள், ‘நீங்கள் உங்கள் குற்றத்தைப் பிறர் தலை மீது ஏற்றுகிறீர்கள். வன்சொற்கள் கூறும் திறமை உங்கள் பக்கம் உண்டே அன்றி எனக்கு ஒரு வன்சொல்லும் சொல்ல வல்லேன் அல்லேன்’ என்று சொல்கிறாள்;

பாகவதர் ஒரு வைஷ்ணவனை நோக்கி ஒரு குற்றம் சாற்றினராகில், அவன் மெய்யே அக்குற்றம் அற்றவன் ஆனாலும் பாகவதர் பேச்சின் கௌரவத்தை முன்னிட்டு, அவர் கூறிய குற்றத்தைத் தான் ஏற்றுகொள்ளுதல் ஸ்வரூபம் என்று புராண நூல்கள் கூறுவதால், நாம் மறுத்துப் பேசுவது அஸஹ்யா அபசாரத்திலும் கொடியதாகும் எனக் கருதி, மீண்டும் “நானே தானாயிடுக” என்று ஏற்று கொண்டு உங்களுக்கு செய்ய வேண்டியது என்ன என்று கேட்கிறாள்.

‘உன் குற்றத்தை நீ இசைந்த பின்பு இந்த கூட்டத்தில் வந்து சேர வேண்டுவது’ என்பதை, “ஒல்லை நீ போதாய்” என்றனர்.  அவள் இதனைக் கேட்டதும், ‘இதோ வருகின்றேன்’ என்று புறப்பட்டுவரத் தொடங்கினாள்; அப்படியும் அவள் ‘நாம் படும்பாடு இவள் படாது இருப்பதேன்’ என்று உள்வெதும்பி, “உனக்கென்ன வேறுடையை” என்கிறார்கள்.  எங்களுடன் வந்து கூடாமைக்கு, பஞ்சலட்சம் குடியில் உள்ள பெண்களுக்கு இல்லாத வேறு எந்த அதிசயத்தை நீ உடையாய் என்று கேட்கிறார்கள்.

இராமாயணத்தில், லட்சுமணன் பரதனை தாக்க முற்பட, அப்போது எம்பெருமான் (இராமன்), பரதனுக்கு நாட்டை ஆள்வதில் நாட்டம் இல்லை, உனக்கு இஷ்டம் என்றால் அவனிடம் இருந்து உனக்கு நான் வாங்கி தருகிறேன் என்று சொன்னபோது, லட்சுமணன் உடனே தரையில் வீழ்ந்தது போல, உனக்கென வேறுடையாய் என்று அவர்கள் சொன்னதும், இவள் பொறுக்க மாட்டாமல் அவள், தோழிகளே ! உங்களோடு கூடுவதை காட்டிலும் எனக்கு வேறொரு காரியம் உண்டோ, வரவேண்டும், பெண்கள் அனைவரும் வந்த பின் புறப்படலாம் என்று கிடக்கிறேன் என்கிறாள். ‘நாம் அனைவரும் கூடிச் செய்ய வேண்டிய காரியம் எது?’ என்று கேட்க, அவர்கள் கண்ணனது கீர்த்திமைகளைப் பாட வேண்டும் என்கிறார்கள்.

மாற்றாரை மாற்றழிக்க வல்லானை என்று சொல்வது, கண்ணன், பகைவரைக் கண்டால், இன்று போய் நாளை வா’ என்ற இராமனைப் போல் ஒரு பேச்சு பேச மாட்டான் ; வெட்டொன்று துண்டு இரண்டாக்கி முடித்திடுவான்.  குவலயாபீடத்தின் கொம்பை முறித்துக் கொன்று, உட்புகுந்து சாணூர முஷ்டிகாதி மல்லர்களை மடித்து, உயர்ந்த மஞ்சத்தில் வீற்றிருந்த கஞ்சனைக் (கம்சனை) குஞ்சி பிடித்து இழுத்துத் தள்ளி வதைத்து, இப்படியாகச் செய்த சிறுச் சேவகங்கள் பலவற்றை நினைக்க, பாடுக என்கிறார்கள்.

இப்படி எதிரிகளைப் படுத்துகிறவன் ஆய்ச்சியர்கள் பக்கம் வந்தால், அவர்களுக்குக் சரக்கு போல கட்டவும் மடிக்கவும் இசைந்து நிற்பான் ஆதலால், மாயனை எனப்பட்டது. 

இந்த பாடல் முழுவதும், ஒவ்வொரு சொற்தொடரும் வைணவத்தின் கருத்துக்களை அழுத்தம் திருத்தமாக சொல்கிறது. உதாரணத்திற்கு சில,

  • எல்லே இளம் கிளியே என்று சொன்னது பகவத் விஷயத்தில் ருசி உடையவர் பேச்சு நன்று என்கிறார்;
  • இன்னும் உறங்குதியோ என்று சொன்னது பாகவத சகவாசம் நன்றாக நடந்து, அதற்கு பிறகு மற்றவற்றை கேட்டால் தப்பு என்கிறது;
  • சில்லென்று அழையேன் மின் என்று சொன்னது, பகவத் ருசி உடையார் என்ன சொன்னாலும் பொறுக்க வேண்டும் என்பதாகும்.
  • நங்கையீர் போதருகின்றேன் என்று சொன்னதன் மூலம், பகவத் விஷயத்தில் ஊறியவர்கள் மூலம் வந்தவைகளை தவறாக நினைக்காமல், கௌரவத்துடன் நடத்த வேண்டும் என்று சொல்கிறது.
  • வல்லை உன் கட்டுரைகள் என்றதால், இவர்களுக்கும் அவளுக்கும் உகந்த வார்த்தைகளையே பேசவேண்டும் என்பதாம்.
  • வல்லீர்கள் நீங்களே நானே தான் ஆயிடுக என்று சொல்வதன் மூலம், பிறரின் குற்றங்களையும் தன் குற்றமாக கருதுவது, மற்றும் கௌரவமாக நடத்த வேண்டியவர்களை நிர்பந்தம் செய்ய கூடாது என்பவைகளை சொல்கிறது.
  • ஒல்லை நீ போதாய் என்று சொன்னது, பாகவதர்களிடையே சம்பந்தம் ஏற்பட்டால் அந்த சேர்த்தியே சிறப்பு என்பது.
  • உனக்கென்ன வேறுடையாய் என்று சொன்னது, உயர்ந்த பாகவதர்கள் அனுஷ்டிப்பதை, அனுஷ்டிக்காமல் இருப்பது தவறு என்பது.
  • எல்லோரும் போந்தாரோ என்று சொன்னது, ஸ்ரீவைஷ்ணவர்கள் எல்லோரும் உத்தேசியம் என்றது.
  • போந்து எண்ணிக்கொள் என்று சொன்னது ஒருவர் குறைந்தாலும், பகவத் அனுபவத்திற்கு குறை என்கிறது.
  • வல்லானை கொன்றானை என்று தொடங்கி சொல்வது, திரண்ட பாகவதர்களுக்கு உஜ்ஜீவனம் பகவத் விஷய அனுபவம் என்கிறது.

உணர்த்த வந்தவர்கள் கிளி, இவள் இளம் கிளி என்கிறார்; ‘மென்கிளி போல் மிக மிழற்றும் என் பேதையே‘ (திருநெடுந்தாண்டகம் 15) என்று சொன்னதையும், ‘ஒழிவில்லா அணி மழலைக் கிளி மொழியாள் அலற்றிய சொல்‘ (திருவாய்மொழி 9.7.10) என்று சொன்னதையும் நினைவில் கொள்ளலாம்.

மாசுடை உடம்பொடு தலையுலறி வாய்ப்புரம் வெளுத்தொரு போதுண்டு ‘  (நாச்சியார் திருமொழி 1.8) ல் சொன்னது போல இருக்க, நாம் ஏதோ கிருஷ்ணனை கூடி பின் பிரிந்த விரகதாபத்தால் வாயும் சிவந்து இருப்பது போல பேசுகிறார்கள் என்று இவள் நினைக்கிறாள்.

கவளமால் யானை கொன்ற கண்ணனை‘ திருமாலையில் (45) சொன்னதும், கவள யானைக் கொம்பொசித்த கண்ண னென்றும், (பெரிய திருமொழி 4.8.1)ல் சொன்னதும் பெண்கள் வாயில் சொல்வதும் ஆண்களை எழுதி முடிக்க சொல்லியதும் ஆகும். ‘வெஞ்சின வேழம் மருப் பொசித்த வேந்தர் கொல், ஏந்திழை யார் மனத்தை தஞ்சுடையாளர் கொல்‘ (பெரிய திருமொழி 9.2.6) என்று இரண்டையும் சேர்த்து சொல்வதும் ஒரு சிறப்பு.

வாரணத்தை மருப்பொசித்த பிரான் என் மாதவனே‘ (திருவாய்மொழி, 2.7.2),  ‘நாரணன் எம்மான் பாரணங்காளன் வாரணம் தொலைத்த காரணன் தானே’ (திருவாய்மொழி 10.5.2), “பின்னை மணாளனாகி முன் கருந்தாள் களிறொன்றொசித்தானூர்” (பெரிய திருமொழி 8.6.6) என்று மூன்று தேவிகளும் தோற்றுக்கிடப்பது இந்த சரித்திரத்திற்கே என்று உரையாசிரியர் சொல்கிறார். ‘ஆனைகாத்து ஓரானை கொன்றதன்றி ஆயர் பிள்ளையாய்‘ (திருசந்த விருத்தம் 40) என்று சொன்னதால் கஜேந்தர ரக்ஷகத்தை / சரித்திரத்தை விட இதனை குணமாக கொள்வார்கள்.

பாண் பெருமாளுக்கு அடுத்த திருமங்கையாழ்வாரை யுணர்த்தும் பாசுரமிது.

  • இவ்வாழ்வார் இரண்டு ஆய்ச்சிகளுக்குப் பரஸ்பர ஸம்வாதமாக *மானமரு மென்னொக்கி (பெரிய திருமொழி 11.5) என்றொரு பதிகம் அருளிச்செய்தவராதலால் இவரை யுணர்த்தும் பாசுரம், பரஸ்பர ஸம்வாத ரூபமாகவே அமைக்கப்பட்டது.  “கிளிபோல் மிழற்றி நடந்து” (பெரிய திருமொழி 3.7.2) மென்கிளிபோல் மிக மிழற்று மென்பேதையே (திருநெடுந்தாண்டகம், 15) என்று பல பாசுரங்களில் இவர் தம்மைக் கிளியாகச் சொல்லிக் கொண்டவராதலால் கிளியே! என்ற விளி இவர்க்குப் பொருந்தும்; அன்றியும், சொல்லிற்றையே சொல்லுவது கிளியின் இயல்பு.  அதுபோல இவர் ‘மாறன் பணித்த தமிழ் மறைக்கு மங்கையர்கோன் ஆறங்கம் கூற’ என்றபடி நம்மாழ்வார் ஸ்ரீஸூக்திகளை அநுசரித்தே அருளிச் செய்பவராதலாலும் கிளியென்றது பொருந்தும்.
  • இரண்டாமடி திருமங்கையாழ்வாருடைய விடையளிப்பு.  (வல்லையுன் கட்டுரைகள் பண்டே உன்வாயறிதும்.) இது கலியனை நோக்கி ஆண்டாள் கூறுமது.  ‘வாசி வல்லீர் இந்த ளூரீர் வாழ்ந்தே போம்நீரே’ (பெரிய திருமொழி 4.9.4) என்று நீர் மிகக் கடினமாகப் பேச வல்லீரென்பது எனக்குத் தெரியும் என்கிறாள்.
  • பண்டே – நீர் அவதரித்துப் பாசுரம் பேசுவதற்கு முன்னமே தெரியும் என்றாள். 
  • அதுகேட்ட கலியன் வல்லீர்கள் நீங்களே  ‘கொள்ளும் பயனென்றில்லாத கொங்கை தன்னைக் கிழங்கோடும், அள்ளிப்பறித்திட்டவன் மார்பிலெறிந்து என்னழலைத் தீர்வேனே’ (நாச்சியார் திருமொழி 13.8) என்று அற வெட்டிதாகச் சொன்ன உன் பேச்சு கடினமா? என் பேச்சு கடினமா? நீயே பார்க்கலாம் – என்றார். 
  • என்றவுடனே *நண்ணாதவாளவுணர் (பெரிய திருமொழி 2.6.1) *கண்சோர வெங்குறுதி‘ (பெரிய திருமொழி 7.4.1) முதலிய திருமொழிகளில் தாம் அநுஸந்தித்த பாகவத சேஷத்வ காஷ்டையை நினைத்து *நானே தானாயிடுக* என்றார். 
  • “உனக்கென்ன வேறுடையை” என்றது திருமங்கை யாழ்வார்க்கே உரியதான திருமடல் திவ்யப்ரபந்தம் ஆகும்.
  • (எல்லாரும் போந்தராரோ) கலியனுக்கு முன்னமே மற்றுமுள்ள ஆழ்வார்கள் அவதரித்து, பன்னிருவர் என்கிறதை இவரோடு நிரம்பிற்று என்று தெரிவிக்கப்பட்டது.
  • (வல் ஆனை கொன்றானை – மாயனைப் பாட.) ஆனையைக் கொன்ற விஷயத்தை ஒரு ஆச்சரியமாக எடுத்துப் பேசினவர் கலியன்.  “ஆவரிவை செய்தறிவார் அஞ்சன மாமலை போலே” என்ற பெரிய திருமொழி (3.3.7) காண்க.  அடிக்கடி கலியன் வாய்வெருவுவதும் வல்லானை.  கொன்ற வரலாற்றையே; “கவள யானைகொம் பொசித்த கண்ணனென்னும்” (பெரிய திருமொழி 4.8.1) காண்க. 
  • (மாற்றாரை மாற்றழிக்க வல்லானை மாயனைப் பாட) எம்பெருமான் தன் திறத்தில்; மாறு செய்பவர்களது செருக்கை வெகு ஆச்சரியமாக அடக்குபவன் என்பதைக் காட்டுகின்ற சரிதைகளுள் கோவர்த்த நோத்தாரண கதை மிகச் சிறந்தது.  மாறுசெய்த இந்திரனுக்கு ஒரு தீங்குமிழைக்காமலே கண்ணன் அவனது கொழுப்பை அடக்கினனிறே.  இக்கதையிலே கலியன் மிக்க வூற்றமுடையவர்; பெரிய திருமொழியை முடிக்கும் போதும் “குன்றமெடுத்து ஆநிரை காத்தவன் தன்னை” (11.8.10) என்றார்; சரமப் பிரபந்தமாகிய திருநெடுந் தாண்டகத்தை முடிக்கும்போதும் “குன்றெடுத்த தோளினானை”(திருநெடுந்தாண்டகம் 29) என்றே தலைக் கட்டினார்.

Leave a comment