திவ்ய பிரபந்தம்

Home

T14 உங்கள் புழக்கடை

திருப்பாவை 14

ஆய்ச்சியர்களுக்கு எல்லாம் தலைவியாய், ‘நான் எல்லார்க்கும் முன்னே உணர்ந்து வந்து எல்லாரையும் உணர்த்தக் கடவேன்’ என்று சொல்லி வைத்து, அதனை மறந்து உறங்குவாள் ஓருத்தியை உணர்த்தும் பாசுரம்.

உங்கள் வீட்டின் பின் பக்கத்தில் உள்ள தோட்டத்தில் இருக்கிற தடாகத்தில் உள்ள செங்கழுநீர் பூக்கள் விரிந்து மலர, ஆம்பல் பூக்கள் வாய் மூடி போயின; காவி பொடியில் நனைத்த உடைகளை அணிந்த வெளுத்த பற்களை உடைய சந்நியாசிகள் தங்களுடைய திருக்கோவில்களை திறவு கோல் கொண்டு திறக்க போகின்றனர். எங்களை முந்தி வந்து எழுப்பப் போவதாக சொன்ன நங்கையே (சொன்னபடி எழுப்பவில்லை என்று ) வெட்கம் இல்லாதவளே, (இனிய பேச்சு பேசும் ) நாவை உடையவளே, சங்கையும் சக்கரத்தையும் தரித்து, விசாலமான திருகைகளை உடைய தாமரை போன்ற கண்களை உடைய கண்ணபிரானை பாடுகைக்கு எழுந்திரு என்பது இந்த பாடலின் பொழிப்புரை.

உணர்ந்து வந்த ஆய்ச்சியர்கள் எல்லாருமாகத் திரண்டு இவள் மாளிகை வாசலிலே வந்து நெடு நேரம் நின்றனர். நாங்கள் உன் வாசலில் வந்து நிற்க, நீ எழுந்திராமல் இருப்பதேன் என்று கேட்க, ‘எழுந்திருப்பதற்கு பொழுது விடிய வேண்டாமோ, பொழுது விடிந்ததற்கு அடையாளம் என்ன என்று அவள் கேட்கிறாள். ‘செங்கழுநீர் அலர்ந்து ஆம்பல்வாய் கூம்பின‘மை அடையாளமன்றோ’ என்று இவர்கள் சொன்னார்கள். அதற்கு அவள், ‘நீங்கள் என் வாசலில் வந்த களிப்பின் மிகுதியால் உங்கள் கண்கள் அலர்ந்து, நீங்கள் என்னை காணததால் வெட்கி வெறுத்து, உங்கள் வாய் மூடிப் போனதை ‘செங்கழுநீர் வாய் நெகிழ்ந்து ஆம்பல் வாய் கூம்பி’ னதாக நீங்கள் நினைத்திட்டீர்கள். இது உங்களுடைய பிரமையே அன்றி, வேறல்ல என்று சொன்னாள்; அதற்கு இவர்கள் கட்டும் காவலுமாக உள்ள தோட்டத்து வாவிகளிலிருக்கின்றதைச் சொன்னோம்’ என்று இவர்கள் சொன்னார்கள்; அதற்கு அவள், ‘அங்கும் நீங்கள் சென்றதாகத்தான் நான் சொல்லுகிறேன்’, என்று சொல்ல, ‘உங்கள் புழைக்கடைத் தோட்டத்து வாவியிலுள்ளதையும் சொல்லுகிறோம்’ என்றார்கள்.

தோட்டத்து வாவியுள் என்று சொன்னது, ‘தடமணி வயல்களுக்கு போக வேண்டாம், ஆம்பல் பூக்கும் கழனிகளுக்கு போக வேண்டாம், வேறு எங்கும் செல்ல வேண்டாம், உந்தன் வீட்டின் புழக்கடை தோட்டத்துள் இருக்கும் ஆம்பல் பூவை பார்’ என்கிறார்கள்.

வெளியே நின்று உட்புகுவதற்கு வழி கிடைக்காது துவள்கின்ற இந்த பெண்டிர், அவள் வீட்டுப் புழைக்கடையில் செங்கழுநீர் வாய் நெகிழ்ந்து ஆம்பல் வாய் கூம்பினது என்று சொன்னது, மற்றுமுள்ள இடங்கள் எங்கும் அவை வாய்நெகிழ்ந்து வாய் கூம்பியிருக்கின்றதால் இவள் வீட்டுப்புழைக் கடையிலும் அப்படி நிகழ்ந்திருக்க வேண்டும் என்ற அனுமானத்தின் பேரில் கூறுகின்றனர்.

செங்கற்பொடிக்கூறை என்று சொல்வதன் மூலம், திவ்யதேசங்களில் ஜீயர் ஸ்வாமிகள் எழுந்தருளி கோவில் வாசல் திறவுகோல் கொடுத்துத் திருக்காப்பு நீக்குவிக்கிற ஸம்பிரதாயம் உண்டானதை சொல்கிறது.

உள்ளே உள்ளவள், “தோழிகாள்! வாசித்தும், கேட்டும், வணங்கியும், வழிபட்டும், பூசித்தும் போக்கினேன் போது’ என்று உள்ள பிரமாணங்களை மறந்தீர்களா, என்று கேட்க, ‘நங்காய்! ‘நான் எல்லோருக்கும் முன்பு உணர்ந்து எழுந்து வந்து தோழிகளை எல்லாம் உணர்த்துகிறேன்’ என்று சொல்லிச் சென்ற நீ, இப்போது எழுந்து வந்தவர்களையும் மறுத்துப் பேசுவது நன்றாக இருக்காது; உடனே எழுந்துவா’ என்கிறார்கள்.

நாணாதாய் என்று சொன்னது, ‘நீ எழுந்து வராவிட்டாலும் சொன்னபடி செய்யவில்லையே’ என்று நெஞ்சில் சிறிதும் வெட்கபடவில்லையே உன்னைப் போல் சுரணை கெட்டவள் இவ்வுலகத்தில் வேறு யாரும் இல்லை’ என்கிறார்கள்.

உடனே ‘நாவுடையாய்‘ என அன்பார அழைக்க, அது கேட்ட அவள், ‘தோழிகளே நீங்கள் எனக்காக மிக வருந்தினீர்கள்; இதோ எழுந்து வருகிறேன், நான் செய்ய வேண்டிய காரியம் என்ன, சொல்லுங்கள்’ என்று சொல்ல, ‘வலக்கை ஆழி, இடக்கை சங்கம் உடையவனான தாமரை போல் கண்களை உடைய கண்ணனுடைய கீர்த்திகளைப் பாடுதற்காக அழைக்கின்றோம் வா’ என்கிறார்கள்.

கண்ணன் திருவவதரிக்கும் போது திருவாழியும் திருச்சங்குமாகத் தோன்ற, தேவகி அது கண்டு அஞ்சி, ‘இந்த ஆயுதங்களை மறைத்துக் கொள்’ என வேண்ட அவனும் அப்படியே அந்த ஆயுதங்களை உடனே மறைத்துக்கொண்டான் என்பது வரலாறு. ஆச்சியர்கள் கண்ணனைச் சங்கொடு சக்கரமேந்தும் தடக்கையனாகக் கூறுதல், கண்ணன் அவ்வாயுதங்களை மறைத்தது உகவாத பகைவர்களுக்காக அல்ல என்றும் அன்பர்களுக்காத்தான் என்பதை சொல்கிறார்.

Leave a comment