திவ்ய பிரபந்தம்

Home

T13 புள்ளின் வாய் கீண்டானை

திருப்பாவை 13

கண்ணன் பிறந்து வளரும் ஊரான திருவாய்ப்பாடியிலே அவனையே பாட வேண்டியிருக்க, அவனை விட்டுத் தென்னிலங்கைக் கோமானைச் செற்ற இராமனைப் பாடுவதும்,  அவனை மனத்துக்கினியான் என்பதும் க்ருஷ்ண பக்தர்களுக்கு ஒரு பெரிய கிளர்ச்சி தோன்றியது.  உடனே சில பெரியார்கள் கண்ணனும் இராமனும் ஒரு திருமூர்த்தியே என்கிற தத்துவத்தை விளக்கி சமாதானம் பண்ண, பிறகு ஒருவாறு தேறி அவ்விரண்டு திருமூர்த்திகளையும் சேர்த்து ஆனந்தமாகப் பாடுகிறார்கள்.

தன் கண் அழகினில், பெருமை கொண்ட ஒருத்தி, தன் கண் அழகிற்கு எல்லோரும் தன்னை வந்து பார்க்கும் போது, தான் ஏன் கண்ணனை சென்று பார்க்க வேண்டும் என்று இருக்கும் ஒருத்தியை மற்றவர்கள் எழுப்பும் பாசுரம்.

புள்ளின் வாய்கீண்ட‘ என்று சொன்னது, ஒருத்தி மகனாய்ப் பிறந்து ஓர் இரவில் ஓருத்தி மகனாய் ஓளித்து வளர்கின்ற கண்ணன் மீது, குறி கொண்ட கம்ஸனால் கண்ணனை அழிக்குமாறு நியமிக்கப்பட்ட ஓர் அசுரன் கொக்கின் உருவம் கொண்டு சென்று யமுனைக் கரையில் கண்ணனை விழுங்கி விட, அவனது நெஞ்சில் கண்ணன் நெருப்புப் போல எரிக்கவே, அவன் பொறுக்க மாட்டாமல் கண்ணனை வெளியே உமிழ்ந்து மூக்கால் குத்த நினைக்கையில், கண்ணன் அவன் வாயலகுகளைத் தனது இரு கைகளினாலும் பற்றி விரிவாகக் கிழித்தான் என்ற வரலாறு.

விரோதியை போக்கி, தன்னை கொடுப்பது, அவன் பணி ஆகும். இவனுடைய அனுமதியும், அவனுடைய ரக்ஷகத்வமும் ஸ்வரூபத்தில் புகுமத்தனை, கர்ம ஞானங்களை துணையாக கொண்டு, பக்தியை உபாயம் என்று இருப்பவர்கள் அன்றோ இவர்கள். சென்ற பாட்டிலும் இந்த பாட்டிலும் இராமனை பற்றி பாடிய இவர்கள் இந்த பாட்டில் இராமனோடு சேர்ந்து, கண்ணனையும் பாடுகிறார்கள். கண்ணனோடு இராமன் ஏன் என்றால், இராமன் பிராட்டியை பிரிந்து வருந்துபவன்,

பொல்லா அரக்கனை என்று சொன்னது, உயிரையும் உடலையும் பிரித்தாற்போல், தாயையும் தந்தையையும் பிரித்து ஒன்றாக வாழாவிட முடியாதபடி செய்ததை போல, திருவினை பிரித்த குற்றத்திற்காகவும், பொல்லா என்று சொன்னார்கள்.

கிள்ளிக் களைந்தானை” என்ற சொற்தொடரால் இறையும் (கொஞ்சம் கூட சிரமம் இன்றி) வருத்தம் இன்றிக் களைந்தமை தோன்றும். பூச்சி பட்ட இலைகளைக் கிள்ளிப் போடுவதை போலே களைந்தான் என்கிறார்.

கீர்த்திமை பாடிப் போய்” என்றது, விரஹத்தாலே பெண்பிள்ளைகள் பகவத் குண கீர்த்தனத்தைப் பாடிக் கொண்டு நடந்தன என்கிறார்.

பிள்ளைகளெல்லாரும் என்று சொன்னது, நாங்கள் சென்று எழுப்பிக் கொண்டு போக வேண்டும்படி சிறுமியர்களும் உணர்ந்து போகின்ற போது, நீ மட்டும் கிடந்து உறங்குகை முறையா என்று கேட்கிறார்கள்.

பாவைக்களம் என்று சொன்னது, கண்ணனும் ஆய்ச்சியருமாக நோன்பு நோற்பதற்கு என்று குறிப்பிடப்பட்ட ஒர் இடம். பலர் திரளுமிடம் களம் எனபட்டது.

இவர்கள் இப்படி சொல்லக் கேட்ட அவள், ‘அவர்கள் சிறு பெண்கள் ஆகையால் எழுந்து போயிருக்கக் கூடும்; எல்லாம் அறிந்த நாம், அகாலத்தில் போக வொண்ணாது; சூரிய உதயம் ஆயிற்றா என்று கேட்கிறாள். அது கேட்ட இவர்கள், சுக்கிரன் உச்சிப்பட்டான்; குரு அஸ்தமித்தான்’ என்றனர்.  இது கேட்ட அவள், ‘நீங்களும் போக வேண்டும் என்ற எண்ணம் உள்ளவர்கள் ஆகையால், உங்களுக்கு அப்படி தோன்ற கூடும். வேறு அடையாளம் இருந்தால் சொல்லுங்கள் என்கிறாள். “புள்ளுஞ் சிலம்பின காண்” என்று பறவைகளின் ஆரவாரங்களை அடையாளமாகக் கூறுகின்றனர்.

இவர்கள் இந்த அடையாளம் சொல்ல கேட்ட அவள் பேசாதே கிடக்க, அதனை உணர்ந்த இவர்கள், ‘நீ இப்படி எங்களை அலக்ஷயம் பண்ண உன் கண்ணழகை நீ பெரியதாக மதிப்பதே ‘ என்ற கருத்து தோன்ற ‘போதரிக்கண்ணினாய்’ என சொல்கின்றனர்.  இதையே பிரித்து நான்கு வகை பொருள்கள் கூறலாம்.

  • போது என்பதை உலாவுகின்ற என்றும் அரி கண்ணினாய் என்பதை மானினுடைய கண் போன்ற கண்ணை உடையவளே என்று ஒரு பொருள் சொல்லலாம்.
  • அரி என்பது ஹரி என்றும், போது என்பது புஷ்பமாய் என்றும், குவளைப்பூவையும் மான் கண்ணையும் ஒத்த கண்ணையுடையவளே என்று இரண்டாவது பொருள் கொள்ளலாம்.
  • அரி என்பது வண்டு என்ற பொருளில், பூவில் படிந்த வண்டு போன்ற கண்ணுடையவளே!’ என்று மூன்றவது பொருளும் கொள்ளலாம்.
  • அரி என்பதை சத்ரு என்ற அர்த்ததில், புஷ்பத்தின் அழகுக்குச் சத்ருவான கண் அழகுடையவளே என்பது நான்காம் பொருள் ஆகும்.

குள்ளக்குளிர என்பது உடம்பு மிகவும் குளிரும்படி மார்கழி மாதத்தில் அதிகாலை காலத்தில் நீராடியதால் என்று கொள்ளலாம்.

இராமன், தந்தை சொல்லை ஏற்றுக்கொண்டு வனவாஸம் சென்ற பின்னர் நந்தி கிராமத்தில் இருந்து ராஜ்ய காரியங்களை நிர்வஹித்த பரதன், நாம் பொழுது விடிந்த பின்னர் ஸரயுவில் குளிக்க சென்றால், நம்மைக் காண்பவர் அனைவரும் “அண்ணனைக் காட்டிற்கு துரத்தின பாவி போகின்றான்” என விரல் சுடுக்கி திட்டுவார்கள் என்று அஞ்சி இரவோடு இரவாக சரயுவிற்கு சென்று நீராடி வருவதுபோல், இந்த ஆச்சியர்களும் ஒரு சிலர் கண் பட யமுனையில் நீராடி சென்றால் ‘உபாய அநுஷ்டானம் பண்ணி, ஸ்வரூப நிறத்தைக் குலைத்துக்கொள்ளும் பாவிகள் போகின்றனர்’ என்று பார்த்தவர்கள் திட்டுவார் என அச்சமுற்று, ஒருவர் கண்ணிலும் படாதபடி நீராடி வரவேண்டும் என்பார், என்பதை “குள்ளக்குளிரக் குடைந்து நீராடாதே பள்ளிக்கிடத்தியோ?” எனப் பாடுகின்றார்.

Leave a comment