கற்றுக் கறவைக் கணங்கள் பல கறந்து* செற்றார் திறலழியச் சென்று செருச் செய்யும்* குற்றம் ஒன்று இல்லாத கோவலர் தம் பொற்கொடியே* புற்றுஅரவு அல்குல் புனமயிலே போதராய்* சுற்றத்து தோழிமார் எல்லாரும் வந்து நின்* முற்றம் புகுந்து முகில்வண்ணன் பேர் பாட*சிற்றாதே பேசாதே செல்வ பெண்டாட்டி நீ* எற்றுக்கு உறங்கும் பொருளேலோர் எம்பாவாய்.
திருப்பாவை 11
கண்ணன் ஊருக்கான ஒரு பிள்ளையாய் அனைவராலும் கொண்டாடப்பட்டு, வளர்ந்து அருளுவதை போல, ஊருக்காக ஒரு பெண்பிள்ளையாய் இருப்பாளாய், கணவனோடு கலவி செய்கைக்குப் பாங்கான பருவம் உடையளாய், கோவலர் தம் பொற்கொடி, அவனைப் பெறுதற்கு நானோ நோற்பேன், வேணுமாகில் அவன் நோற்று வரட்டும் என்று கிடக்கிறாள் ஓருத்தியை உணர்த்தும் பாசுரம், இது.
கன்றாகிய பசுக்களின் பல கூட்டங்களை கறப்பவர்களும் எதிரிகளில் வலிமை அழியும்படி தாமே படை எடுத்துச் சென்று போர் செய்யுமவர்களும் ஒருவகை குற்றமும் அற்றவர்களுமான கோபலர்களுடைய குடியில் பிறந்த பொன் கொடி போன்றவளே, புற்றில் இருக்கின்ற பாம்பின் படம் போலே அல்குல் உடையவளே, காட்டில் இஷ்டப்படி திரிகிற மயிலின் சாயல் உடையவளே, செல்வமுள்ள பெண் பிள்ளாய் எழுந்து வருவாயாக; பந்து வர்க்கத்தை சேர்ந்தவர்களும் தோழிமார்களும் ஆகிய எல்லோரும் இங்கு வந்து உனது திருமாளிகையின் முற்றத்தில் புகுந்து கார் மேக வண்ணன் ஆன கண்ணனுடைய திரு நாமங்களை பாடச் செய்த போதிலும் பெரிய உறக்கம் உடைய நீ அலுக்காமல் ஒன்றும் பேசாமல் உறங்குவது என்ன பயன் கருதியோ, நாம் அறியோம் என்பது இந்த பாடலின் பொழிப்புரை.
உனது உறவு முறையார் தோழிமார் என்ற வர்க்கங்களில் ஒருவர் தப்பாமல் அனைவரும் திரண்டு வந்து எம்பெருமான் திருநாமங்களைப் பாடும் போது, நீ உடம்பிலும் அசைவின்றி, வாயிலும் அசைவின்றி, இப்படி கிடந்து உறங்குவது என்ன பயனைக் கருதியோ என்கின்றனர்.
கற்றுக் கறவைக் கணங்கள் பல கறந்து, செற்றார் திறலழியச் சென்று செருச் செய்யும் என்ற வரிகள் கோவலர்க்கு அடைமொழி.
ராஜகுமாரன் முலைசரிந்த பெண்டிரைப் பாராததை போலக் கண்ணன் கன்றுகளை அன்றிப் பசுக்களைப் பெரும்பான்மையாகக் காண மாட்டாதவன் என்று சொல்வார்கள். இவன் தனது கர ஸ்பர்சத்தினால் பசுக்களையும் கன்றாக்கி அருள்வான் என்று கொள்க. கறக்கும் பருவத்திலும் கன்றுகளாக இருப்பது தெரிய வரும். கன்று மேய்த்து இனிது உகந்த காளை (திருநெடுந்தாண்டகம்.2 ) என்றும், திவத்திலும் பசுநிரை மேய்ப்பு உவத்தி (திருவாய்மொழி 10.3.9) என்றும் வருபவைகளை மனதில் கொள்ளலாம். ரக்ஷய வர்க்கத்தில் கைகால்களை நீட்ட மாட்டாதவர்களை, உகப்பது இவன் சிறப்பு.
கணங்கள் பல என்றதால் கறவைகள் தனித்தனியே எண்ண முடியாதவை மட்டும் இல்லாமல், அவற்றின் திரள்களும் எண்ண முடியாதது என்பது விளங்கும். எண்ணில் பல குணங்கள் என்று சொல்லும் போது, பகவத் குணங்களுக்கு எல்லை இருந்தாலும், இப்பசுக்களுக்கு எல்லை இல்லை என்கிறார். ஈஸ்வரன் ஒருவனே எல்லா ஆத்மாக்களுடையனவும், கர்ம அனுகுணமான நாம ரூபங்களை பண்ணி நியமங்களை செய்வது போல, பசுக்கள் அனேகமாயினும் ஒருவனே அடக்க கறக்க வல்ல சாமர்த்தியம் உள்ளவன் என்று சொல்லப் படுகிறது. அரியது செய்ய வல்ல குடியில் பிறந்தோம் என்று சொல்லாது, உன்னை அல்லாத மற்றவைகளை அறியாத எங்களுக்கு, அரியாததாக இல்லாத ஒன்றை, காண் என்பது போல உள்ளது.
செற்றார் என்றது, எம்பெருமானது மேன்மையைப் பொறுக்க முடியாதவர்கள், எம்பெருமானின் அடியார்களுக்கு பகைவர்கள். எம்பெருமான் அடியவர்களின் மேன்மையைப் பொறுக்க முடியாதவர்கள் எம்பெருமானுக்குப் பகைவர்கள். இந்த இரு வகை பகைமைகளும் கம்ஸனுக்கு உண்டு என்பது, தீய புத்தி கஞ்சனுன் மேற் சினமுடையன் என்ற பெரியாழ்வார் திருமொழியினாலும் (2.2.5), சாதுசனத்தை நலியும் கஞ்சனை என்ற திருவாய்மொழியினாலும் (3.5.5) விளங்கும்.
திறலழிய என்று சொன்னது, ருத்ரன், பிரம்மன், இந்திரன், ஈஸ்வரன் போன்றவர்களை தமக்கு எதிரி என்று நினைத்து இருந்த, கம்சனின் மிடுக்கை அழித்த என்ற பொருளில் வருகிறது.
சென்று செருச் செய்யும், என்று சொன்னது, எதிரிகள் வந்தால் போர் செய்து அழிப்பது அன்றிக்கே, எதிரிகள் இருக்கும் இடம் சென்று போர் புரிவதை சொல்கிறது. எதிரிகள் வந்து ஊரை அடைமதிள் படுத்தினால் அது குற்றம் என்பது போல, நாங்கள் வந்த பின்னும் நீ இன்னும் புறப்படாமல் இருப்பது உனக்கு குற்றம் என்று தெரியவில்லையா என்கிறார்கள்.
குற்றம் ஒன்று இல்லாத என்று சொல்வதில் எதிரிகள் ஆயுதத்தை கையில் கொண்டு வந்தாலும், அழிய நின்றார்கள் என்றாலும், கண்ணனுக்கு முறைபட்டால், ‘செய்தாரேல் நன்று செய்தார் ‘ (பெரியாழ்வார் திருமொழி 4.9.2) என்றபடி பிறந்தவர்கள் என்ற பொருளில் வரும்.
கோவலர்தம் பொற்கொடியே என்று அழைத்ததினால், ஜனகராஜன் திருமகள் ஜானகி, நாம் ஜனக குலத்திற்குப் புகழ் படைத்தாற் போல, இவள் கோவலர் குடியை விளங்கச் செய்பவள் என்பதும், ஒரு கொள் கொம்போடு அணைந்தன்றி நிற்க மாட்டாத கொடி போல ஒரு கணவனோடு புணர்ந்தன்றித் தாரிக்க மாட்டாதவள் என்பதும் தெரியவரும். எங்களோடு கூடி, உனக்கு கொள் கொம்பான கிருஷ்ணனைச் சேரப் பார் என்று உணர்த்துகிறாள்.
புற்று அரவு அல்குல் என்பது புறம்பு புறப்பட்டுத் திரிந்து புழுதி படைத்த உடம்பு உடையவளாய் இருப்பது மட்டுமின்றி, தன் இருப்பிடம் தன்னிலே கிடக்கும் அரவுஅரசின் (ஆதிசேஷன்) படமும் கழுத்தும் போல ஒளியையும், அகலத்தையும் உடைய பிருஷ்டம் உடையவளே என்றதாகும். இவர்கள் தானும் பெண்டிராக இருக்கின்ற போதும், இவளுடைய அல்குலை வருணித்தது நெஞ்சினால் ஆண்மை பூண்டமையால் ஆகும். பெருமாள் ஆண்களையும் பெண்ணுடை உடுக்க செய்வது போலே, பெண்களை ஆண்களாக்குகிறது இவளுடைய அல்குல் என்றது ஆறாயிரப்படி விளக்கம். புற்றுக்குள்ளே அடங்கின பாம்பு போலே நுட்பமான இடையை உடையவளே என்றும் கூறலாம்.
நான் புறப்பட மற்று எல்லாரும் வந்தாரோ என்று அவள் கேட்க, சுற்றத்துத் தோழிமார் எல்லோரும் என்று சுற்றத்தாரும் தோழிமாரும் வந்தார்களா என்கிறாள். புனமயிலே, முகில்வண்ணன் பேர்பாட, நீ எற்றுக்குறங்கும் பொருள் என கூறியது, மயில் முகிலின் பேரைக் கேட்டவுடனே களித்துக் கூத்தாட வேண்டிய, நீ, இப்படி கிடந்து உறங்குவது ஏன் என்கின்றனர்.
சிற்றாதே என்பது அங்கங்களை அசைக்காமல் என்ற பொருளில் வரும்.
பேயார்க்கு முந்தினவரான பூதத்தாரை யுணர்த்தும் பாசுரமிது.
- இதில், குற்ற மொன்றில்லாத கோவலர் தம் பொற்கொடியே என்ற விளி பூதத்தார்க்கு நன்கு பொருந்தும். பல பொருள்களை உடையதான கோ என்னும் சொல் ஸ்ரீ ஸூக்தியைச் சொல்கிறது. கோவலர் என்பது, ஸ்ரீ ஸூக்திகளை அருள வல்லவர்களான ஆழ்வார்கள். குற்றம் ஓன்றில்லாத என்ற விசேடணம் முதலாழ்வார்கள் மூவர்க்கே பொருந்தும் ; கர்ப்ப சம்பந்தம் என்ற ஓரு குற்றம் மற்றை ஆழ்வார்களுக்கு உண்டு; அந்த குற்றம் ஓன்றும் இல்லாத கோவலர் முதலாழ்வார்கள். அவர்களுள் பொற்கொடியே என்பது கோல்தேடி யோடுங் கொழுந்ததே போன்றதே மால்தேடி யோடும் மனம் (இரண்டாம் திருவந்தாதி, 27) என்கிற பாசுரத்தினால் தம்மை ஒரு கொடியாகச் சொல்லிக்கொண்டவர் பூதத்தாழ்வாரே ஆவர்.
- கற்றுக் கறவைக் கணங்கள் பல கறந்து என்பது முதலாழ்வார் மூவர்க்கும் பொதுவான வாசகம். மற்றை ஆழ்வார்கள் பெரிய பாசுரங்கைள யளித்தார்கள். முதலாழ்வார்கள் அங்ஙனன்றிக்கே வெண்பாவாகிய மிகச் சிறிய பாசுரங்களை அளித்தார்கள். பொய்கையாழ்வார் அருளிய திருவந்தாதி கறவைக் கணம்; பூதத்தாழ்வார் திருவந்தாதியும் சேர்ந்து கறவைக் கணங்கள்; பேயாழ்வார் திருவந்தாதியும் சேர்ந்து கறவைக் கணங்கள் பல.
- செற்றார் திறலழியச் சென்று செருச் செய்யும் – தேசமெங்கும் திரிந்து பகவத் விரோதிகளை நிரஸிக்க வேணும் என்கிற அர்த்தத்தை எண்டிசையும் பேர்த்தகரம் நான்குடை யான் பேரோதிப் பேதைகாள்! தீர்த்தகரராமின் திரிந்து (இரண்டாம் திருவந்தாதி 14) என்ற பாசுரத்தினால் வெளியிட்டவர் இவ்வாழ்வாரே.
- புற்றரவல்குல் என்பது இடையழகை வருணிப்பதாகும். ஸ்வாப தேசத்தில் இடையழகாவது பக்தியின் பெருமை. ஞானம் பக்தி விரக்தி என்ற மூன்றில் பக்தியானது இடைப்பட்டதாதலால் இடையழகென்பது பக்தியின் அழகேயாகும். இவ்வாழ்வார் தம்முடைய திருந்தாதியை முடிக்குமிடத்து என்றன் அளவன்றால் யானுடைய அன்பு (இரண்டாம் திருவந்தாதி 100) என்றே முடித்தார். இதனால் இவரது இடையழகு நன்கு வெளிப்பட்டதாயிற்று.
- புனமயிலே! என்ற விளியும் இவர்க்கு அழகாகப் பொருந்தும். இவ்வாழ்வார் தோன்றிய தலமோ திருக்கடல்மல்லை; அதனைப் பாடின கலியன் கடி பொழில் சூழ்கடன் மல்லை (பெரிய திருமொழி 2.5) என்றே பன்முறையும் பாடினர். மயில் மேகத்தைக் காண்பதிலே மிகக் குதூஹலம் அடைவதலால், மேகம் நீர் பருக வரும் இடமான கடற் கரையிலே மயில்கள் மகிழ்ந்து நிற்கும். இவ்வாழ்வார் நின்றவிடமும் கடற்கரையிலே.
- சுற்றுத்துத் தோழிமார் – இவர்க்குப் பொய்கையாரும் பேயாரும் சுற்றத்தவர்கள்; மற்றை ஆழ்வார்கள் தோழிமார்.
- முகில் வண்ணன் பேர் பாட – முந்துற முன்னம் முகில் வண்ணன் பேர் பாடினவர் இவ்வாழ்வாரேயாவர்; உலகேழும் முற்றும் விழுங்கும் முகில்வண்ணன் ஏத்துமென்னெஞ்சு (இரண்டாம் திருவந்தாதி 94) என்ற இவர் பாசுரம். புனமயில் முகில் வண்ணனைத் தானே பாடும்.
Leave a comment