நோற்றுச் சுவர்க்கம் புகுகின்ற அம்மனாய்* மாற்றமும் தாராரோ வாசல் திறவாதார்* நாற்றத் துழாய்முடி நாராயணன் நம்மால்* போற்றப் பறை தரும் புண்ணியனால்* பண்டு ஒரு நாள் கூற்றத்தின் வாய் வீழ்ந்த* கும்பகர்ணனும் தோற்றும் உனக்கே* பெருந்துயில் தான் தந்தானோ ஆற்ற* அனந்தல் உடையாய் அருங்கலமே* தேற்றமாய் வந்து திறவேலோர் எம்பாவாய்.
திருப்பாவை 10
நோன்பு நோற்று சுகானுபாவம் அனுபவிக்கின்ற பெண்ணாய், வாசல் கதவை திறக்காதவர்கள் ஒரு வாய் சொல்லும் கொடுக்க மாட்டார்களா ? வாசம் வீசுகின்ற திருதுழாய் மாலையை அணிந்த திருமுடியை உடைய நாராயணனும் நம்மால் மங்களாசாசனம் செய்யபெற்று நமக்கு புருஷார்தங்களை தந்து அருள்பவனும் தர்மமே வடிவு கொண்டு வந்த இராம பிரானால் முன்பு ஒரு காலத்தில் யமன் வாயில் விழுந்து ஒழிந்த கும்பகர்ணனும் தோல்வி அடைந்து தன் பெரிய உறக்கத்தை உனக்கே தான் கொடுத்து விட்டானோ மிகவும் உறக்கம் உடையவளே, பெறுவதற்கு அரிய ஆபரணம் போன்றவளே, தெளிந்து வா வந்து கதவை திறந்திடு என்பது இந்த பாடலின் பொழிப்புரை.
எல்லோரும் கிருஷ்ண அனுபவத்தில் தங்களை படுத்துவதாக சொல்லும் நேரத்தில், கிருஷ்ணன், ‘தண்ணீர், தண்ணீர் என்று கதறும்படியாக அவனைப் படுத்தும், ஒருத்தியை, வெளியில் இருக்கும் மற்றவர்கள் எழுப்பும் பாசுரம். நேரம் ஆவதற்கு அவனே காரணம் என்றும் அவனிடம் சண்டை போடும், அந்த பெண், கிருஷ்ணன் திருமாளிகைக்கு அடுத்த திரு மாளிகையில், இடை சுவர் இன்றி, அவனுடன் ஒரே படுக்கையில், தண்ணீர் துரும்பு அற்று படுத்து இருப்பவள்.
இவள் நோன்பின் பலன் பெற்று, களைத்து, சித்த சாதனாயாய் இருப்பாள். சித்த சாதனம் என்பது, உபாயத்தில் பிடிப்பு இல்லாமல் இருப்பது; அவனுடைய ரக்ஷகத்துவத்தை நினைத்தால், தான் முயற்சி செய்ய பிராப்தி இல்லை என்று இருப்பது, தன்னுடைய சேஷத்துவத்தை (எம்பெருமானுக்கே அடிமை) நினைத்தாலும் பிராப்தி இல்லை என்று இருப்பது, விரோதி பலத்தை உணர்ந்தாலும் பிராப்தி இல்லை என்று இருப்பது, இதர உபாயங்களுக்கும் அவன் பிரசாதம் தேவை படுவதால், ஒன்றும் செய்ய பிராப்தி இல்லை என்று இருப்பது; எனவே, நாராயணனே என்று அவனையே உபாயமாக அனுசந்தித்து விடிந்த பின் எழுந்து குளிக்க கடவது என்று இருக்கிறாள்; வெளியில் இருப்பவர்களும் இப்படி இருக்க வேண்டியது தானே, என்றால் அவர்கள், பிராப்யத்திலும் (அடைய வேண்டியது) பிடிப்பு ஏற்படாமல் பதறுகிறார்கள்.
எல்லாரும் கூடிக் குளிக்கக் கடவோம், உடன் கூடி நோன்பு நோற்கக் கடவோம். உடன் கூடிக் கிருஷ்ண அநுபவம் பெறக் கடவோம்’ என்று சொல்லி வைத்து, நாங்கள் உணர்த்தவும் உணராதே, கிடந்து உறங்கிய போதிலும், ‘இப்போது கதவைத் திறக்க அவகாசமில்லை’ என்றொரு வாய் பேச்சு சொன்னால் ஆகாதோ? இப்படிபட்ட பெரிய உறக்கம் உனக்கு எப்படி வந்தது ? அந்த காலத்தில் இராமனது அம்புக்கு இலக்காகி மாண்டு ஓழிந்த கும்பகரணன் தனது உறக்கத்தை உனக்குத் தந்து ஓழிந்தானோ? உனக்கு இந்த பெரிய உறக்கம் ஆகாது; நீ ஒருத்தி எங்கள் திரளில் வந்து கூடாததால் இந்த கூட்டம் இருள் மூடிக் கிடக்கிறது வந்து பார் தோழி” என்கிறார்கள்.
நோற்று சுவர்க்கம் புகுகின்ற என்பதற்கு, மூன்று விளக்கங்கள் : ஒன்று, கண்ணனுடைய திருமாளிகைக்கு அடுத்த திருமாளிகையாய் இடைச் சுவர் இல்லாமல் இருப்பதால், கண்ணனோடு இடையில் வீடு எதுவும் இன்றிச் சுகாநுபவம் கிடைப்பதற்கு, முன்பிறவியில் நோற்ற நோன்பின் பயனாக இப்போது கிருஷ்ணாநுபவ சுகம் பெற்று இருக்கிறாள்.
இரண்டாவது, பொழுது விடிந்த பின்னரும் உணர்ந்து எழுந்து வராததால், இப்படி கிடந்து உறங்கினால், நீ நோன்பு நோற்றச் சுகாநுபவம் பண்ணப் போகிறாய், நினைவுக்கும் செயலுக்கும் பொருத்தம் நன்றாக உள்ளது என்று ஏசுவது.
மூன்றாவது, எல்லாரும் கூடி நோன்பு நோற்றுக் கிருஷ்ண அனுபவ ஸுகம் பெறுவோம்’ என்று சொல்லி வைத்து, நீ தனியே நோன்பு நோற்றுச் சுகாநுபவம் பண்ணுவது என்ன தருமம் என வெறுக்கின்றது.
சுவர்க்கம் என்பது இங்கே சுகம் என்ற அர்த்தத்தில் வருகிறது. இடைவிடாமல் சுகத்தை அனுபவிக்கின்ற அனுபவத்தை சொல்கிறது. கிருஷ்ணனே சுக சப்த வாக்கியன் ஆனதால் அவனையே சுவர்க்கம் என்கிறது.
புகுகின்ற என்றது உள்ளே கிருஷ்ண அனுபவ சுகம் நிகழும் மாற்றத்தைக் குறிக்கிறது. இதனால் அநுபவத்தில் இடைவீடு இல்லாதது தெரியும்.
அம்மனாய் என்று கூப்பிடுவதால், தாயே என்ற பொருளில், நீ இப்படி தனியே ஸுகாநுபவம் பண்ணுவது உன் பெருமைக்குப் பொருந்துமே தவிர நம் தோழமைக்குத் தகாது என்று சொல்லும்.
‘நாம் கிருஷ்ணாநுபவம் பண்ணுவதாக இவர்கள் பழி சொல்கிறார்கள். இத்தருணத்தில் நாம் இவர்களுக்கு மறு மொழி கூறுதல் தகாது’ என்ற நினைவில் அவள் பேசாதே கிடந்தாள்; அவளது கருத்தை அறியாத இவர்கள், தாங்கள் வெளியே நின்று துவள்கிற துவட்சி பொறுக்க மாட்டாமல், “மாற்றமுந் தாராரோ வாசல் திறவாதார்” என்கிறார்கள். நீ வாயைத் திறவாதொழியினும் கதவையாகிலும் திறக்கலாகாதோ என்று கேட்கிறார்கள். உன் உடம்பைக் கிருஷ்ணனுக்குத் தந்தால், உன் பேச்சை எங்களுக்குத் தரலாகாதோ என்றும் கருத்து சொல்வார்கள்.
நாற்ற துழாய் முடி நாராயணன் என்று சொன்னது, ஆசைபட்டவர்களை ரக்ஷிப்பதாக தோளில் மாலை இட்டு இருப்பவன் என்று சொல்கிறார். நாராயணன் என்பதற்கு விட்டு போகாத பேறு அன்றோ அது; உகவாதார்க்கும் சத்தையை நோக்க துணை புரியும், உகாந்தார்க்கும் வத்சலமானவன் அன்றோ அவன்; ஆசைபட்ட உன்னை விடுவானோ என்று விளக்கம் கொடுக்கிறார்.
போற்ற என்பதற்கு குடிபிறப்பு இருக்கும்படி பல்லாண்டு பாடுபவர்கள் என்கிறார்.
புண்ணியனால் என்பதற்கு, ஆசை உள்ளவர்கள் தன்னை பெறுவதற்கு ருசி பிறப்பிப்பவனும், உபாயமும்(வழியும்), பிராப்பியமும் (அடைய வேண்டியது) ஆக இருப்பவன் என்று விளக்கும் கொடுக்கிறார்.
இவர்கள் இப்படி நம் மீது பழியிட்டு கூவுகின்றார்களே என்று உணர்ந்த அவள், “தோழிகளே நீங்கள் நெடுநேரமாக இப்படி என் மீது பழி போடுவது ஏன், கண்ணன் இங்கு இல்லையே” என்று சொல்ல, அது கேட்ட இவர்கள் அம்மா, நீ மறைத்தாலும் திருத்துழாய் மணம் அவன் இருப்பை சொல்கிறதே என்றனர். அதற்கு அவள், “அவன் இப்போது இங்குக் கிடந்தால் தான் துழாய் மணம் நாறும் என்று கருதுகிறீர்களோ, ஒருகால் அவன் அணைத்து விட்டால் அந்நாற்றம் நூறு குளிக்கு நிற்கும் என்பதை நீங்கள் அறிய மாட்டீர்களா? என்று சொல்கிறாள். அவர்கள் “அவன் எங்களைப் போலக் கதவு திறக்கும் வரை காத்திருக்கவேணுமோ? அவன் நாராயணன் என்பதை நாங்கள் அறியமாட்டோமா, அல்லது நீ தான் அறிய மாட்டாயா ? அவன் வியாப்திக்குப் (எங்கும் விரிந்து பரந்து) பிரயோஜனம் என்னாகும்?” என்று இவர்கள் சொல்ல; அவள் வாய்திறவாதே கிடந்து உறங்குமவள் போலப் பாவனை செய்தாள்; குறட்டைவிட்டாள்; அதனைச் செவியுற்ற இவர்கள், ‘அம்மா! கும்பகரணனும் உனக்குத் தோற்றுத் தனது உறக்கத்தை உனக்கே தந்தொழிந்தனனோ’ என்கிறார்கள். அவனதோ துயில்; உன்னதோ பெரும் துயில் என்கிறார்.
“ஸ்ரீ பரசுராமனை வென்று பெருமாள் (ராமபிரான்) அவன் கையில் வில்லை வாங்கினாற் போலே, நீயும் கும்பகர்ணணை வென்று நித்திரையைக் கைக்கொண்டாயோ” என்பது ஆராயிரப்படி விளக்கம்.
“காண்காணென விரும்பும் கண்கள்” என்று ஒரு நொடிப் பொழுதும் கண் மூடி இருக்க மாட்டாமையைச் சொல்லிக் கொண்ட நீர் கும்பகர்ணனுக்கும் மேலாக இன்னமும் துயில் கொள்ளல் தகுதியோ என்கிறாள்.
கூற்றத்தின் வாய்வீழ்ந்த என்று சொல்வதானால், தன்னால் சிறையில் அடைக்கப்பட்டிருந்த யமனுடைய வாயில் வீழ்ந்தான் என்பது விளங்கும். கூற்றம் என்பது, உடலையும் உயிரையும் வேறு கூறாக்குபவன், யமன். “வாய்விழுந்த” என்றும் கூறுவர்.
இராமபிரானை புண்ணியன் என்று கூறுகிறார்.
இனி வெளியில் சென்று முகங்காட்டுவோம்’ என்று எண்ணி, தான் உணர்ந்தமை தோற்றச் சோம்பல் முறித்தாள்; அதனை உணர்ந்த இவர்கள் வியந்து, “ஆற்ற அனந்தலுடையாய்!” என்று அழைக்கின்றனர். அவள் தங்கள் திரளில் வந்து கூடினால் நவரத்ன மாலையில் நாயகக் கல் அழுத்தினால் போல் என்று கருதி, அருங்கலமே! என்கிறார்கள். நாயக மணி இல்லாத ஹாரம் போல் இவர்கள் கூட்டம் இருள் மூடிக் கிடக்கிறது; இதனை நீ வெளிச்சமடைய வாராய் என்று அழைத்தனர்.
அவள் துணுக்கென்று புறப்பட, அதை அறிந்த இவர்கள், “தேற்றமாய் வந்து திற” என்கிறார்கள். புறப்பட்டு தடுமாறாதே தெளிந்து வந்து திற என்று சொல்கிறார்கள்.
பஞ்சவடியில் பிராட்டியைப் பிரிந்த இராமபிரான் கிஷ்கிந்தையில் புக்கு சுக்ரிவ மஹாராஜனை நண்பனாகக் கொண்டு வாலியை வதை செய்து மால்யவத் பர்வதத்தில் கார்காலத்தைக் கழித்தபோது, ‘சுக்ரிவன் சத்தியம் செய்தபடி இது வரை படை திரட்டிக் கொண்டு போருக்குப் புறப்பட வில்லை’ என்ற அளவற்ற சீற்றத்தினால் இளையபெருமாளை (லக்ஷ்மணனை) அழைத்து ஆணை இட, அவரும் சுக்ரிவனது பள்ளியறை வாசல் வரை சென்று நாணொலியை எழுப்ப, அவரது சீற்றத்தைத் தணிக்கக் கருதிய தாரை வெளிவரும் போது, ஸம்போக லக்ஷணங்களை மறைத்திடாது, அரை குலையத் தலை குலைய வந்தது போல வராதே, இந்த கூட்டத்தில் உன்னை நியமிக்கக் கடமைப்பட்ட குருகுல மாதரும் இருக்கிற படியால், ஸதஸ்ஸில் வருகைக்கு உரிய கோலத்துடன் வந்து திறவாயாக என்கிறார்கள்.
“ஊராகத் திரண்டு கிடக்கிறது; அவர்களிலே உன்னையும் நியமிக்க வல்லாரும் உண்டு’ அவர்கள் முன்னே படுக்கையில் சாய்ந்தபடியே வராதே, உன்னைப் பேணிக்கொண்டு வந்து திற” என்கிறார்கள்.
ஊற்றமுடைய மஹாநுபாவரை உணர்த்துதல் இப்பாட்டுக்கு உள்ளுறை பொருளாகும். அருங்கலமே என்றது, எம்பெருமானது திருவருளை மிக அருமையாகப் பெற்ற ஸத்பாத்ரமே என்பதாகும்.
திருமழிசை யாழ்வாருக்கு முந்தினவரான பேயாழ்வாரை யுணர்த்தும் பாசுரமிது.
- ஓடித்திரியும் யோகிகளாய் ஒருவரோடு ஒருவர் சேராமல் ஸஞ்சரித்துக் கொண்டிருந்த பொய்கையார் பூதத்தார் பேயார் இம்மூவரையும் ஒன்று சேர்த்து அநுபவிக்கக் கருதிய எம்பெருமான் ஒரு பெருமழையை காரணமாகக் கொண்டு திருக்கோவலில் இடைகழியில் நெருக்கி அநுபவித்தான் என்பது வரலாற்றின் சுருக்கம். இப்பேயாழ்வாரைப் பற்றித் திருவரங்கத்தமுதனார் நூற்றந்தாதியில் அருளிச் செய்யுமிடத்து “மன்னிய பேரிருள் மாண்டபின் கோவலுள் மாமலராள் தன்னோடு மாயனைக் கண்டமை காட்டும் தமிழ் தலைவன்” (10) என்றார். பொய்கையாரும் பூதத்தாரும் இருவிளக்கேற்றி இருளை அகற்ற, இவ்வாழ்வார் “திருக்கண்டேன் பொன்மேனி கண்டேன்” (மூன்றாம் திருவந்தாதி 1) என்று தொடங்கிப் பல பாடல்கள் அநுபவம் செய்தருளினார் என்பர். அந்த அர்த்தமே இங்கு முதலடியில் விளங்கும்.
- நோற்று – மற்றை இரண்டு ஆழ்வார்களும் விளக்கேற்றுகை செய்வது என்றபடி.
- சுவர்க்கமாவது ஆனந்த அநுபவம்.
- “வாசல் திறவாதார்” என்றது பேயாழ்வார்க்கு மிகவும் பொருத்தமான உதாரணம். திருக் கோவில் இடைகழியில் பொய்கையார் முன்னே புகுந்து தாளிட்டுக் கொண்டார்; பிறகு பூதத்தார் வந்து சேர அவர்க்கு அப்பொய்கையார் வாசல் திறந்தார். பிறகு வந்து சேர்ந்த பேயார்க்குப் பூதத்தார் வாசல் திறந்தார். இந்த பேயாழ்வர்க்குப் பிறகு ஒருவரும் வந்து புகாமையினால் வாசல் திறக்க வேண்டியதில்லை. ஆகவே வாசல் திறவாதார் என்றது பேயாழ்வார்க்கு மிகப்பொருத்தமாக அமைந்த குறிப்பு.
- நாற்றத்துழாய்முடி நாராயணன் – இவ்வாழ்வாருடைய பாசுரங்கள் திருத்துழாய் மயமாகவே இருக்கும். திருக்கண்டேனுக்கு அடுத்த பாசுரம் “பொன் தோய்வரை மார்பில் பூந்துழாய்” (மூன்றாம் திருவந்தாதி 2) என்பது. அதற்கடுத்த பாசுரம் “மலராள் தனத்துள்ளான் தண்டுழாய் மார்வன்” (மூன்றாம் திருவந்தாதி 3) என்பது. முடிவு பாசுரத்திலும் “தண்டுழாய்த் தார் வாழ் வரை மார்பன்” என்றார்.
- இடையிலும் பல பாசுரங்கள் காண்க.
- நாமம் பல சொல்லி நாராயணா என்று, * நா அம் கையால் தொழுதும் நன்னெஞ்சே – வா,மருவி * மண்ணுலகம் உண்டு உமிழ்ந்த வண்டு உறையும் தண்டுழாய், * கண்ணனையே காண்க நங் கண். (மூன்றாம் திருவந்தாதி 9) இந்த பாடலில் நாராயணனையும் திருத்துழாயையும் கண்ணனையும் சேர்த்துப் பாடினார் பேயார். இதுவும் ஒரு சிறந்த பொருத்தம்.
- “காண்காணென விரும்பும் கண்கள்” (மூன்றாம் திருவந்தாதி 35) என்று ஒரு நொடிப் பொழுதும் கண்மூடியிருக்க மாட்டாமையைச் சொல்லிக்கொண்ட நீர் கும்பகர்ணனுக்கும் மேலாக இன்னமும் துயில் கொள்ளல் தகுதியோ என்கிறாள். இப்பாட்டில் நட்ட நடுவில் இராமபிரானுடைய திவ்ய சரித்திரம் ஓன்றை ஆண்டாள் அமைத்தது போலவே பேயாழ்வாருடைய திருவந்தாதியில் நட்ட நடுவில்; “அவனே – இலங்காபுரம் எரித்தான் எய்து” (மூன்றாம் திருவந்தாதி, 51) என்றும் “எய்ததுவும் தென்னிலங்கைக் கோன்வீழ” (மூன்றாம் திருவந்தாதி 52) என்றும் அருளிச்செய்தது ஆகும்.
- திருமழிசையாழ்வாரை உணர்த்தின் பாட்டில் அனந்தலோ என்று வெறும் அனந்தலே சொல்லிற்று. இப்பாட்டில் ஆற்றல் அனந்தலுடையாய்! என்கிறது – திருமழிசை ஆழ்வாருக்கு இவ்வாழ்வார் ஆசாரியார் ஆதலால் அனந்தல் அழகு படுத்தப்பட்டது என்கிறார்.
- அருங்கலமே! என்றது, எம்பெருமானது திருவருளை மிக அருமையாகப் பெற்ற ஸத்பாத்ரம் என்றபடி. பாசுரம் தொடங்கும் போதே “திருக்கண்டேன் பொன்மேனி கண்டேன்” என்று ஆனந்தமாகத் தொடங்கப் பெற்ற பகவத் பரமக்ருபா பாத்ரபூதர் மற்றொரு ஆழ்வாரில்லையே.
- தேற்றமாய் வந்துதிற உம்முடைய திருநாமமோ பேயார்; பேய்த் தனமாக வாராமல் தேறி வந்து திறவும் என்கிறாள்.
Leave a comment