திவ்ய பிரபந்தம்

Home

T9 தூமணி மாடத்து

திருப்பாவை 9

கண்ணன் வந்த போது வருகிறான் என்று அநாதரித்து கிடக்கும் ஒருத்தியை இந்த பாடலில் எழுப்புகிறார்கள். இவள் நினைவு, தன்னுடைய ஸ்வரூபத்தை உணர்ந்து அனுபவிக்க வேண்டியதும் அவன் காரியம் ஆயிற்றே என்பது தான். வெளியே இருப்பவர்கள் இளைய பெருமாளை (லக்ஷ்மணன்) போலவும், முக்தி அடைந்தவர்கள் போலவும், உள்ளே இருப்பவள், நித்ய சித்தர் போலவும் உள்ள ஒருத்தியை எழுப்புகிறார்கள்.

பரிசுத்தமான மாணிக்கங்கள் பொருத்தப்பட்ட மாளிகையில் நான்கு புறமும் விளக்குகள் எரிய, வாசனை பொருட்கள் மணம் கமழவும் மென்மையான படுக்கையின் மீது நித்திரை செய்யும் மாமன் மகளே, மாணிக்க கதவினை திறப்பாயாக. மாமி உள்ளே உறங்குகிற உங்கள் மகளை எழுப்ப மாட்டீர்களா? உங்கள் மகள் வாய் மற்றும் செவி அற்றவளா, பெருறக்கம் கொண்டவளாக இருப்பவளோ ? பெரிய படுக்கையில் காவல் இடப்பட்டு உள்ளாளோ? அல்லது மந்திரத்தால் கட்டப்பட்டு உள்ளாளோ ? எண்ணற்ற ஆச்சரியமான செய்கைகளை உடையவனே, திருமகள் கேள்வனே, வைகுந்த நாதனே, என்று பற்பல நாமங்களை சொல்லியும் உன் மகள் இன்னும் உணரல் ஆகாதா? என்பது இந்த பாடலின் பொழிப்புரை.

சுற்றும் விளக்குகள் விளங்கப் பெற்றுத் தூபங்கள் மணம் வீச பெற்ற நன்மணி மாடத்தில் மெல்லணை மேல் கண் துயில்கின்ற மாமான் மகளை நோக்கி “மணிக்கதவம் தாள் திறவாய்” என்று வெளியே நிற்பவர்கள் சொல்கிறார்கள். அவள் அதனைக் கேட்டும் மறுமொழி ஒன்றும் கூறாதவளாய் இருக்கிறாள். அப்படி கிடப்பதைக் கண்ட அவள் தாயார் “இத்தனை பெண்பிள்ளைகள் வருந்தி வாசலிலே நின்று துவள, இவள் ஒரு பேச்சும் பேசாதே உறங்குவது என்ன நீதி!’ என்று நினைக்கிறாள்.

இந்த தாயின் நெஞ்சில் கொண்ட இரக்கம் முகத்திலே தோன்றும்படி இருப்பதை பார்த்த ஆச்சியர்கள், ‘மாமீர்! அவள் ஓருத்தி எங்கள் திரளில் சேராமையாலே நாங்கள் படும்பாட்டை பாருங்கள்; உமது மகளைச் சிறிது உணர்த்தல் ஆகாதா, நாங்கள் நெடு நேரமாக நின்று கூவும் போதும், இவள் மாற்றம் ஒன்றும் இல்லாமல் இருக்கிறாள்;

  • இவள் ஊமையா,
  • செவிடா,
  • பெரிய உறக்கம் பிடித்தவளா, அன்றி
  • இவள் எழுந்து இருக்கக் கூடாது என்று யாரேனும் படுக்கையில் காவலில் இடபட்டு இருக்கிறாளா அல்லது
  • மந்திரத்தினால் ஸர்ப்பத்தைத் கட்டுவது போல், இவள் படுக்கையில் இருந்து எழுந்திருக்க முடியாதபடி யாரேனும் செய்து விட்டார்களா?

எங்களுக்கு என்ன என்று தெரியவில்லை என்று சொல்கிறார்கள். இதனைக் கேட்ட தாயார் ‘நீங்கள் அப்படி ஒன்றும் சந்தேகிக்க வேண்டாம். பகவான் நாமங்களை சொல்ல தொடங்கினீர்கள் ஆனால், அவள் தன்னடையே உணர்ந்து எழுந்து வருவாள்’ என்று சொல்ல, அப்படியே நாங்கள் பல பகவான் நாமங்கள் சொல்லியும், இன்னும் யாம் என்ன செய்யவேண்டும்’ என்கிறார்கள்.

ஸ்வாமி நம்மாழ்வாருக்கு முந்தினவரான திருமழிசைப்பிரானை உணர்த்தும் பாசுரமிது.

  • இதில் மாமான் மகளே என்ற விளி ஒருவகையான தேஹ ஸம்பந்தத்தில்  நோக்குடையது.  ஆண்டாளுக்கும் திருமழிசை யாழ்வார்க்கும் ஒரு வகையான தேஹஸம்பந்தமுண்டு. ஆண்டாள் ஸாக்ஷாத் ஸ்ரீமஹாலக்ஷ்மி ஆவாள். லக்ஷ்மி (ஆண்டாள்) ப்ருகு குலத்தில் தோன்றியவள்.  திருமழிசைப்பிரானும் ப்ருகு குலத்தில் தோன்றியவர். இத்தகைய குலஸம்பந்தம் இங்கு நோக்கத்தக்கது. 
  • ஆழ்வார் ரிஷி குலத்திலே பிறந்து பிரம்பன் குடியிலேயானார் அவர்.  ஆண்டாள் ப்ராஹமண குலத்திலே பிறந்து கோபாலர் குலத்திலே குடி புகுந்தாள். இதுவும் ஒற்றுமை நயம். 
  • தூமணி மாடத்து என்பதைப் பார்ப்போம். சிறந்த மாணிக்கக் குப்பியின் உள்ளே உள்ளது வெளியில் நிழலிட்டுத் தோன்றும்.  திருமழிசைப்பிரான் “உட்கிடந்த வண்ணமே புறம் பொசிந்து காட்டிடே” என்று வேண்டிட, உள்ளிருந்த திருமால் அப்படியே வெளியிற் பொசிந்து காட்சி தந்தமையால், இந்த ஆழ்வார், தூமணிமாடம் என்று சொல்ல தகுதியுடையார். 
  • சுற்றும் விளக்கெரிய என்பதைப் பார்ப்போம். விளக்காவது ஞானம் ஆகிய ஓளி.  “சாக்கியங் கற்றோஞ் சமணம் கற்றோம் சங்கரனாராக்கிய ஆகமநூல் ஆராய்ந்தோம்,” என்றபடி இவ்வாழ்வார் ஸகல மதங்களிலும் புகுந்து ஞான விளக்கம் பெற்றவர் ஆதலால் ‘சுற்றும் விளக்கெரிதல்’ இவர்க்கு அஸாதாரணம்.  “யானறிந்தவாறு – ஆரறிவார்” (நான்முகன் திருவந்தாதி 3) என்றும் “என் மதிக்கு விண்ணெல்லாமுண்டோ விலை” (நான்முகன் திருவந்தாதி 51) என்றும் இவரது பாசுரங்களினாலும் இது விளங்கும். 
  • தூபம் கமழ என்பதைப் பார்ப்போம். சிறந்த ஞானமிருத்தல் மாத்திரம் பயன்படாது; அது நன்கு பரிமளிக்கவேண்டும்.  எம்பெருமானையன்றி வேறொரு தெய்வத்தைத் தொழாதிருத்தலே ஞானத்திற்குப் பரிமளம்.  “மறந்தும் புறந்தொழா மாந்தர்” (நான்முகன் திருவந்தாதி 68) என்பது இவ்வாழ்வாருடைய திருவாக்காகும். 
  • துயிலணை மேல் கண்வளரும் என்பதைப் பார்ப்போம். இந்த ஆழ்வாருடைய திருக்கண் செல்வது சயனத்திருக்கோலமான எம்பெருமான்களின் மீது தான்.  கச்சி வெஃகாவிலும் திருக்குடந்தையிலுமே பெரும்பாலும் இவர் காலம் கழித்தது.  சயனத்திருப்பதிகளையே ஒரு கோர்வையாக எடுத்துப் பாசுரம் பாடினவரும் இவ்வாழ்வார்; நாகத்தணைக் குடந்தை வெஃகாத் திருவெவ்வுள் நாகத்தணையரங்கம் பேர் அன்பில் – நாகத்தணைப் பாற்கடல் கிடக்கு மாதி நெடுமால், அணைப்பார் கருத்தனவான்” (நான்முகன் திருவந்தாதி 36) என்றது. 
  • துயிலணை மேல் கண்வளரும் மாமானுடைய மகளே என்பதைப் பார்ப்போம். துயிலணைமேல் கண்வளரும் மாமான் யதோக்தகாரி எம்பெருமான்; அப்பெருமாள் இவ்வாழ்வார் சொற்படி கேட்டவர்; ‘   இனி, துயிலணைமேற் கண்வளரும் மாமான் – ஆராவமுதன்; அப்பெருமாளும் “எழுந்திருந்து பேசுவாழி கேசனே” (திருசந்தவிருத்தம் 61) என்ற இவ்வாழ்வாரது வேண்டுகோளின்படி எழுந்திருந்தவர் என்பது ப்ரஸித்தம். 
  • உன் மகள் தான் ஊமையோ என்பதை பார்ப்போம். வாய் திறவாமலே கை கால்கள் அபிநயங்களால் காரியம் செய்வது ஊமைகளின் பணி.  இவ்வாழ்வாரும் யாத்திரையின் போது பெரும்புலியூரென்னும் கிராமத்தில் ஒரு வேதியன் வீட்டுவாசல் திண்ணையில் சிறிது பொழுது எழுந்தருளியிருக்க அங்கு வேதமோதிக்கொண்டிருந்த அந்தணர்கள் நீறுபூத்த நெறுப்புப் போலுள்ள ஆழ்வாருடைய மஹிமையைத் தெரிந்துகொள்ளாமல், அவரைக் கீழ்ச்சாதியராக எண்ணி, வேத சொல்வது அவருடைய காதில் படலாகாது என்று கருதி வேதம் ஒதுவதை நிறுத்தி வைக்க, அதனை அறிந்த ஆழ்வார் அவ்விடத்தை விட்டுத் தூரத்திற்கு சென்று வேறோறு வீட்டு மேடையில் வீற்றிருக்கையில் அந்த வேதியர்கள் மீண்டும் வேதம் ஓதத் தொடங்கி, விட்ட வாக்கியம் தோன்றாது மயங்கி நிற்க, ஆழ்வார் அது கண்டு கறுப்பு நெற்களைக் கை நகத்தாலே இடந்துபோட, அப்பொருளுள்ள வேதவாக்கியம் அவர்களுக்கு ஞாபகம் வந்தது. உடனே அவர்கள் ஆழ்வார் மேல் மரியாதை தோன்ற அவரை உபசரித்து வணங்கினார்கள் என்பது சரித்திர வரலாறு.  இப்படி வாய் திறவாமலே, செய்கையினால் காட்டினது, ஊமையோ என்றது. 
  • இனி, ஏமப்பெருந்துயில் மந்திரப் பட்டாளோ என்பதைப் பார்ப்போம்.   “பிதிரும் மனமிலேன் பிஞ்ஞகன் தன்னோடு எதிர்வன், அவன் எனக்கு நேரான்” (நான்முகன் திருவந்தாதி 84) என்னும் படியான திருநா வீறு இவருக்கே உரியது. இது தான் பெருந்துயில், எம்பெருமானை ஓழிந்த மற்றையோரைக் கண் கொண்டு பாராமையில் பெருமை.
  • மாமாயன் என்பதைப் பார்ப்போம். “மாயமென்ன மாயமே” (திருச்சந்தவிருத்தம் 40) என்றும், “மாய மாயம் ஆக்கிகனாய் உன் மாய முற்று மாயமே” (திருசந்தவிருத்தம் 41) என்றும் பலகாலும் எம்பெருமானது மா மாயங்களைப் பேசுகிறவர் இவ்வாழ்வார். 
  • இப்போது மாதவன் என்றதனை பார்ப்போம். “மாதவனை ஏத்தாதார் ஈனவரே” (நான்முகன் திருவந்தாதி 6) என்றவரும் இவ்வாழ்வாரே, “திருவில்லாத் தேவரைத் தேறேன்மின் தேவு” (நான்முகன் திருவந்தாதி 53) என்றதும் காணலாம். 
  • இப்போது வைகுந்தன் என்றதனைப் பார்க்கலாம். “வைகுந்தச் செல்வனார் சேவடிமேல் பாட்டு” (நான்முகன் திருவந்தாதி 75) என்றவர் இவ்வாழ்வாரே.  வைகுந்தனது சேவடிமேல் தாம் பாசுரம் பாடினவராகச் சொல்லிக்கொண்டார்.  ஆகவே, மாமாயன், மாதவன், வைகுந்தனென்ற திருநாமங்கள் இவ்வாழ்வார்க்குப் பரம போக்யங்கள் என்பது விளங்கும்.

Leave a comment