திவ்ய பிரபந்தம்

Home

T8 கீழ் வானம்

திருப்பாவை 8

எல்லோரும் திரண்டு வந்து அழைக்க வேண்டும்படி கண்ணனுக்கு மிகவும் அந்தரங்க வல்லபையாக இருப்பாள் ஒருத்தியை உணர்த்தும் பாசுரம் இது.

கிருஷ்ணனுக்கு மிகவும் விரும்பத் தக்க பதுமை போன்றவளே கிழக்கு திசை வானமானது வெளுத்தது; மேலும் எருமைகள் (பனிப்புல் ) மேய்வதற்காக வீட்டு தோட்டங்களில் புகுந்தன. போவதே பயனாகக் கொண்டு போகின்ற எல்லா பெண்களையும் போக விடாமல் தடுத்து உன்னை அழைத்தன் பொருட்டு உன் மாளிகையின் முன் வந்து நின்றோம். எழுந்திரு; கண்ணனின் குணங்களை பாடி பறை வேண்டு; கேசி என்னும் அசுரனின் வாயை கீண்டு எறிந்தவனும், மல்லர்களை மாளச் செய்த அந்த தேவனை நாம் அணுகி அடி பணிந்தால் அவன் நமது குறைகளை ஆராய்ந்து, இரங்கி அருள்வான் என்பது இந்த பாடலின் பொழிப்புரை.

பாவாய்! கீழ்வானம் வெள் என்றதே; இனியாகிலும் எழுந்திராய் என்றழைக்க, இதனைக் கேட்ட அவள், அதற்குள் இராக்காலம் கழிந்ததோ, கீழ் வானம் வெளுக்கை யாவது என்ன ? நீங்கள் நெடுநேரமாக கீழ்த் திசையை நோக்கிக் கொண்டு இருக்கையாலே உங்களுடைய முக நிலா கீழ்த்திசையில் சென்று திரும்பி உங்கள் முகத்திலே வந்து பிரதிபலித்து தோன்றுகையாலே கிழக்கு வெளுத்தது போலத் தோற்றுகிறது; வேறு அடையாளம் இருந்தால் சொல்லுங்கள் என, எருமைகள் பனிப் புல் மேய்கைக்காகச் சென்றது அடையாளம் என்கிறார்கள். ‘திருவாணை நின்னாணை கண்டாய்‘ (திருவாய்மொழி 10,10.2) என்று கூறவும் வேண்டுமோ என்று கேட்கிறார்கள்.

சிறு வீடு மேய்கையாவது ஊர்ப்பசுக்களுடனே சென்று வெளி வயல்களில் மேய்வதற்கு முன்னே அவரவர்கள் சொந்தமாக அமைத்த நல்ல பசும்புல் நிறைந்த சிறு தோட்டங்களில் மேய்கை.  நன்றாகப் பால் தருவதற்காக இப்படி சிறு வீடு மேய விடுதல் ஆயர் வழக்கம்.

அவை மெய்யே எருமைகளல்ல; இது உங்களுடைய விபரீத ஞானம் என்று சொல்ல, அது கேட்ட இவர்கள், பொழுது விடிய வில்லை என்பதற்கு அடையாள உண்டாகில் நீ சொல்லாய் என்று சொன்னார்கள். திருவாய்ப்பாடியில் அஞ்சுலக்ஷம் குடிப் பெண்களுண்டு: இப்போது இங்கு வந்துள்ள பெண்கள் ஆயிரத்துக்கு மேற்பட்டு இருக்க மாட்டார்கள். மற்றவர்களும் உணர்ந்து வர வேண்டாவோ? அவர்கள்  உணர்ந்து எழுந்து வாராமை, விடியாமைக்கு அடையாளமாகக் கொள்ளலாம் என்றாள். இவர்கள், உன்னை ஓழிந்த பெண்டிர் அனைவரும் உணர்ந்து எழுந்து புறப்பட்டுப் பாவைக்களத்தை நோக்கிச் செல்ல, உன்னைத் தவிர்த்துச் செல்லுதல் உரியதன்று என்று, உன்னை அழைப்பதற்காக உன் மாளிகை வாசற்கடையிலே வந்து படுகாடு கிடக்கின்றோம் என்கிறார்கள்.

உத்தேச்யமானதொரு ஸ்தலத்தைச் சென்று சேர்வதை காட்டிலும், அத்தலத்தை நோக்கிச் செல்லுகைதானே, அர்ச்சிராதிகதி போல், போக ரூபமாக இருக்கும். போவான் போகின்றாரை என்பதற்கு அதே போல அர்த்தத்தை எடுத்து கொள்ளலாம்.

இப்படி இத்தனை ஆய்ப்பெண்டிரும் இவள் மாளிகை வாசலில் வந்து துவள்வதற்கு காரணம், இவள் கண்ணனுக்கு மிகவும் அந்தரங்க வல்லபையாய் இருப்பது, இதனை கோதுகலமுடை பாவாய் என்று அழைப்பதில் இருந்து தெரிந்து கொள்ளலாம். கோதுகலம் என்பது ஆசை. கண்ணனிடம் ஆசையைத் தன்னிடத்துப் பெற்றுள்ள பாவை என்பது இதன் அர்த்தம்.

ஸர்வசேஷியான எம்பெருமான் சேஷபூதர் இருக்குமிடத்தே வந்து அருள் புரியக் கடமை உடையனாய் இருந்து, அவன் அப்படி செய்யாது இருந்தால், நாம் நம் ஸ்வரூபத்தைக் குலைத்துக் கொண்டாகிலும் அவனிருக்கும் இடத்திற்கு சென்று சேவித்தால், அவன் நம் காரியத்தை நாம் செய்யத் தவறினோமே; அன்ன நடை அணங்குகளை கஷ்டப் படுத்தினோமே என்று, தான், இரக்கம் கொண்டு நம் காரியத்தைச் செய்து முடிப்பான். எல்லாருமாகத் திரண்டு, எழுந்து வா என்று அழைக்கின்றனர்.

எழுந்திருந்து நாம் பெறபோகின்ற பலன் என்ன என்று கேட்டு, கிருஷ்ண திரு நாமங்களை வாயாரப் பாடியதே ஒரு பலன் என்றும், பறை கொண்டு என்பதை, நாட்டிற்கு பறை கொண்டு என்றும், தங்களுக்கு கைங்கரியம் கொண்டும் என்பதை மற்றொரு பலன் என்றும் சொல்வார்கள்; மாவாய் பிளந்தானை என்பதை தங்களுடைய விரோதிகளை அழித்தவனே என்றும், மாவாய் என்பதை விரோதிகள் நாம் தீர்ந்தோம் என்று விழுவதை சொல்லியும் , மல்லரை மாட்டிய என்பது கண்ணனுடைய வீர சரித்திரங்களை பேசியும், தேவாதி தேவனை என்று சொல்லும்போது, அப்படிப் பட்ட மேலான உயர்ந்தவனை என்றும் சொல்கிறார்கள். 

அப்படிபட்டவர் அபலைகளான நம்மை பார்ப்பவரோ என்றால், அப்படி பார்த்தால் அது எப்படிப்பட்ட பேறு என்று அவனை சென்று சேவித்தால், அவன் நம் காரியம் முடிக்காமல் இருப்பானா என்கிறார்கள். அப்படி செய்யாமல் இருந்தால் பரதாழ்வான் பட்டது நாமும் பாடுவோம் என்கிறார். மேலே சொன்னவை எல்லாம் நமக்கு இல்லை என்றாலும், ஆர்த்தி கண்டால் காகத்துக்கு இரங்கியவன் (காக்காசுர வரலாறு), நமக்கு இரங்காமல் போவானோ என்றும் (ஆவா வென்று ஆராய்ந்து அருளேலோர்) சொல்கிறார்.

குலசேகரர்க்கு முந்தினவரான நம்மாழ்வாரை உணர்த்தும் பாசுரமிது. 

  1. கோதுகலமுடைய பாவாய்‘ என்ற விளி நம்மாழ்வாரை வற்புறுத்தும்.  வடமொழியில் கௌதூஹலம்  என்ற சொல் தமிழில் கோதுகலமெனத் திரிந்தது.  கோதுகலம் உடைக்குட்டனேயோ (பெரியாழ்வார் திருமொழி 2.9.6) என்றார் பெரியாழ்வாரும்). கோதுகலமாவது ஆசை; ‘ஆசையையுடைய’ என்றது எம்பெருமானிடத்தில்  ஆசையையுடைய அல்லது எம்பெருமானுடைய ஆசையைத் தன்னிடத்திலே கொண்டுள்ள  என்று இருவகையாகவும் பொருள்படும்.  பட்டர் நம்மாழ்வாரைப் பற்றிப் பேசும்போது ‘க்ருஷ்ண த்ருஷ்ணா தத்வம்’ என்று க்ருஷ்ண குதூஹலமே  நம்மாழ்வாராக வடிவெடுத்தது என்றார். இதனால் தேறின பொருளை ‘கைம்மா துன்பொழித்தாய் என்று கைதலை பூசலிட்டே, மெய் மால் யொழிந்தேன் எம்பிரானும் என் மேலானே‘ என்ற பாசுரத்தினால் நம்மாழ்வார், தாமே வெளியிட்டருளினர்.  நானும் எம்பெருமானிடத்துக் குதூகலம் கொண்டேன், அவனும் என்னிடத்துக் குதூகலம் கொண்டான் என்றருளிச் செய்தவர் நம்மாழ்வார். 
  2. பாவாய்! என்ற விளியும் இவர்க்குப் பொருந்தும்.  திருவாய் மொழியில் ‘சூழ்வினை யாட்டியேன் பாவையே‘ (திருவாய்மொழி 4.2.2) என்றும் ‘என்பாவை போயினித் தண் பழனத் திருக்கோளுர்க்கே‘ (திருவாய்மொழி 6.7.3) என்றும் பலவிடங்களில் தம்மைப் பாவையாகச் சொல்லிக்கொண்டவர் ஸ்வாமி நம்மாழ்வார்.  
  3. எழுந்திராய் என்ற சொல்லாற்றல் நன்கு நோக்கத் தக்கது; உட்கார்ந்திருப்பவரை அன்றோ எழுந்திராய் என்பது.  மற்றை ஆழ்வார்கள் எல்லாரும் அர்ச்சையில் நின்ற திருக்கோலமாகவே உள்ளார்கள். நம்மாழ்வார் ஓருவரே வீற்றிருந்த திருக்கோலம். 
  4. கீழ்வானம் வெள்ளென்று என்று சொல்வது, உதயகாலத்தில் கிழக்கு வெளுக்கும் என்பதாகும்.  நம்மாழ்வாரும் வகுள பூஷண பாஸ்கரோதயம் ஆதலாலும், அதுமட்டும் இன்றி அவர் திருஅவதாரம் செய்ததும் கலியுகத்தின் உதய காலத்தில் ஆதலாலும் கிழக்கு வெளுத்ததாகச் சொல்கிறார்.
  5. கீழ்வானம் என்ற போது மேல்வானம் நினைவுக்கு வரும்.  நித்தியவிபூதி (பரமபதம்) மேல் வானமாகும். லீலாவிபூதியானது (இந்த உலகம்) நம்மாழ்வாருடைய திருவாய்மொழி அவதாரத்தாலே ‘வையம் மன்னி வீற்றிருந்து விண்ணுமாள்வர் மண்ணூடே’ (திருவாய்மொழி 4.3.11) இத்யாதிப்படியே தானே பரமபதமாயிற்று. ஆகவே கீழ்வானமான இவ்விபூதி வெள்ளென்றது.
  6. எருமை சிறுவீடு மேய்வான் என்பதில் வீடு என்பது மோக்ஷம்; சிறு வீடு என்று கைவல்ய மோக்ஷம்.  இதனை ஸ்வாமி நம்மாழ்வார் திருவாய்மொழியில் (4-1-10) ‘குறுக மிகவுணர்வத்தொடு நோக்கி‘ என்ற பாசுரத்தில் குறிப்பிட்டு உள்ளார்.  எருமை என்பது தாமஸ குணம் அதிகம் கொண்டவர்களை குறிக்கும்.  நம்மாழ்வார் திருவவதாரம் செய்தருள்வதற்கு முன்னே, பலரும் தாமஸ குணத்தைக் கொண்டவர்களாய், நல்வீடு (பரமபதம்) செல்லாது, சிறுவீடு சென்று பாழாயினர் என்பது தெரிகிறது.  
  7. மிக்குள்ள பிள்ளைகளும் என்று சொல்வது, மற்றைப் பிள்ளைகளையும் போகவொட்டாமல் தடுத்து, இப்பிள்ளை வாசலில் வந்து துவள்வதனால் இவருக்குண்டான தனிதன்மை வாய்ந்த ஏற்றம் தோன்றுவதுபோல, மற்றை ஆழ்வார்களைக் காட்டில் நம்மாழ்வார்க்கு உண்டான ப்ரபந்ந ஜந கூடல்தத்வமாகிற ஏற்றம் சொல்லப்பட்டது. 
  8. போவான் போகின்றாரை என்ற பிரயோகம் வெகு ஆச்சரியமானது. போவதே ஸ்வயம் ப்ரயோஜனமென்று காட்டுவதற்காகவே சொல்லிற்று.  இத்தகைய பிரயோகம் முதன் முதலாக நம்மாழ்வார் திருவாக்கில் தான் வந்தது; திருவிருத்தத்தில்(31) போவான் வழிக்கொண்ட மேகங்களே! என்றார். 
  9. உன்னைக் கூவுவான் வந்துநின்றோம் என்று சொல்வது, நம்மாழ்வார் அருளிச் செய்த ‘கூவிக் கொள்ளும் காலம் இன்னங் குறுகாதோ‘(திருவாய்மொழி 6.9.9) என்னைக் கூவியருளாய் கண்ணனே (திருவாய்மொழி 5.1.4) கூவிக்கொள்ளாய் வந்தந்தோ (திருவாய்மொழி 10.10.2) என்று சொல்வதைப் போலவே உள்ளது.
  10. மாவாய் பிளந்த தேவாதிதேவனை என்று சொல்வதை எடுத்துக் கொள்வோம். இப்போது ஆண்டாள் நோற்பதுபோல நம்மாழ்வாரும் ஒரு   வீற்றிருந்தேழுலகும் என்ற திருவாய் மொழியில் (4.5) நோன்பு நோற்றார்; ஏற்ற நோற்றேற்கு (4.5.1) என்று முதலிலும் வண்டமிழ் நூற்க நோற்றேன் (4.5.10) என்று முடிவிலும் வருவது காண்க.  அங்ஙனம் நோற்ற திருவாய்மொழியில் தேவாதி தேவனை அநுபவிக்கின்ற ஆழ்வார் மாவாய் பிளந்தானென்ற விசேஷணத்தையே வெம்மாபிறந்தான் தன்னை என்று (4.5.1) முதற் பாட்டில் இட்டருளினர்;  ப்ரதம ப்ரபந்தத்தில் (திருவிருத்தம்) இமையோர் தலைவா! என்றும், சரமப்ரபந்தத்தில் (திருவாய்மொழி 1.1.1) அயர்வறுமமரர்களதிபதி என்றும் தேவாதி தேவனையே முன்னம் சேவித்தார் ஆழ்வார். 
  11. சென்று நாம் சேவித்தால் என்பதைக் காண்போம். வான நாயகனே! அடியேன்  தொழவந்தருளே (திருவாய்மொழி 5.7.6) என்று தேவாதி தேவனை நீர் உம்மிடம் வருமாறு அழைத்தீர்; அங்ஙனமல்லாமல் அவனிடம் நாம் சென்று சேவிக்கலாம் வாரும் என்றழைக்கிறாள் போலும். 
  12. ஆவாவென்று என்று சொல்வது, ‘ஆவாவென விரங்கார் அந்தோவலிதே கொல், மாவாய் பிளந்தார் மனம்‘ (பெரிய திருவந்தாதி 50) என்றும், அடியேற்கு ஆவாவென்னாயே (திருவாய்மொழி 6.10.3) என்றும் சொல்வது இந்த ஆழ்வாரை குறிக்கிறது.

Leave a comment