திவ்ய பிரபந்தம்

Home

T7 கீசு கீசு

திருப்பாவை 7

மதி கெட்ட பெண்ணே எல்லா இடங்களிலும் பரத்வாஜ பறவைகள் ஒன்றோடு ஒன்று ஊடல் செய்துகொண்டு கீசு கீசு என்று பேசிக்கொண்டு ஆராவாரம் செய்து கொண்டு இருப்பதை நீ இன்னும் கேட்கவில்லையா ? மணம் கமழும் கூந்தலை உடைய இடைபெண்கள் (கழுத்தில் அணிந்துள்ள) அச்சு தாலியும் ஆமைதாலியும் கல கல என்று சபதம் வரும்படி அசைந்து மத்தாலே தயிர் கடையும் ஓசையை கேட்க வில்லையா? ஸ்ரீமன் நாராயணா அவதாரமாகிய கண்ணனை நாங்கள் பாடும்போது, நீ அதைக் கேட்டு உறங்குவாயோ? தேஜஸ் உடையவளே, நீ எழுந்து வந்து கதவை திற என்பது இந்த பாடலின் பொழிப்புரை.

இவர்கள் சிலரை மட்டும் உணர்த்திக் கூட்டிக் கொண்டு, கண்ணன் பக்கம் போகிறவர்கள் அல்ல; நம்மைப் போலவே, அனைவரும் நன்மை பெற வேண்டும், என்னும் கருத்துடையவர்கள். பகவத் ஸம்பந்தம் மெய்யே உண்டாகில், தன் வயிற்றில் பிறந்த ப்ரஜையினுடைய வளர்ச்சிக்கு உகக்குமாறு, அனைவருடைய வளர்ச்சிக்கும் உகக்க வேண்டும் என்கிறார். பகவத் விஷயத்தில் சுவடு அறிந்து, மறந்து உறங்குகின்ற, இன்னொருத்தியை இந்த பாடலில் எழுப்புகின்றாள். ‘அடியார் குழாங்களை உடன் கூடுவது என்று கொலோ’ என்றும், ‘அந்தமில் பேரின்பத்து அடியோவரோடு இருந்தமை’ (திருவாய்மொழி 10.9.10)என்று எல்லோருடன் இருப்பதால் இனிமை உண்டாவதை இந்த பாடலில் ஆச்சியர் சொல்கின்றனர்.

இப்படி எல்லோரும் உகக்க நன்மை உண்டாக வேண்டும் என்று ஒருத்தி, மற்றொருத்தியின் மாளிகை வாசலில் நின்று, ‘பெண்ணே! பொழுது விடிந்தது காண், எழுந்திராய்’ என்று சொல்ல, ‘விடிந்தமைக்கு அடையாளம் என்ன’ என்று அவள் கேட்க ‘ஆனைச்சாத்தன் கலந்து பேசின பேச்சரவம் மற்றும் அதன் பேச்சின் தொனி முதலியன அடையாளம் அல்லவோ’ என்கிறார்கள்.

‘ஆனைச்சாத்தன்’ என்பது பரத்வாஜபக்ஷி, வலியன் எனப்படும் “செம்போத்து” என்பாரும் உளர்.  உணர்த்த வந்த ஆய்ச்சியர்கள் ஆனைச்சாத்தனினுடைய தொனி விடிவுக்கு அடையாளம் என்று பதில் சொல்ல, ‘ஒரு ஆனைச்சாத்தன் ஒலி விடிவுக்கு அடையாளம் ஆகுமோ என்று சொல்கிறாள். இவர்கள் “எங்கும்” என்று சொல்கிறார்கள். மேலும், கலந்துபேசின பேச்சுக் காண்’ என்று இவர்கள் சொல்ல; ‘இரவெல்லாம் உறங்கிப் பொழுது விடியும் போதோ கலப்பது?’ என்று அவள் கேட்க; ‘மரக்கலம் (கப்பல்) ஏறிப்போகிறவன் மீண்டு வரும் வரைக்கும் ஜீவனம் ஏற்றிக் கொண்டு போவது போல, இவையும் பிரிவு காலமாகிய விடியற் காலத்திலே கலந்து பகல் முப்பது நாழிகைக்கும் ‘அந்தோ! பிரிவு வருகின்றதே!’ என்னும் தோன்றப் பேசுகிற பேச்சு, விடிவுக்கு அடையாளமாக உள்ளதே என்கிறார்கள்.

இப்படி அவள், மாளிகைகளில் துதி பாடகர்கள் வம்சாவளி சொல்ல, கேட்டு உணர வேண்டியவர்கள், இப்படி பறவைகளின் பேச்சுக் கேட்டு உணர வேண்டும்படி ஆகிவிட்டதே என்று வெறுத்துக் கிடக்க, அவளை பேய்ப் பெண்ணே என்று நிந்திக்கின்றனர்.  பாகவத சேர்க்கைக்கு விரைந்து ஓடி வராமே இருப்பது பேய்த்தனம் என்கிறார்கள். இதற்கு அவள், ‘விடிந்தமைக்குக் கூறிய வேறு அடையாளம் உண்டா என்று கேட்க, இவ்வூரில் ஆய்ச்சியர்கள் அனைவரும் உணர்ந்து எழுந்து தயிர் கடைகிற ஓசை கூடச் செவியில் பட வில்லையா, அது ஓர் அடையாளம் என்கிறார்கள்.

காசு(அச்சுத்தாலி), பிறப்பு(மூளைதாலியும்) இவை மாதர் அணியும் ஆபரணங்கள். தயிர் கடைவது ஆச்சியர் தினமும் கடைபிடிக்க வேண்டிய கடமை என்பதாலும், கடைய வேண்டிய தயிர் அளவற்று உள்ளமையாலும், கிருஷ்ணன் அருகில் வந்திருந்து கொண்டு ‘தயிரை மோர் ஆக்க விட மாட்டேன்’ என்று கயிற்றைப் பற்றி இழுப்பதாலும், சோர்வு அடைவதாலும், கைபேர்த்து என்று அதன் அருமை சொல்கிறார்.

கடைகிற சிரமத்தாலே தலைமுடி கட்டு நெகிழ்ந்து முடை நாற்றத்தை மறைக்கும்படி மணம் கமழ்வதை ‘வாசநறுங் குழலாய்ச்சியர்’ என்று சொல்கிறார். மத்தினால் ஓசை படுத்த தயிர் அரவம் கேட்டிலையோ என்று சொல்வது, மந்திர மலையினாலே கடலை கடைந்தது போல, ‘அரவூறு சுலாய் மலை தேய்க்கும் ஒலி ‘ என்பதால் ஆகும். கண்ணனின் கடை கண் அழகிற்கு தோற்று பாடுகிற ஆயர் குல பெண்களின் தொனி, தயிர் கடைகிற ஓசையுடன் கலந்து பரமபதத்தை அடைந்தது. அப்போது கிருஷ்ண குணங்கள் இங்கே நடையாட, மலையில் இருப்பது போல உயரே இருக்கிறதே என்று அவர்களை வசை பாடுவது போல இருக்கிறது என்கிறார்கள்.

ஆய்ச்சியர்கள் தயிர் கடையும் போதும் கண்ணனைப் பாடுவார்களோ என்று கேட்டுகொண்டு, பாலையும் தயிரையும் நெய்யையும் விற்கும் போது கூட, நினைவு கண்ணன் பக்கம் இருந்தமையால், ‘கோவிந்தன் வாங்க வில்லையோ, கிருஷ்ணன் வாங்கவில்லையோ, மாதவன் வாங்க வில்லையோ’ என்று கிருஷ்ண நாமங்களைக் கூறிக் கொண்டு விற்றாள் என்றால், தயிர் கடையும் போது கண்ணனைப் பாடாமல் விடுவார்களா என்று பதில் உரைக்கிறார்.

இந்த அடையாளம் சொல்லக் கேட்ட அவள், அவர்களுக்கு வேறு விடைசொல்ல வல்லமை இன்மையாலே நாயகப் பெண்பிள்ளாய் என்கிறார்கள். 

அவள் வருவதற்குள், இவர்கள் கேசி வத வ்ருத்தாந்தத்தைப் பாடத் தொடங்கினார்கள். கம்சனால் ஏவப்பட்ட அஸுரர்களில் கேசி என்பவன் குதிரையின் உருவத்தோடு ஆயர்கள் அஞ்சி நடுங்கும்படி கனைத்துத் துரத்திக் கொண்டு கண்ணன் மேல் பாய்ந்து வர, அப்பெருமான் திருக்கையை நன்றாகப் பெருக்கி நீட்டி அதன் வாயில் கொடுத்துத் தாக்கிப் பற்களை உதிர்த்து உதட்டைப் பிளந்து அதன் உடம்பையும் இரு பிளவாக வகிர்ந்து தள்ளினான் என்பது கேசியின் வாயைக் கீண்டு எறிந்த வரலாறு. சக்கரவர்த்தி திருமகனை, ஜனகனின் மகள் தழுவிகொண்டது போல, இப்போது கண்ணனை தழுவ நீ புறப்படுவாயோ என்று இப்போது எழுந்து இருந்த பெண்ணை கேட்கிறார்கள். ஆனால் அவளோ, கண்ணனிற்கு வந்த இடற்பாடு நீங்கியது என்று மார்பிலே கைவைத்து உறங்குவதை போல இருந்தாள்.

கேசவன் என்பதற்கு, கேசியைக் கொன்றவன், சிறந்த தலை முடியை உடையவன், அயன் அரன் ஆகியவர்களுக்குத் தலைவன் என மூவகைப் பொருள்களுண்டு.

இவர்கள் கேசவனைப் பாடச் செய்தேயும் அவள் பேசாதே கிடக்க, நீ கேட்டே கிடத்தியோ என்கிறார்கள். உள்ளே அவள் எம்பெருமானுடைய வெற்றியை அநஸந்தித்துக் கொண்டு பேசாதே கிடந்தமையால்,  இவர்கள் சாளர வாசலாலே நோக்கிக் கண்டனர்; எம்பெருமானுடைய அநுஸந்தாநத்தினால் அவள் வடிவில் தோன்றிய புகரைக் கண்டு “தேசமுடையாய்!” என விளித்துக் கதவை திற என்கிறார்கள்.

தேசமுடையாய் என்று சொன்னது, தேஜஸ் என்பதை குறிக்கும்.

இந்த பாடல் பெரியாழ்வார்க்கு அடுத்த, குலசேகர ஆழ்வாரை அழைத்து கொள்வதாக அமைந்தது.

  1. பேய்ப்பெண்ணே, நாயகப் பெண்பிள்ளாய், தேசமுடையாய், என்ற மூன்று விளிகளும் குலசேகராழ்வாரை வற்புறுத்துவன. பெருமாள் திருமொழியில் மெய்யில் வாழ்க்கையை என்ற ஓரு பதிகத்தினால் தம்மைப் பெரும் பேயராகச் சொல்லிக்கொண்டவர் இவ்வாழ்வார். 
  2. ஏர் மலர்ப்பூங்குழல், ஆலை நீள் கரும்பு, மன்னுபுகழ்க் கௌசலைதன்   என்ற பதிகங்களில் பல பெண்களின் தன்மையை அடைந்து பேசியதும் இவரே.
  3. “கொல்லி காவலன் கூடல் நாயகன்” என்று அரசரான தன்மை தோற்றப் பேசியவர் ஆதலால் நாயகப் பெண் பிள்ளாய் என்றது பொருந்தும்.   அன்றியும், ஒரு ஹாரத்தில் நட்ட நடுவிலுள்ள மணியை ‘நாயகக்கல்’ என்பதுண்டு.  குரு பரம்பரையில் எம்பெருமானாரை நடுநாயகமென்று யதிராஜ ஸப்ததியில் தேசிகன்  கூறினர்; அதுபோலவே ஆழ்வார்களுள் குலசேகரர் நடுநாயகமாக வுள்ளவர். 
  4. தேசமுடையாய் (தேஜஸ்) என்பது, பகவத் கீதையில் (18-43) (சௌர்யம் தேஜோத்ருதிர் தாக்ஷ்யம் —  க்ஷாத்ரம் கர்ம ஸ்வபாவஜம்) என்று தேஜஸ் க்ஷத்திரிய தர்மமாகச் சொல்லப்பட்டிருப்பதற்கு இணங்க இந்த விளி, இந்த ஆழ்வாருடைய க்ஷத்திரிய பிறப்பினை தெரிவிக்கும்.
  5. அன்றியும், “மண் நாட்டில் ஆர் ஆகி என் இழிற்றானாலும், ஆழி அம் கைப் பேர் ஆயற்கு ஆளாம் பிறப்பு – உண்ணாட்டுத் தேசன்றே” என்ற பெரிய திருவந்தாதி(79) பாசுரத்தின்படியும் பகவத் சேஷத்வத்திற்கு அநுகூலமான பிறப்பே  தேஜஸ்ஸென்று நிர்ணயிக்கப்படுகிறது.   அப்படிப்பட்ட பிறப்பை ஊனேறு செல்வத்து என்ற பதிகத்தில் (பெருமாள் திருமொழி 4) பாசுரந்தோறும் ஓரோர் விதமாக விரும்பினவர் இந்த ஆழ்வாரேயாதலால் ‘தேசமுடையார்’ என்பதை இவரைக் குறிப்பதாகக் கொள்ளலாம்.
  6. இப்பாட்டில்       “ஆனைச்சாத்தன்” என்ற பதப்பிரயோகம் கவனிக்கத் தக்கது. இச்சொல் மலையாள பாஷையிலிருந்து திசைச் சொல்லாகத் தமிழில் வந்தது என்பர்.  இவ்வாழ்வார் மலைநாட்டில் திருவவதாரித்தவர் ஆதலால் அத்திசைச்சொல் இங்கு அமைந்தது போலும். 
  7. காசும் பிறப்பும் என்று ஆபரண விசேஷங்களைப் பற்றின பேச்சு இங்கு இருப்பது இவ்வாழ்வாருடைய சரிதையில் ஆபரண சம்பந்தத்தை ஒருவாறு நினைப்பூட்டும்.  “ஆரங்கெடப் பரனன்பர் கொள்ளாரென்று அவர்களுக்கே வாரங்கொடு குடப்பாம்பில் கையிட்டவன்” என்ற தனியனும் சொல்கிறது.  
  8. “வாசநறுங் குழ லாய்ச்சியர் மத்தின லோசைபடுத்த தயிரரவம்” என்றது பெருமாள் திருமொழியில் “கெண்டை யொண்கணை மடவாளொருத்தி கீழையகத்துத் தயிர் கடையக்கண்டு….. வண்டமர் பூங்குழல் தாழ்ந்துலாவ….. தண் தயிர் நீ கடைந்திட்ட வண்ணம்” (பெருமாள் திருமொழி 6.2) என்ற பாசுரத்துச் சொற்சுவைகளை நன்கு நினைப்பூட்டும். 
  9. நாராணயன் மூர்த்தி கேசவனைப் பாடவும் என்றது, கிருஷ்ண அவதாரத்தில் குதிரை வடிவாக வந்த கேசியென்னும் அஸுரனை வதஞ்செய்ததனால் கேசவனென்றது.  இவ்வாழ்வார் தமது திருமொழியில் முதன் முதலாக இந்த வரலாற்றையே பேசி அநுபவித்தார். ‘மாவினை வாய் பிளந்துகந்தமாலை’ (பெருமாள் திருமொழி 1.4) என்றும், பிரபந்தத்தை “நலந்திகழ் நாரணனடிக்கீழ் நண்ணுவாரே” (பெருமாள் திருமொழி 1.10)என்று நாராயணனைப் பாடி அந்த பதிகத்தை முடிக்கிறார்.
  10. கேட்டே கிடத்தியோ என்று இந்த பாட்டில் சொன்னபடி, இந்த ஆழ்வாரும் நாள் தோறும் அந்தணர்களைக் கொண்டு ஸ்ரீராமாயண பாராயணம் செய்வித்துத் தாம் கேட்டவர்.  கேட்டு, இருந்த இடத்தில் இல்லாமல் படையெடுத்தும் சென்றவர் ஆயிற்றே.

Leave a comment