ஓங்கி உலகளந்த உத்தமன் பேர்பாடி* நாங்கள் நம் பாவைக்குச் சாற்றி நீராடினால்* தீங்கின்றி நாடெல்லாம் திங்கள் மும்மாரி பெய்து* ஓங்கு பெறும் செந்நெல் ஊடு கயலுகளப்* பூங்குவளைப் போதில் பொறிவண்டு கண்படுப்பத்த * தேங்காதே புக்கிருந்து சீர்த்த முலை பற்றி* வாங்க குடம் நிறைக்கும் வள்ளல் பெரும்பசுக்கள்* நீங்காத செல்வம் நிறைந்தேலோர் எம்பாவாய்.
திருப்பாவை 3
உயர வளர்ந்து மூன்று உலகங்களையும் அளந்து கொண்ட புருஷோத்தமனுடைய திரு நாமங்களை (திருணாமத்தை சொல்லாவிடில் உயிர் தரிக்க முடியாத) நாங்கள் பாடி, எங்கள் நோன்புக்கு என்று ஒரு காரணத்தை கொண்டு, நீராடினால், தேசம்எங்கும் ஒரு தீமையும் இல்லாமல், மாதந்தோறும் மும்மாரி பெய்து அதனால் உயர்ந்து பருத்த செந்நெல் பயிர்களின் நடுவே கயல் மீன்கள் துள்ள அழகிய வண்டுகள் நெய்தல் மலர்களில் உறங்க, வள்ளல் தன்மையை உடைய பெருத்து இருக்கும் பசுக்களை தயங்காமல் பால் கறக்க புகுந்து நிலையாக பருத்த முலைகளை இரண்டு கைகளாலும் அணைத்து இழுக்க குடங்களை நிறைக்கும் அழிவில்லாத செல்வங்கள் நிறைந்திடும் என்பது இந்த பாடலின் பொழிப்புரை.
ஆயர் மங்கைகள் எம்பெருமானையே எல்லா வகைப் பயனாகவும் உள்ளத்துக் கொண்டு உள்ளவர்கள் ஆதலால் அந்த எம்பெருமானை ஓழிய வேறொரு பயனையும் விரும்ப மாட்டார்கள்; ஆயினும் இவர்கள் நோன்பு நோற்குமாறு அனுமதி அளித்தவர்களுக்கு சில பலன்கள் தருமாறு வேண்டுகிறார்கள்.
முதற் பாட்டில் “நாராயணனே” என்பதனால் எம்பெருமானுடைய உபய விபூதியும், இரண்டாம் பாட்டில், “பாற்கடலுள் பையத்துயின்ற பரமன்” என்பதனால் அவதார அர்த்தமாகத் திருப்பாற்கடலும் சொல்லப்பட்டது. இப்பாட்டில் “ஓங்கியுலகளந்த உத்தமன்” என்பதனால் அவதரித்து அருளினது சொல்லப்பட்டது.
உலகங்களைக் காப்பதற்காகத் திருப்பாற்கடலிற் சாய்ந்த போது ஆர்த்த ரக்ஷணம் செய்யாததால் எம்பெருமான், பனிப்பட்டுச் சாய்ந்த மூங்கில் போலக் குன்றி, அம்மூங்கில் சூரியனின் கதிர் படக் கிளம்புமாறு போல இவனும் மாவலி வார்த்த நீர் கையில் பட்ட உடன் கிளம்பினதை கூறுவது “ஓங்கி உலகு அளந்த’ என்பது.
அதமன், மத்யமன், உத்தமன் என்று உலகில் மூன்று வகை பிரிவினர். பிறர் நலிந்து தன் வயிறு வளர்ப்பவன் அதமன்; பிறரும் வாழ வேணும், நாமும் வாழ வேண்டும் என்று இருப்பவன் மத்யமன்; தான் அழிந்தாலும் பிறர் வாழ வேண்டும் என்று இருப்பவன் உத்தமன். எம்பெருமான் தன் வடிவைக் குறுகச் செய்வதும், பிறர்பாற் சென்று இரப்பதுமாகிய கேடுகளைத் தானடைந்தும் இந்திரன் முதலிய தேவர்களை வாழ்வித்தமை பற்றி, இங்கு உத்தமனாகக் கூறப்பட்டான். இதையுமே இவன் தனக்கு கிடைத்த பேறு என்று நினைத்து செய்தான். ‘கருமாணி யாயிரந்த கள்வனே உன்னைப் பிரமாணித் தார்பெற்ற பேறு (இரண்டாம் திருவந்தாதி 7.1) என்பதை உத்தமன் என்பதற்கு மேற்கோள் காட்டுவார்கள்.
‘என்முடிமேல் அடி வைக்க வேண்டும்’ என்று ஒருவரும் வேண்டாதிருக்கச் செய்தேயும் அளப்பதையே ஒரு காரணமாக கொண்டு, அனைவர் முடியிலும் தீண்டி அருளின எம்பெருமான் இன்று இரந்து வேண்டும் நமது காரியத்தை முடிக்காமல் விடமாட்டான் என்று கருத்து தோன்ற ‘உலகளந்தான்’ என்கிறார்.
உறங்குகின்ற குழந்தையை கட்டிகொள்ளும் தாயை போல, இவரது ஸ்பரிசத்திற்கு உகக்கிறார்கள். அதிமானுஷ்ய சேஷ்டிதங்களுக்காகவும் வடிவழகுக்காகவும் கிருஷ்ணாவதாரத்தோடு ஒத்து இருப்பதால் வாமனனையும் சேர்த்து அனுபவிக்கிறார்.
எம்பெருமானுக்கும் அவர் திருநாமத்திற்கும் உள்ள வேறுபாடு என்னவென்றால், எம்பெருமான் கட்டி பொன், அவன் திரு நாமம் ; பனிப் பொன். அவனை இல்லை என்பவர்களும், அவன் பெயர் சொல்லி காரியம் செய்து கொண்டு விடுவார்கள். திருநாமம் சொல்வதற்கு எல்லோருக்கும் அதிகாரம் உண்டு; திருநாமம் சொல்வதற்கு எந்த விதமான யோக்யதையும் வேண்டாம் என்கிறார். இவை “உத்தமன் பேர்பாடி” என்று சொல்வதற்கு பொருந்தும். பேர் பாடி என்பது, பிரீதி பூர்வமாக பாடுவது.
திருநாமம் வாயால் சொல்லா விட்டால் தரியோம் என்பதால் நாங்கள் என்று சொல்கிறார். நம்மையும் கொடுத்து நம் உடைமையையும் கொடுத்து என்பதை தெரிவிப்பதாகும். தமது நோன்பு மற்றையோர் நோன்பிற் காட்டிலும் வேறுபட்டது என்பதை “நம் பாவைக்கு” என்பதால் சொல்கிறார்.
“பாவைக்குச் சாற்றி” என்றது “பாவைக்கென்று சாற்றி” என்ற பொருளில் வரும். “நமது நோன்பை காரணமாக கொண்டு என்று பொருள் கொள்ளலாம். நோன்பை காரணமாக கொண்டு நீராடினார்கள் என்றும், நீராடியது விரகதாபம் தீர என்றும், நீராட்டை காரணமாக கொண்டு கண்ணனோடு சேர்ந்தால் பலமும் பலத்தை கொடுப்பவனுமான உலகளந்தவனிடம் சேர்ந்ததையும் சொல்லும்.
“தீங்கின்றி” என்று ஆரம்பித்து இந்த மார்கழி நீராட்டத்தினால் ஊரோடு சம்பந்தபட்ட நாட்டுக்கும் வளம் விளையும் என்று கூறப்படுகின்றது. ஓன்பது நாள் வெயிலும் ஒருநாள் மழையுமாக மாதந்தோறும் மும்மாரி பெய்தல் நாட்டுக்கு நன்மை. தீங்கு இன்றி என்று சொன்னது நோய், பஞ்சம், கள்ளர் முதலிய தீங்குகள் இல்லாமை சொல்லும். இப்படி திங்கள் மும்மாரி பெய்தால் வயல்கள் செழிப்பு பெறுவதை கூறுகின்றது.
ஓங்கு பெறும் செந்நெல் ஊடு கயலுகள என்று சொன்னது, மேலே சொன்ன உலகளந்த ஸர்வேஸ்வரனோடு ஒப்பு கொள்ளலாம். வயலின் வளர்ச்சியை சொல்லி, ஊரின் வளர்ச்சியைச் சொல்கிறார்.
நெல் வைரத்தூண் போல் நிற்கையால் கயல்கள் நேரே ஸஞ்சரிக்க முடியாது எனபதை “ஊடுகயலுகள” என்பது சொல்கிறது. செருக்காலே யானை கன்று போல வளர்ந்த செந்நெல்களிடை புகுந்து போக முடியாத கயல்கள் என்கிறார். உலகளந்த ஸர்வேஸ்வரனை கண்ட அவன் அடியவர்கள் போல் கயல்கள் துள்ளி பாயாமல் இருப்பதை சொல்கிறார்.
பூங்குவளை போதில் என்றது, பூத்த குவளையில் என்றும் பூத்த காலத்தில் என்றும் பூத்த பூவில் என்றும் பொருள் பாடும். செந்நெற் பயிர்களினூடே, உகளும் கயல்களின் உடல் உராயந்து ஊசல் போல் அசையாமல் நின்றுள்ள மலர்ந்த குவளை மலர்களில் வண்டுகள் தேனை அருந்தி பேடைகளுடன் விளையாடி கண் உறங்குவதை பொறிவண்டு கண்படுப்பத்த என்பது சொல்கிறது.
மழை பெய்யவே, பசுக்கள் அளவற்ற பால் வெள்ளத்தினால் பால் குடங்களை மிகுதியாக நிறைப்பது வாங்க குடம் நிறைக்கும் வள்ளல் பெரும் பசுக்கள் மூலம் தெரிவிக்கப் படுகிறது. பசுக்கள் பால் சுரக்கத் தொடங்கினால் பெரு வெள்ளமாய்ப் பெருகும் என்று அஞ்சி மாட்டுத் தொழுவில் கறக்கப் புகுவதற்குப் பெரும்பாலும் பலர் தயங்குவர் என்பதை “தேங்காதே புக்கிருந்து” என்பது காட்டும். திருவடி (ஹனுமான்) இலங்கையை அடைய சமுத்திரம் தாண்டுவதற்கு அஞ்சாததைபோல் இருக்க வேண்டும் என்பது தெரிய வரும். முலையை ஒருகால் தொட்டு விட்டால் பால் பெருகிக் குடம் குடமாக நிறையும் என்பது ஒரு கருத்து. பற்றிப் பற்றி வலிக்கக் குடங்களை நிறைக்கும் என்றாலும் தகும். அதே போல எம்பெருமானை பற்றி நினைத்தாலே அவன் அருள் பொங்கி வழியும் என்பது ஓரு கருத்து.
வள்ளல் என்பது சிறு பிள்ளைகளும் அதன் கழுத்தை கட்டலாம் என்பது போது தங்களை கொடுப்பதனால் சொல்லபட்டது. நீங்காத செல்வம் நிறைந்து என்பது, அழிவில்லாத சம்பத்து தொடர்ந்து அடியவர்களிடம் இருப்பது என்று சொல்கிறார். அடியவர்களுடைய கர்மங்களினால் பாவ புண்ணிய அடிப்படையில் வந்தால் அது அப்படியே இருக்காது என்றும், சர்வேஸ்வரன் அடியாக வந்ததினால் அது அப்படியே இருக்கும் என்கிறார்.
பகவந்நாம ஸங்கீர்த்தநம் பண்ணிப் பகவத் அநுபவம் பண்ணினால் இந்த உலகமே தோஷங்கள் ஒன்றும் இன்றியே இருக்கும்.
‘என் இது மாயம், என் அப்பன் அறிந்திலன்’ (பெரியாழ்வார் திருமொழி) என்றபடி நமுச்சியை விலக்கியபடி எங்களை விலக்கவில்லை; ‘அடிச்சியோம் தலைமிசை நீ யணியாய்’ (திருவாய்மொழி 10.3.6) என்று ஆசைப் பட்டு மடல் எடுக்கும்படியான திருவடிகளைகொண்டு காடும் ஓடையையும் அளந்தது ; ‘பொல்லாக் குறளுருவாய்ப் பொற்கையில் நீரேற்று எல்லா வுலகு மளந்துகொண்ட வெம்பெருமான்’ (நாச்சியார் திருமொழி 11.5) என்று இரந்து பெற வேண்டும் என்று கையை கொண்டு பெற்றது; ‘கொண்டானை யல்லால் கொடுத்தாரை யார்பழிப்பார்’, (முதல் திருவந்தாதி 8.9) இப்படி தன்னுடைய வஸ்துவைக் கொள்வதற்கும் தன்னை அழிய மாறிவந்து தன்னதாக்கிக் கொண்ட எம்பெருமானைப் பழிக்கிறார்களேயன்றி தன்னுடையது அல்லாத்தைத் தன்னதாக அபிமானித்துக் கொடுத்த அந்த மாவலியைப் பழிப்பார்கள் யாருமில்லையே! இஃது என்ன அநியாயம்!; ‘நீள்வான் குறளுருவாய்’ என்றும் ‘தக்கணைக்கு மிக்கானை’ (பெரிய திருமொழி 11.7.2) என்று வளருவதற்கு என்று குறுகியவனையும் தக்ஷிணைக்கு மிகச் சிறந்த பரமபூஜ்யதமம் ஆனவன் என்பதையும் சொன்னபடி வாமன அவதார இங்கே சொல்லபட்டது, செய்யும் அத்தனை தொழில்களும் அடியவர்களின் பாரபட்சமாக இருக்கும், வடிவழகும் வாத்சலயமும், அவன் (கண்ணன்) ஒரு ஊருக்கு கை ஆள் ஆனதைப் போல இவன் ஒரு நாட்டுக்கு எளியன் ஆனதால் ஆகும் என்கிறார்.
Leave a comment