வையத்து வாழ்வீர்காள் நாமும் நம் பாவைக்குச்* செய்யும் கிரிசைகள் கேளீரோ பாற்கடலுள்* பையத் துயின்ற பரமனடி பாடி* நெய்யுண்ணோம் பாலுண்ணோம் நாட்காலே நீராடி* மையிட்டு எழுதோம் மலரிட்டு நாம்முடியோம்* செய்யாதன செய்யோம் தீக்குறளைச் சென்று ஓதோம்* ஐயமும் பிச்சையும் ஆந்தனையும் கைகாட்டி* உய்யுமாற் எண்ணி உகந்தேலோர் எம்பாவாய்.
திருப்பாவை 2
வாழப்பிறந்தவர்களே, நாமும் உய்யும் உபாயத்தை உணர்ந்து மகிழ்ச்சியுடன் நம்முடைய நோன்புக்கு செய்யும் காரியங்களை கேளுங்கள்; திருப்பார்கடலுள் கள்ள நித்திரை கொள்ளும் புருஷோத்தமனுடைய திருவடிகளை பாடி, தகுந்தவர்களுக்குக் (பிரம்மசாரிகளுக்கும், ஸந்யாஸிகளுக்கும்) கொடுக்கும் பிச்சையையும் அவர்கள் கொல்ல வல்லாராயிருக்கும் வரை கொடுத்து, நெய் உண்ண மாட்டோம்; பால் அமுது செய்ய மாட்டோம்; விடியல் காலை எழுந்து ஸ்நானம் செய்து மையிட்டு அலங்கரித்துக் கொள்ளா மாட்டோம்; பூக்களை கொண்டு குழலிலே முடிய மாட்டோம் ; செய்யாதவற்றை செய்ய மாட்டோம்; பிறருக்கு அனர்த்தத்தை தரும் சொற்களை சென்று ஓதோம் எனபது இந்த பாடலின் பொழிப்புரை.
பகவத் விஷயத்தில் எவற்றை செய்ய/பற்ற வேண்டும், எவற்றை விட வேண்டும்/செய்ய கூடாது என்பதை இந்த பாட்டில் சொல்கிறார். மற்ற உலக விஷயங்களில் பற்ற வேண்டியவைகளும், விட வேண்டியவைகளும் அரிதாக இருக்கும், ஏனெனில் இவை அவரவர் கர்மத்தை கொண்டு இருக்கும். ஒரு முறை விடுவதை, அடுத்த முறை பிடிக்கும் என்ற மனமும் அதனாலேயே ஆகும்.
இப்படி இல்லாமல் அல்பமாய் இருக்கிற விஷயங்களை விட்டு, சமஸ்த கல்யாண குணாத்மகனை பிடிப்பதால், இரண்டும் எளிது என்கிறார். சென்ற பாட்டில், ப்ராப்ய (அடைய வேண்டியது) , ப்ராபக (எதன் வழியாக அடைவது), அதிகாரி ஸ்வரூபங்களை (யார் அடைவது) சொல்லியது; இங்கே அந்த அதிகாரிக்கான ஸ்வபாவங்களை சொல்கிறது. நோன்பு ஆகிற விசேஷ காரியத்தில் ஈடுபட்ட ஆயர் மங்கைகள் தாங்கள் பற்ற வேண்டியவைகளையும், விட வேண்டியவைகளையும் சொல்கிறார்.
பரமன் அடி பாடுவது, நாட் காலே நீராடுகை, ஐயமும் பிச்சையும் ஆந்தனையும் கை காட்டுகை ஆகிற இம்மூன்றும் செய்யப்பட வேண்டியவை. நெய் உண்ணாமை, பால் உண்ணாமை, மை இட்டு எழுதாமை, மலரிட்டு முடியாமை, செய்யாதன செய்யாமை, தீக்குறளை சென்று ஓதாமை என்பன விடவேண்டியவை. விடும் கிரிசைகள் என்று தனியாக சொல்லாமல், “செய்யுங் கிரிசைகள் கேளீரோ” என்பதிலேயே விடுகை என்பவைகளும் செய்யும் கிரிசைகளில் அடக்கினார்.
வாழ்ச்சிக்கு வழியில்லாத இந்த உலகில் வாழ்வது என்பது, நெருப்புச் சட்டியில் தாமரை பூப்பதை போல என்பதால் இங்கே வாழப் பிறந்தவர்களின் பெருமையை வியந்து, ‘வையத்து வாழ்வீர்காள்’ என்று கொள்ளலாம். எம்பெருமான், தன்னை தாழவிட்டு, பரமபதத்தில் இருந்து திருவாய்பாடிக்கு வந்து, பரிமாறுகிற காலத்தில், வாழ பாக்கியம் பெற்றவர்களே என்றும் சொல்லலாம். எம்பெருமானின் பிரகாசிக்கும் எளிமையை இங்கே தான் அனுபவிக்க முடியும் என்பதால், இந்த சமயத்தில் இங்கே வாழ்வது, பரமபதத்தில் இருப்பதைவிட சிறந்தது என்று கருதுகிறார்,
நாமும் என்று சொல்வதில் உள்ள ‘உம்’ என்பது, எம்பெருமான் மூலமாகவே நமக்கு பேறு என்று இருந்தாலும், ருசி உள்ள இடத்திலும் அது ஒரு நாள் வரையில் மட்டுமே என்று பதற வைக்கும் என்பதை சொல்கிறது. “ஆறெனக்கு நின்பாதமே சரணாகத் தந்தொழிந்தாய்” என்றும் “நாகணை மிசை நம்பிரான் சரணே சரண் நமக்கு” என்று இருக்கும் மன நிலையையும் குலைக்க வல்லது.
நோன்பு செய்வது. அது எம்பெருமானே உபாயம் என்ற நிலைக்கு விரோதமானதா என்று கேட்டு, இல்லை என்று மறுக்கிறார்கள். அவனையும் அவனுடையாரையும் அழிக்க செய்யும் இந்திரன் போன்றவர்கள் செய்யும் யாகம் அல்ல இது; எம்பெருமானும் அவன் அடியவர்களும் மேலும் வளர செய்யும் நோன்பு ஆகும். இதனை “நம் பாவைக்கு” என்ற சொற்களின் மூலம் அறியலாம்.
செய்யுங் கிரிசைகள் என்பது அடியவர்கள் பேறு கைகூடும் அளவிற்கு துணை புரியும் செய்யும் செயல்களை செய்வது. மடல் எடுப்பதாகக் காட்டி விடுவதை போல அல்லாமல், அநுஷ்டானங்களோடு ஈடுபாட்டுடன் செய்கிற நோன்பு இது என்பதை ‘செய்யும் ‘ என்ற வார்த்தை காட்டும்.
‘பெண்களையும் கிருஷ்ணனையும் நெடுநாள் கடுமையாகப் பிரித்து வைத்த இந்த ஆய்பாடியில் இப்படி ஒரு சேர்த்தி உண்டானது, பகவத் விஷயத்தை அநுபவித்தற்கு இத்தனை பேர் திரள்வது என்ன விசித்திரம்!’ என்று வியந்து மரம், மலை முதலியனவற்றையும், மயங்கி இருப்பவர்களையும் தட்டி எழுப்புவோரை போல, “கேளீர்” என்று சொல்கிறார்.
இடர் பட்டாரை இன்பக் கடலில் ஆழ்த்துவதை, இயற்கை தொழிலாக உடைய எம்பெருமான், தாமரை மலர் வேண்டி, வானத்தே நிற்பவன் போல், வானமாகிற வைகுந்த நாட்டில் இருந்தால், காரியமாகாது என்று கருதி, அடியவர்களின் கூச்சல் செவியில் படுமாறு, இந்த அண்டத்திற்கு உட்பட்ட திருப்பாற்கடலில் எழுந்தருளி அங்கு உறங்குவான் போல் யோகு செய்த பெருமானாக இருப்பவன். அங்குப் பிராட்டிமார் போகத்தில் திருவுள்ளம் ரக்ஷணத்தில் லயித்து இருப்பத்தை பைய என்பது கூறும்.
ஒரு மாணிக்கத்தைத் தகட்டில் அழுத்தினால் அது மிக்க ஒளிர் பெற்று தோன்றுவது போல, எம்பெருமான் திருப்பாற்கடலில் திருவனந்தாழ்வான் மேல் சாய்ந்த பிறகு திருமேனியில் ஒளிர் பெற்றுப் பரம புருஷன் என்பதை விளக்குமாறு இருப்பதை பரமன் என்கிறார். ரக்ஷணத்தில் ஆவல் கொண்டு பரமபதத்தை விட்டு வருகின்ற, குண விசேஷத்தால் வந்த மேன்மையை கூறுகிறார் என்றும் சொல்லலாம்.
எம்பெருமானுடைய மேன்மையை நினைத்தவாறே தங்களுடைய தாழ்ச்சியும் நினைவுக்கு வருவதால், பின்பு அவனை ஏற்றுவதற்காக அடிபாடி என்றனர்.
முதல் பாட்டில் நாராயண என்று சொல்லி பரமபதத்தை சொல்கிற ஆண்டாள், இந்த பாட்டில் திருஅவதாரத்திற்கு அர்த்தமாக இருக்கும் திருப்பாற்கடல் பற்றி பாடுகிறார்.
“உண்ணுஞ்சோறு பருகுநீர்த் தின்னும் வெற்றிலையு மெல்லாங் கண்ணன்” என்றபடி ஸகல போக்யமயனான எம்பெருமான் அடி பாடுதலையே, உண்பதாக நினைக்கும் உறுதி உள்ள இவர்களுக்கு, வேறு உணவில் விருப்பம் ஓழியுமாறு, நெய்யுண்ணோம் பாலுண்ணோம் என்கிறார்கள்.
நோன்பு நோற்கைக்கு அங்கமாகவும் விரஹதாபம் மாறுகைக்காகவும் நாட்காலே நீராடி என்று குளிக்க வேண்டியதை சொல்கிறது.
இந்திரியங்களுள் பிரதானமான கண்களுக்கு, எம்பெருமானை அனுபவிக்கை தவிர வேறு பேறு இல்லாததால் அப்பேறு கிடைக்கும்முன் அக்கண்களை அலங்கரிக்க மாட்டோம்; அதேபோல எம்பெருமான் தன் இணையடிகளைப் புனைதலே, தலைக்குப் பேறு என்பதால், அப்பேறு பெறுதற்கு முன் தலையை அலங்கரிக்கக் மாட்டோம் என்கிறார்கள்.
தீக்குறளை சென்றோதோம் என்று சொல்வது, ஒரு விரதத்தில் இருப்பவர் தீயசொற்களைச் சொல்வதைத் தவிர்க்க வேண்டும் என்று விதிக்கு ஏற்ப சொல்கிறார். பத்து மாதம் சுற்றும் இருந்த ராக்ஷஸிகள் கொடுத்த வார்த்தைகளாலும் செயல்களாலும் துன்பப்பட்ட பிராட்டி ஏகாந்தத்திலும் பெருமாளுக்கு விண்ணப்பம் செய்யாததை போல என்று ஆறாயிரப்படி அருளிச்செயல் சொல்கிறது.
யோக்ய புருஷர் விஷயத்திலும் ஆசார்ய விஷயத்திலும் உரிய காலங்களில் வெகுவாக ஸமர்ப்பிப்பது ஐயம்; ஐயம் என்பது ஈஸ்வர சம்பந்தமான ஸ்வரூப, ரூப, குண அறிவு. பிரம்மச்சாரிகள் விஷயத்திலும், ஸந்யாஸிகளுக்கும் பரிமிதமாக ஸமர்ப்பிப்பது பிச்சை. பிச்சை என்பது ஆத்மா பற்றிய ஸ்வரூப அறிவு. இவ்விரண்டையும் இயன்றவளவு செய்வோம் என்கிறார். ஆந்தனையும் என்றது முடிந்தவரை என்பதை சொல்கிறது. இவற்றை தனக்குள்ள வரை உபதேசிப்பது. கைகாட்டி என்றதானால் அந்த உபகாரம் பற்றிய நினைவு தன் நெஞ்சில் இல்லாமல் இருப்பது.
உள்ளுறைபொருள் : எம்பெருமானையே ஸர்வ போக்யமுமாகக் கொள்ளவேண்டும் என்கிறது, நெய்யுண்ணோம் போன்றவைகளால் வர்ணாசரமங்கட்கு உரிய, நித்ய கருமங்கள் குறையற அநுஷ்டிக்க வேண்டியது. “செய்யாதன செய்வோம்” என்பது. பிறர்க்கு அநர்த்தத்தை விளைக்கவல்ல பொய் சொல்லலாகாது என்கிறது. ஐயமாவது, பகவத் வைபவம்; பிச்சையாவது பாகவத வைபவம்; இவை இரண்டையும் தானறிந்தவளவும் பிறர்க்கு உபதேசிக்க வேண்டும் என்கிறது. பகவத் ஸந்நிதியில் பாகவத வைபவத்தையும், பாகவத ஸந்நிதியில் பகவத் வைபவத்தையும் முடிந்த வரை சொல்வது என்பது.
Leave a comment