திவ்ய பிரபந்தம்

Home

5.4.9 பனிக்கடலில் பள்ளிகோளைப்

பெரியாழ்வார் திருவாழி 5.4.9

எம்பெருமான், தன்னை அனுபவித்து சேவை செய்பவர்களான நித்யஸூரிகளை விட்டுவிட்டு, என்னிடத்தில் அன்பு பூண்டு, என்னுள்ளே இருக்க வந்தான் என்கிறார். அந்த எம்பெருமான் தன்னுடைய போக (திருப்திக்கு) இடங்களையும் விட்டுவிட்டு, வந்து என் நெஞ்சையே தனக்கு உரிய இடமாக அங்கீகரித்து அருளினார் என்கிறார்.

குளிர்ச்சியே இயல்பான திருப்பாற்கடலில் பள்ளி கொள்ளுவதை மறந்துவிட்டு அங்கு இருந்து ஓடி வந்து என்னுடைய மனமாகிற கடலில் வாழ வல்லவனாய் ஆச்சரிய சக்தி உடையவனாய், பெரிய பிராட்டியாருக்கு வல்லபனாய், குண பூர்ணன் ஆனவனே, அத்விதீயமான (தனித்தன்மை வாய்ந்த) திருப்பாற்கடல், அத்விதீயமான ஆதித்திய மண்டலம், அத்விதீயமான பரமபதம் என்று உகப்பு உடைய தேசங்கள் உனக்கு வாசஸ்தானமாக இருக்கிற போது, என்னை உனக்கு சேஷமாக்கிக் கொண்டாயே என்று ஈடுபடுகிறர் என்பது இந்த பாடலின் பொழிப்புரை.

சகல தாப காரமான கடல்; திருப்பாற்கடலில் கண் வளர்ந்து இருப்பதை பாடுகிறார்; சீதள ஸ்வபமான கடல்; ‘பாற்கடல் பாம்பணை மேல் பள்ளி கொண்டு அருளும் சீதனை‘ (திருவிருத்தம் 8.9) என்பதன் படி இது அவன் ஸ்வபாவம், சம்பந்தம் அடியான வாத்சல்யம். ‘கிடந்ததோர் கிடக்கை‘, (திருமாலை 23) ‘ஏரார் கோலம் திகழ கிடந்தாய் ‘ (திருவாய்மொழி 5.8.1) ‘ நாளும் வாய்க்க நங்கட்கு நளிர் நீர்க் கடலைப் படைத்து, தன் தாளும் தோளும் முடிகளும் சமனிலாத பல பரப்பி, நீளும் படர் பூங் கற்பகக் காவும் நிறை பன் ஞாயிற்றின், கோளுமுடைய மணி மலை போல் கிடந்தான்,” (திருவாய்மொழி 8.10.8) என்பது போல பற்பல பாடல்கள்;

வெள்ளை வெள்ளத்தின் மேல், (பெரியாழ்வார் திருமொழி 5.1.7) என்று இவர் ஆசைபட்டபடியே, அவன் வந்து புகுந்தான். பழகவிட்டு, என்று சொல்வது, அங்கு உண்டான ஆசையாய் நேராக மறந்து விட்டு, அதாவது, திருபாற்கடலை விட்டு என்கிறார். திருப்பாற்கடல் பனிக்கடல், குளிர்ந்து இருக்கும், ஆழ்வாரின் மனக்கடல் குளிர் கெட்டு இருக்கும். அது ஊற்று மாறினாலும், இது மாறாது என்கிறார். அப்படிபட்ட பனிகடலையும் தனக்குள்ளே வைத்து இருக்கும் மனக் கடல் என்பதை பரவைத் திரை பல மோத, (பெரியாழ்வார் திருமொழி 5.2.10) போன்ற பாடல்கள் மூலம் கூறி உள்ளவர். பனிக்கடலையும் விரும்புவதற்கு காரணம், யோக நித்திரை சிந்தை செய்வது என்பதால் ஆகும்.

மனக்கடலில் வாழவல்ல மாய மணாள என்பதை வாழவல்ல வாசுதேவா (பெரியாழ்வார் திருமொழி 2.7.3) என்பதில் சொல்லியபடி மனக் கடல் எங்கும் வாழும் வாழ்ச்சியை சொல்கிறார். சென்ற பாட்டில் (5.4.8)ல் சொல்லியபடி வாழச்செய்தாய் என்று ஆழ்வாரை வாழச்செய்து அந்த வாழ்வு கண்டு தானும் வாழ்வதை சொல்கிறார். மாய மணாள என்று சொன்னது, ஆழ்வார் உள்ளத்தில் எழுந்துஅருளிய பின்னர் குணங்களும் திருமேனியில் செவ்வியும் பூர்த்தி பெற்றது என்கிறார்.

தனிக் கடலே என்று சொன்னது, பிராட்டியர் திருஅவதரித்த கடல்; பிறந்தகம்; ‘உலகெல்லாம் நன்கு ஒடுங்க யோகணையும்‘ (திருவாய்மொழி 4.8.9) கடல்.

தனிச்சுடரே என்றது, வெங்கதிரோன் குலத்திற்கோர் விளக்காய் தோன்றி ‘ (பெருமாள் திருமொழி 10.1), என்று இவன் திருஅவதாரம் பண்ணுவதற்கு ஈடான குல குருவாகையால், ஆதித்ய மண்டலத்திற்கு வந்த தனிச் சிறப்பு. எம்பெருமான் ஸூர்யமண்டலத்தை இருப்பிடமாகக் கொண்டவன் என்பது அறிய வேண்டியது.

தனி உலகே என்றது பரமபதத்தை குறிக்கும். ஒண்டொடியாள் திருமகளும் நீயுமே (திருவாய்மொழி 4.9.10) என்று ஒரு நாடாக ஒரு மிதுனமாக சேஷமாகையாலே வந்த தனித்துவம். நலமந்தமில்லதோர் நாடு ( திருவாய்மொழி 2.8.4) என்பதையும் நினைவில் கொள்ளலாம்.

எல்லாவித ஆசைகளையும் நிறைவேற்றபட்டவரான எம்பெருமான், ஒரு இடம் கூட இல்லாதவன் போல, தன்னையும் அறியாத, அவனையும் அறியாத, தன்னுடைய நெஞ்சினில் வந்து கூடி புகுந்த வந்த உபகாரத்திற்கு தோற்று, அவனுக்கு அடிமை படுகிறார்.

Leave a comment