திவ்ய பிரபந்தம்

Home

5.4.8 அனந்தன் பாலும்

பெரியாழ்வார் திருமொழி 5.4.8

எம்பெருமான் தனது அந்தரங்க கிங்கரர்களான நித்யஸூரிகள், அனைவரிடத்தும் அன்பைக் குறைத்து, அன்பு முழுவதையும் தம்முடைய ஓருவர் பக்கலில் அமைத்து, அருளின பரம உபகாரத்தை இந்த பாட்டில் பேசுகின்றார்.

திருவாழியை திருக்கையில் உடைய சர்வாதிகனானவனாய், திருவனந்தாழ்வானிடத்திலும், பெரிய திருவடி இடத்திலும் ஸ்னேகத்தை அவன் எப்போதும் இருப்பதைப் போல இல்லாமல் வைத்து, என் மனம் தன் உள்ளே, எந்த ஒரு காரணமும் இல்லாமல் வந்து, பொருந்தி இருந்து, என்னை வாழ்வித்து அருளினாய்; இப்படிப்பட்ட உன்னை, என் மனத்திலே நினைத்து நின்று, நெஞ்சு சிதிலமாய் (சிதைந்து) கண்களில் அசறு பாயும்படி, நீ செய்த உபகாரங்களை நினைத்துக்கொண்டு இருந்தே என் இளைப்பெல்லாம் தீரப் பெற்றேன் என்பது இந்த பாடலின் பொழிப்புரை.

மேல் உலகத்தில் உள்ளவர்கள் எல்லோரும் ஒத்தவர்களாக இருந்த போதும், நித்யசூரிகளுக்கு என்று ஒரு தனிப் பெருமை உண்டு. இவர்களுக்கு ஏற்றம், எப்போதும் எம்பெருமானை தொட்டு கைங்கர்யம் செய்வதும், எப்போதும் இவர்களை முன்னே வைத்துக்கொண்டு அவர்களுக்கு தரிசனம் செய்து கொண்டு இருப்பதுவும் ஆகும். அப்படிபட்டவர்களிடம்கூட அவன் ஸ்னேகத்தை எப்போதும் இருப்பதைப் போல இல்லாமல் வைத்தது சொல்லப்பட்டது. ஆனால் ஆழ்வாரிடத்தில் வைத்த ஸ்னேகமோ, சென்றால் குடையாகவும், இருந்தால் சிங்காதனமாகவும், நின்றால் மரவடியாகவும் மணிவிளக்காகவும் பூம்பட்டாகவும் (முதல் திருவந்தாதி 6.3) இருப்பதாகச் சொல்கிறார். ‘பொருசிறைப்புள்ளுவந்தேறும்‘ (திருவாய்மொழி 1.9.3) இவர் பக்கம் வரும் போது வாகனமாகவும், சேர விடுகைக்கு பெரிய பிராட்டியாரும் வேண்டும். இவர்களை விஷயமாக்கியதே ஆழ்வாருக்காக என்றால், மற்றவர்களைப்பற்றி சொல்ல வேண்டுமோ என்று உரையாசிரியர் கூறுகிறார்.

என் மனம் தனுள்ளே என்பதற்கு ‘ கருள புட்கொடி சக்கரப் படை வான நாட! எங் கார்முகில் வண்ணா, பொருளல்லாத என்னைப் பொருளாக்கி அடிமை கொண்டாய்‘ (திருவாய்மொழி 5.7.3) என்று நித்யசூரிகளை விட்டு நித்ய ஸம்ஸாரிகளுக்கு, தம்மை அடிமை கொண்ட உபகாரத்தை சொல்வது.

நினைந்து என் உள்ளே நின்று‘ என்று சொல்வது, அவர்கள் ஏற்றத்தையும், இவரின் தன்மையும் நினைத்து கூசாதபடி, அவர்கள் பக்கம் குளப் படி என்ற அளவும், இவர் பக்கம் கடல் என்ற அளவும் ஆதரவு காட்டி, இவர் தன்மை பாராதே, இவர் நெஞ்சில் புகுந்தத்தையும் சொல்வதாகும். ‘ வந்தாய் என்மனம் புகுந்தாய் மன்னி நின்றாய் (திருவாய்மொழி 1.10.9) என்று சொல்வது போலவும், ‘ வந்தாய் என் மனத்தே வந்து நீ புகுந்த பின்னை, எந்தாய் போயறியாய் ‘ (பெரிய திருமொழி 8.9.5) என்று சொல்வது போலவும், என்று இவர் ஈடுபடுகிறார்.

என்னுள்ளே நின்று நெக்குக் கண்கள் அசும் பொழுக என்று சொன்னது உள் உருகியது வெளியே வெள்ளம் ஆனதாக சொல்வது. ‘நினைதொறும் சொல்லுந்தொறும் நெஞ்சிடிந்துகும்‘ (திருவாய்மொழி 9.6.2) என்பது போல ஆகும்.

எம்பெருமான், “ஆழ்வீர்! நீர் நெடுநாளாக இந்த இருள் தருமா ஞாலத்தில் திரிந்து மிகவும் இளைத்தீரே” என்று சொல்ல, அதற்கு ஆழ்வார், “உன்னை இன்று நெஞ்சார நினைத்து, கண்களும் நீர் மல்கப் பெற்று, நீ செய்தருளின நன்றிகளை மனனம் பண்ணிக் கொண்டே சகல தாபங்களும் விலகப் பெற்றேன். அதனால், என் சிரமத்தைப் பற்றி உனக்குச் சிந்திக்கவேண்டிய கடமையில்லை” என்கிறார்.

கையும் திருவாழியுமான அழகுக்கு எல்லை இல்லாதவேனே, அந்த அழகை கண்ட பின்பும் இளைப்பாறக் கேட்க வேணுமோ என்று சொல்லி, ‘நேமி நெடியவனே!’ என அழைக்கிறார். திருவாய்மொழி (1.6.6)ல் சுவாமி நம்மாழ்வாரும் ‘ நிமிர் சுடராழி நெடுமால் அமுதிலு மாற்ற இனியன்‘ என்று சொன்னது இங்கே மேற்கோள் காட்டப்படுகிறது. ஆழ்வார் பக்கம் பிரேமம் விளைந்தபடி ‘நெடியவன் ‘ ஆனது சொல்லப்பட்டது.

Leave a comment