திவ்ய பிரபந்தம்

Home

5.4.7 பருப்பதத்துக் கயல் பொறித்த

பெரியாழ்வார் திருமொழி 5.4.7

சென்ற பாட்டில், “உன்னுடைய விக்கிரமம் ஓன்று ஓழியாமல் எல்லாம், என்னுடைய நெஞ்சகம் பால் சுவர் வழி எழுதிக் கொண்டேன்” என்றது, எம்பெருமானுடைய அளவிடமுடியாத பரம கருணையினால் என்பதை இந்த பாட்டால் அருளிச் செய்கிறார்.

மஹாமேருவிலே தன்னுடைய மீன் கொடியை கட்ட பாண்டிய வம்சத்து அரசனைப் போல அழகு மிகுந்து இருக்கும் செவ்விய திருவடிகளை என் தலையின் மேல் அலங்கரித்தவனே என்றும் , குவலயாபீடத்தின் கொம்பை முறித்தவனே என்றும் , மல்லரை அழித்தவனே என்றும் , உன் குணங்களுக்கு வாசகமான திருநாமங்களை சொல்லுவதால் தழும்பு ஏறின நாக்கை உடைய என்னை உனக்கு உரியனாம்படி செய்தாயே என்று ஈடுபடுகிறார் என்பது இந்த பாடலின் பொழிப்புரை.

பரமபதத்தை இருப்பிடமாகவுடைய எம்பெருமான் அங்கு இருந்து ஆழ்வார் பக்கம் இருந்த பாவக்காடுகளைப் பாழாக்கியும், விரோதிகளைப் போக்கியும், இவருடைய சென்னித்திடரில் பாத இலச்சினை வைத்தருளிய பரம கருணைக்கு ஒரு உதாரணம் காட்டுகிறார்.

பாண்டிய குலத்துத் தலைவனாயிருந்த ஒரு ராஜன் தனது நாட்டில் இருந்து, மஹாமேரு மலை வரையில் சென்று, வழியிலுள்ள காடுகளை அழித்து, தனக்கும் தனது படைகளுக்கும் உள்ள தடைகளை களைந்து, வழி எளிதாகும்படி செய்து, அங்கே சென்று, தனது வெற்றி தோன்றும்படி, அந்த மேரு பர்வதத்தின் மேல் உள்ள சிகரத்தில், தனது மீன் கொடி நாட்டினான் என்ற வரலாறு உதராணமாக சொல்லபடுகிறது.

மலை நகராது, அதே போல ஆழ்வாரும் ஒரு முயற்சியும் செய்யவில்லை என்கிறார். இவன் பாதி தூரம் வந்து, இவர் பாதி தூரம் செல்வது போல இல்லை. அவனே முழுவதுமாக வந்து, வழியில் உள்ள விரோதிகளை போக்கி, இவருக்கு அடையாளம் இடுவது வரை என்ற எல்லா செயல்களையும் செய்தார் என்கிறார். ‘ ஏதங்கள் ஆயின எல்லாம் இறங்க லிடுவித்து …. என் சென்னித் திடரில் பாத விலச்சினை வைத்தார்(பெரியாழ்வார் திருமொழி 5.2.8) என்று சொன்னவர் ஆயிற்றே. ஆழ்வார் பரமபதத்தில் இருப்பது போலவும், எம்பெருமான் அங்கு வந்து இவரை அடைந்தது போலவும் சொல்கிறார். திருப்பாணாழ்வாரும், ‘விண்ணவர் கோன் விரையார் பொழில் வேங்கடவன், நிமலன் நின்மலன் நீதிவானவன் நீள்மதிள் அரங்கத்தம்மான் திருக் கமல பாதம் வந்து என் கண்ணினுள்ளன ‘ (அமலனாதிபிரான் 1) என்பதும் இது போலவே என்று உரையாசிரியர் கூறுகிறார்.

பாண்டியர் குலபதி கயல் பொறித்த இடமாகிய, மகா மேருவை இங்கு உவமை கூறியதனால், பெறுதற்கரிய இப்பேற்றைப் பெறுவதற்காகத் தாம் ஒரு முயற்சியும் செய்யவில்லை என்பதை சொல்கிறார்.

திருபொலிந்த சேவடி, என்பது அழகு மிகுந்த சிவந்த திருவடிகளை குறிக்கும். ‘அமரர் சென்னி பூவினை‘, (திருக்குறுந்தாண்டகம் 6), அதாவது நித்ய ஸூரிகளுக்குத் தலை மேலணியும் பூவாயிருப்பவனுமான பெருமானை என்றும், ‘வானவர் உச்சி வைத்த பெருமணி‘, (பெரிய திருமொழி 4), அதாவது, நித்யசூரிகள் தங்கள் தலைமீது சிறந்த இரத்தினமாக வைத்து போற்றுகின்ற பெருமான் என்றும் சொல்லி, நித்யசூரிகளுக்கு தலை அலங்காரமாக இருக்கும் பொன்னும் பூவுமான எம்பெருமானின் திருவடிகளை, பல காலங்களாக, உலக விஷயங்களில் மண்டிக் கிடந்த, அடியேனின் தலையில் அலங்கரித்தாய் என்கிறார்.

அவன் வெற்றிக்கும் என் தோல்விக்கும் உள்ள அடையாளம், ஸவாதந்திரியம் (தான் என்ற எண்ணம்) விலகுவதும், சேஷத்தவம் (எம்பெருமானுக்கு அடிமை செய்வது) பெறுவதும் ஆகும். இது ஆழ்வாருக்கும் உகப்பு. ‘ மானிடவர்க்கென்று பேச்சுப்படில் வாழகில்லேன் கண்டாய்‘ (நாச்சியார் திருமொழி 1. 5) என்று தான் ஆழ்வார் இருப்பார் எனிலும், இது தானும் அவனும் அறிந்தவரை போதாது, மற்றவர்க்கும், தான் ஒரு சேஷபூதன் (எம்பெருமானுக்கு அடிமை) என்று தெரிவது வேண்டும் என்று நினைக்கிறார் என்கிறார். ஏன்எனில், இது பரதனின் உகப்பு போலவே ஆகும் என்கிறார். இராமன் பரதாழ்வானை பார்த்து, ‘என்னை மீட்டு செல்லும் எண்ணத்துடன் வந்த போது, உன்னை ஸ்வதந்திரன் என்று சொன்னவர்கள் முன்னே, நீ பாரதந்திரியத்தை பெற்று போவதை பார்க்கட்டும்’ என்று சொல்லி திருவடி நிலைகளை கொடுத்ததை நினைவு கொள்ளலாம்.

பொறித்தாய் என்று சொல்வதில், கர்ம பாரதந்திரியத்தால் பொறித்த பொறி அன்று, ஈஸ்வர பாரதந்திரியத்தால் பொறித்தது என்று சொல்வது. ‘ஏத்து கின்றோம் நாத்த ழும்ப இராமன் திருநாமம்‘ (பெரிய திருமொழி, 10.3.1) என்று சொல்வது தோற்றவர்கள் வென்றவர்களை வாழ்த்துவார்கள் என்பது போல் இவரும் அவனுடைய வீர தீர பிரதாபங்களை சொல்லி, இவரே விரோதிகளை தொலைத்ததை போல் வாழ்த்துகிறார்.

உருப் பொலிந்த நாவினே என்று சொல்வது நாக்கில் தழும்பு ஏறுவது . ‘நாத்தழும்பெழ நாரணாவென்ற ழைத்து‘ (பெருமாள் திருமொழி 2.4) என்று சொல்வது போல் ஆகும்.

பகவத் ஸந்நிதிகளில் ஸ்ரீசடகோபன் ஸாதிக்கும்போது இப்பாசுரத்தை அநுஸந்திப்பது ஸம்ப்ரதாயம்.

Leave a comment