தடவரை வாய் மிளிர்ந்து மின்னும் தவள நெடுங்கொடி போல் * சுடரொளியாய் நெஞ்சினுள்ளே தோன்றும் என் சோதி நம்பீ, * வட தடமும் வைகுந்தமும் மதிள் துவராபதியும், * இடவகைகள் இகழ்ந்திட்டு என் பால் இடவகை கொண்டனையே.
பெரியாழ்வார் திருமொழி 5.4.10
சென்ற பாட்டில் எம்பெருமான் திருப்பாற்கடல் முதலிய திவ்ய தேச இடங்களுடன், தம்முடைய சரீரத்துடன் ஒப்பிட்டு பாடினார்; இந்த பாடலில் அவற்றை விட்டு, தம்மை மட்டுமே விரும்பினதை கூறுகிறார்.
பரப்பை உடைய மலய பர்வதத்தில் தேஜஸ்ஸாலே மிகவும் விளங்கும் வெளுத்த பெரிய கொடி எல்லார்க்கும் காணும்படியாக இருப்பது போல எப்போதும் பிரகாசிக்கின்ற தேஜஸாக என் இதய கமலத்தில் தோன்றுகிறவனே , தேஜஸால் பூர்ணன் ஆனவனே , வடதிசையில் உள்ள திருப்பாற்கடலும் ஸ்ரீவைகுந்தமும் மதிலால் சூழப்பட்ட ஸ்ரீ துவாரகையும் போன்ற இப்படிப்பட்ட இடங்களையெல்லாம் இகழ்ந்துவிட்டு இவ்விடங்களில் பண்ணும் ஆதரங்களை எல்லாம் என் பக்கம் பண்ணி அருளினாய் என்று ஈடுபடுகிறார் என்பது இந்த பாடலின் பொழிப்புரை.
எம்பெருமான் ஆழ்வார் தம்மோடே கலந்து மிக்க ஒளிபெற்றானாய்க் கொண்டு வேறு போக்கிடமற்றுத் தம் பக்கலிலேயே படுகாடு கிடக்கிற படியை நம்மாழ்வார் திருவாய்மொழி (2.6.2)ல் ‘சிக்கென சிறிதோரிடம்‘ என்ற பாடலில் சொல்வது போல இந்த ஆழ்வார் இங்கு, எம்பெருமான் தன் திவ்ய மங்கள விக்ரகத்தோடு தன் உள்ளத்தில் புகுந்து பிரகாசித்ததை சொல்கிறார்.
‘இடவகைகள் இகழ்ந்திட்டு’ என்று சொன்னதில், எம்பெருமான், பிரம்மாதிகளுக்கு முகம் கொடுக்கும் திருப்பாற்கடல், நித்யசூரிகளுக்கு முகம் கொடுக்கும் பரமபதம், தன்னிடம் அன்பு கொண்டவர்களுக்கு முகம் கொடுக்கும் துவாரகாபுரி முதலிய இடங்களைத் தானே புத்திபூர்வமாக ‘கல்லும் கனைகடலும் வைகுந்த வானாடும், புல் ‘ (பெரிய திருவந்தாதி 7.8) என்னும் படி இகழ்ந்து விட்டு வந்தவன் என்கிறார்.
ஆதலால், இனி அவ்விடங்களை ஒருகாலும் நினைக்கவும் மாட்டான் என்பது ஆழ்வார் திருவுள்ளக் கருத்து. ‘முனியே நான்முகனே‘ என்ற பாடலில் நம்மாழ்வார் எம்பெருமானுக்கு சொன்னதை இங்கு பெரியாழ்வாருக்கு எம்பெருமான் சொல்வதாய் உரையாசிரியர் கூறுகிறார்.
பெரியதொரு மலையின் கொடுமுடியில் தெளிவாக விளங்குகின்ற ஒரு கொடி எல்லாருக்கும் காண எளிதாயிருக்கும் என்பது போல, என்னுடைய ஹ்ருதய கமலத்தினுள்ளே பளபளவென்று விளங்குகின்ற தேஜஸ் ஸ்வரூபியே என்று எம்பெருமானை அழைக்கின்றார்.
சுடர், ஒளி, சோதி என்ற இம்மூன்று சொற்களுக்கும், முறையே, திவ்ய ஆத்ம ஸ்வரூபம், திவ்ய மங்கள விக்ரஹம், திவ்ய கல்யாண குணம் என்று பொருள். என் என்று சொல்வதன் மூலம், இவன் நெஞ்சினில் புகுந்த பின்னர், இவை எல்லாம் ஆழ்வாருக்குள் பிரகாசித்ததை சொல்கிறார்.
“கொண்டனையே” என்றதற்குப் பின், இப்படியும் ஓரு ஸௌசீல்யம் இருப்பதே. இப்படியும் ஒரு ஸௌலப்பயம் இருப்பதே, இப்படியும் ஓரு வாத்ஸல்யம் இருப்பதே! என சொல்லி சொல்லி ரசிக்கலாம்.
“உனக்குரித்தாக்கினையே” ‘என்பாலிடவகை கொண்டனையே’ என்று சொல்வது, ‘இப்படி செய்தாயே,’ என்று அவன் திருவடிகளிலே விழுந்து வணங்க, இவரை எடுத்து எம்பெருமான், தன் மடியிலே வைத்து தானும் பதற்றம் குறைவது கண்டு ஆழ்வார் மகிழ்ச்சி கொள்கிறார்.
“அதனிற் பெரிய என்னவா” (திருவாய்மொழி, 10.10.10) என்று நம்மாழ்வாருக்குப் பகவத் விஷயத்தில் பிறந்த அவாக்கள் (ஆசைகள்) எல்லாம் இங்கு பெரியாழ்வார் பக்கம் ஈச்வரனுக்குப் பிறந்ததை இந்த பதிகம் சொல்கிறது.
Leave a comment