உன்னுடைய விக்கிரமம் ஒன்றொழியாமல் எல்லாம், * என்னுடைய நெஞ்சகம் பால் சுவர் வழி எழுதிக் கொண்டேன், * மன்னடங்க மழு வலங்கைக் கொண்ட இராமநம்பீ, * என்னிடை வந்து எம்பெருமான் இனியெங்குப் போகின்றதே.
பெரியாழ்வார் திருமொழி 5.4.6
சென்ற பாட்டில், “உன்னைக் கொண்டு என்னுள் வைத்தேன்” என்றார்; இந்த பாட்டில், வைத்த வரிசையை / ப்ரகாரத்தைச் சொல்லுகிறார்.
உன்னுடைய திருவிளையாடல்கள் ஒன்று தப்பாமல் எல்லாவற்றையும் சுவரில் எழுதும் சித்திரம் கன்னுக்குத் தோன்றுமா போலே, என்னுடைய நெஞ்சினுள் பிரகாசிக்கும்படி செய்து கொண்டேன் ; துஷ்ட க்ஷத்ரியர்கள் இருந்த இடம் தெரியாதபடி அழிப்பதற்காக மழுவை வலது கையில் தரித்த பரசுராமாவதாரம் செய்து அருளின குண பூர்த்தி உடையவனாய் எனக்கு உபகாரகனானவனே ! சேஷ பூதனான என்னிடத்தில் எழுந்தருளி இனிமேல் எங்கே போகப் போகிறாய் என்பது இந்த பாடலின் பொழிப்புரை.
“உன்னுடைய விக்கிரமம் எல்லாம்” என்று ஆழ்வார் சொன்னது அவனுடைய ஸ்வரூப , ரூப குணங்களை அல்ல என்றும், அவனால் துஷ்டர்களுக்கு ஏற்பட்ட விபத்துக்களை தன்னுடைய நெஞ்சினிலே பிரகாசிக்கும்படி செய்து கொள்கிறேன் என்றும் சொல்கிறார்.
“உன்னுடைய விக்கிரமம் எல்லாம்” என்று சொன்னாலே போதும் என்று இருக்க, “ஒன்றொழியாமல்” என்று விசேஷமாக சொல்வது வியாஸர், வால்மீகி முதலியவர்களுக்கும் விஷயமாகாத விக்கிரமங்கள் தமக்கு விஷயமானதை சொல்கிறார். “சீமாலிகன் அவனோடு தோழமைக் கொள்ளவும் வல்லாய், சாமாறவனை நீ எண்ணிச் சக்கரத்தால் தலை கொண்டாய்” (பெரியாழ்வார் திருமொழி 2,7,8) என்று அருளிச் செய்த வரலாறும், “எல்லியம் போது இனிது இருத்தல் இருந்ததோர் இட வகையில், மல்லிகை மாமாலை கொண்டு அங்கு ஆர்த்ததும் ஓர் அடையாளம்” (பெரியாழ்வார் திருமொழி 3.10.2) என்று அருளிச் செய்த வரலாறும் மற்றவர்களுக்கு இல்லாமல் இந்த ஆழ்வார் ஒருவர் தமக்கே ஞான விஷயமானதை மனதில் கொள்ளலாம். அதற்கு காரணம் என்று உரையாசிரியர் சொல்வது, அவர்களுக்கு கிடைத்தது, கர்ம வசத்தாலும், அசுத்த க்ஷேத்திரருமான ப்ரம்மாதிகளின் ப்ரசாதமாகும் என்றும், ஆழ்வாருக்கு கிடைத்ததோ சர்வஜ்ஞக்யரான திருமாலால், திருமாமகளால், பீதக வாடை பிரானாருடைய பிரசாதத்தாலும் என்கிறார். இவர்கள் அவனுக்கே, ‘உனக்கொன்று உணர்த்துவன் நான்‘ என்றும் (திருவாய்மொழி 6.2.5), ‘அவன் எனக்கு நேரான்‘ (நான்முகன் திருவந்தாதி 9.4) என்றும், ‘என்மதிக்கு விண்ணெல்லா முண்டோ விலை‘, (நான்முகன் திருவந்தாதி 6.2) என்றும் சொல்லும்படி சத்வ தேவதையான சர்வேஸ்வரனுடைய பிரசாதத்தாலே கிடைத்த ஞானம் அல்லவா என்கிறார்.
முதற் பாட்டில் “மல்லாண்ட திண்தோள் மணிவண்ணா” (பெரியாழ்வார் திருமொழி 1.1.1) என்று தொடங்கி, ஆழ்வார் அனுபவித்த பராக்கிரமங்களை எல்லாம் என் நெஞ்சில் நன்கு அமைத்தேன் என்கிறார். ‘கோவை வாயாள் (திருவாய்மொழி 4.3) பதிகத்திலும், ‘குரவை ஆய்ச்சியர் ‘ (திருவாய்மொழி 6.4) பதிகத்திலும் தன்னுடைய உணர்ச்சிமிக்க அன்பினைக் காட்டி ஸ்வாமி நம்மாழ்வாரை அனுபவித்ததை போல் இங்கே இவரை அனுபவிப்பதை உரையாசிரியர் சொல்கிறார்.
சுவர் வழி எழுதிக்கொண்டேன் என்று சொன்னது, சுவரில் சித்திரம் எழுதினால் அது கண்ணுக்குத் தோன்றுவது போல, உன் விக்கிரமங்களாகிற சித்திரங்களை எனது நெஞ்சு என்ற சுவரில் அமைத்து விளக்கிக் கொண்டேன் என்கிறார். ஆழ்வார் எம்பெருமானால் மயர்வற மதி நலம் அருளப் பெற்றமையால், அவனுடைய விக்கிரமங்கள் அனைத்தையும் குறைவில்லாமல் கண்டு அநுபவித்ததை கூறுகிறார்.
முனிவர்களுக்கு புண்ணியம் என்று சொல்லி கேவல ஞானத்தை கொடுப்பது போல அல்லாமல், ஆழ்வாருக்கு பிரேமத்துடன் சேர்த்து ஞானத்தை கொடுத்தார். எல்லா அர்த்தங்களையும் பகவத் ப்ரேமம் உடையவர்களுக்கே பிரகாசிப்பது / அளிப்பது. முற்பட்ட பிரேமம் அவனது, அது கண்டு உகந்தது ஆழ்வாரது பிரேமம். ‘கிடந்திருந்து நின்று அளந்து‘ (திருவாய்மொழி 2.8.7)ல் சொல்லிய வியாமோஹத்தையும், ஆன் ஆனான் ஆயன், மீனோடு ஏனமும், தான் ஆனான் என்னில், தானாய சங்கே” (திருவாய்மொழி 1.8.8)ல் சொல்லியபடி தன் மேல் உள்ள ஆசையும், உரை ஆசிரியர் மேற்கோள் காட்டுகிறார்.
மன்னடங்க என்று சொன்னது, அவனுடைய எதிரிகளுக்கு மூன்று ஏழு (3 க்ஷ 7 = 21) தலைமுறைகளுக்கு என்ன நடந்தது என்பதை, அகங்கார அரசர்களை கொல்வதற்கு, அதற்குரிய ஆயுதமும், வேஷமும் தரித்து பரசுராம திருஅவதாரம் எடுத்து, அதன் ஞான சக்தி குணங்களை கொண்டவனே என்று கூறுகிறார். வலது கையில் உள்ள மழு என்ற ஒரே ஆயுத்ததால், பல ஆயுதங்களை கொண்டு எதிர்த்த இராஜாக்களை முடித்த ராமன் என்று சொல்கிறார். ‘வற்புடைய வரைநெடுந்தோள் மன்னர் மாள வென்றி நீண்மழுவா வியன்ஞாலம் முன்படைத்தாய்‘ (திருநெடுந் தாண்டகம் 7)ல் சொன்னபடி மழு பிடித்த பிடியில் விரோதிகளை முடித்ததை சொல்கிறார்.
‘என்னிடை வந்து‘ என்பதற்கு உன் அருளாலே இங்கு வந்து புகுந்த நீ, போகலாமா என்கிறார். திருமங்கையாழ்வாரும் தன் பெரியதிருமொழியில் (7.2.7) ‘ மன்னஞ்ச ஆயிரந்தோள் மழுவில் துணித்த மைந்தா, என் நெஞ்சத்துள்ளிருந்து இங்கு இனிப் போய்ப் பிறரொருவர், வன்னெஞ்சம் புக்கிருக்க வொட்டேன் வளைத்து வைத்தேன்’ என்று வளைத்து வைத்ததையும் இங்கு நினைவில் கொள்ளலாம்.
பெரியதிருமொழி (8.5.8) ‘மழுவினால் மன்னர் ஆருயிர் வவ்விய மைந்தனும் வாரானால்‘ என்று சொன்னதும், (உன் வரவு பார்த்து இருந்த நான் போக சம்மதிப்பேனோ), ‘வென்றி நீண் மழுவா வியன் ஞாலம் முன் படைத்தாய்‘ (திருவாய்மொழி 6.2.10), ‘வடிவாய மழுவேந்தி உலகம் ஆண்டு‘ (திருநெடுந்தாண்டகம் 7), மற்றும் ‘இருநில மன்னர் தம்மை யிரு நாலும் எட்டு மொரு நாலு மொன்று முடனே, .. மழுவாளில் வென்ற திறலோன்,’ .. பெரு நிலம் உண்டு உமிழ்ந்த பெரு வாயர்‘ (பெரிய திருமொழி 11.4.6) என்று யோக்கியதை இல்லாத காலத்தில் படைத்ததும் காப்பாற்றியும் ஆபத்து காலத்தில் வயிற்றில் வைத்து காப்பாற்றியவன் அன்றோ என்கிறார். அதாவது, அவன் வந்து புகுந்த ப்ரகாரத்தையும், அவன் போனால் தாம் முடியும் படியான அவஸ்தை பிறந்தபடியையும், அவனுக்குப் போக்கு இல்லாமல் இருக்கிற நிலையையும் சொல்கிறார்.
‘கொண்ட தாளுறி கோலக் கொடுமழு‘ (பெரியாழ்வார் திருமொழி 1.2.5) என்று சொல்லியபோது மழுவும் இடையர்களுக்கு ஒரு ஆயுதம் என்று சொல்லி, இவரையும் கிருஷ்ணனோடு ஒப்பாக அங்கீகரிக்கிறார். ‘தெவ்வாய மறமன்னர்‘ (பெரிய திருமொழி 3.4.5) என்று திருமங்கை ஆழ்வார் சொல்லியபடி, திருக்குலத்தில் பிறந்தோருக்கு தர்ப்பணம் செய்துவித்து திருப்தி செய்தவன் எங்களுக்கு திருப்தி செய்யக்கூடாதா என்கிறார்.
Leave a comment