திவ்ய பிரபந்தம்

Home

5.4.5 பொன்னைக் கொண்டு உரைகல்

பெரியாழ்வார் திருமொழி 5.4.5

கீழ்ப்பாட்டில், எம்பெருமானுக்கு அமிர்தத்தை உதாரணமாக காட்டினார்; இந்த பாட்டில் பொன்னுக்கு உதாரணமாக கூறுகிறார். அதிலே போக்கியத்தைச் சொன்னார் ; இதில் புனிதத்தைச் (பாவனம்) சொல்கிறார். அற்ப விஷயங்களை பேசிய என் நாக்கைக் கொண்டு, யோக்கியதை இல்லாத வார்த்தைகளால் அவனை துதித்து அவனுடன் கலக்க முயன்றதாக ஆழ்வார் சொல்ல, எம்பெருமான் நாம் இருவரும் ஏகத்துவம் என்னும்படி கலந்தபின் இப்படி சொல்வது ஏன் என்று திருவுள்ளம் கொண்டு சமாதானம் செய்ய, அவன் செய்த உபகாரத்திற்கு தோற்று , ஸ்தோதிர ரூபத்தினால் எம்பெருமானுக்கு ஆத்ம சமர்ப்பணம் செய்கிறார்.

எனக்கு தந்தையாய், என் இந்திரியங்களை இயக்குபவனாய், என்னுடைய ஆத்மாவை மற்றவர்க்கு என்று ஆக்காதவனாய், பொன்னை நிறம் பார்க்க உரைகல்லிலே தேய்ப்பதைப் போலே, உன்னை கொண்டு என் நாக்கினுள்ளே மாற்று அழியும்படி பேசி கொண்டு நின்றேன். உன்னுடைய அங்கீகாரத்தால் என்னுடைய அனுபவத்திற்கு விஷயம் ஆக்கினேன் ; என்னுடைய ஆத்மாவையும் உன் திருவடிகளில் சமர்ப்பித்து விட்டேன் என்பது இந்த பாடலின் பொழிப்புரை .

நிறமெழ என்பதற்கு நிறம் உண்டாகும்படி என்ற பொருள் அல்ல, நிறத்தை அறிவதற்கு என்று பொருள். பொன் என்ற ஈஸ்வரனை, வேதங்கள் என்னும் உரைக்கல் கொண்டு துதிக்கும் போது அது நற்பொன் போன்று இருக்கும் என்றும் அதே ஈஸ்வரனை, ஆழ்வாரின் நாக்காகிற கல் கொண்டு உரைத்தால் அது தூஷிப்பது என்றும் ஆழ்வார் சொல்கிறார்.

உன்னைக் கொண்டு’ என்று தொடங்கி சொல்வது ஒருவராலும் துதிக்கமுடியாத விஷயத்தை ஒருவன் துதிக்கத் தொடங்குவது, அந்த விஷயத்தைத் தூஷிப்பது போலாகும். தரமல்லாத கல்லிலே நல்ல பொன்னை உராய்த்தால் அது சரியான நிறத்தைக் காட்டாது அது போல், உன்னை என் நாக்காலே தூக்ஷித்தேன் என்கிறார்.

முன்பு இருந்ததை பார்த்து, திருமங்கை ஆழ்வாரும், ‘வாடினேன் வாடி‘ (பெரிய திருமொழி 1.1.1) தொடங்கி பல திவ்ய தேசங்களுக்களில் ஈடுபட்டு அனுபவித்தது மாற்றம் உண்டானதனால் தான் என்று உரை ஆசிரியர் சொல்கிறார் .

இப்படி அருளிச்செய்த ஆழ்வாரை நோக்கி எம்பெருமான், “ஆழ்வீர்! திருப்பல்லாண்டு முதல் இது வரை கிருஷ்ணா அனுபவம் செய்ததை நீங்கள் அறியவில்லையா .

இராப்பகல் ஓதுவித்து‘ (பெரியாழ்வார் திருமொழி 5.2.4) சொல் பயிற்சி பணி செய்யும்படி பண்ணி, ‘வயிற்றில் தொழுவைப் பிரித்து‘ (பெரியாழ்வார் திருமொழி 5.2.4) என்று விரோதிகளை போக்கி , சேரும் திருக்கோயிலாம்படி பண்ணி, (சேரும் திருக்கோயில் கண்டீர், பெரியாழ்வார் திருமொழி 5.2.4), அரவிந்தப் பாவையும் தானும் (பெரியாழ்வார் திருமொழி 5.2.10) அரவத் தமளியி னோடும் (பெரியாழ்வார் திருமொழி 5.2.10) அகம்படி வந்து புகுந்த என்னை கண்டு கழித்து காப்பிட்டு (பெரியாழ்வார் திருமொழி 2.8) உறகல் உறகல் உறகல் (பெரியாழ்வார் திருமொழி 5.2.9) என்று நித்ய சூரியை அழைத்து என்னை காக்க செய்யும்படி என் மேல் உமக்கு ப்ரேமம் வரச் செய்த என்னை, என் முன்னே இப்படி சொல்லுவீரோ என்று திருவுள்ளம் கொண்டார். அதாவது, நான் உம்மை நன்றாக இருக்க செய்தேயும், உம்மை நீர் என்னை நாவிற் கொண்டு தூக்ஷித்து விட்டதாகப் பேசுகிறீரே’ என்று சொல்ல, அது கேட்ட ஆழ்வார் மிகவும் அஞ்சி எம்பெருமான் திருவடிகளில் ‘உன்னை கொண்டே என்னுள் வைத்தேன்‘ என்று ஆத்ம ஸமர்ப்பணம் பண்ணுகிறார்.

உன்னை கொண்டே என்னுள் வைத்தேன் என்பது, ‘விட்டு சித்தன் மனத்தே கோவில் கொண்ட‘ (பெரியாழ்வார் திருமொழி 5.4.11) என்றபடி தன்னுடைய அனுபவதிற்கு விஷயம் ஆக்கியதை சொல்கிறது.

என்னையும் என்று சொன்னது, நீ இப்படி மேல் விழுந்து ஆதரிக்கின்ற யோக்கியனான என்னையும், உன் திருவடிகளில் ஆத்ம சமர்ப்பணம் செய்தேன் என்கிறார்.

உன்னலிட்டேன் என்று சொல்வது அனுபவத்தால் மகிழ்ந்து ஆத்ம சமர்ப்பணம் பண்ணியதை, நீரில், மரத்தில், நிலத்தில் உண்டான உயர்ந்த பூக்களில் இருந்த தேனினை உண்டு களிக்கும் வண்டுகளை சொல்லிய ‘உண்டுகளித்து‘ (திருவிருத்தம் 6.5), என்ற பாடல் மேற்கோள் காட்டப்படுகிறது.

என்னப்பா என்று சொன்னது, மாற்றுஇன்றி பொன்னை, நிறமேழ உருக்கி, உரைகல்லிலே தீட்டி பார்த்து உரைப்பது போல, கலப்புப் படாமல் என் நாக்கான கல்லில் உரைத்துக்கொண்டேன்.

நாக்கு நின்னை யல்லால் அறியாது” (பெரியாழ்வார் திருமொழி 5.1.1) என்றும் கண்டு நான் உன்னை உகக்க (பெரியாழ்வார் திருமொழி 2.7.9) என்றும் ‘வேறொருவரோடு என் மனம் பற்றாது‘ (பெரியாழ்வார் திருமொழி 5.1.2) என்றும் ‘மற்றோருயிர்ப்பிடம் நான் எங்கும் காண்கின்றிலேன்’ (பெரியாழ்வார் திருமொழி 5.3.4) என்றும் உண்ணா நாள்பசி யாவதொன் றில்லை (பெரியாழ்வார் திருமொழி 5.1.6) என்றும் சொல்லி என் இந்திரியங்களுக்கு விஷயம் ஆனவனே என்பதை ‘என் இருடீகேசா‘ என்று சொல்கிறார்.

என்னுயிர் காவலனே என்று சொல்வது, மாலருளால்  (திருவாய்மொழி 1.5.11) என்று மீண்டும் அவன் ப்ரஸாதத்தாலே தாமுளரான நம்மாழ்வாரை போலே, அகல முடியாதபடி பண்ணினவனே என்கிறார். அது மட்டும் இல்லாமல், கருவிருந்த நாள்முதலாக் காப்பு (நான்முகன் திருவந்தாதி 10.2) என்கிறபடி யோக்கியதை இல்லாத காலத்திலேயும் குணத்தினை நோக்கினவனே என்கிறார்.

நிறமுண்டான பொன்னை, உரைக்கல்லில் உரைத்தாற்போல் ‘பொன்னிவர்‘ (பெரிய திருமொழி 9.2.1)என்றும், செம்பொனே திகழும் திருமேனி (திருவாய்மொழி 1.10.9) எனவும், சொல்கின்ற உன்னை, என் நாக்காலே உரைத்து, மாற்று மருவற்ற நல்ல பொன் போலே நானும் ஆனேன் என்று சாம்யாபாத்தியை (அவனுடன் கலந்த நிலை) சொல்கிறார் என்றும் சொல்லுவார்கள்.

Leave a comment