திவ்ய பிரபந்தம்

Home

5.4.4 கடல் கடைந்து அமுதம்

பெரியாழ்வார் திருமொழி 5.4.4

கீழ்ப்பாட்டில், “என்னுடைய பாவங்கள் மட்டும் கழிந்ததோடு, நாட்டில் உள்ளவர்கள் எல்லாருடைய பாவங்களும் கழித்தன” என்று சொன்னார், இந்த பாட்டில் தனக்கு யம (வச்யதை) பயம் / அவஸ்தை போய் விட்டது என்கிறார்; அது மட்டுமல்ல, என்னுடைய ஆணை செல்லும் இடங்களில் யமனும் கூட அணுக முடியாது’ என்கிறார்.

பெரிய மலை போன்ற திருத்தோள்களை உடைய, திரு ஆழி ஆழ்வானை திருக்கையில் உடைய, ஸ்ரீ சார்ங்கம் என்கிற வில்லினை உடைய, சேவகனே! திருப்பாற்கடலை (மந்திர பர்வதத்தாலே) கடைந்து, அமிர்தத்தை வாங்கி கலசத்தில் நிறைத்ததை போல் உடல் உருகி வாயைத் திறந்து இரண்டு கைகளையும் மடுத்து போக்யனான உன்னை தேக்கிக் கொண்டேன். கொடிய விதமாக தண்டிக்கிற யமனும் என்னுடைய செங்கோல் செல்லும் இடத்தில் எல்லாம் கிட்ட மாட்டான் என்பது இந்த பாடலின் பொழிப்புரை.

மகத்தான கடலைக் கடைந்து, சுருக்கி, எடுத்த அமுதத்தைக் கலசத்தினுள் நிறைத்ததை போல, உன்னை நான் என்னுள்ளே நிறைத்துக்கொண்டேன் என்கிறார். ஸம்ஸாரமாகிய கடலினைக் கடைந்து, ஆத்மாவாகிற கலசத்தில், ஆழ்வார், அமுதமாகிய ஈஸ்வரனை நிறைத்துக் கொண்டார். நீங்காத ஸம்பத்து நிறையும்படி பால் வெள்ளத்தாலே குடங்களை நிறைக்கும் (குடம் நிறைக்கும் திருப்பாவை 3) பெரிய பசுக்களை போலவும், கரந்த பாலை ஏற்றுக் கொண்ட கலங்களானவை எதிரே பொங்கி மேலே வழியும்படியாக இடைவிடாமல் பாலைச் சுரக்கின்ற நல்ல குணங்களைக் கொண்ட பெரிய பசுக்களை (‘ஏற்ற கலங்கள் திருப்பாவை 21) போலவும் அமுதத்தை ஆத்மாவாகிற கலசத்தில் நிறைத்து கொள்வதை சொல்கிறார் .

இங்கு ஆழ்வார் தன்னை ஒரு உயிரற்ற பொருளுடன், தன்னை கலசம் என்று ஒரு அசித்துடன், ஒப்புமை கொள்கிறார். இதனை, உபாய காலத்தில் இப்படி கிடக்கவும், உபேய தசையில் ‘உன் பவள வாய்‘ (பெருமாள் திருமொழி 4.9) காணவும் வல்லவர் என்றும் பொருள் கொண்டு அனுபவிக்கலாம்.

முன்பு அசித்தாக சொன்னவர், இங்கு உடலுருகி என்று, ஈஸ்வரனை அறிந்த ஒரு அடியவனாக சொல்கிறார். ஈஸ்வரன் செய்தததை அறிவதற்கும் அதனை நினைவில் கொள்வதற்கும் சந்தனம் போன்ற வாசனை திரவியங்களை காலம் செலவழித்து அனுபவிப்பதை போல் அனுபவித்தத்தைச் சொல்கிறார். இது ‘ஆட்செய், எனக்கு ஆட்செய், எனக்கே ஆட்செய், எக்காலத்தும் எனக்கே ஆட்செய்’ என்று பிரித்து சுவைத்து, ‘என்னை நியமித்துக் கொண்டு, என் நெஞ்சின் உள்ளே வந்து படுகாடு கிடக்கவேணும்’, என்று சுவாமி நம்மாழ்வார், தனக்கே யாக வெனைக் கொள்ளுமீதே (திருவாய்மொழி 2.9.4) என்று சொல்வதை போல் இவரும் தான் விரும்பும் புருஷார்த்தம் இதுவே என்கிறார்.

பகவத் அனுபவ அதிசயத்தினால், வெள்ளக்கேடு ஆகாதபடி இட்ட கரை அன்றோ சரீரம் என்பது. அதுவும் உருகியது என்றால் எப்படி என்று கேட்டுக்கொண்டு, ‘நினைதொறும் சொல்லுந்தொறும் நெஞ்சு இடிந்துகும்‘ (திருவாய்மொழி 9.6.2) மேற்கோள்காட்டி, உருவற்ற நெஞ்சே உருகுகிறது என்றால் உடல் உருகுவதை சொல்லவும் வேண்டுமோ ?“ ஆத்மாவுடன் சரீரமும் உருகியது. ‘ஆராவமுதே! அடியேனுடலம் நின்பால் அன்பாயே, நீராய் அலைந்து கரைய உருக்குகின்ற நெடுமாலே!” (5.10.1) என்ற திருவாய்மொழியையும் நினைவில் கொள்ளலாம்.

நிறைத்துக் கொண்டேன் என்பது தேக்கிக்கொண்டேன், ‘கடிவார் தண்ணந்துழாய்க் கண்ணன் விண்ணவர் பெருமான், …. அடியேன் வாய் மடுத்துப் பருகிக் களித்தேனே (திருவாய்மொழி 2.3.9) அருளியபடி ஆகும்.

‘உடலும் நெஞ்சும் உருகினால், பின் இந்த அமுதத்தைத் தேக்கிக் கொள்வது எப்படி ?” என்று நஞ்சீயர், பட்டரைக் கேட்க, ‘விட்டுசித்தன் மனத்தே கோயில் கொண்ட கோவலன்’ ( பெரியாழ்வார் திருமொழி 5.4.11) என்பதால், அந்த அமுதம் வியாபித்த இடம் எங்கும் திருவுள்ளம் வியாபிக்கும் என்று கொள்வீர் என்று பட்டர் அருளிச் செய்வார். அவன் கொடுத்தது பரமபக்தி, (அறிவையென்னும் அமுதவாறு  பெரியாழ்வார் திருமொழி 5.4.2) என்று அங்கு சொன்னார் ; இங்கு பிறப்பித்த வரிசையை உன்னை நிறைத்துக்கொண்டேன் என்று சொல்கிறார்.

கொடுமை செய்யும் கூற்றமும் என்று சொன்னதில் இருந்து தண்டனை அளிப்பதில் மாறாமல் எல்லா பொழுதும் எல்லா நாட்களும் செய்பவன் யமன் என்று சொல்கிறார். யமன், அக்னி மற்றும் ருத்ரன் என்ற மூவரில் யமன் மட்டுமே எப்போதும் சம்ஹாரம் செய்பவன்.

வையத்தையும் மனிசரையும் பொய் என்று சொல்லி, காலனையும் உடனே படைத்தது. வையமும் மனிதரும் பொய்யாக இருக்கும் போது இவன் மட்டும் எப்படி மெய்யாக இருக்கிறான் என்பதை ஆழ்வாரின் இந்த வார்த்தைகள் தெரிவிக்கிறன. அப்படிபட்ட யமனையும் பொய்யானகும்படி செய்தது இவன் விசேஷம் என்கிறார்.

தடவரைத்தோள் சக்கரபாணீ  சாரங்க வில் என்பதில் தடம் என்பது பெருமை , சமுத்திரம் என்ற அர்த்தங்களில் வரும் . பெரிய மலைபோன்ற தோள், அல்லது மலை போன்ற பெரிய தோள் என்கிறார் . அருகில் இருப்பவர்களை சுதர்சன சக்கரத்தினாலும் தூரத்தில் இருப்பவர்களை வில்லினாலும் கொல்வான் என்றும் அல்லது ஆழ்வாராலும் அம்பினாலும் முடிப்பான் என்கிறார்.

Leave a comment