பறவையேறு பரம்புருடா நீ என்னைக் கைக் கொண்ட பின், * பிறவி என்னும் கடலும் வற்றிப் பெரும் பதமாகின்றதால், * இறவு செய்யும் பாவக்காடு தீக்கொளீ இவேகின்றதால், * அறிவை யென்னும் அமுதவாறு தலைப் பற்றி வாய்க் கொண்டதே.
பெரியாழ்வார் திருமொழி 5.4.2
சென்ற பாட்டில், ‘இனி என் திருக்குறிப்பே’ என்று சொல்லி, எனக்கு செய்ய வேண்டியது எல்லாம் செய்து இருக்க, இனி பதறுவது ஏன் என்று கேட்க, ‘நீர் எல்லாம் பெற்றீர்களோ, உங்களை பற்றி கிடந்த கர்மங்கள் கிடக்கின்றனவே, மேலே பிராப்திக்கான பரமபக்தி பிறக்கவில்லையே, அர்ச்சிராதி மூலமாக செய்யவேண்டிய அம்சங்கள் பிறக்கவில்லையே என்று அருளி செய்ய, இவை அனைத்தும் பிறந்தன என்று ஆழ்வார் இந்த பாடலில் அருளி செய்கிறார்.
பெரிய திருவடியை (கருடன்) (வாஹனமாகக்) கொண்டு ஏறுகின்ற புருஷோத்தமனே, சர்வ ரக்ஷகனான நீ வேறு வழி இல்லாத என்னை அங்கீகரித்த பின், சம்சாரமாகிற பெரிய சமுத்திரமும் வற்றி , பெரிய தரம் பெற்றது ; இவ்வாத்மாவை முடிக்கிற பாவ சமூகமானது நெருப்புப்பட்டு வெந்திட்டது. ஞானமாகிற அமிர்த நதியானது வாய் அளவாய் தலைக்கு மேலே போகின்றது என்பது இந்த பாடலின் பொழிப்புரை .
திருவேங்கடமுடையான் பெரிய திருவடி மேல் எழுந்தருளி இருந்து ஆழ்வாரைத் திருநாட்டுக்கு எழுந்தருளப் பண்ணிக் கொண்டு போவதாக எண்ணுகிறார் . இந்த ஸம்ஸாரத்துக்கு மூலமான பாவங்களும் தீயினில் இடபட்ட தூசு போல மறைந்ததால், திருவேங்கடமுடையான் பறவை மேல் எழுந்தருளினார் என்கிறார் .
‘வெங்கண் பறவையின் பாகன் என் கோன் வேங்கட வாணணை‘ (திருவாய்மொழி 8.2.1) என்றும்,
‘இலங்கைப் பதிக்கு அன்று இறையாய, அரக்கர் குலம் கெட்டவர் மாளக் கொடிப் புள் திரித்தாய்!, விலங்கல் குடுமித் திருவேங்கடம்‘ (பெரிய திருமொழி 1.10.2) என்றும்
‘பாடும் குயில்காள் ஈதென்ன பாடல் நல் வேங்கட நாடர் நமக்கொரு வாழ்வு தந்தால் வந்து பாடுமின் ஆடும் கருளக் கொடியுடையார் வந்து அருள் செய்து‘ (நாச்சியார் திருமொழி 10.5) என்றும் ஆழ்வார்கள் திருவேங்கடமுடையான் பெரியதிருவடி மேல் வந்து அருள் புரிந்ததை சொல்வதை இங்கே உரையாசிரியர் மேற்கோள் காட்டுகிறார் .
நீ என்று சொன்னது ‘கண்ணிலேன் நின்கண் மற்றல்லால் வேறொருவரோடு என் மனம் பற்றாது‘ (பெரியாழ்வார் திருமொழி 5.1.2) என்றும் உனக்கு பணி செய்திருக்கும் தவம் உடையேன் (பெரியாழ்வார் திருமொழி 5.3.3) என்றும் ‘அங்கு ஓர் நிழல் இல்லை, நீரும் இல்லை‘ (பெரியாழ்வார் திருமொழி 5.3.4) என்று உன்னை தவிர வேறு ஒரு கதி இல்லை என்றும் , உன்னை தவிர வேறு உபாயம் இல்லை என்றும் , உன்னை தவிர வேறு போகம் எதுவும் இல்லாத ‘நீ’என்கிறார் .
என்னைக் கைக் கொண்ட பின், நடப்பது ‘அடியான் இவன் என்று எனக்கு ஆர் அருள் செய்யும் நெடியானை நிரை புகழ் அம் சிறைப் புள்ளின் கொடியானை‘ (திருவாய்மொழி 9.4.10) சொல்லியது போல் ஏக காலத்தில் ஆழ்வாருக்கு அருள் செய்வது ஆகும்.
‘பெரும் பதமாகின்றது’ என்பதற்கு பெரியதாவதை சொல்கிறார் . பரிவட்டமும், மேல் சாத்தும் பெற்றதை சொல்கிறார். ‘எத்திறத்து இன்பம் இங்கும் அங்கும் எங்கும் ஆகுமே‘ (திருச்சந்தவிருத்தம் 9.2)ல் சொல்லியபடி சர்வ வித சுகமும் இந்த உலகத்திலும் அவ்வுலகத்திலும் மற்றும் எல்லா உலகத்திலும் கிடைக்கப்பெற்றதையும், ‘எங்கும் திருவருள் பெற்று இன்புறுவர் (திருப்பாவை 30) என்பதையும் பெரிய பதவியை யான் பெற்றேன் என்கிறார்.
இழப்பதற்கு எப்படி சம்சாரமும் கர்மங்களும் போல், மோக்ஷத்திற்கு ஞானமும் பக்தியும் என்கிறார். பிறவி என்னும் கடலும் வற்றி இன்றளவும் பிறவிக்கடலில் கிடந்தமையால் கீழ் மட்டத்தில் இருந்த நான், இன்று உத்தம பதவியைச் சேர்ந்தேன் என்று சொல்கிறார்.
இவ்விடத்தில் ‘அறிவை என்னும் அமுத ஆறு‘ என்று சொன்னது ஞான அமிர்தமாகிய ஆறு பெருகி மேன் மேலும் வளர்ந்து வாய் அளவில் இல்லாமல் அத்தனையும் தலைக்கு மேல் செல்வதை சொல்கிறார், இது ”சூழ்ந்த அதனில் பெரிய என் அவா‘ (திருவாய்மொழி 10.10.10) என்பது போலவும், ”என் தலை மிசையாய் வந்திட்டு” (திருவாய்மொழி 10.10.1) என்பது போலவும் வரும் பெருக்காறு என்று உரையாசிரியர் சொல்கிறார் .
Leave a comment