சென்னியோங்கு தண் திருவேங்கடமுடையாய் உலகு, * தன்னை வாழ நின்ற நம்பீ தாமோதரா சதிரா என்னையும், * என் உடைமையையும் உன் சக்கரப் பொறி ஓற்றிக் கொண்டு * நின்னருளே புரிந்திருந்தேன் இனி என் திருக்குறிப்பே.
பர, வியூக, விபவ, அந்தர்யாமி, மற்றும் அர்ச்சாவதாரங்களில் எழுந்தருளி இருப்பது, அடியவர்களை திருத்துவதற்கும், அப்படி திருத்தியவர்களிடம் கைங்கர்யங்களை பெற்று கொள்வதற்கும் தான் என்றும் இதனை முழுவதுமாக காண்கின்ற இடம் திருமலையில் எழுந்தருளி நிற்கிற நிலையில் என்பதையும் இதனை செய்வதே முதன்மையாகவும்கொண்டு இருப்பவன் இவன் அன்றோ என்றும் அருளிச் செய்கிறார்.
‘திருமாலிருஞ்சோலை மலைமென்றேன் என்ன, திருமால் வந்து என் நெஞ்சு நிறையப் புகுந்தான்’, என்று திருவாய்மொழி (10.8.1) சொல்வது போலவும், “வெற்பென்று வேங்கடம் பாடினேன், வீடாக்கி நிற்கின்றேன்” என்று நான்முகன் திருவந்தாதி (4.10) சொல்வது போலவும், ‘வெற்பென்று இருஞ்சோலை வேங்கடம் என்று இவ்விரண்டும் நிற்பென்று’ (இரண்டாம் திருவந்தாதி 54), என்று சொல்லி திருப்பாற்கடலை கைவிடாதே என்று சொல்லியது போலவும் , திருவேங்கட எம்பெருமான் வந்து புகுந்தான். ஆகையால் அவன் சௌகார்த்தம் (எல்லோரும் நன்றாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் வருவது) போன்ற ஆத்ம குணங்களை பிறப்பித்து, ஆச்சாரியனோடு சேர்ந்து, விரோதிகளில் அருசியையும், பிராப்யத்தில் ருசியையும் பிறப்பித்து, காரியம் செய்வான். இப்படி திருந்திய ஆழ்வாரை கண்டு அவன் உகக்க, அவன் உகப்பை கண்டு இவர் உகக்க, இந்த உகப்புக்கு மேல் வேறு ஒரு பேறு இல்லை என்று இவர் இருக்க, இவர் காரியத்தில் நாம் முதலடி எடுத்து வைக்க வில்லை என்று அவன் பதற, அவன் பதற்றத்தை தணிக்க ஆழ்வார் பார்க்கிறார்.
பெரியாழ்வார் திருமொழி 5.4.1
ஆகாயம் அளவிற்கு உயர்ந்து இருக்கிற கொடு முடிகளை உடைய குளிர்ந்து இருக்கும் திரு வேங்கட மலையை வாசஸ்தலமாக கொண்டு உலகத்தாரை வாழ்வித்து அருளிகிற குண பூர்த்தியை உடையவனாக யசோதை பிராட்டியால் கட்டு உண்டவனாக அடியவர்கள் குற்றத்தை கண்டும் பாராத குணத்தை உடையவனே, என் ஆத்மாவிற்கும் என் உடைமையான சரீரத்திற்கும் உன்னுடைய திருவிலச்சினையை இட்டு உன்னுடைய க்ருபையையே விரும்பி நிற்கின்றேன். இப்படியான பின்பு திருவுள்ளக்கருத்து எதுவாக இருந்தது? என்பது இந்த பாடலின் பொழிப்புரை.
உனது திவ்ய கல்யாண குணங்களைக் காட்டி வசப்படுத்திக் கொண்டு, உனக்கே அடியேனை அடிமைப்படுத்தி கொண்டு, உன் அருளையே புருஷார்த்தமாக, மிக்க மரியாதையுடனும் மிக்க நம்பிக்கையுடனும் இருக்கும் படியான நிலைமையயும் அடியேனுக்கு அமைத்து அருளினாய். இதனால் உன் எண்ணமும் நிறைவேறியது, அடியேனுடைய எண்ணமும் நிறைவேறியது ; இனிச் செய்ய வேண்டுவது ஓன்றும் இல்லை; இன்னும் என்ன செய்ய வேண்டும் என்று பதற்றம் அடைகிறாய், உன் திருவுள்ளத்தில் என்ன ஓடுகிறது என்று கேட்கிறார்.
சென்னியோங்கு என்று சொன்னது உபயவிபூதி (மேல் உலகம் வரையில் ) நீண்டு இருக்கும் சிகரங்களை உடைய திருவேங்கடம் என்கிறார் . இதனால், அங்கு உள்ளவர்களுக்கும் முகம் காட்டும் நிற்கிற நிலை என்கிறார். ‘வேங்கடம் கோயில் கொண்டதனோடும், வானிடை அருக்கன் மேவி நிற்பாற்கு‘ (பெரிய திருமொழி 2.1.7)ல் திருமங்கை ஆழ்வாருக்கும் கூறி உள்ளார். ‘தண்ணருவி வேங்கடமே வானோர்க்கும் மண்ணோர்க்கும் வைப்பு‘ (நான்முகன் திருவந்தாதி 5.5)ல் திருமழிசையாழ்வார் கூறியதும் இதுவே. சுவாமி நம்மாழ்வார் (திருவாய்மொழி 1.8.3)ல் கூறியது ‘கண்ணா வான் என்றும், மண்ணோர் விண்ணோர்க்கு தண்ணார் வேங்கட, விண்ணோர் வெற்பனே‘. என்பதும் இதே கருத்தையே. அங்குள்ளார் திருமலையின் கொடுமுடியில் வந்து இளைப்பாறுவர்கள் ; இங்குள்ளார் ‘மொய்த்த சோலை மொய் பூந்தடம் தாழ்வரே‘ (திருவாய்மொழி 3.3.10)ல் சொல்லியபடி மொய்த்த சாலையிலும் மொய்பூந்தடத்திலும் இளைப்பாறுவார்கள்.
பூவியல் பொழிலும் தடமும் அவன் கோயிலும் கண்டு ஆவி உள் குளிர ” (திருவாய்மொழி 6.7.5) என்று சொல்வதும் ‘உள்ளுளாவி யுலர்ந்துலர்ந்து‘ (திருவாய்மொழி 2.4.7) என்று சொல்வதும், குளிரருவி வேங்கடத்தென் கோவிந்தன் (நாச்சியார் திருமொழி 8.3) என்று சொல்வதும், ஆவி உள் குளிருவது தண்திருவேங்கடத்தில் என்பதை விளக்கும். வேங்கடத்திற்கு தண்மை என்பது, ஸம்ஸார தாபங்களை ஆற்றுவது. ரக்ஷகனுக்கு (எம்பெருமானுக்கு) ரக்ஷகம் (நித்யசூரிகளின் பாதுகாப்பை) கிடைக்காத குறையையும், நித்யசூரிகளுக்கு எம்பெருமானின் கல்யாண குணங்களை அனுபவிக்க முடியாத குறைகளையும் தீர்த்து வைக்க கூடிய திருமலை என்கிறார். இருவர் விருப்பத்தையும் நிறைவேற்றும் தண் வேங்கடம். ‘எந்நாளே நாம் மண்ணளந்த இணைத் தாமரைகள் காண்பதற்கென்று, எந்நாளும் நின்று இமையோர்கள் ஏத்தி யிறைஞ்சி யினமினமாய்‘ (திருவாய்மொழி 6.10.6) என்று எம்பெருமானின் சௌசீல்ய சௌலப்ய குணங்களை அனுபவிக்க பெறாத நித்யஸூரிகளின் விருப்பத்தையும் நிறைவேற்றும் வேங்கடம் என்கிறார்.
‘உலகுதன்னை’ என்பதை உலகத்தவர்கள் எல்லோரும் வாழும்படி நின்ற நம்பீ, என்று கொள்ளலாம். சௌசீல்யம், சௌலப்யம், ஸ்வாமித்வம் என்ற குணநலங்கள் தோன்றும்படி உள்ள திருவேங்கடம் என்கிறார். ‘அடிக்கீழ் அமர்ந்து புகுந்து அடியீர் வாழ் மின் என்று என்றென்றும் அருள் கொடுக்கும்‘ (திருவாய்மொழி 6.10.11) என்பதையும், ‘கானமும் வானரமும் வேடும் உடை வேங்கடம்‘ (நான்முகன் திருவந்தாதி 5.7) என்பதையும் சொல்லி உலகு தன்னை வாழ நின்ற நம்பி அல்லது அனைவரையும் வாழவைக்கும் வேங்கடம் என்கிறார். நம்பி என்பது நிகரில் புகழாய், என்ற வாத்சல்யம், உலகம் மூன்று உடையாய் (திருவாய்மொழி 6.10.10) என்ற ஸ்வாமித்வம், என்ற சௌசீல்யம் குணபூர்த்தியை குறிக்கும். இது இங்குள்ளார்க்கு முகம் கொடுத்தபடியும், ‘நிகரில் அமரர் முனிகணங்கள் வணங்கும் திருவேங்கடத்தானே ‘ என்று சொல்வது மேலுலகத்தில் உள்ளவர்களுக்கு முகம் கொடுத்ததை சொல்லும் .
தாமோதரன் என்பது சிறு தாம்பினால் கட்டுண்ணப் பண்ணிய பெருமானாதலால், அந்த கயிற்றின் தழும்பு திருவயிற்றில் தோன்றும்படி உள்ளவன் என்பதை தெரிவிக்கும். ‘தமக்கடிமை வேண்டுவோர் தாமோதரனார்‘ (பெரிய திருவந்தாதி 4.2) சொல்லியபடி தாம் அடிமையாயிருப்பதற்கு ஆசைப்படுமவரான தாமோதரன் என்கிறார் . ‘சூழ்ந்தடியார் வேண்டினக்கால்‘ (பெரிய திருவந்தாதி 2.7)ல் சொன்னபடி அடியாருடைய குற்றத்தைக் கண்ணெடுத்துப் பாராத சதிரா என்பதாகும்.
ஆத்மாவுக்குச் சக்கரப்பொறி ஓற்றுகை என்பது, எம்பெருமானை தவிர மற்றவர்களுக்கு அடிமையாய் இருப்பது என்ற எண்ணத்தை தவிர்ப்பது. அந்த எண்ணம் பிறந்ததை தெரிவிக்கவே தோளுக்குத் திருவிலச்சினையிடுவது.
என்னையும் என் உடைமையையும் என்று சொன்னது, ஆத்மாவையும் சரீரத்தையும் சேர்த்து சொல்கிறார்.
‘நின்னருளே புரிந்திருந்தேன்’ என்று சொன்னது, உன்னுடைய கருணையையே, அதேயே பயனாக கொண்டு, (ஸ்வயம் பிரயோஜனமாக) வேண்டி இருந்தேன். விதிவாய்க்கின்று காப்பாரார், (திருவாய்மொழி 5.1.1)ல் சொல்லியபடி பகவத் கிருபை பலிக்கும் போது அதனை தடுக்க வல்லவர் யார் என்று அவன் அருள் பெருகுவதை சொல்கிறார்.
Leave a comment