அன்று வயிற்றில் கிடந்திருந்தே அடிமை செய்யலுற்றிருப்பன், *இன்று வந்து இங்கு உன்னைக் கண்டு கொண்டேன் இனிப் போக விடுவதுண்டே, * சென்றங்கு வாணனை ஆயிரந் தோளும் திருச்சக்கரம் அதனால், * தென்றித் திசைதிசை வீழச்செற்றாய் திருமாலிருஞ் சோலை யெந்தாய்.
பெரியாழ்வார் திருமொழி 5.3.9
எத்தனை காலம், எத்தனை ஊழி என்ற கால விசேஷத்தில், இந்த பாட்டில், எம்பெருமான் பண்ணி வைத்தோர் காலத்தை சொல்கிறார்.
சோணிதபுரத்திலே எழுந்தருளி பாணாசுரனை ஆயிரம் தோள்களும் திக்குகள் தோறும் சிதறி விழும்படி திரு ஆழியாஸ்லே வென்றவனாய், திருமாலிருஞ்சோலை எந்தாய் ; தாயார் கர்ப்பத்திலே கிடக்கிற அக்காலத்திலேயே உனக்கு அடிமை செய்கையில் ஒருப்பட்டிருப்பேன் ; அப்படியே இப்போது இத்திருமலையிலே வந்து சர்வ சுலபனான உன்னை கண்டு கொண்டேன் ; இனி போக விடுவது உண்டோ ? என்பது இந்த பாடலின் பொழிப்புரை .
அடியேன் கர்ப்ப வாஸம் பண்ணிக் கொண்டிருந்த போதே உனக்குப் பணி செய்ய வேணுமென்று மிக பெரிய ஆசை கொண்டிருந்து, பிறந்த பின்பு, அன்று நான் ப்ரார்த்தித்தபடியே திருமலையில் வந்து என் விரோதியை போக்கி , ஞானத்தைப் பிறப்பித்த உன்னை இன்று இந்த திருமாலிருஞ்சோலையை அடைந்து, இங்கே உன்னைக் கண்டு கொண்டேன் ; காணப்பெற்ற பின்பு, இனி விட்டு பிரியமாட்டேன் என்கிறார். கர்ப்பத்தில் கிலேசப் படுகின்றனவன் இல்லை ; அடிமையில் ஆண்ட்ரே உற்று இருந்த நான் , அடிமை கொள்வதற்கு சர்வ சுலபனான உன்னை இன்று போக விடுவேனா? ஸ்வாதந்திரியத்தையும் மற்றவர்க்கு அடிமை செய்வதையும் கழித்து விட்டதை சொல்கிறார் .
அடிமை செய்யல் உற்றிருப்பன் என்பது, கைங்கரியமே புருஷார்த்தம் என்று துணிந்திருந்தேன் என்று சொல்வதாகும். ‘அன்றே அடிமை செய்யலுற்றிருப்பன்’ என்றதனால், இன்று அடிமை செய்ய விரும்புவதில் சிறிதும் சந்தேகம் இல்லை என்பது வெளிப்படும்.
சோணித புரத்திற்கு சென்று, பாணாஸுரனுடைய ஆயிரம் தோள்களும் எல்லா திசைகளிலும் சிதறி விழும்படி சக்கராயுதத்தினால் வெற்றி கொண்ட எம்பெருமான் திருமாலரிஞ்சோலையில் எழுந்தருளி உள்ளார் என்கிறார்.
Leave a comment