திவ்ய பிரபந்தம்

Home

5.3.8 எத்தனை காலமும்

பெரியாழ்வார் திருமொழி 5.3.8

இந்த பாடலில், அனர்த்த கடலில் அழுந்தி இருந்த காலத்தின் பெருமையை சொல்கிறார். கடந்த காலத்திற்கு ஒரு முடிவு உண்டோ என்கிறார். காலத்திற்கு முடிவு இல்லாது போலே, போன இடங்களுக்கும் முடிவு இல்லை என்கிறார்.

திருமாலிருஞ்சோலை எந்தாய் ; இன்று என்றும், நாளை என்றும், நேற்று என்றும் கழிந்த காலம் எவ்வளவு காலமோ, எத்தனை மஹாப்ரளயங்களோ, தினம், பக்ஷம், மாசம், மற்றும் வருடங்களாக உள்ள கல்ப காலமெல்லாம் தப்பமுடியாதபடி சம்சார எந்திரத்திலே போய் அகப்பட்டேன் ; இது உன் மாயம் என்று அறிந்த பின்பு, சர்வ ரக்ஷிகனான உன்னை போக விட மாட்டேன்; மைத்துனன்மாரான பாண்டவர்களை அரசாளவைத்து அவர்களுக்கு சத்துருக்களான துரியோதநாதிகளை அழியாகி செய்த நீ இருப்பதை என் மனம் உன் விஷயத்தில் அறிவாயன்றோ என்பது இந்த பாடலின் பொழிப்புரை .

நேற்றைக்கென்றும், இன்றைக்கென்றும், நாளைக்கென்றும், இப்படி சொல்லிக்கொண்டு கழித்த காலம் முழுவதையும் பாழே போக்கினேன்; ‘தெரிந்து உணர்வு ஓன்று இன்மையால் தீவினையேன், வாளா இருந்து ஓழிந்தேன் கீழ்நாள்கள் எல்லாம்‘ (பெரிய திருவந்தாதி 82) என்று சொல்லியதும், பழுதே பலபகலும் போயினவென்று , அஞ்சி அழுதேன் (முதல் திருவந்தாதி 16) என்று சொல்லியதும் மேற்கோள் கட்டப்பட்டு உள்ளன.

கிறி என்பது ஒரு எந்திரம், அதாவது விரகு, சர்வ பூதங்களும் பிரமிக்கும்படி உள்ள எந்திரம். அஞ்ஞானத்துடன் இருக்கும் ஒன்று. கிறி என்ற சொல் மாயப் பொருளாகையால், ‘கிறிப்பட்டேன்’ என்பதற்கு ஸம்ஸாரத்தில் அகப்பட்டேன்’ என்று உரைத்தது சரியாகும். ஸம்ஸாரம் எம்பெருமானது மாயை ஆயிற்றே.

ஏதோ சிறிது விசேஷத்தினால் உன் கருணை கிடைத்து, இன்று உன்னை பிடித்தேன்; இனி நீ என்னை விட்டுப் புறம் போக நினைத்தால், அதற்கு நான் சிறிதும் இசைய மாட்டேன்; ‘பெற்றினிப் போக்குவனோ உன்னை என் தனிப் பேருயிரை உற்ற இருவினையாய் உயிராய்ப் பயனாய் அவையாய் முற்ற இம் மூவுலகும் பெருந் தூறாய்த் தூற்றில் புக்கு முற்றக் கரந்தொளித் தாய்.என் முதல் தனி வித்தேயோ (திருவாய்மொழி 10.10.8) என்பது போல் இந்த ஆழ்வாரும் இனி உன்னை போகலொட்டேன் என்கிறார். உன்னை போக சம்மதிப்பது என்பது , உபாயம் , ப்ராப்யம் இரண்டுமே நீ என்று ஆனபோது கிடைக்கும் போது கிடைக்கட்டும் என்று ஆறி இருத்தல் போல் ஆகும் என்கிறார் .

எனக்கு உன்னிடத்தில் இவ்வகை அபிநிவேசம் (ஆசை) பிறக்கைக்கு ஈடாக, என் நெஞ்சு உன்னை விட்டு மற்றொன்றை நினைப்பதே இல்லை என்பதை, ‘விட்டு சித்தன் மனத்தே கோவில் கொண்ட கோவலனான‘ (பெரியாழ்வார் 5.4.11) ஸர்வஜ்ஞனான நீ அறியவில்லையோ என்கிறார்.

இது உன் மாயம் என்று அறிந்த பின்பு, உன்னை, ரக்ஷகனாய், உபாய பூதனாய், பிராப்ய பூதனாய், இருக்கிற உன்னை போகலொட்டேன் என்கிறார். ஏன் என்றால், நீ அடியவர்களுக்காக இருப்பவன் என்பதால் என்று சொல்லி , பாண்டவர்களை வாழ்வித்து, நூறு கௌரவர்களையும் அழித்த வரலாற்றை கூறுகிறார். கொத்துத் தலைவன் குடிகெடத் தோன்றிய அத்தன்(பெரியாழ்வார் திருமொழி 1.10.3) என்று இந்த ஆழ்வார் சொன்னதை நினைவில் கொள்ளலாம் .

சித்தம் நின் பாலது என்று சொல்வது எம்பெருமான் அர்ஜுனன் போல அந்தரங்கம் உண்டோ என்று கேட்க, தான் தன்நெஞ்சுக்கு ஒத்து உன்னுடன் உணவு கொள்ளுதல், உனக்கு பூ விடுதல் , முடித்த பூவை முடித்தல் , முடித்துக் கொடுத்தல் , பல்லாண்டு இசைத்தல் , அடிகொட்டுதல் , மாறி இட்ட அடிக்கு தோற்று எழுதிக் கொடுத்தல் என்று உன் பக்கம் சித்தம் உள்ளது அல்லவோ என்கிறார் . அர்ஜுனனுக்கு மைத்துனன் என்று ஓர் சம்பந்தம் மட்டுமே உள்ளது என்றும் , ‘திருமாலே நானும் உனக்கு பழவடியேன்'(திருப்பல்லாண்டு 11) என்று ஒழிக்க ஒழியாதபடியான உறவு அன்றோ இது என்கிறார் . நீ சொன்ன மெய்ம்மைப் பெருவார்த்தை‘ (நாச்சியார் திருமொழி 11.10) அர்ஜுனன் கேட்டும் கேட்காதவனாய் போனான். ஆழ்வார் கேட்டு உன்னிடம் விசுவாசத்துடன் இருக்கிறேன் என்கிறார் .

Leave a comment