அக்கரை என்னும் அனத்தக் கடலுள் அழுந்தி உன் பேரருளால், * இக்கரையேறி இளைத்திருந்தேனை அஞ்சேலென்று கை கவியாய், * சக்கரமும் தடக்கைகளும் கண்களும் பீதக வாடையொடும் * செக்கர் நிறத்துச் சிவப்பு உடையாய் திரு மாலிருஞ் சோலையெந்தாய்
பெரியாழ்வார் திருமொழி 5.3.7
ஞானத்தை பிறப்பித்தது போல, பிராப்தியையும் பிறப்பிக்க வேண்டும் என்று இந்த பாடலில் வேண்டுகிறார்.
திருவாழியாழ்வானும் தட விதான திருக்கைகளும் திருக்கண்களும் திருபீதாம்பரத்தோடும் கூட செவ்வான நிறம் போன்ற திருநிறத்தை உடைய திருமாலிருஞ்சோலை எந்தாய் ; அனர்த்தத்தை கொடுக்கும் சம்சாரமாகிற கடலுள் அழுந்தி உன்னுடைய பரம கிருபையினால் நித்ய விபூதியை நினைத்து இளைத்து கிடக்கிற என்னை ‘பயப்படாதே ‘ என்று அபயம் செய்து அருள வேண்டும் என்பது இந்த பாடலின் பொழிப்புரை .
அங்கைத் தலத்திடை யாழிகொண்டான் (நாச்சியார் திருமொழி 12.4)ல் சொல்லியபடி திவ்ய ஆயுதங்களாலும் வடிவழகாலும் சம்சாரக் கடலில் விழுந்தவர்களை எடுப்பது என்கிறார் . கலந்து மணியிமைக்கும் கண்ணா,நின்மேனி மலர்ந்து மரகதமே காட்டும், (மூன்றாம் திருவந்தாதி 87) என்பது திருநிறத்தை குறிக்கும் ஒரு மேற்கோள் .
இளைத்திருந்தே என்பதுடன் ஏறி என்பதை சேர்த்து, பொருள் கொள்ளுதலும் உண்டு. ஸம்ஸார ஸாகரத்தில் ஆழ்ந்து கிடக்கின்ற அஞ்ஞானத்தை நீக்கி ஞானத்தைப் பிறப்பித்து அருள வேண்டுகிறார். உன் திருவடியோடே சேர்த்தியையும் பண்ணி அருள வேண்டும் என்கிறார்.
அக்கரை என்று பாபத்துக்குப் பெயராதலால், அது ஸம்ஸாரத்தை உணர்த்திற்று; காரணம் பாபம்; காரியம் ஸம்ஸாரம்.
இக்கரையேறி என்று சொன்னது, பிறவிக் கடலினின்றும் வெளிப்பட்டு வந்ததை சொல்கிறது.
பிறவிக்கடலுள் கிடந்த அடியேன், உனது எல்லையற்ற கிருபையினால் அந்த கடலைக் கடந்தேனாகிலும், நலம் அந்தம் இல்லது ஓர் நாடாகிய பரமபதத்தைச் சிக் என்று பிடித்தாலன்றி, என் அச்சம் தீராதாகையால், மீண்டும் நாம் ஸம்ஸாரக் கடலில் தள்ளப் பட்டால் என்ன செய்வது என்ற அச்சம் உள்ளதால், அந்த அச்சத்தையும் தீரும்படி அருள வேண்டும் என்று பிரார்த்திக்கிறார். ஸம்ஸார தசை என்றும், ஸம்ஸாராதுத் தீர்ண தசை என்றும், பரமபத ப்ராப்தி தசை என்றும் மூன்று தசைகள் உண்டு என்பதும், அதில் இப்போது ஆழ்வார்க்குள்ள தசை மத்யம தசை என்றும் கொள்ளலாம்.
உன்பேரருளால் என்று சொல்வது, அர்ஜுனனை நோக்கி, அஞ்சேலென்று கைகவியாய், அருளிச் செய்ததை போல அடியேனையும் நோக்கி அருள வேண்டும் என்கிறார்.
சக்கரமும் என்பதில், செவ்வானம் போல செந்நிறமுடைய ஒளி உடைய திருவாழியாழ்வானையும், செந்தாமரை போல் சிவந்த திருக்கையையும், திருக்கண்களையும், இவற்றுக்கெல்லாம் நிறத்தைத் தரவல்ல பீதாம்பரத்தையும் உடையவனே என்று அழைப்பதை குறிக்கும்.
Leave a comment