திவ்ய பிரபந்தம்

Home

5.3.6 எருத்துக் கொடியுடையானும்

பெரியாழ்வார் திருமொழி 5.3.6

சென்ற பாடலில் உன் பாதநிழல் அல்லால், தனக்கு மற்றொரு இடம் மூச்சு விட இல்லை என்று சொன்னார். இந்த பாடலில் பிரம்மா மற்றும் ருத்ரரின் அசக்தியை (சக்தி இன்மையை) கூறுகிறார். மேலும், உன்னை நினைத்து வாழ தொடங்கி, அதனால் எம்பெருமான் மேல் பித்து பிடித்தது போல உள்ளது என்று சொல்லி, இந்த வார்த்தைகளே ஸம்ஸாரத்தில் இருக்கும் போது வந்ததானால், இந்த ஸம்ஸாரத்தில் இருந்து அறுத்து, எம்பெருமான் கடை தலையில் இருந்து வாழ வேண்டுகிறார்.

திருமாலிருஞ்சோலை எந்தாய் ; ரிஷபக்கொடி உடைய ருத்திரனும் , அவன் தந்தையான ப்ரஹ்மாவும் இந்திரனும் மற்றுமொருவரும் இப்படிப்பட்ட பிறவி என்ற நோய்க்கு மருந்து அறிபவர் இல்லை ; ஆச்சார்யனாய் இருந்து, சிறந்த நீலமணி போன்ற திருநிறத்தை உடையவனே, எனக்கு இனிவரும் ஜென்மங்களை நீக்கிவிட்டு உன் கோவிலினுடைய கடைத்தலையில் இருந்து வாழும்படி ஆக்கி அருள வேண்டும் என்பது இந்த பாடலின் பொழிப்புரை .

சம்சாரத்திற்கு மருந்தாவது சர்வேஸ்வரனை உள்ளபடி அறிவது என்றும் இவர்கள் (ப்ரம்மா, ருத்ரன், இந்திரன் முதலியவர் ) அவனை அறியார்கள் என்றும் சொல்கிறார். ‘கடிக்கமலத் துள்ளிருந்தும் காண்கிலான், கண்ணன் அடிக் கமலந் தன்னை அயன்‘ (முதல் திருவந்தாதி 56) என்பது இங்கே மேற்கோள்.

மருத்துவனாய் என்பதற்கு ‘அச்சுதன் அமலன் என்கோ, அடியவர் வினைகெடுக்கும், நச்சுமா மருந்தம் என்கோ’ (திருவாய்மொழி 3.4.5) ல் சொல்லியபடி நழுவ விடாதவனாய், பிறவியை கழிக்க வல்லதுமாய் உள்ள மருந்து என்கிறார். ‘தீர் மருந்தின்றி ஐந்து நோயடும் செக்கிலிட்டுத் திரிக்கும் ஐவரை, நேர் மருங்குடைத் தாவடைத்து நெகிழிப்பான் ஒக்கின்றாய், ஆர் மருந்தினி யாகுவர்?’ (திருவாய்மொழி 7.1.5)ல் சொல்லியபடி மருந்து என்று அஞ்ச வேண்டாதபடி இருந்து தீர்க்கும் மருந்து என்கிறார். அருமருந் தாவ தறியாய் (பெரியாழ்வார் திருமொழி 2.7.1)ல் சொல்லியபடி பெறுதற்கரிய, யார்க்கும் அறிய முடியாதபடி எல்லா வியாதியும் தீரும் என்ற கைகண்ட மருந்து என்கிறார். ‘மருந்தே நங்கள்போகமகிழ்ச்சிக் கென்று‘ (திருவாய்மொழி 9.1.4) என்று சொல்லியபடி ஒரு வீபூதியாகக் கொண்டாடும் மருந்து என்கிறார் .

பந்தம் அறுப்பதோர் மருந்து (பெரிய திருமொழி 5.7.2) என்று ஒரு மருந்து என்கிறார் . வைப்பாம்மருந்தாம் (திருவாய்மொழி 1.7.2)ல் சொல்லியபடி இது அடியவர்களுக்கு நிதியும் விரோதிகளை ஒழிப்பதால் மருந்தும் ஆக இரண்டாகவும் இருக்கும் மருந்து என்கிறார். ‘மருந்தும் பொருளும் அமுதமும் தானே‘ (மூன்றாம் திருவந்தாதி 4)ல் சொல்லியபடி மருந்தும், நிதியும், போக்கியமுமாய் மூன்றாக இருக்கும் மருந்து என்கிறார். வருகிற ஜென்மங்களை போக்கி தவிர்க்கை ஆகிற மருந்து என்பதை ‘மறுமைக்கு மருந்தினை,’ (பெரிய திருமொழி 7.10.5) மேற்கோள் காட்டுகிறார் .

உங்கோயிற் கடைப் புகப்பெய் என்பதற்கு ‘கொடியணி நெடுமதிள் கோபுரம் குறுகினர்’ (திருவாய்மொழி 10.9.8) ல் சொல்லியபடி அலங்காரமாக எடுத்துக் கட்டின கொடிகளையுடைய உயர்ந்த மதிளை யுடைத்தான தலை வாசலில் புகுவதைச் சொல்கிறார் .

உனக்கு சிரமம் கொடுக்காமல் ருத்ரன் மற்றும் பிரம்மா முதலியவர்களை அணுகி இப்பிறவி நோயைக் கழித்துக் கொள்வோம் என்று பார்த்தால் எம்பெருமானை தவிர வேறொருவர்க்கும் பிறவி நோயின் மருந்தை அறிவதற்குரிய வல்லமையில்லை; அதனை அறிபவனும் எம்பெருமானே ஆகையால், அந்நோயை நீக்கி என்னை எம்பெருமானாகிய உன் கோயில் வாசலில் வாழ அமைத்தருளவேணும்” என்று வேண்டுகிறார்.

Leave a comment