காலும் எழா கண்ண நீரும் நில்லா உடல் சோர்ந்து நடுங்கி குரல், * மேலும் எழா மயிர்க்கூச்சுமறா என தோள்களும் வீழ்வொழியா, * மாலுகளா நிற்கும் என் மனனே உன்னை வாழத் தலைப் பெய்திட்டேன், * சேலுகளா நிற்கும் நீள்சுனை சூழ் திருமாலிருஞ் சோலையெந்தாய்.
பெரியாழ்வார் திருமொழி 5.3.5
சென்ற பாட்டில், எம்பெருமானின் திருவடிகளை தவிர வேறு புகல் இல்லை என்றார். இந்த பாட்டில், தான் பெற்ற பேற்றை அருளி செய்கிறார்.
மீன்கள் துள்ளி விளையாடும் பரப்பு உடைய சுனைகளாலே சூழப்பட்ட திருமாலிருஞ்சோலை எந்தாய்; என்னுடைய கால்களும் அடி பெயர்வதில்லை ; கண்ணீரும் இடைவிடாமல் பெருகும் ; சரீரமானது சோர்ந்து தடுமாறி குரலும் மேல் எழுவதில்லை ; மயிர் கூச்செறிவதும் ஒழிவதில்லை; தோள்களும் விழுந்து ஒழிகின்றன. என் மனதானது (உன் உபகாரத்தை நினைத்து ) பித்து பிடித்து நின்றது ; இப்படி இருக்க , உன்னை அனுபவித்து வாழ்க்கைக்கு முடிவு சூடினேன் என்பது இந்த பாடலின் பொழிப்புரை .
மெய்யடியார்கள் பகவத் விஷயத்தை நெஞ்சில் நினைத்த போதே “காலாழும், நெஞ்சழியும், கண்சுழலும்” என்றபடி எல்லா இந்திரியங்களுக்கும் சோர்வு பிறக்கும் ஆதலால், அப்படிப்பட்ட நிலைமை எம்பெருமான் அருளால் தமக்கு வாய்த்ததை ஆழ்வார் கூறுகிறார்,
தோள்கள், ஒரு வியாபாரம் பண்ணவும் வல்லமையற்றுச் சோர்வை அடைந்தன; நெஞ்சு பித்து பிடித்து கிடக்கிறது, அதாவது, என் மனதானது, நீ செய்த உபகாரத்தை நினைத்து பித்து பிடித்து கிடக்கிறது. இப்படி இந்த அவஸ்தைகள் பிறப்பது ஆழ்வாருக்கு வாழ்சசி என்கிறார் . உன் தாளிணை கீழ் வாழ்சசி என்று சொல்வதும் இதனையே என்கிறார் .
Leave a comment