திவ்ய பிரபந்தம்

Home

5.3.4 காதம் பலவும் திரிந்து

பெரியாழ்வார் திருமொழி 5.3.4

சென்ற பாட்டில், இனி மற்றொருவருக்கு பணிந்து நிற்பது எம்பெருமானுக்கு இழிவு என்று ஆழ்வார் அருளிச் செய்தபோது, எம்பெருமான் ஆழ்வாரை நோக்கி, “நீ புறம் போய் நிற்கும் படியாக ஓரிடம் உமக்கு உளதோ?” என்று கேட்க, இந்த பாட்டில், தனக்கு வேறு ஓரிடமும் கிடையாது என்கிறார்.

குரு வம்சத்தில் பிறந்த பாண்டவர்களுக்காக துரியோதன் இடத்தில் தூது போனவனாய் அவர்களிடத்தில் ‘எனக்கு உங்களோடு பாண்டவர்களோடு வாசியில்லை’ என்றாற்போல் ஒரு பொய் உறவு சொல்லி அடியவர்கள் என்றும் அடியவர் அல்லாதவர் என்றும் ஒரு பேதத்தை உண்டாக்கி துரியோதனனும் அவனை சார்ந்தவர்களும் ஒருவர் தப்பாமல் பிணமாய் பட்டு விழும் படி செய்தவனாய் திருமாலிருஞ்சோலை எந்தாய் , நெஞ்சுக்கும் கண்ணுக்கும் எட்டின இடம் எல்லாம் வருந்தி திரிந்த எனக்கு அவ்விடத்தில் ஒதுங்குவதற்கு ஒரு நிழல் இல்லை மற்றும் தாபம் தீர்க்கும் தண்ணீரும் கண்டதில்லை ; (ஆராய்ந்து பார்த்ததில் ) உன் திருவடி நிழல் இல்லாமல் மற்றும் ஒரு மூச்சு விடுமிடம் நான் எங்கும் காண்கின்றிலேன் என்பது இந்த பாடலின் பொழிப்புரை .

இந்த ஸம்ஸார பூமிக்குள் கண்ணுக்கும் நெஞ்சுக்கும் எட்டின இடம் எத்தனை தூரமுண்டோ, அவ்வளவும் அடியேன் திரிந்தாயிற்று; ஓரிடத்திலும் ஒதுங்க ஒரு நிழல் பெற்றிலேன்; குடிக்கத்  துளி தண்ணீரும் பெற்றிலேன். ஸம்ஸாரிகள் ஒதுங்குகிற நிழலும், அவர்கள் பருகும் நீரும் அடியேனுக்கு விஷ மரத்தின் நிழலாகவும், நச்சு நீராகவும் தோன்றுகின்றன. ஆதலால் உனது திருவடி நிழலைத் தவிர்த்து மற்றொன்றை நான் உயிர் வாழும் ஸ்தலமாக நெஞ்சில் கொண்டிலேன், கண்ணிலும் காண்கின்றிலேன் என்கிறார்.

தூதுசென்றாய் என்று சொல்வது “உறவு சுற்றம் என்று ஒன்று இல்லாத ஒருவன்” என்கிறபடி ஒருவகைச் சுற்றமும் இல்லாதவனான கண்ணன், குரு வம்சத்து பாண்டவர் பக்கம் சொந்தம் பாராட்டியதை சொல்கிறது. திருவடியை பற்றியவர்களுக்கு காரியம் செய்ததை சொல்கிறது.

“பொய்ச் சுற்றம்” என்பது பொய் உறவு எனப்பட்டது. கண்ணன் தூது செல்லும் போது வழியில் விதுரர் திருமாளிகையில் அமுது செய்து விட்டு வந்தது கண்டு துரியோதனன், ‘புண்டரீகாக்ஷனே! பீஷ்மரையும் துரோணரையும் என்னையும் மதியாமல் ஏதுக்காக விதுரன் வீட்டில் சோறு உண்டாய்’ என்று கேட்டதற்கு, கண்ணன், ‘எனக்கு உயிராக நிற்கிற பாண்டவர்களுடன் நீ பகைமை பூண்டு இருப்பதால் எனக்கும் பகைவன் ஆனாய். பகைவனது சோற்றை உண்பது உரியதாகுமோ? என்று கூறினதாக மஹாபாரதத்தில் உண்டு. அதனை பொய்ச்சுற்றம் பேசினதாக சொல்வார். பாண்டவர்களை பத்து ஊர் கேட்கும்படி பண்ணி, அதுவே காரணமாக இரண்டு வகுப்பினர்க்கும் பகையை வளர்த்து அவர்கள் உறவைக் குலைத்ததை சொல்வதாக கொள்ளலாம்.

பேதம் செய்து என்றது அடியவர்கள் என்றும், அடியவர் அல்லாதவர்கள் என்றும் பிரித்து கண்ணால் கண்ட இடம் எல்லாம் பிணம் கிடக்கும் படி செய்தவர் என்கிறார். எல்லாச் சேனையும் இருநிலத் தவித்தவெந்தாய் (திருவாய்மொழி 3.2.3) வர்த்திக்கின்ற தேசம் இது என்கிறார்.

Leave a comment