உனக்குப் பணி செய்திருக்கும் தவமுடையேன் இனிப் போய் ஒருவன் * தனக்குப் பணிந்து கடைத்தலை நிற்கை நின் சாயை அழிவு கண்டாய் * புனத்தினை கிள்ளிப் புதுவவி காட்டி உன் பொன்னடி வாழ்கவென்று * இனக்குறவர் புதியது உண்ணும் எழில் திரு மாலிருஞ் சோலை யெந்தாய்.
பெரியாழ்வார் திருமொழி 5.3.3
திரள் திரளாய்ச் சேர்ந்த குறவர்கள் ‘உன் பொன்னடி வாழ’ என்று பல்லாண்டு பாடி புனத்தில் உண்டான புதிய தினைகளை கிள்ளிக் கொணர்ந்து புதிய ஹவிஸை அமுது செய்யப் பண்ணி புதியது உண்கின்ற அழகை உடைத்தான மாலிருஞ்சோலை எந்தாய் ; சேஷியான உனக்கு கைங்கர்யம் செய்து சத்தை பெற்று இருக்குமவனாய் உன் திருவருள் பெற்றவனுமான அடியேன் இனிமேல் புறம்பே போய் ப்ரம்மா முதலானோரில் ஒருவனைப் பணிந்து அவனுடைய கடைத்தலையில் இருத்தல் உன்னுடைய தேஜஸ்ஸுக்கு அழிவன்றோ என்பது இந்த பாடலின் பொழிப்புரை .
மகரந்தம் அமர்ந்த அரவிந்தத்தின் சுவை அறிந்த வண்டு மீண்டு ஓரு முள்ளிப் பூவைத் தேடி ஓடாதது போல, உன்னுடைய கைங்கரிய வாசம் அறிந்த அடியேன், இனி மற்றொருவன் வாசலைத் தேடி ஓட மாட்டேன்; அப்படி என்னை நீ ஓடவிட்டால் அது உன் மேன்மைக்கே குறையாகும். ஆதலால் அடியேனை நெறிகாட்டி நீக்காது, திருவுள்ளம் பற்றி அருள வேண்டும் என்று பிரார்த்திக்கிறார்.
இந்த திருமலையிலுள்ள குறவர்கள் வளர்ந்த தினைக் கதிர்களைப் பறித்து அவற்றை எம்பெருமானுக்கு அமுது செய்வித்து, உன் பொன்னடி வாழ்கவென்று, “உன் செவ்வடி செவ்வி திருக்காப்பு” (திருப்பல்லாண்டு 1) என்று வேண்டி கொள்வார்கள். இப்படி மங்களாசாஸநம் செய்து, அந்தப் புதிய தினைமாவை உண்பார்களாம். திருமாலிருஞ்சோலை என்ற இந்த திவ்ய தேசம் தான் ‘இன்று வந்து இத்தனையும் அமுது செய்திடப் பெறில் நான் ஒன்று நூறாயிரமாக் கொடுத்துப் பின்னும் ஆளும் செய்வன், தென்றல் மணங் கமழும் திருமாலிருஞ்சோலை தன்னுள் நின்ற பிரான்‘ (நாச்சியார் திருமொழி 9.7) ஆண்டாளும் அருளிச்செய்தது. அதே போல் இதே ஆழ்வாரும் ‘குறமாதர்கள் பண்குறிஞ்சிப் பாவொலி பாடிநடம் பயில்மாலிருஞ் சோலையதே‘ (பெரியாழ்வார் திருமொழி 4.3.4) என்று பாடிய தேசம் இதே .
உனக்குப் பணி செய்திருக்கும் தவமுடையேன் என்பது, நான்கு நிலைகளை கடந்த நிலையை சொல்வது; அவை,
- சேஷத்வ ஞானம் பிறப்பது, (உனக்கே நாம் அடிமை செய்வோம்),
- அவனுக்கு அடிமை செய்வதை மேலும் மேலும் வளர்ப்பது,
- அப்படி அவனுக்கு அடிமை மட்டுமே முழுவதுமாக செய்வது
- அப்படி அவனுக்கு அடிமை செய்யாமல் இருந்தால், ஆத்மாவின் சத்தை குலையும் படி உணர்வது
இந்த நிலைகள் ஸம்ஸாரிகளுக்கு இல்லை என்றும், ஆழ்வாருக்கு உண்டு என்றும் கூறுகிறார். தவமுடையேன் என்றது, அவனது பிரசாதம் உடையேன் என்பதாகும்.
ப்ரம்மா முதலானோர் ‘கடைத்தலை இருந்து வாழும்‘ (திருமாலை 38) அவசியம் தனக்கு இல்லை என்று ஆழ்வார் கூறுகிறார் .
புதியது உண்ணும் எழில் என்று சொல்வதில், புதியது உண்ணும் என்பது தந்தைக்கு பொருந்தும் நாளில் புத்திரன் உண்ணுவது என்கிறார். எழில் என்றுசொல்வது, திவ்யதேசங்களுக்கு அழகானது வேறு எந்த பலனும் வேண்டாமல் எம்பெருமானுக்கு மங்களாசாசனம் செய்யும் அடியவர்கள் வாழும் தேசம் ஆகும் .
Leave a comment