திவ்ய பிரபந்தம்

Home

5.3.2 வளைத்து வைத்தேன்

முன் பாட்டில், உன் ஸ்வரூபம் பெற வேண்டியிருந்தால் என் காரியம் செய் என்றார். இந்த பாட்டில், உன் பிரணயித்ய குணம் பெற வேண்டி இருந்தால் என் காரியம் செய் என்கிறார்.

பெரியாழ்வார் திருமொழி 5.3.2

நாட்டில் உள்ளவர்களையும் நகரத்தில் உள்ளவர்களையும் உற்றார்களையும் மற்ற எல்லோரையும் அவர்களுடைய கொடூரமான பாவங்களை தீர்ப்பதில் ஒரு முனைப்பாக தெளிவை உடையதாய், பலத்தை கொடுக்குமதான (சிலர் வலம் செய்யும் என்பதை , சுற்றிவருவதை குறிக்கும் என்பார்கள்), தீர்த்தத்தை உடைய திருமாலிருஞ்சோலை எந்தாய் ; உன்னை சூழ்ந்து கொண்டேன் ; உன் ரசம் அறிந்த பின்பு உன்னை போக விட மாட்டேன் ; உன்னுடைய இந்த்ரஜால வித்தையால் உன் ஸ்வரூபத்தை மறைத்தாய் என்றால் உனக்கு சேஷ பூதையான பெரிய பிராட்டியார் மேல் ஆணை ; நீ ஒருவருக்கும் உண்மை பேசுபவன் இல்லை என்பது இந்த பாடலின் பொழிப்புரை .

உந்தன் இந்திர ஞாலங்களால் என்று சொன்னது பொய்யை மெய் என்று நினைக்கும்படி பிரமிக்க வைப்பது என்கிறார். அதாவது போக்கியம் இல்லாதவற்றை போக்கியம் என்று நம்ப செய்வது. ஒளித்திடில் என்பதற்கு ‘அகற்ற நீவைத்த மாயவல் லைம்புலங்களாம் அவை நன்கு அறிந்தனன்‘ (திருவாய்மொழி 5.7.8)ல் சொல்லியபடி அகற்ற நீ வைத்த மாய வலை இந்த ஐம் புலன்கள் என்கிறார்.

பரதாழ்வான் சித்திரகூடம் தேடி போய், இராமனை வளைத்துக் கொண்டது போல, நான் உன்னை வளைத்துக்கொண்டேன்; உன்னால் தப்பிப் போக முடியாது என்று எம்பெருமானை நோக்கி ஆழ்வார் அருளிச்செய்ய, அதற்கு எம்பெருமான், “ஆழ்வீர், என் மாயையினால் உலகம் முழுவதையும் என் விருப்பப்படி செய்யவல்ல யான், உம்முடைய வளைப்பில் இருந்து, என்னைத் தப்பவித்துக் கொள்ள வல்லவன் இல்லையா” என்று சொல்ல, அதற்கு ஆழ்வார், ‘உன் பிராட்டியின் மேலாணை; நீ தப்பிப் போய் உன்னை ஒளித்துக் கொள்ளலாகாது” என்று ஆணையிட, எம்பெருமான், “ஆழ்வீர், ஆணையிடுவதற்கு இப்போது என்ன காரணம்” என்று கேட்க, அதற்கு ஆழ்வார், “எம்பெருமானே! அடியார்களை ஒரு காலும் கை விட மாட்டேன் என்று நீ ஓதி வைத்தது எல்லாம் பொய்யாய் முடிய கூடாதே என்பதற்காக ஆணையிடுகிறேன்” என்கிறார்.

உலகத்தார் அனைவரும் திரண்டு, தம்முடைய பாவங்களை எல்லாம் தொலைத்துக் கொள்ள விரும்பி ஆராவாரம் செய்து கொண்டு திருமாலிருஞ்சோலையிலுள்ள சிலம்பாறு முதலிய பல தீர்த்தங்களை பிரதக்ஷிணம் செய்வதைக் கூறுகிறார்.

Leave a comment